புலன் மயக்கம் - 15
பிறரை நோக்கிச் செல்கிற மற்றும் பிறரிடமிருந்து விலகுகிற இருவேறு பாதைகளைக் கொண்டது பாடல் ரசனை."எனக்குப் பாட்டே பிடிக்காது. இதுக்கெல்லாம் யாருக்கு நேரமிருக்கு..?" என்பதன் பின்னே பெரும்பாலும் ஒளிந்திருக்கக் கூடியது இயலாமையே.. ஒரு ரசனையை எங்கனம் துவக்குவது என்பதில் அவரவர் இயலாமை மெல்ல உருமாறி சுய இரக்கமாகிப் பின்னி இழுக்கிற சுயவதையாய் இறுகும்.
வாய்விட்டுச் சிரித்தால் மாத்திரமல்ல. வாய் விட்டுப் பேசினாலே பாதி நோய் விட்டுத் தான் போகும். பிறரிடமிருந்து எளிதில் பெறத்தக்கதும் யாருக்கும் இழப்பற்ற பகிர்தலுக்கு உரியதும் வார்த்தைகள் தான். அடுத்த இருக்கையில் வந்தமர்கிறவர்களை சகித்துக் கொள்கிறவர்கள் அல்லது வெறுப்பவர்கள் தத்தமது நரகத்தைத் தானே நிர்மாணிக்கிறார்கள். ஆனால் அடுத்த கணம் கொண்டுவந்து தருகிற அன்னியரைப் புன்னகையோடு வரவேற்கிறவர்கள் சொர்க்கத்தைச் செய்துகொள்கிறார்கள். நான் அப்படியான ஒருவன் என்பதில் எனக்கெந்த ஐயமுமில்லை. பற்பல சந்தர்ப்பங்களில் அன்னியம் உடைக்கிற புன்னகை என்னுடையதாய் இருந்திருக்கிறது. எத்தனையோ எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
தனக்குப் பிடித்த பாடலை முணுமுணுக்கிறவர்கள் ஒரு ரகம். அப்படியானவர்களில் சிலர் தங்கள் இடம்பொருள் இத்யாதிகளை மறந்து பாடல்களின் பிடியில் வாழ்வது நடக்கும். உதாரணமாக வாகனங்களில் பயணிக்கையில் தங்கள் உயிரனைய பாடலை சாதகம் செய்துகொண்டே பயணிப்பார்கள். அப்படி ஒருவரை முதன் முதலில் பார்த்த போது எல்லோரையும் போல நானும் கிண்டல் தான் செய்தேன். ஆனால் அதே அவர் மீது பின்னொரு நாளில் பெரும் ஈர்ப்பு வரக் காரணமாகப் பழைய பாடல்கள் இருந்தது. தமிழ் இந்தி ஆங்கிலம் என பல்மொழிப் பாடல்களையும் கரைத்துக் குடித்தவராக இருந்தார். பயபக்தியுடன் எனக்குத் தேவையான தகவல்களைப் பெற்று வந்தேன்.
பாடுவதில் விருப்பம் என்பது இயல்பாக எழுவது.அசல் பாடலைப் பாடியவர்களின் மேதமைக்குச் சற்றும் அருகாமையில் செல்லத் தக்க குரலாக அதனை ரசித்து உய்க்கிறவர்களின் குரல் இருந்துவிடப் போவதில்லை. பிடித்த பாடலைத் தானாகப் பாட முயல்கிறவர்களைப் பல்லவி தாண்டுவதற்குள் “போதும் நிறுத்து!" என்று சொல்கிறவர்கள் அனேகமாக உடன்பிறந்தவர்களாகவோ அல்லது பெற்றோராகவோ இருப்பார்கள். முன் பழைய காலத்தில் அப்படியான புறந்தள்ளல் இருந்தது நிஜம்.
