புலன் மயக்கம் 1

முதன் முதலில் தேங்கிய ஞாபகம் எது..?"எனக்கு நினைவு தெரிந்த வரையில்" இந்த வாக்கியத்தை எத்தனை முறை பயன்படுத்துகிறோம்.நினைவு தெரிந்த வரையில் முதன் முதலில் சேமித்துக் கொண்ட ஞாபகம் என்னவாயிருக்கும்..?எத்தனை வயதில் எனக்குள் ஞாபகம் என்கிற வஸ்து உருவானது..?எனது பால்யத்தின் கடைசிக் கதவைத் திறந்து கொண்டு பதின்பருவத்தின் முதற்கதவு நோக்கி என்னை அழைத்துச் சென்ற அந்த இடையிருள் தான் எனக்கு நினைவு தெரிந்த ஞாபகமா..?முதற்பொய்யும் அதில் பிடிபடாமல் தப்பித்ததை ஊர்ஜிதம் செய்துகொண்டது வரையிலான பெரியமனுஷத் தனத்தின் பாவனைகளைச் சொல்லலாமா.?

 முதற்கனவு எது..முதல் களவு எது..?இரண்டுக்கும் நடுவே எத்தனை வித்யாசங்கள் இருப்பினும் முதல் என்னும் சொல் வசீகரிக்கத் தானே செய்கிறது..?


 நான் பிறந்தது 1977இல்.நான் தான் பிறந்திருக்கிறேன் எனத் தெரியாமல் என்னையும் எல்லாரைப் போலவும் குழந்தையென்றே கருதி வளர்த்தார்கள்.அப்போதெல்லாம் எனக்கு ரஜினி மீது பெரும்ப்ரியம் உண்டு.காணக்கிடைத்த ரஜினி படங்களில் ஆறில் இருந்து அறுபது வரை புவனா ஒரு கேள்விக்குறி பொல்லாதவன் என்று எந்தப் படமும் அப்போது எனக்குப் பிடிக்காது.தம்பிக்கு எந்த ஊரு படத்தைத் தற்செயலாக இரண்டு முறைகள் அடுத்தடுத்து காணும் வாய்ப்புக் கிடைத்தது.முக்காலே முழு நீளம் அதில் நகைச்சுவை நிரம்பி இருக்கும்.என் ஆதர்சங்களின் ஆதி நாயகன் ரஜனிகாந்த்.இல்லாத முன் தலைமுடியை அதே போலக் கோதி விட்டுக் கொண்டு ரஜினி பண்ணிக் காட்டுவேன்.பெரியவர்கள் ஒரு பேசும் பொம்மையாகத் தான் குழந்தைகளைக் கருதினார்கள்.அதில் ஒரு தேர்ந்த வித்தைக்காரனைப் போல் உறவினர்கள் யார் வந்தாலும் உடனே ரஜினி பண்ணு என்பார்கள்.நானும் தலையைக் கோதி விட்டுக் கொண்டு ரஜனி போலத் தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டு யூய்யா என்று அலறுவேன்.எல்லோரும் சிரிப்பார்கள்.

ரஜினி மீதான ப்ரியம் மொத்தமும் ரஜனி படங்களைச் சேகரிப்பதிலிருந்து தொடங்கி ரஜினி சினிமாக்களை முதல் நாள் பார்ப்பது வரைக்கும் பல நிலைகளைக் கொண்டது.

நான் பிறந்த சம்மந்தமூர்த்தித் தெரு பிறகு கல்பனா டாக்கீஸூக்கு நாலு கதவிலக்கம் தாண்டி சிம்மக்கல்லில் குடிபுகுந்தோம்.அப்போதெல்லாம் வடக்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் சாந்தி என்றொரு தியேட்டர் இருந்தது.பிறகு அழிந்தது.அந்தத் தியேட்டரில் தான் என் வாழ்க்கையின் முதல் படத்தைப் பார்த்தேன்.நீலமலைத்திருடன்.சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா என்று திரையில் ரஞ்சன் குதிரையில் பயணித்து வரும் அந்தக்காட்சி தான் என் வாழ்க்கையின் அனேகமாகத் தானாக உருவான முதல் ஞாபகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.அந்தப் பாடலை அதற்கடுத்து எப்போது கேட்டாலும் இனம்புரியாத வாஞ்சை எனக்குள் ஊற்றெடுக்கும்.நிற்க.இந்தப் பாடலைப் பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன்.


