புலன் மயக்கம் - 61

புலன் மயக்கம் - 61

காதலின் புனிதங்கள்

இது நடந்தது இன்று நேற்றல்ல. 1995ஆம் ஆண்டு. காலேஜ் எப்போதாவது நடக்கும்.
அடிக்கடி ஸ்ட்ரைக். காலையில் கிளம்பி காலேஜ் வாசலுக்குச் சென்றால் கதவை அடைத்து வைத்திருப்பார்கள். ஏழெட்டு செக்யூரிட்டிஸ் மேலதிகமாய்த் தேவைப்படும் போதெல்லாம் போலீஸ். லேசான தள்ளு முள்ளோடு விலகி வெளியேறிவிடுவோம். எங்களுக்கென்ன..? லீவென்றால் கசக்குமா? ஒரு நாள் வந்து லீவாகிப் போனால் அடுத்த சில தினங்களுக்கு அந்தப் பக்கமே செல்ல வேண்டி இருக்காது. சந்தர்ப்பம் கிடைக்கையிலெல்லாம் கொண்டாட்டம் தான். ஒருவகையில் லீவுகள் அலுத்தும் போயின. எப்போதடா காலேஜ் வகுப்புகள் நடக்கும் என்று அவ்வப்போது அழுதிருக்கிறேன். நம்பவா போகிறீர்கள்? ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் சோம்பேறிகளாய்த் திரியும் மனசு வார நாட்களெல்லாம் கல்லூரியைச் சுற்றிவரும் செக்குமாடு.

இப்படி ஸ்ட்ரைக் அல்லது லீவ் கிடைத்ததும் நேரத்திற்கேற்ப சில நாட்கள் காலைக்காட்சி படத்துக்குப் போய்விடுவோம். சில நாட்கள் எங்கேயாவது கூட்டமாய்ச் செல்வதும் உண்டு.
சமணர் மலை அழகர் கோயில் மகால் என்று குறைந்த பட்சம் இருபது முப்பது பேர்கள் செல்வோம். வருட வருடாந்திரப் புரிதல்கள் எல்லாம் அப்படியான ஒரு சில ட்ரிப்புகளில் கிடைக்கும். கண்களாலேயே பேசிக் கொள்ளும் காதல் களவாணிகள் என் போன்ற மிடில்மேன்களிடம் பிடிபடுவதும் அங்கேதான். அடப்பாவி ரகு ராஜியை உஷார் பண்ணிட்டான் மாப்ளே. அதோட டிஃபன் பாக்ஸிலேருந்து இவனுக்கு தட்டுல சோறு வருதுடா என்று கத்துவான் ராமச்சந்திரன். ச்சீச்சீ அதெல்லாம் இல்லையே என்று மறுப்பான் ரகு. அப்டின்னா ராஜி கூட சிஸ்டர் மாதிரி பழகுறேன்னு சொல்லுறியா என்பான். இது தான் சத்தியசோதனை. இப்படிக் கேட்டதும் ரகு மௌனிப்பான். ராஜி அவனது ராஜாத்தி என்பதை அந்த மௌனம் ஒப்புக்கொள்ளும். இதே கேள்வியை ராஜி இருக்கும் போது ரகுவிடமோ அல்லது நேரடியாக ராஜியிடமோ கேட்கவே மாட்டான் என்பதுதான் ஆறுதல். அதெல்லாம் நமக்குள்ள கேட்டுக்கலாம். அந்த பிள்ளைகிட்ட மூஞ்சில அடிச்சாப்ல கேக்கவா முடியும் என்று வியாக்யானம் வேறு.

பின் நாட்களில் ராஜா ராணி படம் வந்து ப்ரதர் சிஸ்டர் என்றெல்லாம் சொல்விளையாடியதைப் போல அப்போதும் இந்தக் கடினமான நெருப்பாற்றைக் கடக்க முடியாமல் சுற்றிச் சென்றவர்களும் உண்டு. ஆமாய்யா நாங்க காதலிக்கிறோம் என்று தைரியமாக யாரிடமும் சொல்ல முடியாத ஒரு சூழல் தான் இருந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கும் இதே நிலை தான்.

