பிரியங்களுடன் கி.ரா – 27

இடைசெவல்

9.1.55

என் அருமை நடராஜனுக்கு,

இந்தப் பேனாவைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவு வரும்.

இதை விட்டுப் பிரிய மனமில்லாது வாடிய உங்கள் முகமும் கூட நினைவுக்கு வரும். மனசுக்குள் சிரித்துக் கொண்டாலும் அந்த நினைப்பு மாறி என்னையும் சோகம் வந்து கவ்விக்கொள்ளும். எல்லாம் நெருங்கிப் பழகியதால் ஏற்பட்ட சங்கடங்கள்!

உங்களுடைய பிறிவின் காரணமாக பேனாவின் மை ‘பசலை’ நிறமாக மாறிவிட்டதைப் பார்த்தீர்களா?

என்னுடைய பேனா செளக்யமாக இருக்கிறதா? அது கொஞ்சம் அடங்காமாறி. அதட்டினால்தான் பணியும். அதை நான் வைத்துக்கொண்டு பட்ட கஷ்டங்கள் பகவானுக்குத் தான் தெரியும். நான் அதை வைத்துக்கொண்டிருந்தது,     “பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்ட” மாதிரி தான்.

நீங்கள் ‘எதவு’ தெரிந்தவர்கள் அதை சுலபமாக இதற்குள் பழக்கி இருப்பீர்கள்.

மாப்பிள்ளை (மத்தளம் பாறை) யிடம் இருந்து புது வருஷ வாழ்த்து கிடைத்தது. ஏற்கனவே நான் எழுதி இருந்த கடிதத்தைப் பற்றி அதில் ஒரு வார்த்தையும் காணோம். ‘வாழ்த்துக் கடிதத்தைக் கொண்டு போய் க்ஷேமலா பங்களைப் பற்றி வாணிக்கும் கடிதத்தை கிடைத்த விபரத்தையா குறிப்பிடுவது’ என்று விட்டு இருக்கலாம். ஏனென்றால் க்ஷேமலா பங்களை விட வாழ்த்து உயர்த்தி பாருங்கள்!

நான் அவருக்கு இன்னும் பதில் எழுதவில்லை. பொங்கல் வாழ்த்து மாத்திரம் எழுதி அனுப்பி ‘பழி’ வாங்கப்போகிறேன்.

சென்னையிலிருந்து பிரிய மனமில்லாமல் வந்திருப்பீர்கள். சீன கலாச்சார தூது கோஷ்டியின் கலா நிகழ்ச்சிகளையும் காணாமலே தான் வந்திருப்பீர்கள். நம்மைச் சார்ந்தவர்கள் துக்கங்கொண்டாடும்போது நாம் மாத்திரம் சந்தோஷம் கொண்டாடுவது முறை இல்லை யல்லவா? சென்னையில் உங்கள் அனுபவத்தைப்பற்றி ஒருவரி எழுதுங்கள்.

தைப்பொங்கல் நெறுங்கிக்கொண்டிருக்கிறது. பொங்கல் அன்று அனேகமாக உங்கள் கைக்குக் கிடைக்கும் இக்கடிதம். இன்று கரும்பு சாப்பிட்டேன். வழக்கமாக நான் கரும்பை கால் (தூறு)ப் பக்கமிருந்துதான் தின்று கொண்டு வருவேன். இன்றோ தலையிலிருந்து தின்று கொண்டு வந்தேன். அந்த நிகழ்ச்சி ஒரு அற்புதமான விஷயத்தை என் ஞாபகத்துக்கொண்டு வந்தது. முதல் முதலில் நாம் சந்தித்தபோது சண்டை போட்டுக்கொண்டோமே, அந்த மாதிரி இருந்தது முதல்க்கணு. அப்புறம் ஒவ்வொரு கணுவாய்ப் போகப் போகப்……

logo
Andhimazhai
www.andhimazhai.com