டி.எம்.எஸ் பாடிய இன்னும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்.இன்னொன்று ராவு பாலசரஸ்வதி பாடிய நீலவண்ணக் கண்ணா வாடா...நீ ஒரு முத்தம் தாடா...இந்த இரண்டு பாடல்களையும் என் தகப்பன் மிக அருமையாகப் பாடுவார்,.அவருக்குப் பாடுவதில் பெரும் விருப்பமோ தொடர்ந்த ஞானமோ இருந்ததில்லை.பாடல் கேட்பதில் ப்ரியம் உண்டென்றாலும் கூட அவர் திரும்பத் திரும்பப் பாடிய இரண்டு பாடல்கள் இவை மாத்திரம் தான்.அதிலும் தொட்டால் மணக்கும் ஜவவாது..குடித்தால் இனிக்கும் தேன்பாகு என்கிற வரிகளை எல்லாம் அவற்றுக்குண்டேயான அசல் வளைவு நெளிவுகளோடு இழைத்துப் பாடுவார்.நான் பெற்ற செல்வம் பாடலைப் பாடும் போது கூட சற்றே உற்சாகமாக இருப்பார்.நீலவண்ணக் கண்ணா வாடா பாடலைப் பாடும் போது லேசாகக் கலங்கி விடுவார்.தன் தகப்பனை இரண்டு வயதிலேயே இழந்து தாய்மாமன் வீட்டில் வளர்ந்தவர் என் அப்பா.ஒருவேளை அந்த இழத்தலின் செல்வாக்கு அதனுள் மறைபொருளாய்ப் பொங்கி இருக்கக் கூடும்.

   (மங்கையர் திலகம் இசை தக்ஷிணா மூர்த்தி பாடலை எழுதியவர் மருதகாசி.நடித்தவர் பத்மினி வெளியான ஆண்டு 1955)


 நீலவண்ணக் கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா 
  நிலையாக இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா.
. நீலவண்ணக்
கண்ணா வாடா..

பிள்ளையில்லாக் கலியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தாய்..
பிள்ளையில்லாக் கலியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தாய்...
எல்லையிலாக் கருணை தன்னை என்னவென்று சொல்வேன் அப்பா 
என்னவென்று சொல்வேன் அப்பா 
நீலவண்ணக் கண்ணா வாடா...

வானம்பாடி கானம் கேட்டு வசந்தக் காலத் தென்றல் காற்றில் 
தேன்மலர்கள் சிரிக்கும் ஆட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

தங்க நிறம் உந்தன் அங்கம் அன்புமுகம் சந்திரபிம்பம் ஆ....
தங்க நிறம் உந்தன் அங்கம் அன்புமுகம் சந்திரபிம்பம்
கண்ணால் உன்னைக் கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்
கண்ணால் உன்னைக் கண்டால் போதும் கவலை எல்லாம் பறந்தே போகும்...


சின்னஞ்சிறு திலகம் வைத்து சிங்காரமாய்ப் புருவம் தீட்டி 
பொன்னாலான நகையும் பூட்ட கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நீலவண்ணக் கண்ணா வாடா..

நடுங்கச் செய்யும் வாடைக்காற்றே நியாயமல்ல உந்தன் சேட்டை 
தடை செய்வேன் தாளைப் போட்டு முடிந்தால் உன் திறமை காட்டு
விண்ணில் நான் இருக்கும் போது..மண்ணில் ஒரு சந்திரன் ஏது 
அம்மா என்ன புதுமை இது என்றே கேட்கும் மதியைப் பாரு
இன்ப வாழ்வின் பிம்பம் நீயே இணையிலா செல்வம் நீயே 
பொங்கும் அன்பின் ஜோதி நீயே புகழ்மேவி வாழ்வாய் நீயே...
புகழ்மேவி வாழ்வாய் நீயே புகழ்மேவி வாழ்வாய் நீயே..