இரண்டு பேரின் வெளித்தெரியாத காதலைக் கண்டு பிடிக்கிற நொடிகள் அபாரமானவை.
ஒரு காதலின் எல்லா தினங்களுமே முக்கியமானவை தான். களவும் ரகசியமும் சொற்பச் சொற்களுடனான தனி மொழியும் கண்களாலேயே பெருவாரி தருணங்களைக் கடந்து விடுவது காதலின் ஜாலம். ஒரு சொல்லாக இனிக்கத் தொடங்குகிற காதல் அதன் இருண்ட பக்கங்கள் அத்தனைக்கும் சேர்த்துத்தான் சர்க்கரை பூசியபடி நேர்கிறது. எத்தனையோ அவமானங்கள் ஆத்திரங்கள் பகை துக்கம் எனப் பல இருள் முனைகள் இருந்தாலும் கூட இந்த உலகத்தின் தோன்றல் தினத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் எல்லா நாட்களுமே எதாவதொரு காதல் கைகூடுகிற தினங்களாகவும் அறிவிக்கப்படுகிற தினங்களாகவும் கைவிடப்படுகிற தினங்களாகவும் இருந்து கொண்டே இருக்கிறது. காதல் என்பது ஒரு சொல்லல்ல. 
மாபெரிய இயக்கம்.

காதல் களவினும் களவு. எப்படி என்றால் எதிரெதிர் பாலினங்கள் எக்கச்சக்க நண்பர்களின் உடனாடலுடனேயே எப்போதும் திரிய நேர்ந்திடும். ஒரு உற்ற நண்பன் அல்லது தோழிக்குத் தெரியாமல் ஒரு காதலைப் பராமரிப்பதென்றால் அது ஆகாத காரியம். ஆக முதல் சாட்சியம் தான் பெரும்பலம். தன் காதலை உற்ற தோழமையிடம் தெரிவிப்பதே பிரசவ அவஸ்தைக்கு நிகர். சுற்றிச் சுற்றி வந்து சொல்லி அனுமதி கேட்டு நீ என்ன சொல்றே என்ற கேள்வியில் நீ தான் முடிவெடுக்கணும் என்கிற அளவில் பில்ட் அப்கள் எல்லாம் கொடுத்து கேட்கும் போது நட்புமனம் குழையும். அடடா என் மீது உனக்கு இத்தனை ப்ரியமா..? இதென்ன காதல் தானே உனக்குப் பிடித்தவனைத் தானே காதலிக்கிறாய் நீ கவலைப் படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன். கூட இருக்கிறேன். உன்னைக் கைவிடமாட்டேன். உன் காதல் கைகூடும் வரை இது என் பொறுப்பு என்றெல்லாம் சொல்லித் தன் தோழமையைத் தேற்றும். இந்த பார் ராஜா.. கேக்குறதுக்கு ஆளில்லை என்று நினைக்காதே. நான் இருக்கேன். இவ என் தோழி. நான் இவளுக்கு அக்கா ஸ்தானத்ல இருக்கிறதைப் புரிஞ்சு நடந்துக்க. எதாச்சும் பிசகுனே உன்னையக் கழட்டி மாட்டிருவேன் ஜாக்ரதை என்று மெலிந்த குரலில் டான் போல மிரட்டும்.

இதுவே காதலின் நண்பன் தன்னிடம் தெரிவிக்கப்படுகிற காதலைக் கேஷூவலாக எடுத்துக் கொள்வான். தங்கச்சியும் நீயும் நல்ல ஜோடி டா மாப்ளே என்று ஆசீர்வதிப்பான். தன் நண்பனின் காதலியைக் கண் எடுத்துப் பார்க்கும் போதெல்லாம் லேசான புன்னகையுடன் கண்களைக் கடந்து வேறுதிசை பார்த்தபடி சொற்களற்ற புரிதலோடு நகர்வான்.

