மஹா பரிநிர்வாணம்! - போதியின் நிழல் 37

மஹா பரிநிர்வாணம்! - போதியின் நிழல் 37

‘‘ஆனந்தா, நலிவுற்று இருக்கிறேன். இனி என்னால் பயணம் செய்ய இயலாது. இங்கேயே தங்குவோம்’’ எண்பது வயதுக்குரிய முகச்சுருக்கங்கள் இருந்தாலும் தீராத அன்பின் சுடரால் ஜொலித்த முகத்துடன் ததாகதர் தெரிவித்தார்.

இரண்டு சாலமரங்களுக்கு இடையில் ஆனந்தர் படுக்கையைத் தயார் செய்தார். மாலை சூரியன் மெல்ல மறைந்துகொண்டிருந்தான்.
‘‘ஆனந்தா, சுந்தாவின் வீட்டில் ததாகதர் உண்டதுதான் அவரது கடைசி உணவு. எமது மறைவுக்குப் பின்னால் சுந்தாவை பலரும் தூற்றக்கூடும். எல்லோருக்கும் நான் சொன்னதாக இதைக் கூறு: ததாகதர் உடல்பலமிழந்து வதங்கி உருவேலாவின் காட்டில் கிடந்தபோது சுஜாதா அளித்த உணவுக்கு சுந்தா அளித்த உணவு எந்த விதத்திலும் குறைவில்லாதது. இந்த இரண்டு உணவுகளையும் நான் என் வாழ்வில் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இந்த உணவை அளித்ததற்காக சுந்தா மகிழ்வே அடைய வேண்டும். வருந்தக்கூடாது’’

ததாகதர் வடக்குப் புறம் தலையை வைத்து ஒருக்களித்துப் படுத்தார். குசிநகரத்தின் சால மரக்காட்டின் மீது பிரம்மாண்டமான ஓர் அமைதி கவிந்தது. ஆனந்தர் முகத்தில் கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவர் எழுந்து காட்டுக்குள் சென்று ஒரு மரத்தடியில் தேம்பி அழுதார்.
ததாகதரின் பரிநிர்வாணம் நிகழவிருப்பதை பிக்குகள் உணர்ந்து அவரைச் சுற்றி அமர்ந்தார்கள். பிக்கு உபவணர், ததாகதருக்கு விசிறினார். சாலமரத்தின் சிவந்த மலர்களின் இதழ்கள் உதிர்ந்தன. அந்த இடமே அஸ்தமன சூரியனின் செந்நிற ஒளியில் செம்மையாகக் காணப்பட்டது.

ததாகதர் மெல்ல வினவினார்:
‘‘எங்கே ஆனந்தன்? அவனைக் காணவில்லையே?’’
பிக்கு அநிருத்தர் பதில் உரைத்தார்.

‘‘வனத்துக்குள் ஆனந்தர் தனித்து அழுதுகொண்டிருக்கிறார்’’
அவரை அழைத்துவரும்படி ததாகதர் சைகை செய்தார்.

‘‘ஆனந்தா.. துக்கம் அடையாதே. எத்தனையோ முறை நான் உலகின் நிலையாமைத் தன்மை பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேன். பிறப்பு இருந்தால் இறப்பு இருக்கும். சேர்தல் இருப்பின் பிரிவு இருக்கும். மகிழ்ச்சி இருந்தால் துக்கம் இருக்கும். ஆனந்தா, நீ சற்று முயற்சி செய்தால் மிக எளிதாக இந்த சுழலில் இருந்து விடுதலை அடைய முடியும். நீ என்னுடைய மிகச்சிறந்த பணியாளனாக ஆரம்பத்தில் இருந்தே பணியாற்றி வருபவன். உன்னைப் போன்ற ஒரு உதவியாளன் இதுவரைக்கும் யாருக்கும் கிடைத்ததும் இல்லை. இனி கிடைக்கப் போவதுமில்லை’’

ஆனந்தர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கூறினார்.