ராவு பாலசரஸ்வதியின் சன்னமான குரலில் இந்தப் பாடலை இன்றைக்குக் கேட்டாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் கேட்பவர் உள்ளம் கரைந்து நீர்மமாய்த் ததும்பும்.ஒரு இரவுக்கு இந்தப் பாடலின் பெயரைச் சூட்டலாம்.அந்த இரவு முழுவதும் இந்த ஒரு பாடலைக் கேட்டபடி அடுத்த தினத்திற்குள் நுழையலாம்.அப்படியான காந்தர்வக் குரல் பாலசரஸ்வதியினுடையது.பாடி நடித்துப் பாடகியாகவும் நடிகையாகவும் புகழோங்கிய பாலசரஸ்வதியின் இந்தப் பாடல் மறக்க் முடியாத குரல்வைரம் என்றால் அது சத்தியமே.மருதகாசியுடைய நிகரற்ற வரிகள்

 //////வானம்பாடி கானம் கேட்டு வசந்தக் காலத் தென்றல் காற்றில் 
               தேன்மலர்கள் சிரிக்கும் ஆட்சி செல்வன் துயில் நீங்கும் காட்சி////

குழந்தை துயில் எழுவதை இத்தனை அற்புதமாகத் தமிழில் அதுவும் இசையுடன் இயைந்த பாடலில் சொல்ல முடிந்திருக்கிறது.அற்புதம்.


இந்த இரண்டு பாடல்களைத் தவிர என் அப்பா இறுதிக் காலத்தில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பாடல் ப்ரியங்கா படத்தில் வரும் வனக்குயிலே குயில் தரும் இசையே என்னும் பாடல்.அந்தப் பாடலின் அமானுஷ்யத்தன்மை என் தகப்பனின் இறுதிக் கால விருப்பத்தையும் சேர்த்து இன்றளவும் அதனை முழுவதுமாகக் கேட்கவியலாத அளவுக்கு எனக்கு மிக இன்றியமையாத பாடல் என்பேன்.


ஆனாலும்..டி.எம்.எஸ்.என்றால் பெரிய விருப்பமோ மரியாதையோ எனக்கு முதலில் இருந்ததில்லை.நான் எந்தக் காலத்தில் பிறந்தவன்..?எஸ்.பீபாலசுப்ரமணியமும் யேசுதாஸூம் பட்டாசு கொளுத்திய காலம் அல்லவா.?பழைய பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தாலும் கூட எல்லாவற்றையும் தாண்டி டி.எம்.எஸ் பாடல்களின் மேல் நிசமாகவே எந்த ஈர்ப்பும் இல்லாமலே தான் இருந்தது.ஒரு பாடல் அதுவரைக்குமான கதைகளை மாற்றியது.


திருநகருக்குக் குடிவந்த பிற்பாடு பல விசயங்களுக்கான மாற்று ஏற்பாடுகள் தேவைப்பட்டது.புதூருக்கும் திருநகருக்கும் கிட்டத் தட்ட பதினைந்து கிலோமீட்டர் தூரம்.முடி திருத்துவதற்கு அதுவரைக்கும் சென்றுகொண்டிருந்த சலூனை விடுத்து திருநகர் 3 ஆவது நிறுத்தத்தில் ஒரு சலூனுக்கு முதல்தடவை சென்றோம்.அப்பாவும் நானும் வந்திருந்தோம்.நல்ல கூட்டம் என்பதால் வாசலில் காத்திருக்க நேர்ந்தது.அப்போது ரேடியோவில் வரிசையாக பழைய பாடல்கள் ஒலித்தன.


 ஒரு பாடலை முதல் முறை கேட்டு அதிர்ந்தேன்.அது எனக்குள் ஏதோ ஒரு ஆழத்தைப் பெயர்த்துக் கற்சுவர்களைத் தகர்த்தெறிந்தது.மழைக்கு முந்தைய மந்தகாசத்தில் மனம் திளைத்தது.கரகரவென்று அழுகை சுரந்தது.முதல் முறை கேட்டு முடித்ததும் என் மனசின் முழுப்பிரதி ஒன்று அந்தப் பாடலைப் பின்பற்றியபடியே எங்கோ வனவனாந்திரத்தில் அலையத் தொடங்கிற்று.
                        