ஒரு காதலின் துன்பங்களிலேயே பெருந்துன்பம் ஒருதலைக் காதலின் சுமை தான். இதில் ஒருதலையாய்க் காதலிப்பது சற்றே வித்யாசமானது. அதுவும் ஆடவன் ஒருதலையாய் தனக்கு விருப்பமான பெண்ணைக் காதலிப்பதை ஒருபோதும் மறைக்க விரும்புவதில்லை. இளம் துறவி ஒருவனைப் போலத் தன் காதலைக் கடும் தவமாக அறிவிக்கிறான். நீங்களெல்லாம் எதிர்பார்க்கிறாற் போல் நான் தனியன் இல்லை. நானும் என் காதலுமாய் இரண்டு பேர் இருக்கிறோம். என்னிடம் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை எதிர் பார்க்காதீர்கள். நான் இரும்புமனச் சிலுவையைச் சுமந்து கொண்டு காதல்வாரா மலையின் உச்சிகளை நோக்கி நாளும் நடக்கிறவன். என்னை எதுவும் கேட்காதீர்கள். நான் கலைந்து திரிவதன் காரணமானவள் ஒருத்தி இருக்கிறாள். அவளை எதுவும் திட்டாதீர்கள். அவளென்ன செய்வாள் பாவம். நான் கேட்பது அவளையே என்பதால் மெல்லத் தான் கனிவாள். பனிக்கூழ் என்றாலும் உருகக் காலம் பிடிக்குமல்லவா என்று துன்பியலின் சுமையைப் பொருட்படுத்தாமல் மணற்பரப்பில் மழைபுகுந்தாற் போல் கரைந்தபடி அலைவான்.

தொண்ணூறுகளின் நடுவாந்திரம் எங்கள் கல்லூரிக் காலம். அனேகமாய் ஒருதலைக் காதல்கள் இந்த உலகத்தில் செல்வாக்கின் உச்சத்திலிருந்ததும் வீழத் தொடங்கியதுமான உக்கிர காலமாக இதனைக் கருதமுடிகிறது. உலகமயமாக்கல் வெடித்துச் சிதற்றிய சுவர்களில் முக்கியமானது காதல் மற்றும் அதன் முழுக்கதைக்குமான கண்டெண்ட் எனப்படுகிற உள்ளடக்கத்தை. மெல்லக் காதலின் மைய இழை மாற்றியமைக்கப்பட்டது. அதன் உபகதைகள் வீர்யமிழந்தன.,இன்றைக்கு எது காதல் என்பதைக் கண்டறிய முடியாத ரகசியமாகவே அது தொடர்கிறது. மற்றபடிக்குக் காதலின் புனிதங்களும் அதன் அறியாமையும் முழுவதுமாக மாறிவிட்டன.

நான் ஒரு பெயரைக் காதலித்தேன். அவளுக்கு அந்தப் பெயர் இருந்தது என்று ஆரம்பித்தால் அராஜகம். அவளைக் காதலிப்பதற்கான வழியாகவே அவள் பெயர் மீதான கிறக்கம் தொடங்கிற்று. ஆனால் அவள் என்பவள் மாறி வேறோரு காதலுக்குள் மனசு சென்ற பிற்பாடும் அந்த முதல் வீழ்தலின் பெயர் மீதான கிறக்கமும் அயர்ச்சியும் ஒப்புக்கொடுத்தலும் மாறவே இல்லை. அதென்னவோ அந்த முதல் ஒருத்தியின் பெயர் மனசின் ஆரம்ப ஈரங்களை எல்லாம் தன் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதென்பது ஒரே ஒருதடவை மாத்திரமே நிகழ வாய்ப்புள்ள சாகசம் என்றே தோன்றுகிறது. அதன் பின்னர் எந்தப் பேரும் அத்தனை ஈர்த்ததே இல்லை. விருப்பத்திற்குரிய பெயர்களின் பட்டியல் என்பது வேறு. ரசிப்பதும் ஒப்புக்கொடுப்பதும் வெவ்வேறல்லவா..?வணக்கத்துக்கும் ப்ரார்த்தனைக்குமான வித்யாசம் முதல் காதலின் முதல் பேராகத் தனிக்கிறது.