சினிமாப் பாடல்களைக் கேட்பதே பாவம். பாடுவதென்பது அனச்சாரம். பக்திப் பாடல்களை வேண்டுமானால் பாடலாம் என்பதே எழுதப்படாத முந்தைய காலத்தின் சட்டமாக இருந்தது. எத்தனை ஆரம்பங்களை ஆரம்பங்களிலேயே அற்றுப் போகச் செய்திருக்கிறார்கள். இது குற்றமோ சதியோ அல்ல. பாடுவது என்பது ஸ்பெஷலாக வாங்கி வந்த வரம் என்றே கருதி நம்பியதன் விளைவு.
இரு ஒரு புறம் இருக்கட்டும். "சரி பாடும்...பாடித் தொலையும்.." என்று புலிகேசி மாதிரி பாணபத்திர ஓணாண்டிக்கு அனுமதி அளிப்பவர்கள் அடுத்த ரகம். இந்த மாதிரி உற்றசுற்றம் அமைந்தவர்கள் தாங்களாகவே தனித்தலையும் ஒற்றைக்குருவி போலத் தங்களுக்குப் பிடித்தமான பாடலை அல்லது பாடல்களைப் பாடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களாகப் பாடி முடித்து விட்டு தங்களுக்கான கரவொலியைக் கற்பனை செய்துகொள்ள வேண்டியது தான். 90களில் இப்படியானவர்களும் இருந்தனர்.
அடுத்த ரகம் தான் "ஐ...நல்லா பாடுறியே.." என்று இனம் கண்டு ஊக்குவித்து க்ளாஸூக்கு அனுப்பி...சோர்ந்து அயர விடாமல் தோள் தந்து சுமந்தலைந்து எங்க தீபா ரொம்ப நல்லா பாடுவா. எங்க அருண் சூப்பரா பாடுவான் எங்க சின்னு அப்டியே எஸ்.பி.பி மாதிரி பாடுவான் தெரியுமா என்றெல்லாம் சொந்த விருதுகளை வழங்கிச் சிறப்பித்து விடா முயல்வும் விடவே விடாத ஊக்கமுமாகச் சிறப்பிப்பார்கள். இப்படியான பெற்றோர் பெரியோர் அமையப் பெற்றவர்களில் வெகு சிலர் ஒரு சிலர் நிஜவானம் ஏகிப் பறந்து நிஜமழையில் நனைந்ததும் உண்டு. எல்லாம் அவரவர்க்கு அமைந்த அதனிஷ்டத் திருப்பங்களைப் பொறுத்து அமைந்தது.
நிற்க. இப்பவும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் காலம் இது. மேற்சொன்ன எதுவுமே பொருந்தாது. கொட்டாவி விடும் குழந்தைகளைக் கூட அடடா செம்மையாப் பாடறியே என்று வகுப்பிற்கு அனுப்பி வைத்து விட்டு திருப்பி அழைத்து வந்து டீவீ ஷோக்களுக்காக கேஷூவல் லீவ் போட்டுக் கூடப் பயணித்து "எங்க சர்வேஷ் நாலாவது ரவுண்டு வரைக்கும் வந்து எலிமினேட் ஆனான். ஜட்ஜஸ் பெர்ஸனலா கூப்டு நீ ரொம்ப நல்லா பாட்றே விடாம ட்ரை பண்ணுன்னு சொல்லி அம்ச்சா" என்று தங்கள் சர்வேஷை எப்போதும் விட்டுத் தருவதாயில்லை என்கிற எச்சரிக்கை கலந்த நம்பிக்கை கலந்த வெல்....இது வேற காலம்.
ரேடியோ பண்பலையாக மாறிற்று. தூர்தர்ஷன் சாடிலைட் சானல்களாக மாறிற்று. வாரத்திற்கு ஐந்து பாட்டு என்று ஒலியும் ஒளியும் என்கிற பேரில் ரேஷன் நடத்தி வந்ததெல்லாம் நின்று போய் ம்யூசிக் சானல்ஸ் தனியாக உருவாயிற்று. எம்டீவீ என்கிற ஒரு வஸ்து சர்வதேச இசைக்கென்றே தனி சன்னிதானம் ஈர்த்தது. இவை எல்லாமும் நிகழ்ந்ததெல்லாம் 1994 ஆமாண்டு வாக்கில்.
