ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை_02

அப்போதுதான் திருமணமாகி புகுந்த வீடு சென்றிருந்தேன். பள்ளி நாட்களில் என்னுடைய பழக்கவழக்கங்கள் எல்லாம் பெரும்பாலும் சிறு பிள்ளைகளுடன் தான். பெரியவர்களிடம் பேசிப் பழகி அனுபவம் இல்லை. சின்னப்பிள்ளைத் தனமாகப் பேச நேர்ந்தது வகையாய் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. கல்லூரியில் சேர்ந்த பின் முதலில் வினோதமாகப் பார்த்தாலும், நாளடைவில் என் உடன் பயின்ற தோழர்கள், தோழிகள் அனைவரும் என் தடாபுடா பேச்சுக்குப் பழகி விட்டனர். ஆனால் அடிக்கடி 'சீனியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கொஞ்சம் அளவாகவே பேசு' என்று எனக்கு அறிவுரை சொல்வார்கள்.

புகுந்த வீட்டில் எங்கள் அருகில் குடியிருந்த என் நாத்தனாரின் இரண்டரை வயது மகள் சசி மற்றும் ஐந்து வயது மகன் ஹரீஷ் இருவரும் தான் சிறுவர்கள். மற்ற எல்லாரும் குறைந்தது என்னை விட ஏழெட்டு வயதாவது பெரியவர்கள். என் வயதை ஒத்தவர்கள் யாரும் இல்லை. அதனால் என் நீளமான வாயையும் வாலையும் கொஞ்சம் சுருட்டியே வைத்திருந்தேன். புதிதாகப் போன வீட்டின் நடைமுறைகளும் பழகாத காலகட்டம்.  என் கணவர் அப்போதே மிகவும் பிஸியான மயக்கவியல் மருத்துவர். எனக்கு வரும் சந்தேகங்களையும் கேள்விகளையும் யாரிடம் கேட்பது என்று தெரியாமல், கேட்டால் தப்பாக ஆகிவிடுமோ என்ற ஒரு தயக்கத்திலும் சுற்றிக் கொண்டிருப்பேன்.

இந்தக் காலகட்டத்தில் எனக்கு எழுந்த கேள்வி கோபால் என்ற நெருங்கிய குடும்ப நண்பர் பற்றியது. இரண்டு தெருக்கள் தள்ளித் தான் அவரது வீடு. அவர் ஒரு திறமையான பிளம்பர் மற்றும் எலக்ட்ரிஷியன். மோட்டார் பெல்ட் மாற்ற வேண்டும், குழாய் ஒழுகுகிறது, ஃபேன் சத்தம் போடுகிறது போன்ற சிறிய பிரச்சனைகளை என் மாமியாரின் அழைப்பின்பேரில் வந்து தீர்த்து வைத்து விட்டுச் சென்றார். இதில் என் கேள்வி எங்கு வருகிறது என்றால், அவர் என்னைத்தவிர எல்லாரிடமும் நன்றாகப் பேசினார். என்னைப் பார்த்தால் மட்டும் ஓடி ஒளிந்தார். இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. 

ஒரு நாள் என் கணவர் வீட்டில் இருந்த நேரம் அவர் வர, "வாங்க கோபால்!" என்று இவர் அழைக்க, இருவரும் கலகலப்பாகப் பேசினார்கள். என் கணவர் பெயர் கோபாலகிருஷ்ணன் என்பதால் பெயர் ஒற்றுமையால் இரண்டு பேரும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள் போல என்று நான் நினைக்க, அவர்களை இணைக்க வேறு ஒரு ஒற்றுமையும் இருந்தது இருவருக்குள்ளும். என் கணவரைப் போலவே அவரும் செல்லப் பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் இந்தக் கதையில் அவரும் ஒரு முக்கியப் பாத்திரமாகிறார்.

