'பாடிகாட் ' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 4

'பாடிகாட் ' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 4

ஒரு விருது

மும்பையின் பிரசித்திபெற்ற திரைப்படவிழாவான miff 2008 (Mumbai International Film Festival 2008 ) சிறப்பாக நிகழ்ந்து முடிந்துவிட்டது. நூற்றுக்கணக்கான குறும்படங்கள் , ஆவணப்படங்கள் , வெளிநாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்ட இவ்விழாவுக்கு மாணவர்கள் தொடங்கி பல்வேறு நாட்டிலிருந்தும் திரைப்பட ஆர்வலர்கள் பலரும் பங்குகொண்டது சிறப்பெனில் , சிறந்த ஆவணப்படத்துக்கான விருது தமிழகத்தின் படைப்பாளியான கவிஞர் லீனாமணி மேகலையின் Goddess படத்துக்கு கிடைத்திருப்பது உச்ச மகிழ்வைத் தருவது ! செல்லுலாய்டில் சிற்பம் செதுக்கும் தங்க தமிழச்சிக்கு முனி - யின் வாழ்த்துக்கள் ! மியூனிச் திரைப்பட விழாவிலும் வென்று வா தோழி !

ஒரு கவிதை

புற்று


இன்று என்னைச் சேர்ந்த போது
அந்த உரையாடல்
மூச்சடைத்து நின்று போனது .

தலைவால் முளைத்த
தன் விசேட அறிவிப்புடன்
தனித்திருக்கும் என் அறிவை
அலட்சியம் செய்தபடி.

வளைந்து நெளிந்து மிகச்சாதாரணமாய்
தீண்டியபின் தன் விஷத்தை
இறக்கிக் கொண்டது
உணர்வுகளை விழுங்கி உள்ளடைந்த போது
குருதி பெருகி வீங்கியது உடல்

மிச்சமில்லாத பொழுதுகளை எண்ணியவாறே
என்னுடன் உறங்கியது அன்றைய இரவு

(மஞ்சுளா - தீமிதி கவிதைத் தொகுதி)

ஒரு நிகழ்வு

வழக்கமான , மும்பை இலக்கியக் கூட்டங்கள் போலில்லாமல் வெற்றுச் சுங்குகள் ஏதுமின்றி நிகழ்ந்தது எழுத்தாளர் விழிபா இதயவேந்தனின் நூல்களின் மீதான படைப்பில ஆய்வு. தமிழகத்தின் விழுப்புரம் நகரிலிருந்து வந்திருந்தார் விழிபா! கவிஞர் கே.ஆர்.மணி, கவிஞர்.குணா , புதிய மாதவி போன்றோர் விழி.பாவின் படைப்புகள் குறித்து பேச , விழி பாவின் சிறுகதையை நாடகமாக நிகழ்த்தினர் அன்பாதவனும் , மதியழகன் சுப்பையாவும் மூன்றாம் அரங்க வீதி நாடக வடிவத்தில் நிகழ்ந்த நாடகத்தை பார்வையாளர்கள் வெகுவாய் ரசித்தார்கள். விழி.பா. இதயவேந்தனின் உரைக்கு பின் தொடங்கிய கலந்துரையாடல். கூட்டம் முடிந்த பின்னும் இரவு 11.30 வரை தாதர் வீதியில் தொடர்ந்தது மும்பைக்கு புதுசு !


ஒரு சிந்தனை

மனநிலை சரியில்லா பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்னைகளை மனதில் கொண்டு , அவர்களின் கருப்பையை அகற்றுவது குறித்து ஒரு விவாதம் எழுந்துள்ளது. மேம்போக்காக பார்த்தால் சரியெனப்படும் இந்த முடிவு பல்வேறு கேள்வியலைகளை எழுப்பியுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் குணமாதல் இயலாதா..? மனநிலை சரியில்லாதவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தண்டிக்க முடியாதா ....? பாலியல் தொழிலாளியிடம் உறவு கொள்ள அரசே ஆணுறைகளை சிபாரிசு செய்வது போலத்தான் இதுவும்.

அரசாங்கம் என்ன செய்தாலும் Boss is Always Right என்கிற மனப்பான்மை உருவாகி வருவதை யோசிக்க வேண்டியிருக்கிறது.


ஒரு விளம்பரம்

Fevicol - ன் விளம்பரம் நாட்டில் நிலவும் கசப்பானதொரு உண்மையை சொல்கிறது. ஒரு வழக்கு பல்லாண்டுகளாக இழுத்துக்கொண்டே வருகிறது. ( இளைஞனான குற்றவாளி முதியவனாக ஆகும் வரை தொடர்கிறது ) . Judgement delayed is nothing but justice denied என்பதை உறுதிப்படுத்தும் அந்த விளம்பரம் ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது. மனதில் பெவிகாலைப் போல ' பச்சக்கென்று ' ஒட்டிக்கொள்வது.

ஒரு ஷொட்டு

" கனமான இலக்கியத்துக்கு ஒரு எக்ஸ்டிரீம் மனநிலை வேண்டும் என்று நினைக்கிறேன் . எக்ஸ்ரீம் மனநிலை அல்லது எக்ஸ்டிரீம் வாழ்க்கை . இந்த மாதிரியான சூழலில்தான் வெப்பமும் செறிவும் மிக்க இலக்கியம் வரும் .சாதாரணமாக காலை எழுந்து சாப்பிட்டு ஆபிஸ் போய் வந்து தூங்கி எழுகிற ரொட்டீனான வாழ்க்கையில் அவ்வளவு எ·பக்டிவ்வாக இலக்கியம் வரும் என்று தோணவில்லை. என்னுடைய வாழ்க்கை இரண்டும் கலந்தது , ஒரு சமயம் எக்ஸ்டிரீமான மனநிலையும் ஒரு சமயம் சவசவத்த ரொட்டீனுமாக மாறி மாறி இருந்து வந்திருக்கிறது " - எழுத்தாளர் க.தமிழ்ச்செல்வன் நேர்காணல் ( புதிய புத்தகம் பேசுது ஜன.2008 ) முனீஷ்வருக்கும் அப்படித்தான் வாத்யாரே !

logo
Andhimazhai
www.andhimazhai.com