இந்தப் பெயரைத் தலையில் தாங்கிக் கூத்தாடுகிற உணர்தலை மைய இழையாக்கி இரண்டு மைதிலிகள் என்றொரு கதையை எழுதினேன். அதாவது ஒருவன் மனைவி பெயர் மைதிலி. அவளை நாளும் அந்தப் பேரைக் கொண்டு விளிப்பதை அத்தனை ப்ரியத்தோடு செய்பவன் அவன். மைதிலி மைதிலி என்று ஒருதடவைக்கு நாற்பது தடவைகளாக அந்தப் பேரை எத்தனைக்கெத்தனை உச்சரிக்க முடியுமோ அவ்வளவு அழைப்பவன். ஒரு நாள் மனைவி மைதிலிக்குத் தெரியவருகிறது அவனது நிறைவேறாக் காதலின் காதலி பெயர் மைதிலி என்பது. அவளைக் கடந்து விட முடிந்த அவனால் அந்தப் பேரைக் கடக்க முடியவில்லை. தன்னைக் கொல்வதே தன்னைக் காத்துக் கொள்வதற்கான வழி என்று அவன் கண்டறிந்த உபாயம் தான் மைதிலி என்ற பேரிலான ஒருத்தியைத் தன் மனைவியாக்கிக் கொள்வது. அப்புறம் அந்த உச்சாடனத்தைத் தன் வாழ்வெங்கும் படர்த்தியபடி வாழ்வது.நொறுங்கிப் போகிற மைதிலி தன் வருகைக்குக் காரணம் தனக்கு முன்னால் இருந்து இல்லாமற் போன இன்னொருத்தியின் பேர் என்பதை அறிந்து என்ன செய்கிறாள் என்பது கதையின் மிகுதி.

குழந்தைகளுக்கு வைக்கப்படுகிற நிறைவேறாக் காதற் பெயர்கள் இந்த உலகமெங்கும் படர்ந்திருக்கின்றன.மேலதிகமாய் மனைவியைக் குழந்தையை எப்போதும் விளிக்கும் செல்லப் பெயர்கள் பொருளற்ற சொற்களைப் போலத் தோற்றமளித்தாலும் கூட அவற்றின் பின்னே சென்று பார்த்தால் அதன் பூர்வாஸ்ரமம் ஒரு நிறைவேறாக் காதலின் கடக்க முடியாத கடவுச்சொல்லாக இருந்திடக் கூடும்.

நானொரு பெயர் தாங்கி அதை என் காதலென்று அறிவித்துக் கொண்டு அவளுக்காகவே என் ஜென்ம கென்மாந்திரங்களை எல்லாமும் சமர்ப்பிப்பதற்கான வருகையாகவே இந்தப் பிறவியைச் சுட்டிக் காட்டியபடி திரிந்து கொண்டிருந்தேன். உண்மையில் எப்படிக் காதலிப்பது என்றெல்லாம் எந்த ஐடியாலஜியும் இல்லாமல் அதுவரைக்கும் படித்தும் பார்த்தும் காதல் என்ற சொல்லை என் தெய்வாதி தெய்வமாய்த் தேர்வு செய்து திரிந்ததைத் தவிர என்ன ஏது என்றேதும் புரிபடாமல் தெரிந்தவரைக்கும் காதல் புரிந்தவரைக்கும் ப்ராயம் என்று தான் கழித்தேன். எனக்கு நெருக்கமான நண்பன் மூவேந்தன் போலவே ஒரு தோழியும் இருந்தாள். அவள் பெயர் வீ என்று வைத்துக் கொள்வோம்.