"ஏன் கோபால் எங்க கல்யாணத்துக்கு நீங்க வரலை?" என்று என் கணவர் கேட்டார். அவர்கள் இருவரும் அடுத்து பேசியதைக் ஒட்டுக் கேட்ட போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. எங்கள் திருமணத்திற்குப் பரிசாக அவர் சார்பில் என்ன வேண்டும் என்று எலக்ட்ரீஷியன் கோபால் என் கணவரை கேட்டு, 'ரொம்ப நாளா எனக்கு கருப்பு லேப்ரடார் வளர்க்கணும்னு ஆசை' என்று என் கணவர் கூறியிருக்கிறார். எலக்ட்ரீஷியன் கோபால் பலரிடம் விசாரித்து, ஒரு இடத்தில் அப்படி ஒரு குட்டி கிடைப்பதாக அறிந்து அனுப்பப் சொல்லியிருக்கிறார். அந்த குட்டி வந்து சேருவதில் தாமதம் ஆகிவிட்டது, அதனால் எலக்ட்ரீஷியன் கோபால் எங்கள் திருமணத்திற்கு வரவில்லை.  

"கிஃப்ட் இல்லாம எப்படி உங்களைப் பார்க்க வர்றது சார்.. அதான் வரவே இல்ல.. இன்னும் ரெண்டு நாள்ல குட்டி வந்துரும்" என்றார் கோபால். குட்டி வந்து சேரவில்லை என்பதைத் தாண்டி, கல்யாணத்தன்று மணமேடையில்  வைத்து ஒரு கருப்பு லேபிரடாரை ஒரு கூடையில் வைத்து அவர் கொண்டு வந்து தந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். வாயெல்லாம் பல்லாக ஆனது.

எங்கள் ஊரில் இரண்டு நாள் என்றால் இரண்டு நாள் தான். ஆனால் நான் புகுந்த ஊரில் அப்படி இல்லை போல. நானும் இரண்டு நாளில் கறுப்பு நாய்க்குட்டி வந்துவிடும், கறுப்பு நாய்க்குட்டி வந்துவிடும் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தேன். எங்கள் அப்பா அம்மாவுக்குக் கூட பெருமையுடன் ஃபோன் போட்டுச் சொன்னேன். அதை எங்கே படுக்க வைப்பது, கட்டிப் போடலாமா கூடாதா, என்ன சாப்பிடும், பால்குடி நிறுத்தி விட்டதா, அம்மாவைத் தேடுமா தேடாதா, அதற்கு என்ன பெயர் வைப்பது என்று என் கணவரைக் கேள்விகளால் துளைத்து எடுத்தேன்.

அன்று முதல் இன்று வரை அவருடைய பழக்கம் என்னவென்றால் நான் பத்து கேள்வி கேட்டால் ஒன்றுக்கும் பதில் சொல்ல மாட்டார் அல்லது ஒன்றே ஒன்றுக்கு மட்டும் பதில் சொல்வார். அதனால் என் கடைசிக் கேள்விக்கு மட்டும், 'நான் ப்ளூட்டோன்னு ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் வளர்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்ச நாய் அது. நம்ம கணேஷ் (என் இன்னொரு நாத்தனார் மகன்) தான் அதுக்கு அந்த பேர் வச்சான்.. அந்த நாய் நான் காலேஜ் படிக்கும் போது எப்படியோ செத்துப்போச்சு. அதனால இன்னும் எத்தனை நாய் வளர்த்தாலும் ப்ளூட்டோன்னு தான் பேர் வைப்பேன்' என்றார்.

 இப்படி வந்து சேரும் முன்னாலேயே ப்ளூட்டோவுக்குப் பெயர் சூட்டல் நடந்தேறி விட்டது. இரண்டு நாள் ஆயிற்று, மூன்று நாள் ஆயிற்று, நான்கு நாள்.. அப்படியே ஒரு வாரம் போனது. நானும் ஒரு நாளைக்கு மூன்று முறை 'எப்ப நாய்க்குட்டி வருமாம்? எப்ப நாய்க்குட்டி வருமாம்' என்று நச்சரிக்க ஆரம்பித்தேன். என் கணவர் எலக்ட்ரிஷியன் கோபாலின் எண்ணைக் கொடுத்து, 'நீயே கேட்டுக் கொள், என்னை தொந்தரவு பண்ணாதே!' என்று கூறிவிட்டார்.

 நான் கோபாலிடம் கேட்க, "இந்த தடவை போட்ட குட்டிகள்ல கருப்பு கலர் இல்லையாம் கா.  வெள்ளை தான் இருக்காம்.. வெள்ளைன்னா ஒரு ஹாஃப் ஒயிட் மாதிரி வரும். ஃபான் (fawn) கலர்னு சொல்லுவாங்களே.. அதனால அடுத்த தடவை பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன் கா" என்றார். எனக்கு ஏமாற்றமாகிவிட்டது.