அதே வருடம் தான் கல்லூரிவாழ்க்கை தொடங்கிற்று. இது ஒரு யதேச்சையான சம்மந்தம். ரஹ்மான் ஒருபக்கம் அதிரி புதிரி பண்ணிக் கொண்டிருந்தார். அதில் ஒரு குரல் ஜெண்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே... இதென்னடா ஒட்டகத்தின் கழுத்தைப் பாதி அறுத்தாற் போல் ஒரு பிளிறல் வாய்ஸ் என்று கெக்கலித்தார் சித்தப்பா. அவருக்கு இளையராஜாவே சுமார் ம்யூசிக் குமார் என்பார். அந்த அளவுக்கு பாகவத காலத்துப் பைத்தியர். சுரேஷ் பீடர்ஸ் குரலில் ஒன்னும்மேய் விவரங்கல் புரியல்லே என்னம்மோ நட்டக்குதூ தெர்யல்லே அம்புகல் ஆயிரம் அடிச்சாச்சூ மொத்தத்தில் பைத்தியம் புடிச்சாச்சூ...என்று தன் விதவிநோதக் குரலில் சுரேஷ் பீடர்ஸ் பாடுவதை என்ன மிருகம் இது என்றறியாது ஓட்டமெடுக்கிற சோப்ளாங்கி போல் பலவீனமாய் எதிர்த்தார் சித்தப்பா. இதென்னடா குரல்.. இதென்னடா மாடுலேஷன்..? என்று தனக்குத் தானே சிரித்து விலகினார்.
அதே சுரேஷ் பீடர்ஸ் தான் என் வாழ்வின் முழுமுதல் ஆல்பத்தை எனக்கு வழங்கியவர். ஆல்பத்தின் பேர் மின்னல். என் அக்காவின் கிளாஸ்மேட் இளங்கோ @ கண்ணா. அவர் தான் மின்னல் கேஸட்டை எனக்குத் தந்தார். கேட்டுப் பார் ரவி என்று தன் மெல்லிய குரலில் கண்ணா சொன்னபோது எனக்குத் தெரியவே தெரியாது. என் மனசை மொத்தமாய்க் கரைத்துத் தன் வசமாக்கிக் கொள்ளப் போகிற பாடலொன்று அதனுள் ஒளிந்திருப்பது.
இது வானம் சிந்தும் ஆனந்தக் கண்ணீர்
இதற்காகத் தானே இந்த பூமி அழைத்ததோ கண்ணே..
முதல் முறை கேட்கும் போதே முன்னர் எப்போதும் வாய்க்காத பரவசம். எந்த சித்தப்பா சுரேஷ் பீடர்ஸைக் கெக்கலித்தாரோ அதே சித்தப்பா மிகச்சத்தியமாய்த் தான் செய்கிற செயலின் வீர்யம் அறியாமல் கேட்டார். "இதென்ன படம்டா தம்பி.. ரொம்ப நல்லா இருக்கே.." என்று. இந்தப் பாடலின் வெற்றி சித்தப்பாவிடமிருந்து வரவழைத்த சொற்களால் ஊர்ஜிதமானது. இசையில் மின் அணு சாதனங்கள் கொணர்ந்த மாற்றங்கள் ஒருபுறம் கண்களை மூடிக் கேட்கிறவர்களின் கல்லிதயங்களின் இடையே ஒளிந்திருக்கக் கூடிய நிஜநீர்த் துளிகளைப் பெயர்த்தெடுக்கிற ஜாலம் இந்தப் பாடலின் ஆழம். இதனை இன்றைக்கும் ரசித்துக் கேட்க முடிகிறது.