‘‘ததாகதர் இந்த வனாந்திரத்தில் பரிநிர்வாணம் அடையக் கூடாது. மண்குடிசைகளும் குறைவான மக்களும் உள்ள இவ்விடத்தில் வேண்டாம். ஸ்ராவதி, ராஜகிருகம், கோசாம்பி, வாரணாசி.. போன்ற இடங்களில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யுங்கள். அங்கு ஏராளமான மக்கள் கடைசியாக ஒருமுறை ததாகதரின் முகத்தைக் காண வாய்ப்புக் கிடைக்கும்’’
இதற்கு பலவீனமான புன்னகை ஒன்றை ததாகதர் பரிசாகத் தந்தார்.


‘‘எல்லா இடங்களைப் போலவே குசிநகராவும் முக்கியமான இடமே. இந்த வனப்பகுதியை நான் மிகவும் விரும்புகிறேன். மண்குடிசைகள் நிறைந்த இந்த நகரத்துக்குள் சென்று ததாகதர் இன்றிரவு பரிநிர்வாணம் அடையவிருக்கும் செய்தியை அறிவிப்பாயாக’’

அவர்மீது சாலமரத்தின் பூவிதழ்கள் மழையாகப் பொழிந்தன. அவரைச் சுற்றி அமர்ந்திருந்த பிக்குகளின் ஆடைகள் மீதும் சிவந்த இதழ்கள் விழுந்தன. ஆனந்தர் தேம்பியவாறு அந்த வனத்தை விட்டு வெளியே வந்தார்.

நேராக யுவான் சுவாங்கிடம் வந்த அவர்,‘‘ சீனத்து பிக்குவே, இன்றிரவு ததாகதர் பரிநிர்வாணம் அடையப் போகிறார். உம் பயணத்தின் நோக்கம் நிறைவேறி விட்டது அல்லவா?’’ என்று கேட்டார்.

குசிநகரத்தின் விஹாரமொன்றில் படுத்திருந்த யுவான் சுவான் சட்டென்று விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். மண்குவளையில் இருந்த நீரைப் பருகினார். கொஞ்சம் தண்ணீரை தன் முகத்திலும் கொட்டிக் கொண்டார்.
கபிலவஸ்துவிலிருந்து புறப்பட்டு வழியில் பகவான் புத்தர் உறைந்த பல இடங்களைப் பார்த்தபிறகு அவர் குசிநகரத்துக்கு வந்திருந்தார். வந்துசேர்கையில் இரவாகி விட்டிருந்ததால் அவரும் குழுவினரும் நகருக்கு வெளியே உள்ள விஹாரம் ஒன்றில் தங்கியிருந்தனர். வியர்த்த முகத்தை துடைத்துக்கொண்டார் யுவான். அன்றிரவு அவரால் உறங்கமுடியவில்லை.

காலையில் சூரியன் வருவதற்கு முன்பே எழுந்து குசிநகரத்தின் வாயிலாக நடந்து புத்தர் பரிநிர்வாணம் அடைந்த ஸ்தலத்தை எட்டினார் யுவான். குசிநகரம் சிதிலமடைந்து ஏழ்மையான நகராகவே இருப்பதை அவர் கண்டார். ததாகதர் காலத்தில் மல்லர் இன மக்கள் வாழ்ந்த குசிநகரம் இன்று வறண்ட பூமியாக இருப்பதை அவர் உணரமுடிந்தது. இங்குவந்துபோகும் யாத்திரிகர்கள் மூலம் கிடைக்கும் வருவாயை விட்டால் வேறெதுவும் இங்குள்ள மக்களுக்கு இருப்பதாக அவருக்குப் புலப்படவில்லை.