"பரவால்ல.. ஃபான் கலரே அனுப்பிவிடச் சொல்லுங்க.." என்று கூறினேன், நாய்க்குட்டி வந்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில்.

மனதே இல்லாமல் தான் சென்னையிலிருந்து அந்த நாய்க்குட்டியை பேருந்து மூலமாக வரவழைத்திருப்பார் போலும், "இப்போதைக்கு இதை வச்சுக்கோங்க.. கருப்பு லேப் வந்தவுடனே இதை மாத்திடலாம்" என்று கூறி ஒரு நல்லதொரு நாளில் ப்ளூட்டோவை எங்களிடம் தந்து விட்டுப் போனார் கோபால். நான் ஒன்றும் சொல்லவில்லை. 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ல வாங்குறதுக்கு இது என்ன டிவியா மிக்ஸியா' என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். அன்று முதல் சசி, ஹரீஷ் இருவருடன் சேர்ந்து ப்ளூட்டோவும் என் நட்பு வட்டத்தில் முக்கியமான நபர் ஆகிவிட்டான். நாய் வளர்ப்பில் அரிச்சுவடியைக் கற்க ஆரம்பித்தேன்.

குட்டி என்ன சாப்பிடும், என்ன குடிக்கும், எவ்வளவு நேரம் தூங்கும் என்பதையெல்லாம் சீக்கிரமே தெரிந்து கொண்டேன். தடுப்பூசி போட 45 நாள் ஆக வேண்டும். தெரு நாய்களுடன் பழக அனுமதிக்கக்கூடாது, டைசன் உட்பட எந்தவொரு தெரு நாயையும் உள்ளே விடக்கூடாது என்றார் என் கணவர்.

தெரு நாய்கள் சிலவற்றின் உடல்நலிவுகளை, அவற்றின் நோய் அறிகுறிகளை என்னிடம் காட்டி, இன்ன கிருமித் தொற்றால் இது ஏற்படுகிறது, அதெல்லாம் நம் நாய்க்கு வந்து விடக்கூடாது. வெளி நாய் வந்து ப்ளூட்டோவின் தட்டில் வாய் வைத்தால், அதே தொற்று இதற்கும் ஏற்படும்.. தெரு நாய்களுக்கு இயல்பிலேயே எதிர்ப்பு சக்தி அதிகம். பார்வோ வைரஸ் வந்தால் 99% உயிரிழப்பு நிச்சயம். 'அதோ அந்த நாய் உடம்பு முழுசும் ஆடிக்கிட்டே இருக்கு பாரு.. அது டிஸ்டம்பர் வைரஸ். இப்படி ஒரு மாசம் ரெண்டு மாசம் ஆடிக்கிட்டே இருக்கும், அப்புறம் பொழச்சுடும்.. நம்ம நாய் டிஸ்டம்பர் வந்தா சாப்பிடுறதை நிறுத்திடும், அப்புறம் இரண்டு நாளோ மூணு நாளோ தான் உயிரோட இருக்கும்' என்று பயமுறுத்தினார்.

 அடப்பாவமே, டிஸ்டம்பர் என்றால் எனக்கு சுவற்றில் அடிக்கும் பெயின்ட் தான் தெரியும். இது என்ன புதிதாக? என்று ஒருவித பீதியில் சுற்றினேன். எப்போதும் ப்ளூட்டோ மேல் ஒரு கண் வைத்தே இருந்தேன்.

எம்பிபிஎஸ் முடித்து ஓரிரு மாதங்களே ஆகியிருந்த நேரம் அது. அடுத்து வரும் மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்ததால் என் கையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும். ஆனாலும் கண்ணெல்லாம் ப்ளூட்டோ மேல் தான் இருந்தது. வீட்டு வாசலில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தேன் என்றால் ப்ளூட்டோ என் காலடியில் வந்து படுத்துக் கொள்வான். என் கணவர் வெளியிலிருந்து வந்து வாசலில் பைக்கை நிறுத்தினால் வாலை ஆட்டிக்கொண்டு கேட்டிற்குப் போவான் ப்ளூட்டோ. அவர் குரலைக் கேட்டால் உடனே காதுகள் விறைப்பாக நிற்கும், வால் பல மடங்கு வேகமாக ஆடும்.