மழைப்பாடல்களைத் தொகுத்தோமேயானால் முதல் பத்துப் பாடல்களில் மேற்சொன்ன இதுவானம் சிந்தும் பாடல் இடம்பெறும் என்பது என் ஆழநம்பிக்கை. குரலும் இசையும் மிக அரூப அபூர்வ முகடொன்றில் கலந்தும் தனித்தும் ஒலிக்கும்.
மழை வந்து விழுகின்ற போது மண் மீது பாரங்கள் ஏது என்ற வரியில் தான் உருகிக் கேட்பவரையும் உருக்கிவைப்பார் சுரேஷ் பீடர்ஸ். முன்னரெப்போதும் நிகழாத குரலொன்றில் வேறெங்கேயும் வாய்க்காத பாடலாக இப்பாடலை நமக்குத் தந்திருப்பார்.
ஒரு நாள் பகை கொண்டு சென்றான் கதிரவன். மறு நாள் தளிர் பூக்கள் தந்தான் புதுமணம் என்ற வரியில் நாமும் அயர்ந்து நூறாவோம். இதே ஆல்பத்தின் அடுத்த பாடலான முகிலென மழையென உன் நினைவு பாடலில் அன்பே நீ என் ஜீவன் அன்பே நானுன் தேவன் அன்பே நீயென் மோகம் நெஞ்சே நானுன் ராகம் என்ற வரியை எத்தனை முறை கேட்டுருகி அதிசயித்திருக்கிறேன் என்பதற்குக் கணக்கே இல்லை.
உன் முகம் கண்டதும் ஓவியம் வந்தது நீலமலைக் குயிலே
என் மனதில் ஒரு மல்லிகை பூத்தது நீ வரும் பார்வையிலே
சம்மதம் என்றொரு சந்தன இழைகளும் ஜாடையில் கேட்கையிலே
வந்தது பொன்மலர்ப் பாதங்கள் இது என் மன வாசலிலே...
யாராலும் எழுத இயலாத கவிதை ஒன்றை இசைக்குத் தந்தாற் போலவொரு பாடல்.
இதற்கடுத்த ஆல்பமான "ஓவியம்" அசத்தி இருப்பர் சுரேஷ் பீடர்ஸ். பாப் ஷாலினியின் ஷாலினி தேவி ஸ்ரீப்ரசாத் இசைத்த தேவி போன்ற ஆல்பங்கள் சில வைரலாகின. ஆல்பம் என்பது படமற்ற படத்தின் பாடல்களாகப் பெருக வேண்டும். அவற்றின் பாடல்களுக்கிடையே மிக மௌனமான தொடர்பிழைகள் இருந்தாலொழிய ஆல்பங்கள் காலங்கடப்பதில்லை.
இன்னொரு ஆல்பம் மனசைக் கெடுத்தது மால்காடி ஷூபா பாடிய என்னப் பாரு ஆல்பம். இதன் வால்பாற வட்டப்பார பாடல் அதன் குரல் வரிகள் இவற்றைத் தாண்டி அதன் படமாக்கலுக்காகவும் பெரிதும் கவனம் பெற்றது. எளிமையான அதே நேரத்தில் பெருங்கதை ஒன்றை நாலே நறுக் காட்சிகளில் பார்ப்பவர் மனசுள் பெயர்த்துத் தந்துவிடுவது இப்பாடலின் படமாக்கலின் சிறப்பு. ஷூபாவை திரைப்படங்கள் வல்லினராணியாகவே தீர்மானித்திருந்த காலத்தில் இந்தப் பாடலை அத்தனை மென்மையாக அத்தனை ரசிக்கத் தக்க விதத்தில் பாடியிருப்பார். மனசு கிடந்து உருகும்.
