புலன் மயக்கம் - 49

புலன் மயக்கம் - 49

ராஜேந்திர சோழன் நான்

செயின்மேரீஸ் பள்ளியில் எனக்கு பாடம் எடுத்தவர்களில் எஸ்.எஸ் என்றழைக்கப்படும் சர்ப்பிரசாதம் ஸார் மீது அடையாளமற்ற ப்ரியம் எனக்கு இருந்தது. அவரது சினேகத்தை எதிர்நோக்கியபடியே பத்தாம் வகுப்பை முடித்ததை இப்போது எண்ணினால் வியப்பாக இருக்கிறது. அவரிடம் முழுவதுமாக பத்து வாக்கியத்தைக் கூடப் பேசி இருக்க மாட்டேன். ஆனாலும் அவர் மீது ஒரு சின்னக் கிறக்கமே உண்டு. தெளிவான தமிழ் உச்சரிப்பும் கம்பீரமும் மென்மையும் கலந்தொலிக்கும் அவரது குரலும் இன்னமும் நினைவில் இருக்கிறது. ஏன் பிடிக்கும் என்றா பிடிக்கும் எவர் மீதான ப்ரியமும்..? வந்தவழியே தெரியாது அல்லவா..? அப்படியான ப்ரியமானவர்களில் ஒருவர் தான் எஸ்.எஸ்.ஸாரும். அவர் ஒரு நாள் வரலாற்றின் ஏதோ ஒரு சம்பவத்தை விவரித்துக் கொண்டே வந்தவர் சட்டென்று சொன்னார் மக்களே ராஜராஜ சோழனை விட அவம்புள்ளை ராஜேந்திரன் செம்மை வீரன் தொட்டதெல்லாம் தொலங்கினவன். ராசிக்காரன் மாத்திரமல்ல வெற்றிகரமானவனும் கூட என்றார். அந்தக் கணம் ராஜேந்திர சோழன் மீது இனம் புரியாத ஆர்வம் ஏற்பட்டது.


     நிற்க.


புதூரில் இருந்து வீடு மாற்றி திருநகர் சென்றதும் உடனடியாக அமுலுக்கு வந்த வாழ்வியல் மாற்றம் எதுவென்றால் பிரயாண தூரமும் நேரமும் நேர்மாறல் விகிதப்படி அதிகரித்தது தான். அதுவரைக்கும் புதூரில் ஏறினால் அடுத்து அவுட்போஸ்ட் தாமரைத் தொட்டி தல்லாகுளம் கோரிப்பாளையம் நெல்பேட்டை கீழவாசல் ஏழாவது ஸ்டாப்பாக செயிண்ட்மேரீஸ் ஸ்கூல் வந்து விடும். சட்டென்றால் பட்டென்று வரும் இடமாக இருந்தது. இப்போது திருநகர் ஐந்து நாலு மூன்று இரண்டு ஒன்று ஹார்விப்பட்டி அதற்கு அடுத்து கிட்டத் தட்ட எல்லா பஸ்களுமே திருப்பரங்குன்றத்தின் உள் வழியாக சென்று வரும். இந்த இடத்தை நுட்பமாக கவனிக்க வேண்டும்.