"'His master's voice' அப்படின்னு சொல்லுவாங்க தெரியுமா? அதான் இது. நான் தான் அதோட மாஸ்டர் னு புரிஞ்சுடுச்சு.. அதான் இந்த ரெஸ்பான்ஸ்!" என்பார் என் கணவர்.

"இல்ல.‌. நான் தான் அதோட மாஸ்டர். அது என்னோட நாய்" என்று செல்லச் சண்டை போடுவேன். வைரஸ்களின் பெயரை சொல்லி என் கணவர் என்னை பயப்படுத்தியிருந்ததால் அவர் உதவியின்றி என்னால் நாய் வளர்க்க முடியாது என்று தெரியும். இப்போதுள்ள சூழலைப் போல அப்போது இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளும் வசதியும் கிடையாது. அதனால் போனால் போகட்டும், அவரே மாஸ்டராக இருந்து கொள்ளட்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன்.

பெற்றபிள்ளை வந்தவுடன் தத்துப்பிள்ளை இரண்டாம் இடத்துக்கு போய் விடும் என்பது சரிதான் போலும், அதுவரை எங்கள் வாசல் கேட்டிற்குள் சுவாதீனமாக வந்து போய் இருந்த டைசன் இப்போது கேட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டான். சில நாட்களில், டைசன் கேட்டிற்கு வெளியே வந்து நின்றால் ப்ளூட்டோ கேட்டிற்கு உட்புறமாக அவன் எதிரில் போய் நின்றுகொண்டு வாலாட்டும் அளவுக்கு வளர்ந்தான்.

 டிஸ்டம்பரும் பார்வோவும் என் கண்முன் மின்னலாகத் தோன்றி மறைய, 'டைசன், இங்கே வா!' என்று கூறிய என் வாய் இப்போது 'டைசன்! போ போ' என்று அடிக்கடி உச்சரிக்க ஆரம்பித்தது. பதிலாக 'ப்ளூட்டோ வா வா!' என்று பலமுறை கூறினேன். டைசன் சீனில் இல்லை என்றாலும் 'ப்ளூட்டோ வா!' என்ற வார்த்தைகள் என் உதட்டில் நிரந்தரமாக தங்கி விட்டன. இப்படி நாங்கள் டைசனை ஒதுக்கியது கூட அவனை அந்தக் கொலைகார தெரு நாய்கள் ஒன்றுகூடி கடிக்க காரணமாக இருந்திருக்குமோ என்று இப்போது கூட எனக்குத் தோன்றுவதுண்டு.

ப்ளூட்டோ கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு வெளியே போய் சுற்ற விரும்பிய வயதில் டைசன் வீரமரணம் அடைந்திருந்தான். அந்த சம்பவம் தந்த தாக்கத்தில் 'தெருநாய் கடிச்சுரும், இங்கே வா!' என்று வீட்டில் எல்லாருமே கூற ஆரம்பித்தார்கள். நாளாக ஆக ப்ளூட்டோவின் ஊர் சுற்றல் ஆசை அதிகரித்துக்கொண்டே போனது. பிறந்த வீட்டிலிருந்து நான் கொண்டு வந்த என் பொக்கிஷங்களில் ஒன்றான என் சைக்கிள் சும்மாவே இருந்ததால் அதை சர்வீசுக்கு விட்டு எடுத்தேன். சசியை பின்னால் அமர்த்திக்கொண்டு புளூட்டோவை முன்னால் இருந்த கூடையில் உட்கார வைத்து எங்கள் என்ஜிஓ காலனியின் தெருக்களை தினம் மாலையில் சைக்கிளில் வலம்வர ஆரம்பித்தோம். கோபால் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி மக்கள் வளர்ப்புப் பிராணிகளிடம் நெருக்கமானோம். நீங்கள் வாங்கிக் கொடுத்த நாயை நாங்கள் எவ்வளவு செல்லமாக வளர்க்கிறோம் பாருங்கள் என்ற பெருமையும் அந்த விசிட்களில் இருந்தது!

மார்ச்   11 , 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com