அந்தக் காலகட்டத்தில் எடுக்கப் பட்ட திரைப்பாடல்களின் காட்சிப்படுத்துதல்களை விட மிக உன்னதமான உயரமொன்றில் இந்தப் பாடலின்ப் வீடியோ அமைந்திருக்கும், கேட்கச் சலிக்காத பாடலைப் பார்க்கவும் இனித்தால்..? இன்னும் ஒரு முறை கூடப் பார்த்திடாதவர்கள் யாராவது இருந்தால் கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கி சேவித்துவிட்டு மறுபடி வாருங்கள்.
மிக லேசான எள்ளலும் பிரிவின் தனிமையும் சேர்ந்து சந்திக்கிற புள்ளியொன்றைக் குரலாக்கி இந்தப் பாடல் முழுமையும் பாடி இருப்பார்.ரெண்டு கண்ணும் தேன்பாறை விண்டு விண்டு திம்பாரே... வால்பாறே வட்டப்பாறே எனும் போது ஷூபாவுடைய குரல் ஒரு அன்பான அசரீரி போல ஒலிக்கும்.
வனவனாந்திரங்களில் மாத்திரம் கேட்கவாய்க்கிற பெயரற்ற பறவைகள் சிலவற்றின் கீச்சொலிகளின் எதிரொலி போன்ற மிக அபூர்வமான குரல் ஷூபாவுடையது. இந்தப் பாடல் இருபது ஆண்டுகளைத் தாண்டி இன்றைக்கும் கேட்க இனிக்கிறது.
சரி
வேறொரு ரகசியத்தை சொல்லட்டுமா..?
திரும்பிப் பார்த்தால் நகைப்பையும் நாணத்தையும் ஒருங்கே ஏற்படுத்தித் தருவதும் ஞாபகமென்னும் ராட்சஸனின் செல்லக்குறும்புகள் தானே..? முதல் காதல் என்ற ஒன்று குறித்து எங்கேயாவது எழுதி வைத்துத் தானே ஆகவேண்டும்..? அவள் பெயர் காயத்ரி. அந்தப் பெண்ணை விட அவள் பெயரைக் காதலித்தேன். என்னைப் பார்த்தாலே நில்லாநதியாய் ஓடி மறைவாள் காயத்ரி. இது போதும். மிச்சக்கதை இங்கே சொல்வதற்கில்லை.
நிறைவேறாத காதல் ஒருவனைக் கவிதைகளின் சாலையில் பயணிக்கச் செய்யும்.செய்தது. அதே நிறைவேறாத காதலின் வதங்கல் எந்த ஒருவனையும் பாடல்களின் மடியில் கிடத்தும்.காலமும் சூழலும் வெவ்வேறு பாடல்களைக் கொண்டு வந்து நிறுத்துமே ஒழியப் பாடல்க\ளன்றி வேறு தெய்வமில்லை எனலாம். பாடல்கள் மாத்திரம் தான் உரையாடத் தேவையற்ற பிரார்த்தனைக் கூடமாக மாறும். சொல்ல வேண்டிய வார்த்தைகள் அனைத்தையும் புரிந்து கொண்ட ஞானியைப் போலப் புன்னகைக்கும். தேவையான அருமருந்தைக் கண்டறிந்து தருகிற சித்தனைப் போல சிலிர்க்கச் செய்யும். எல்லாவற்றுக்கும் மேலாக மனதினாழத்தில் உரையாடக் கூடிய ஒரே மொழியாகப் பாடல்கள் திகழும்.
ஒரே பாடலை எத்தனை லட்சத்து எத்தனையாயிரமாவது முறையாகவோ கேட்க முடியும் என்றால் அதன் பின்னே ஒருத்தி அல்லது ஒருவன் இருப்பார்கள். என்னைப் பாடல்களின் ஆழ்வனத்தில் அதிகதிகம் இருக்கச் செய்த நோய்மையாகக் கல்லூரி காலக் காதல் இருந்தது. மருந்தாகவும் சிகிச்சையாகவும் பாடல்கள் ஆகிப்போகின.
