பிரியங்களுடன் கி.ரா – 9
16.06.2006
பிரியம் நிறைந்த சாந்தியம்மாவுக்கு எப்பவும் நலம். உன்னுடைய 12-06-06 கடிதம் கிடைத்தது. ( பதில் கடிதங்கள் எழுதியே ரொம்ப ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. சலிப்பு என்றும் சொல்ல முடியாது. சிலருக்குப் பாடும் குரல் அமைந்திருப்பது போல உனக்குக் கடிதம் எழுதும் பேனா வாய்த்திருக்கிறது. விசயங்களை மடக்கிக்கொண்டு வருகிறது அருமையாக கருத்துக்கள்.
போராடணும் போராடணும் என்று கணேசன் சொல்லிக்கொண்டுதான் இருக்க முடியும்; சாரம்சத்தில் போராடாமல் ஒரு போராட்டமே நடத்தி வெற்றியும் பெற்றது நீ தான்! “தோழர்” களைப் பற்றி உன்னைவிட எனக்கு ரொம்பவே தெரியும், அவர்களோடு நானும் பத்தாண்டுகள் நெருக்கமாக வாழ்ந்தவன்.
“நீலகண்ட பறவையைத் தேடி” என்றொரு வங்காள நாவல். தமிழில் வந்திருக்கிறது. அந்த நாவலின் சாராம்சமே, இல்லாத ஒன்றுக்காகவே மனிதர்கள் அதை அடையவும் பெற வாழ்நாள் பூராவும் போராடித் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லுகிறது.
நூறு ஆண்டுகள் கழித்து வந்து பார்த்தாலும் கோபுரத்தின் மேல் உள்ள அரசஞ்செடி அப்படியேதான் இருக்கும் வளராமல். ஏன்? அதன் வேர்கள் மண்ணில் – தரையில் – விடவில்லை. மண்ணில் வேர்விடாத செடிகள் இவர்கள்.
மக்களிடம் போ என்று சொல்லியிருக்கிறது; போவார்கள். மக்களுக்குச் சொல்லிக்கொடு என்று சொல்லியிருக்கிறது; சொல்லிக் கொடுப்பார்கள். மக்களிடமிருந்து கற்றுக்கொள் என்று சொல்லியிறுக்கிறது; அதை மட்டும் செய்ய மாட்டார்கள். இவர்கள் சொல்லுவதை மட்டும் மக்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு நடக்கனும்.
இலக்கியம் என்பது கட்சி இலக்கியம் தத்துவ இலக்கியம் மட்டுமல்ல உலக இலக்கியம் படிக்கணும். ( உலக இலக்கியம் என்பது சர்வதேச இலக்கியம் அல்ல). நமது மண்ணில் விளைந்த மக்கள் இலக்கிய கதை முதலில் படித்துத் தெரிந்து கொள்ளனும்.
உனக்கு மூன்று குழந்தைகள் ; கணேசனையும் சேர்த்து. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது கணேசனுக்கும் சொல்லிக்கொடு. அது புத்திசாலிக்குழந்தை; புரிந்துகொள்ளும்.
உங்கள் அனைவரையும் வந்து பார்க்க முடிந்தது ரொம்ப மகிழ்ச்சி.
அன்புடன்,
கி.ரா.