திருப்பரங்குன்றம் எனும் ஊரின் இருபுறமும் இரயில்வே கேட்கள் இருக்கும். மதுரையிலிருந்து விருதுநகர் வழியாக நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி கேரளா செல்லும் அத்தனை இரயில்களும் ஒவ்வொரு நாளும் வருகையிலும் திரும்புகையிலும் எண்ணிலடங்கா முறைகள் அந்த கேட்கள் அடைக்கப் படும். ஒவ்வொரு முறை கேட் அடைத்தாலும் திறப்பதற்கு பதினைந்து நிமிடங்கள் குறைந்தது பத்து நிமிடம் ஆகும். சில சமயம் அதிகபட்சம் அடுத்தடுத்த் இரண்டு ரயில்களுக்காக இருபது நிமிடங்கள் கூட அடைக்கப் படும். அப்படிப் பட்ட நேரங்களில் உள்ளும் புறமும் எக்குத்தப்பான பேருந்து லாரி வேன் தொடங்கி சிங்கிள் டயர் வண்டி வரைக்கும் எல்லாரும் எப்போதும் காத்திருப்பார்கள். இதைப் படித்து விட்டு உடனே குன்றம் பக்கம் சென்று இதனைப் பார்க்க விரும்புவோர்க்கு ஒரு தகவல். சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பாக இரண்டு கேட்களுக்கும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு ஜம்மென்று எங்கும் எதற்கும் காத்திருக்காமல் ஃப்ளை ஓவரில் சென்று திரும்புகிறது இன்றைய தலைமுறை. நாம் சம்சாரிப்பது பழைய காலத்தை அல்லவா..?


கேட்டுப் போடுவதை நினைத்தாலே மனசெல்லாம் வலிக்கும். படியில் தொங்கிக் கொண்டே செல்பவர்கள் இறங்கி பைபாஸ் ரோடு எனப்படுகிற புறவழிச்சாலையில் சென்று வேறு பஸ் பிடித்து ஸ்பைடர்மேன் போல இழை மாற்றி காணாமற் போவார்கள். பஸ் பாஸ் எனப்படுகிற வஸ்து அப்போது இலவசமெல்லாம் கிடையாது.தியாகப் பரம்பரை நாங்கள்.காசு கொடுத்து வாங்கிய பஸ் பாஸ் பைபாஸில் வண்டி மாறினால் செல்லாதல்லவா..? அதனாலேயே அப்படியே அமர்ந்து நிஷ்டையில் இருப்போம். இரயிலாதிக்கப் பரம்பரை கடந்து சென்ற பிற்பாடு அடிமை பஸ்கள் புறப்பட்டு ஒருவழியாக டர்ரு டர்ரென்று ஸ்கூலுக்குச் சென்று இறக்கி விடுவதற்குள் இளையராஜாவின் பாடல்கள் ஒருபுறம் வாசல் வழியாக எனக்குள் புகுந்து கொண்டன என்றால் சன்னல்களின் வழியே காற்றைப் போல் புகுந்து கொண்டு பட்டை கிளப்பியவை ராஜேந்தரின் பாடல்கள்.


ராஜேந்தர் தசாவதானி தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தவர் என்றெல்லாம் நகைபாடியது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் இளையராஜாவின் பொங்கிப் பெருகிய காலத்தில் இத்தனை வெரைட்டி கொடுத்த ஒரே இசை அமைப்பாளர் ராஜேந்தர் தான் என்பது மிகையற்ற நிஜமே. ராஜேந்தரின் பாடல்களின் சகல வகைமைகளும் ஹிட் அடித்தன. விளிம்பு நிலை மாந்தர்களின் இசை நுகர்தலுக்கான பாடல்களாக அவை மலர்ந்தன. ராஜேந்தர் மேதமையைப் பறை சாற்றியபடி தொடை தட்டித் தாளம் போட்டு ரசிக்கும் மேட்டிமைகானங்களை உருவாக்குவதில் எந்தத் தயக்கமும் கொள்ளவில்லை. ஆனாலும் கூட அவர் பாடல்கள் சகலருக்குமானவையாக மலர்ந்தன என்பது சொல்ல வேண்டிய சேதி.


ஒரு தலை ராகம் மடைமாற்றம் இல்லை என யாராலும் சொல்ல முடியாது. அத்தனை வகைமைவித்யாசங்களோடு அப்படி ஒரு படம் வருமென்று எதிர்பாரா தருணத்தில் வெளியானது முதல் கதை இரண்டாய்ப் பிளந்ததல்லவா..? காதலின் மென் சோகத்தை காத்திருத்தலை அழியாத கானங்களாக்கி இன்றும் நிரந்தரித்து ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களில் ஒரு தலை ராகம் மற்றும் இரயில் பயணங்களில் இரண்டு படங்களுக்கும் தனி இடம் உண்டு.