அந்த நேரம் ஹரிஹரனும் வைரமுத்துவும் சேர்ந்து காதல் வேதம் என்றொரு ஆல்பம் கொணர்ந்தார்கள். மனவதையை முற்றிலுமாக நீங்கச் செய்து உலர்ந்த காகிதமாய் மாற்றித் தந்தது ஒரு பாடல்.நிச்சயமாக இந்தப் பாடலுக்கென்று ஒரு ஆன்மா இருக்கிறதென்று நம்புகிறேன். இதன் குரல்களும் வரிகளும் அதன் அர்த்தங்களும் பின்னதான இசையும் இசையிடை மௌனங்களும் தாண்டிய ஏதோவொன்று இந்தப் பாடலில் இருக்கிறது. இதனை நிரூபிப்பது கடினமே அல்ல. திறந்த மனதுடன் இந்தப் பாடலை அணுகிப் பார்க்கிற யாவர்க்கும் எளிதாகக் கிடைத்துவிடுகிற தேவபரவசம் தான் அது. ஒரு கடவுளின் கரம் இந்தப் பாடலின் ஏதோவொரு இடத்தில் இல்லாமல் இல்லை. ஒருவேளை அதன் உருவவடிவ வெளிப்பாடுகளில் அதனை நேரடியாக உணர இயலாமற் போனாலும் சின்னதோர் ஆசீர்வாதமாகவேனும் இருந்துகொண்டிருக்கிறது. என் வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் பாடல்களை இசையைக் கொண்டாடிக் கொண்டே இருந்து வந்திருக்கிறேன் இனியும் இது தொடரத் தான் போகிறது என்றபோதும் என் வாழ்வின் பாடல்களாக வெகு சிலவற்றைத் தான் உணரமுடிகிறது. வீட்டின் உள்ளறையில் இருக்கும் வயதுமுதிர்ந்த மூதாதையின் பிரதியற்ற முத்தம் போலப் பொத்தி வைத்த ப்ரியமாக அந்தச் சில பாடல்களை தனியிடத்தில் இருத்திக் கொள்கிறது மனசு.
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசையில்லை
பாய்போடவா...
பள்ளி கொள்ள நீ வா...
(என் நெஞ்சில் தூங்கவா நிலாவே)
விண்மீனும் மேகங்களும் கண் தூங்கும் போது
வாய்முத்தம் நீ சிந்தவா வாய்ப்புள்ள போது.
அடி நெஞ்சு தள்ளாடியே
அலைபாயும் போது தலைசாய்வதேது
(என் நெஞ்சில் தூங்கவா நிலாவே)
நான் உன்னை பார்த்துப் பார்த்தே தேய்கிறேன்
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்
முகில் என்னும் துகில் கொள்ளவே
உன் கையை நீ நீட்டினால்
நான் என்ன தான் செய்வதோ
(என் நெஞ்சில் தூங்கவா நிலாவே)
என் உள்ளம் வெறும் கோப்பை தான் தடுமாறும் கண்ணே
உன் காதல் நீ ஊற்றினால் ஆடாது பெண்ணே
என் உள்ளம் வெறும் கோப்பை தான். தடுமாறும் கண்ணே
உன் காதல் நீ ஊற்றினால் ஆடாது பெண்ணே
நீ வந்து என் கோப்பையை நிறைவாக மாற்று
உடையாமல் ஊற்று...!
(என் நெஞ்சில் தூங்கவா நிலாவே)
என் காலம் என் காற்று என் காதல் என் பாடல் என் வைரமுத்து என் சித்ரா என் ஹரிஹரன் என் காதல்வேதம் என்று இந்தப் பாடலின் எல்லா விபரங்களுக்கும் முன்னாலும் என் என்ற ஒரு சொல்லைச் சேர்த்து முழுக்க முழுக்க என்னுடைய பாடலாக ஆக்கிக் கொண்டாயிற்று. இல்லையா பின்னே..? என் உள்ளம் வெறும் கோப்பையாய் இருந்திடக் கூடாதல்லவா..?