பெண்படைப்பாளிகளுக்கு  எச்சரிக்கை -'பாடிகாட்' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 10

பெண்படைப்பாளிகளுக்கு  எச்சரிக்கை -'பாடிகாட்' முனீஷ்வரின் 'ச்சும்மா' – 10

விஜய் டெண்டுல்கர்:

ஒரு சகாப்தத்தின் முடிவு


மராத்தி நாடக உலகம் இன்றைய அளவும் மிகவும் பிரசித்தி பெற்றதெனில் , அதற்கு முக்கியமானதொரு காரணம் விஜய் டெண்டுல்கர் எனும் மாமேதை. கடந்த 50 ஆண்டுகளில் , இந்திய நாடக உலகில் தவிர்க்கவியலா மாபெரும் கலைஞர் விஜய் டெண்டுல்கர் , பத்மபூஷன் உட்பட பல விருதுகளுக்கு பெருமை சேர்த்தது அவரது எழுதுகோல். மிகவும் உயர்ந்த தகுதிகளை , பெருமைகளை தன்னகத்தே வரவைத்துக் கொண்ட அந்த மகா கலைஞனின் எளிய வாழ்க்கை , தற்போது எழுதும் 'பந்தா பார்ட்டிகளுக்கு' ஒரு அனுபவ பாடம் !
கண்ணீரோடு விடை கொடுக்கிறோம் ! கலைஞனே சென்றுவா !

***** ***** *****

படித்ததில் பிடித்தது

டண்... டண் எனத் தொடர்ந்து ஒலிக்கும்
பள்ளி இறுதி மணி . முற்றுப்பெறாத
எழுத்துக்களோடு கரும்பலகை. தன் மூடியை
அணிந்து கொள்ளும் ஆசிரியர் பேனா.
தொடரும் அறிவிப்போடு மூடும் புத்தகங்கள்.
புத்தகங்களை வெயில் திணிக்கும் மாலை அவசரம்.
வெளிக்கிளம்பும் பொழுதில் தேடுதல் வேட்டை.
பயம் கலந்த ஏமாற்ற படபடப்பு.
மூங்கில் கூடையில் மிட்டாய்களோடு கிழவி.
முகத்தில் மிழுநிலவு பிரகாசம். மெதுவாகப் போங்க !
மேஜையில் பிரம்பு அதிரும்.முட்டிமோதி
வெளி ஓடும் மாணவர் கூட்டம். உயிர் பெறும் சிறகுகள்.
உற்சாக ஓட்டம். பசி களைப்பு மறந்து சந்தோஷம்.

விளையாட்டு நேரங்களை
விழுங்கியே விடுகின்றன
வீட்டுப்பாடங்கள்

- நிலா கிருஷ்ணமூர்த்தி

***** ***** *****

நீர் கிழிக்கும் மீன்

அரங்க மல்லிகா


சென்னை எத்திராஜ் மகளிர்க்கல்லூரியில் , தமிழ்த்துறையில் பேராசிரியராக பணியாற்றும் அரங்க மல்லிகா காவிரிக் கரையோர திருவானைக்காவிலிருந்து தமிழ் இலக்கியப் பரப்புக்குள் நுழைந்தவர். ' தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்' ,'பெண்ணியக்குரல் அதிர்வும் தலித் பெண்ணிய உடல் மொழியும்' ஆகிய நூல்களை முன்னரே எழுதி வெளியிட்டிருப்பினும் இந்த நூல்தான் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.

" அரங்க மல்லிகாவின் கவிதைகள் பெண்ணின் அந்தரங்க அனுபவங்களைக்கூட மிக நுட்பமான முறையில் பேசுகிற அதே நேரத்தில் தலித் விடுதலைக்கு அடிப்படையாக இருக்கிற போக்குணத்தையும் மிகவும் கலைத்திறமையோடு கையாள்கின்றன " என மதிப்பிடுகிறார் கவிஞர் இந்திரன்.

தன்னைச் சூழ்ந்த இயற்கையின் மீது காதலும் எளிய மக்களின் மீதான நேயமும் அரங்க மல்லிகா கவிதைகளின் ஆதாரச் சுருதிகள். தலித்தியம் மட்டுமின்றி தலித் பெண்ணியம் குறித்தும் மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் நெய்யப்பட்டவை இக்கவிதைகள்.

சமூகத்தில் குரூரமாய் கவனிக்கப்படும் தலித்தையும் , தலித் பெண்ணின் அந்தரங்கத்தையும் கூறுபோடும் ஆதிக்கச் சமூகத்தின் குரூரத்தையும், வன்முறையையும் உட் செறித்துக் கொள்ள இயலாமல் வெடித்து சிதறு மிந்த கவிதைகள் பூடகங்களோடும் புனைவுகளோடும் இணைந்து நெய்தவை இந்தக்கவிதைகள்.

நூல்வகை : கவிதைகள்

வெளியீடு : பாலம் வெளியீடு
சென்னை

விலை : ரூ 55/

கிடைக்குமிடம் : முனைவர் .அரங்க மல்லிகா M.A. , M.Phil , Ph.D.

315 , தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
அயப்பாக்கம் - சென்னை - 600 077

***** ***** *****

பெண் படைப்பாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை

சமீபமாய் இலக்கிய உலகில் சில புல்லுறுவிகள்..
முதலில் பவ்யமாய் பேசுவது !
பின் கைபேசி என் கேட்பது.
பெண் படைப்பாளிகளை புகழ்ந்து பேசுவது.
பின்பு , ஆபாச / இரட்டையர்த்த குறுந்தகவல்கள்
அனுப்பி நோட்டம் பார்ப்பது என திட்டமிட்டு
கெட்ட காரியம் செய்பவர்களை எழுத்துலகம்
அவதானித்து கொண்டுதான் இருக்கிறது . என்றாலும்
படைப்பாளிகள் குறிப்பாக தோழியர் கவனமாக
இருக்க வேண்டும்.
வார்த்தைகளை சில நேரம் வலைகள் !

***** ***** *****

தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - 2008

கடந்த மே 11 அன்று . விழுப்புரம் , அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் , தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு நிகழ்ந்தது. சற்றேறக்குறைய 100 பேர் கலந்து கொண்ட இந்த பயிலரங்கில் வலைப்பூக்கள் தொடங்குவது குறித்த செய்திகள் தேர்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டன. வலைப்பூக்களின் வரவு ஒரு விதமான சுதந்திரத் தன்மையைத் தருவதால் பலரும் ஆர்வத்தோடு பால்கெடுத்தும், தொடர்ந்து செயல்படவும் செய்வார்கள் என நம்பலாம். புதிய வலைஞர்களை வரவேற்போம் .!

logo
Andhimazhai
www.andhimazhai.com