ராஜேந்தரின் எளிமையான பாடல்கள் பெரும்பாலும் அதீதத்தை இசைப்படுத்தி உருவாக்கப்பட்டவையாக இருந்தன. தமிழ்த்திரை இசையின் போக்கில் ராஜேந்தரின் மாறுதல் என மலரினும் மெல்லிய காதல் பாடல்களையும் நேரெதிரான அடித்து உருளும் குத்திசைப் பாடல்களையும் அடுத்தடுத்த தன் ஆல்பங்களில் முயன்றதைச் சொல்ல முடிகிறது. யம்மம்மா யம்மம்மா வயசு தான் என்னம்மா..? மயில் வந்து மாட்டிக்கிட்ட பாதையிலே மனசைத் தான் ஓட விட்டேன் போதையிலே முனிவன் கூட உந்தன் மோகப் பார்வையிலே மயங்கிப் போவானடி தயங்கித் தீர்வானடி...


அறியாமையின் மேலோட்டமான ஆர்வத்துக்குத் தீனி போடும் உடனடித் தன்மை கொண்ட பாடல்களில் அதுவரை சொல்லப்படாத வார்த்தைகளை சொல்லாடல்களை இடம்பெறச் செய்தார் ராஜேந்தர். மிக நேரடியான எதிர்பார்ப்புகளையும் நிராகரிப்புகளையும் காத்திருத்தலையும் அன்பையும் உறவையும் பிரிவாற்றாமையையும் பறை சாற்றின ராஜேந்தரின் பாடல்கள்.


உன்னைத் தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் பாடல் நெருப்பாய் பற்றியது என்றால் மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க பாடல் தாபத்தின் சொற்களை இசையோடு சேர்த்தளித்தது. இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ பாடல் க்ளாசிக் அளவளாவல். ராஜேந்தரின் சொற்தேர்வும் இசையுடன் கூடுகையிலும் தனித்து அவை ஒலித்ததும் அவற்றைத் தனியே உயரத்திற்று. முந்தைய படங்களின் செவ்வியல் அணுகலை முற்றிலுமாய்க் கலைத்து விட்டு வேறொரு பாய்ச்சலுக்குத் தயாரானார் ராஜேந்தர்.


தனக்கான பாடல்களைத் தானே எழுதினார். கவி புனையும் ஆற்றல் இயல்பாகக் கைவரப் பெற்ற ராஜேந்தர் புத்தம் புதிய சொற்கோர்வைகளைக் கொண்டே துவக்கம் முதல் முடிவு வரைக்கும் பாடல்களைப் புனைந்தார். பெரும்பாலும் எதுகை மோனை சந்தம் நயம் என்றே அவரது சொற்தேர்வும் மொழியணுகலும் இருந்தன.


தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறித் தாமரைப் பூ மீது விழுந்தனவோ அதைக் கண்ட மோகத்தில் ப்ரம்மனும் தாகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ காற்றில் அசைந்து வரும் நந்த வனத்திற்கிரு கால்கள் முளைத்ததென நடை போட்டாள் ஜதியென்னும் மழையினிலே ரதியவள் நனைந்திடவே அந்த மொட்டுடல் கட்டுடல் உதிராமல் சதிராடி மதி தன்னில் கவி சேர்க்குது... எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது.. 

ஒரு பொன் மானை நான் காண தக்கதிமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தக்கதிமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
தத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்
தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதியிவள் நனைந்திடவே
அதில் பரதம்தான்  துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனமெங்கும் மணம் வீசுது
எந்தன் மனமெங்கும் மணம் வீசுது

……….சலங்கையிட்டாள் ஒரு மாது………..

