பிரியங்களுடன் கி.ரா – 10

22-2-2007

அன்பார்ந்த சன்னாநல்லூர் பசுபதி சாந்திக்கு,

ஒரு பதில்க் கடிதம் எழுத வாய்க்க மாட்டேன் என்கிறது நேரம். மனசினுள்க் கடலாய் அலைகள் புரண்டுகொண்டே இருப்பது நிம்மதி இல்லை. தொடர்ந்து ஏதாவது ஒரு அலுவல் கதைக்கு உதவாது என்றாலும் வந்துகொண்டே இருக்கும்; மூக்கு இருக்கும் வரை சளியும் இருக்கும் என்பது போலத் தான்.

உனது கடிதத்துடன் இருந்த “என் தந்தை” என்ற சிறிய பிரசுரம் திருத்தமாகக் கொண்டு வந்திருக்கிறாய்; அவரது நாட்குறிப்புகள் உட்பட இந்த பிரசுரத்தை நீ அவரது 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது கொண்டுவந்திருந்தால் அவரும் படித்து மட்டில்லாத மகிழ்வு அடைந்திருப்பார் அல்லவா?

உயிரோடு இருக்கும்போ….தே……நமக்கு இப்படித் தோன்றுவதில்லை.

இதை நினைத்தே நாங்கள் கி.ரா – 80 கொண்டு வந்தோம். அடுத்து கி.ரா – 85 ம் வரப்போகிறது. ( நான் இப்படி எழுதுவதை எனக்குப் பின்னால் நின்று கொண்டு இதை வாசிக்கும் எமன் சிரிக்கட்டும்; சிரிக்க மட்டும் களுதைப் பயல்!)

சமீபத்தில் ஒரு இத்தாலிய நாட்டுப்புறக்கதை படிக்க நேர்ந்தது. சாகாமல் இருக்கும் ஒரு நாடு எங்கே இருக்கிறது என்று அதைத் தேடிப் போகிறான். நடந்து நடந்து செருப்புகள் தேய்ந்துகொண்டே வருகிறது. கடேசியில் ஒரு நாட்டில் சொல்லப்படுவது, இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் வரை ஆயுசோடு இருக்கலாம். திருப்தி தரவில்லை அவனுக்கு. அடுத்த நாடு போகிறான். அங்கே, இவனுக்கு எதிராக ஒருவன் ஒரு கருப்புக் குதிரையில் வேகமாய் வருகிறான். அவனை நிறுத்தி இவன், சாகமல் இருக்கும் ஒரு நாட்டுக்கு எப்படிப் போறது என்று கேட்க, அவன் அப்படியா; நான் இந்தக்குதிரையைத் தருகிறேன். இதில் ஏறிப்போ. ஒரு “கண்டிஷன்” எக்காரணம் கொண்டும் இக்குதிரையை விட்டுக் கீழே இறங்கக்கூடாது என்று சொல்ல, இவன் அந்தக்குதிரையில் ஏறி வேகமாகப் போகிறான். போகிற வழியில் ஒரு காட்சியைப் பார்க்கிறான். தேய்ந்துபோன செருப்புகளாக ஒரு வண்டி நிறைய்ய பாரம் வைத்து அந்த வண்டி ஒருவன் இழுத்துக்கொண்டே போக, அதன் ஒரு சக்கரம் சேற்றினுள் புதையுண்டு, இழுக்க முடியாமல் கஷ்டப்படுகிறான். இவன் அதை நின்று கவனிக்க, ஒரு கை பிடித்து இந்தக் கிழவனுக்கு உதவமாட்டாயா என்று அவன் கேட்டதும், இவன் குதிரையிலிருந்து இறங்கி ஒரு கை பிடித்து சேற்றிலிருந்து மீண்டதும் அவன் புறப்படமுன்பு இவனது தோளைத்தொட்டு, உதவி செய்ததற்கு நன்றி கூறும் போதுதான் இவன் அந்த தேய்ந்த செருப்புகள் நிறைந்த பாரத்தைக் காட்டி இது என்ன இப்படி, வெறும் தேந்துபோன செருப்புகள்! என்று கேட்க, அவன் சொன்னது : உனக்குப் பின்னாலேயே உன்னைத் தொடர்ந்து நான் நடந்து வந்தபோது தேய்ந்த செருப்புகள் தானப்பா இவை என்று சொல்லிச் சிரித்தானாம்.

      நீ ஏன் என்னைப் பின் தொடரனும்;

      யார் நீ என்று இவன் கேட்டதும்

நான் தானப்பா எமன்! என்று பதில் வந்ததாம்.

மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கும்போது உள்ளே போவதும் வெளியே விடும்போது வெளியே போவதுமாக இருப்பது வேற யாருமில்லை; சாட்சாத் எமனே தான் என்பார்கள் அனுபவப்பட்ட பெரியவர்கள். நாம் விடும் கடேசி மூச்சியும்தான் அவன். எத்தனை பேர் பிறப்பதைப் பார்த்தது போலத்தான் எத்தனை பேர் இறப்பதையும் பார்த்துக்கொண்டு இருந்தும்கூட, இறப்பைப்பற்றி ஏன் துக்கப்படவேணும்.

பசுபதி அப்பா, தான் பார்த்துப்பார்த்துக் கட்டிய வீட்டில்தான் உயிர் பிரியனும் என்று இருந்திருக்கிறது. அதனால்த்தான் யார் தடுத்தும் கேட்கவில்லை அந்தச்சிறுவன். யாருக்கு எங்கே போட்டிருக்கிறது என்பதை யார் அறிவார்? சஸ்பென்ஸிலெல்லாம் பெரிய்ய சஸ்பென்ஸ் இந்த வாழ்க்கை தான். சாம்பளிலிருந்து கிளந்து எழும் பீனிக்ஸ்பறவை என்பது கதை அல்ல; மீண்டெழும் நமது வாழ்க்கையைத்தான் அப்படிச் சொல்லப்படுகிறது. தலை வழியாகத் தண்ணீர் விட்டுக்கொள்ளும் போதெல்லாம் நாம் அப்படித்தான் புதிதாக மலர்கிறோம்.

மீண்டும் மீண்டும் மலர்வதே மனித வாழ்க்கை.

அன்புடன் என்றும்

கி.ரா.

logo
Andhimazhai
www.andhimazhai.com