படிப்பில் கெட்டிக்காரி. நல்ல ரசனைக்காரி. அவளது குரல் அத்தனை அழகாக இருக்கும். எல்லாவற்றையும் விட விக்கிரமன் படங்களில் வருகிற அப்பழுக்கற்ற தோழி போல் நிர்மா விளம்பர வெண்மையை விட வெண் மனசுக்காரி. அந்த வீயைத் தான் ஒருவன் ஒருதலையாய்க் காதலித்தான். சில பல முறைகள் அவளைக் கல்லூரியில் நிறுத்திக் கமல்ஹாஸ தொனியில் தன் காதலைச் சொல்ல ஆரம்பிப்பதற்குள் வீ பஸ்ஸில் ஏறிக் கிளம்பிச் சென்றுவிடுவாள். என்னிடம் சொன்னால் நான் பரிந்துரைத்து வீ அவனை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் அவன் என்னைக் கிட்டத் தட்ட எண்பது சதவீத வீயாகவே எண்ணிக்கொண்டு குணா கமல் போல் உருகி வழிந்து பெருகி பொழிவான். நான் ஒரு மாதிரி ஜிவ்வென்றாவேன். இதில் ரெண்டு விஷயம். நான் ஒரு ஒரு தலைக்காதலன். பட் என்னால் இப்படி எல்லாம் உருகி கெஞ்சி எல்லாம் லவ்வ முடியாது. அதனால் நான் கொஞ்சம் வேற மாதிரி. இவன் என்னடா என்றால் பித்தேறிய பழைய படத்துக் காந்தாராவ் போலாகி என்னை சுற்றி வந்து கொண்டிருக்கிறான்.

ஒரு நல்ல நாளாய்ப் பார்த்துத் தன் கையை அறுத்துக் கொண்டான் அந்த ஒருதலையன்.
வீ முன்னிலும் அழுத்தம் திருத்தமாய் அவன் காதலை மறுத்தாள். சிபாரிசு செய்து நான் பேசிப் பார்த்தேன். இந்த பார்..உன் மரியாதையை நீ காப்பாத்திக்க. தன்னை காதலிக்காதவனுக்கு என்னைக் காதலிக்க எந்தத் தகுதியும் இல்லை என்றாள். நான் விட்டுவிட்டேன். அதன் பின் அந்த லவ்வன் அவளது வாழ்விலிருந்து மெல்ல நீங்கிப் போனான்.

காதலில் தூது செல்பவர்கள் சாட்சிகளாக மாறுகிறார்கள். தவிர்க்கப்பட முடியாதவர்கள் முன்னால் காதலின் ஏற்ற இறக்க வழக்குகள் நடைபெறுவது வழக்கம். இதனாலேயே இது என் பர்ஸனல்.
நீ தலையிடாத என்று தானும் தன் காதலுமாய்த் தனித்து விடுவது உபாயமாகிறது. அப்படி வெளித்தெரியாமல் சொல்லிக் கொள்ளாமலேயே தன் காதலைத் தனக்குள் பொத்தியும் பூட்டியும் வைத்துக் கொண்டு வென்று தோற்று வாழ்ந்தழித்தவர்கள் அனேகம். காதல் இன்றைக்கு ஒரு ஏற்பாடு. அதன் நீள அகலங்கள் மாற்றி அமைக்கப்பட்டு விட்டன. முன் பழைய காலத்தின் காதல் எனும் புனித பிம்பம் முற்றிலுமாகத் திரும்பப் பெறப்பட்டு இன்றைக்குக் காதலின் வேறொரு வெர்ஷன் புழக்கத்தில் இருக்கிறது. இன்னமும் சொல்வதானால் இன்றைக்கிருப்பதற்கும் முன்பிருந்ததற்கும் இடையே பெயர் மட்டும் தான் தொடர்கிறது. காதலின் பழைய கதைகள் முடிந்து போய்க் காலமாயிற்று.