சந்தன கிண்ணத்தில் குங்குமச்  சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
கலைநிலா மேனியிலே சுளைபலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

………சலங்கையிட்டாள் ஒரு மாது……… 


காலத்தின் போக்கையும் அதன் திசையையும் மாற்ற முயற்சிக்கவில்லை என்பது குற்றச்சாட்டல்ல. ஊரோடு ஒத்து வாழ நேர்வது நிர்ப்பந்தமன்றோ. ஆனாலும் வழமையான அதன் சதுக்கங்களுக்குள் தன்னால் ஆன அளவுக்கு எதிராடல்களையும் வித்யாசங்களையும் எவனொருவன் முயன்றுகொண்டே இருக்கிறானோ அவனே கலைஞன். அந்த வகையில் ராஜேந்தர் தான் நடிக்காத பிற படங்களுக்கு இசை அமைத்து அதிலும் வெற்றி பெற்றார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களின் வரிசையில் கூலிக்காரன் படத்தில் இடம்பெற்ற குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம் பாடலை சொல்வேன். கிளிஞ்சல்கள் ஒரு அருமையான காதல்பொழிவு. அந்தக் கால கட்டத்தின் காதல் வாக்குமூலமாகவே கருதப்பட்டது. மோகன் என்றாலே பாடல்கள் என்றொரு பொருளும் உண்டல்லவா..? அதை மெய்ப்பிக்கும் வண்ணம் கிளிஞ்சல்களின் பாடல்கள்.

முக்கியமாக சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான விழிகள் மேடையாம் இமைகள் சிறைகளாம் காதல் நாடகம் அரங்கில் ஏறுதாம்...ஓ..ஓ...ஜூலி ஐ லவ் யூ...எனும் கல்யாண் மற்றும் ஜானகி பாடிய பாடல் மனசு கெடுத்தது.மேற்கத்திய மற்றும் இந்துஸ்தானி வாக்கியங்களின் ஜூகல் பந்தியாக உருவாக்கப் பட்ட இந்தப் பாடல் இன்றும் ரேடியோ ஹிட்களில் ஒன்று. நினைத்த போழ்தெல்லாம் தன்னை ஒலித்துக் கொள்கிறது.


ஆரம்பத்தில் எள்ளலுக்கு உட்படுத்தப் பட்டாலும் கூட ராஜேந்தரின் பாடல்களில் ஓங்கி ஒலித்த உடனொலிகள் கவனம் கவரவே செய்தன.அனேக பாடல்களில் அது அவரது இசைக்கையெழுத்தாகவே இடம்பெற்றது. பல பாடல்களின் ரசிப்புக்குரிய இனிமையாகவே மாறியது. உடனொலிகளின் பாடல்களைத் தனியே தொகுத்தால் ராஜேந்திர பாடல்களுக்குத் தனி அத்தியாயம் தரலாம்.


பூக்களைப் பறிக்காதீர்கள் ஒரு அற்புதம். டீ.ஆரின் இசையில் உற்சாக உச்சம். இந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் காதலின் தனித்த காத்திருத்தலையும் அதன் உள் ஆழ வலியையும் நமக்குள் பெயர்த்துத் தருகிறது.நீ தானே என் வானம் அம்மம்மா...என்று பாலு குழையும் போது நம் மனமும் பின்னால் அலையுமல்லவா..? அடியே அனிதா அடியே வனிதா பாடலும் உற்சாகத்தின் இன்னொரு கிளைச்சாலை. சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவும்....பாடல் இன்னுமோர் அழகான ஒற்றை.நினைவின் சரடுகளெங்கும் பிரிகளாய் அலைந்தேறும் இன்னுமோர் நற்பாடல் தான் மாலை எனை வாட்டுது மண நாளை மனம் தேடுது...