 என் அப்பாவிடம் அந்தப் பாடல் இடம்பெற்ற படம் அதைப் பாடியவர் இத்யாதி தகவல்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.முதல்முறையாக என் அப்பாவின் விருப்பப் பாடலான நான்பெற்ற செல்வம்  மற்றும் எனக்கே அறிமுகமான சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா என்பனவற்றோடு அன்றைக்குக் கேட்ட அந்தப் பாடலுடன் பதினெட்டு பாடல்களை வரிசையாக எழுதி திருநகர் ஐந்தாவது நிறுத்தத்தில் அப்போது இருந்த ரெக்கார்டிங் கடையான சிதார் ம்யூசிகல்ஸில் தந்து அந்தக் கேஸட்டைப் பதற்றத்தோடு பெற்றுக் கொண்டேன்.அப்போதெல்லாம் இன்றைக்குக் கொடுத்தால் பதிந்து தர மினிமம் ஏழு நாள் ஆகும்.;அவசரப் படுத்தினால் பாடல்கள் மாறிப் போகக் கூடும் என்பதால் ரெகார்டிங் கடைக்காரரை யாரும் பகைத்துக் கொள்ள மாட்டோம்.

 அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் குங்குமம்.பாடல் தூங்காத கண்ணென்று ஒன்று...இந்தப் பாடலை அப்போது மாத்திரமல்ல.இந்தக் கணத்திலும் ரசிக்க முடிகிறது.

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் 
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழியொன்று தருகின்ற 
பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று.
 

இந்தப் பாடலை ஏன் இத்தனை பிடிக்கிறது என்று சிந்தித்தால் சுருண்டு சுருண்டு நினைவின் அத்தனை அடுக்குகளையும் வசீகரித்து மந்திரவாதியின் கைப்பொருளாகத் தப்பியோடுகிறது இப்பாடல்.அமானுஷ்யமான இதன் துவக்க இசையும் தீர்ந்து தீர்ந்து துவங்கும் இதன் இடைவரிகளும் இயைந்தோங்கும் இசையும் பாடிய குரல்களும் பாடலின் வரிகளும் எனப் பிரித்து உணரமுடியாத ரகசியத்தின் உபசொற்களாய் விரிகின்றது இப்பாடல்.கானசாஸ்வதம்.முதன் முதலில் கேட்ட போது செவி வழி நுழைந்து இதயத்தைத் துளைத்து உயிரைத் தன்வசம் ஆக்கிக் கொண்ட அந்தப் பாடல் இன்றளவும் என் பெருவிருப்பப் பாடல்களில் ஒன்றெனத் தொடர்கிறது.ஒப்பாரும் மிக்காரும் இல்லாத டி.எம்சவுந்திரராஜன் மொழிவாரி சிறுபான்மை இனத்தில் பிறந்தவர்.தாய்மொழி சவுராஷ்ட்ரா.என்றபோதும் தமிழன்னை தத்தெடுத்துக் கொண்ட குரல்பேரரசன் டி.எம்.எஸ்.காலத்தால் அழியாத பல ஆயிரம் பாடல்களுக்குள் இன்றும் வாழ்கிறார்..

 இன்றைக்கு என் தந்தைக்கும் எனக்குமான உறவாடலில் எனக்கே எனக்கென்று நிரந்தரமாகவும் காத்திரமாகவும் விஞ்சி இருக்கிற சொற்ப ஞாபகங்களில் செல்வாக்குடன் இருப்பவையாக மேற்சொன்ன அவரது விருப்பப் பாடல்களைச் சொல்ல முடிகிறது.தேடிச் சென்று கேட்பதில்லை.எப்போதாவது அந்தப் பாடல்களைக் கேட்க நேர்கையில் அந்த தினத்தின் மிச்சமீதமெங்கும் அப்பாவின் ஞாபகங்கள் வந்து வந்து செல்கின்றன.பெரியதோர் பெட்டகத்தைத் திறந்து தருகிற சின்னஞ்சிறிய சாவிகளைப் போல இந்தப் பாடல்கள் என்னளவில் சிறந்த விருப்பமான என்கிற சொற்களையும் தாண்டி மிக முக்கியமான இடமொன்றை வகிக்கின்றன.இந்தத் தொடரை இவ்விதம் ஆரமித்துத் தருகிற கடவுச் சொற்களாகவும் இந்தப் பாடல்கள் இருக்க வேண்டுமென்பது என் ப்ரியம் மாத்திரமல்ல.தானாகவே வந்து பெருகுவதன் பெயர் தானே ஞாபகமென்பது..?

logo
Andhimazhai
www.andhimazhai.com