எப்போதுமே காதலைத் திரைப்படுத்தும் போது அவற்றுக்கும் பாடல்களுக்குமான பந்தம் ஒரு அதி அவசியமாகவே பார்க்கப்படுகிறது. காதல் என்பதன் அதீதங்களை நிர்ப்பந்திப்பது சினிமா. அங்கே சகலமும் காதல் தான். அப்படி இருக்க காதலின் நறுமணத்தைப் படர்த்துவதற்கான சந்தனப் பொழுதுகளைப் போலவே பாடல்களின் வருகை நிகழ்கின்றன. எங்கும் எதிலும் எல்லாம் காதல் தான். திரையில் சேர்ந்த காதல்கள் நிசத்தில் பிரிந்து அறுந்ததும் திரையில் யூகிக்க முடியாத திசைகளில் எல்லாம் வென்ற மற்றும் அழிந்த நிசக்காதல்களின் கதைகள் படர்ந்து பெருக்கெடுப்பதும் நிகழ்ந்தன.

உண்மையாகவே எண்பதுகள் தொடங்கி இரண்டாயிரம் வரைக்குமான இந்திய மனோபாவங்களின் தனி நபர் விருப்பு வெறுப்புக்களைக் கட்டமைத்ததில் சினிமாவின் பங்கு முக்கியமானது. அதிலும் குழைத்துக் கலைத்ததில் பாடல்களுக்குப் பிரதான இடம் உண்டு.

இந்த இடத்தில் ஒரு எதிர்பாராத பாடல்  முதல் முறை கேட்டால் மனசு குழைந்து கரையும். எந்த விதத்திலும் இரட்டிக்காத இந்தப் பாடலின் பலம் இதனைப் பாடிய ஜானகியின் குரல் தவிர முன்னர் எங்கேயும் கேட்டிராத இதன் பின் இசை. பொண்ணுக்கு யார் காவல் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் .முழுமையான நிலவொளிக் குளுமையை இசைப்படுத்தினாற் போன்ற பாடல் இது.

உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே.... சுசீலா பாடிய இந்தப் பாடலும் பொண்ணுக்கு யார் காவல் படத்தில் இடம்பெற்ற மென்மெலடி தான்.

ஆனந்த வீணை நான் மீட்டும் போது அமுதூறும் சுகம் ராகமே 

தேன்சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம் விளையாடும் கலைமோகமே...

அழகான கொஞ்சல் பாடலான இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் கிளர்த்தும்.

மேள தாளங்கள் படத்தின் இந்தப் பாடல் ஒரு ரேடியோ ஹிட். இந்தப் படங்களுக்கான இசையை அமைத்தவர் பசுபுலேட்டி ரமேஷ் நாய்டு. மேகசந்தேஷம் தெலுங்கு படத்திற்காக தேசியவிருது பெற்றார் ரமேஷ். இதே படத்துக்காக கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பீ.சுசீலா இருவரும் தேசிய விருதுகளைப் பெற்றனர். ஒரு முழுமையான க்ளாசிகல் விருந்து மேக சந்தேஷம். அதனொரு பாடல்  பாரம்பரிய இசை மற்றும் கர்னாடக இசை இரண்டையும் கலந்தொலித்த முழுவைரங்களில் ஒருவர் ரமேஷ். தமிழில் இரண்டொரு படங்களை இசைத்த ரமேஷ் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தனக்கென்று தனி இடம் அடைந்தவர். சொற்ப காலமே வாழ்ந்த ரமேஷ் முழுமையான அர்ப்பணிப்புடனான பல பாடல்களை குறிப்பாக க்ளாசிகல் மற்றும் மெலடிப் பாடல்களைப் படைத்திருக்கிறார். நிறைவேறாக் காதலின் இன்னுமொரு சின்னஞ்சிறிய கதையுடன் இந்த எபிஸோடைக் கடக்கலாம்.

