பிரியங்களுடன் கி.ரா – 6

பிரியங்களுடன் கி.ரா – 6

20.08.2004

பிரியம் நிறைந்த சாந்தி அம்மாவுக்கு நலம்.

உனது 17-08-04 கடிதம். நீ விசாரித்த அந்தப்புத்தகம் என்னிடம் இருக்கிறது. என் அறையில் தேடினேன்;

இனி அம்மாவின் அறையில் தேடனும். நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம் தான் அதை வெளியிட்டுருக்கிறது.

இன்று காலையில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் பஞ்சு. குழந்தைகளுக்காக தமிழில் C.D யில் வெளிவந்த இதழ் பட்டாம் பூச்சி தான்.

இந்த C.D இதழ் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதா என்கிற விபரம் ரவிக்குமாரிடம் விசாரித்தால் தெரிந்துவிடும்.

எங்கள் திருமண பொன்விழா (நிறைவு விழா) வின் விசேடமே நீங்கள் எங்களுக்கு ஒரு C.D பிளேயர் வாங்கித்தந்தது தான். தாத்தாவுக்கு வெத்திலை பாக்கு மட்டும் வாங்கிக்கொண்டுபோனால் பிரயோஜனப்படாது;

வெத்தலை இடிக்கும் உரலும் கொண்டுபோகணுங்கிற சூட்சமம் கணேசனுக்குத் தெரிந்ததால் மூனு C.D தட்டுகளும் வாங்கி வந்துவிட்டார். தெக்கு வடக்கு போய் நாலு ஊரு தண்ணீர் குடித்தவர் அல்லவா.

C.D யை யோ டேப்பையோ பாடவிட்டுக்கொண்டே குழந்தைகள் அலுப்புவராமல் படிக்கவும் எழுதவும் செய்கிறார்கள்; எனக்கு அந்த மாயவித்தை இன்னும் கைவரவில்லை.

மனசை தொடும் இசை கேட்க நேர்ந்துவிட்டால் அதிலேயே சமாதி நிலை அடைந்துவிடத்தான் முடிகிறது.

வாங்கிவந்த C.D களில் நாதஸ்வரத்தில் தவிலை மட்டும் கேட்க முடிகிறது. பாட்டு C.Dயில் மிருதங்கத்தை கேட்க முடியவில்லை; தொந்தரவாக இருக்கிறது.

மற்றொரு பாட்டு C.D ஜோர்; அருமையாக அமைந்துவிட்டது. சங்கமிக்கு இசை சொல்லிக்கொடுப்பதை விட நிறைய்ய இசைப்பாடல்களை கேட்க வையுங்கள்.

 கேட்க கேட்கத்தான் இசை நம்மை ஆட்கொள்ளும்.தரமான இசையைக் கேட்கவேண்டும்.

அனைவருக்கு எங்கள் பிரியங்களுடன்

கி.ரா.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com