சுரேஷூம் நதியாவும் சேராமற் போனதன் கைகூடாக் காதலின் வலி சின்னஞ்சிறிய என் மனதின் பல பக்கங்களிலும் இன்னமும் தீராமற் பெருகுவதை இந்தப் பாடல் நேர்த்தித் தரும் அழகான கண்ணீர்த்துளிகளைக் கொண்டே அளவிட முடிகிறது. மிக எளிமையான தன் வழக்க கோர்வைகளுடனேயே இந்தப் பாடலையும் உருவாக்கி இருப்பார் டீ.ஆர்.என்றாலும் இந்தப் பாடல் ஏனோ ஸ்பெஷலாய்த் தனிக்கும். காதலும் பாடலும் பொதுவில் இருந்தாலும் கூடத் தன்னந்தனியாய்த் தனிப்பதும் சேர்ந்தது தானே அவற்றின் உள்ளுறையும் உயிர்ப்பென்பது..?

மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
...

விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
துயில் தன்னை இழந்து புலம்புகிறேன்
இளமையில் தூங்காதா.. இல்லை இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா.. எந்தன் மோகமும் தீராதா

மாலை எனை வாட்டுது
மண நாளை மனம் தேடுது
...

உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா.. மடியை தலையணையாக்கிடவா
இரு கரம் சேர்த்திட வா.. இல்லை.. எனையே ஈர்த்திடவா

மாலை நமை வாட்டுது.. மண நாளை இமை தேடுது
மாலை நமை வாட்டுது.. மண நாளை இமை தேடுது
நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
மாலை நமை வாட்டுது
மண நாளை இமை தேடுது

இந்தப் பாடலின் பல்லவி முடிந்து முதல் சரணம் முடிந்து மறுபடி இரண்டாவது சரணம் நோக்கி நடைபோடுகையில் மிகச் சிறிய ஒரு செறிவான இசைத்துணுக்கு இடம்பெறும். என்றென்றும் ஈடு சொல்ல முடியாத நுட்பமான இசை ஆச்சர்யம் அந்தக் கோர்வை. ராஜேந்தரின் மேதமைக்கும் நுட்பத்துக்கும் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறாய்ப் பதம் சொல்லும் இடம் அது. மனோ வாணி ஜெயராம் இணையின் அற்புதமான பாடல் வாசம் சிந்தும் வண்ணச்சோலை படம் பூப்பூவாப் பூத்திருக்கு. இந்தப் படம் ராஜேந்தர் இசை மற்றும் பாடல்களை மாத்திரம் பொறுப்பேற்ற படங்களில் ஒன்று. இந்தப் பாடல் சற்றே வழமைக்கு அதிகமான வேகத்தோடு ஒலித்தது. பெரிதும் ரசிக்க வைத்த குரல்களும் வரிகளும் பின்னணி இசையும் கொண்டது. இந்தப் பாடலிலும் தன் முத்திரையை அழகாகப் பதித்திருப்பார். ஹலோ ஹலோ பாடல் மோனிஷா என் மோனலிசா படத்தின் ஹிட் மாத்திரமல்ல. அடுத்த காலத்திலும் தன்னால் இசைக்க முடியும் என்பதற்கான ராஜேந்தரின் அறிவிக்கை போல அது.

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர எனத் தொடங்கி ராஜேந்தரின் தனித்த காதல் பாடல்களாகட்டும் உறவுகளைப் போற்றுகிற பாடல்களாகட்டும் எண்பதுகளில் நிகழ்ந்த மிக மெல்லிய இசைமாற்றம் என்றே சுட்ட முடிகிற வகையில் என்றென்றும் தன் ராகங்களுக்காகவும் சொல்லாடல்களுக்காகவும் நினைவில் நீடிக்கிற பாடல்களை மேகங்களாய் அல்ல பெருமழையாய்ப் பின்னதான நிர்மலவானின் மேற்படரும் நிறமற்ற நிறங்களாய் நிகழ்த்தினார் ராஜேந்தர். உற்சாகப் பாடல்களின் அரசன்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com