பெரியார் நிலையத்தின் காம்ப்ளக்ஸ் மாடிப்படி எங்கள் ஹைட் அவ்ட்களில் தலையாயது. அங்கே நாங்கள் குழுமும் போதெல்லாம் உப பாத்திரர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அவர்களில் ஒருவர் எங்களுக்கு நாலைந்து வருடம் சீனியர். குன்றத்துக்குப் பக்கம் எங்கேயோ அவர் வீடு. அவர் பேர் பாஸ்கர்.. அவர் கையில் கல்யாணி என்று பச்சை குத்தியிருப்பார். அது அவர் ஒருதலையாய்க் காதலித்த பெண்ணின் பெயர். தன் பதின்ம வயதின் பிடிவாதத்தை பச்சையாய்க் குத்திக் கொண்ட பாஸ்கருக்கு அதை எப்படி எங்கனம் திரும்பப் பெறுவது என்று தெரியாமல் தவித்தார். வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் திகைந்துவந்தது.

நா வேணா சிகரட்டால சுட்டு அந்தப் பேரை அழிச்சிடட்டுமா ரவீ என்று என்னிடம் கேட்டார். அப்போது டெர்மடாலஜி துறை இன்றிருக்கும் வசதிகளோடு கைக்கருகாமையில் இல்லை. நான் அவர் பிரச்சினையை உளவியல் பூர்வமாக அணுகினேன்.

 அது இன்னும் பைத்தியக்காரத்தனமா இருக்கும் ப்ரதர்.வேணாம்.டாக்டர்ஸ் யாரையாச்சும் பார்த்து கன்சல்ட் பண்ணுங்க.எதாச்சும் வழி இருக்கும் என்றேன்.கல்யாணம் நெருங்க நெருங்க முழுக்கை சட்டைகளை மாத்திரமே அணிந்து கொண்டு திரிந்தவர் நெர்வஸின் உச்சியில் தனக்கு நிச்சயமான பெண்ணைத் தேடிச் சென்று தன் கையைக் காட்டி அன்பின் அதீதம் அசட்டுத் தனமானதை சொல்லி இதற்காக என்னை வெறுக்காதே என்று கண் மல்க அந்தப் பெண் நீங்க என்ன லூஸா..? இந்தப் பேரை நீக்குறது முடிஞ்சா பண்ணுவம்.உங்க மனசு தான் எனக்கு பிரதானம். இது வெறும் எழுத்துக்கள் தான் என்று ஆதுரம் காட்ட தன் எதிர்கால மனைவியின் ரசிகர்படைத் தளபதியாக நிம்மதியாக திரும்பி வந்தார் பாஸ்கர். அவர் கல்யாணத்துக்கு எங்கள் குழுவே ஆஜராகி விரட்டும் வரை உடனிருந்தோம்.

 பிறிதொரு நாள் ஓட்டலில் நண்பர்களுக்கு ட்ரீட் தந்தார் பாஸ்கர். அவர் நண்பர்களான நாங்கள் சிலரும் அவரது மனைவியின் தோழிகள் நாலைந்து பேரும் என மங்களகரமான ட்ரீட் சங்கீத் ஓட்டலில் நிகழ்ந்தது யாரோ ஒரு செல்வியோ பூஜாவோ இதென்ன பேரு கல்யாணின்னு என்று அரைக்கை சட்டை அணிந்த பாஸ்கரின் கையைப் பார்த்துக் கேட்க அவரது மனைவி சின்ன வயசுல உடம்புக்கு முடியலைன்னு இவரு பாட்டி சாமிக்கு நேர்ந்துகிச்சாம். சரியானதும் பச்சை குத்திட்டாங்களாம். சாமி பேரு அதான் ரிமூவ் பண்ணலாமா வேணாமான்னு யோசனையா இருக்கு என்றார்.

 அதற்கு அந்த பூஜாவோ செல்வியோ சொன்ன பதில்தான் ஹைலைட்.

"இருந்துட்டுப் போட்டுமே..நல்லாதானே இருக்கு..?"

நீயே சொல்லிட்டேல்ல..?அப்படியே செய்துடுவம் என்று சிரித்தார் மிசஸ் பாஸ்கர்.

என்னை பாஸ்கர் பார்த்த பார்வையில் பில்கேட்ஸின் செல்வந்தத்துக்கு நிகரான கர்வம் தெரிந்தது. 

 (ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்) 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com