ததாகதர் இறுதியாக பன்றிக்கறியும் மூங்கில் குருத்தும் சேர்ந்து செய்யப்பட்ட உணவை அருந்திய சுந்தாவின் வீடு இருந்த இடத்தில் அசோகமகாராஜா கட்டுவித்திருந்த ஸ்தூபி இருந்தது. அதைக் கண்ட பின் வடகிழக்காக நடந்து அஜிதாவதி ஆற்றைக் கடந்து அதன் கரையிலிருந்து கொஞ்ச தொலைவிலேயே, அந்த சாலமரத் தோப்பு இருந்தது. சாலமரங்களை பக்தியுடன் கவனித்தார் யுவான். பசுமையான இலைகள்; உச்சியை நோக்கி வளர்ந்து செல்லும் மரங்கள். அதன் பட்டை பசுமைகலந்த நீல வண்ணத்தில் இருந்தது. காலைச்சூரியன் எழுந்து விட்டிருந்தபடியால் அதன் இலைகள் பளபளத்தன.

சாலமரத்தோப்பின் மறுபகுதியில் மணி ஒலித்தது. யுவான் மரங்கள் அடர்ந்த பாதையைக் கடந்ததும் பெரிய விஹாரம் ஒன்று தென்பட்டது. அதன் அருகே பெரிய ஸ்தூபி. ஓர் உயரமான கல்தூண். அனைத்தும் சிவந்த நிறத்தில் காணப்பட்டன. விஹாரத்தின் வாயிலில் பிக்குகள் குழுமியிருந்தனர். உயரமான தளத்தின் மீது அந்த விஹாரம் கட்டப்பட்டு இருந்தது, படிகள் ஏறிதான் அதன் வாயிலை அடைய முடியும்.

அதன் எதிரே நான்கு ஜோடி சாலமரங்கள் இருந்தன.

அங்கிருந்து பார்க்கையில் விஹாரத்தின் உள்ளே ஒருக்களித்துப் படுத்த நிலையில் நீளமாக ததாகதரின் சிலை தெரிந்தது. அதன்மீது ஒரு காவித் துணியால் மூடிருந்தார்கள். அங்கிருந்து அகிற்புகை வந்தது. ததாகதர் பரிநிர்வாணம் அடைந்த இடத்தில் தான் நிற்கிறோம் என்பதை யுவானின் மனமும் உடலும் அறிந்த கணம் அது என்பதால் யுவான் கரங்களைக் கூப்பி விஹாரத்தின் வாயிலிலேயே வெகுநேரம் நின்றுவிட்டார். பின் தன்னை சமாளித்து உள்ளே சென்றார். உள்ளே குளுமையாக இருந்தது. உறங்கும் நிலையில் ததாகதரின் மிகநீளமான, பெரிய சிலை இருந்தது. அதை மும்முறை சுற்றிவந்தார் யுவான். அதைச் சுற்றிலும் பல வண்ணப் பூக்கள் வைக்கப்பட்டு இருந்தன. சுற்றிலும் ஆள் சுற்றி வர அகலமாக வழிவிட்டு பிக்குகள் அமர்ந்து ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

யுவானும் அமர்ந்துகொண்டார். காலம் கடந்து செல்வதை உணராமல் வெகுநேரம் வெறுமையான மனத்துடன் அமர்ந்து இருந்தார். பெரும் அலைகளால் கொந்தளிக்கும் கடல்போல அவரது மனம் எழுச்சிக்கும் சோர்வுக்கும் இடையே தத்தளித்தது. யுவானின் பயணக்குழுவினர் தங்கள் வழிபாட்டை முடித்துக்கொண்டு வெளியே காத்திருந்தனர். அசோகரின் தூண், மற்றும் பிரம்மாண்டமான ஸ்தூபி போன்ற இடங்களை எல்லாம் யுவான் சுற்றிவருகையில் மதியம் ஆகிவிட்டது.

அங்கிருந்து ததாகதரின் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட மிகப்பிரம்மாண்டமான ஸ்தூபியைக் காண காட்டுவழியில் சென்றனர். சுற்றிலும் புதர்கள் அடைந்த ஓரிடத்தில் அந்த பிரம்மாண்டமான ஸ்தூபி நின்றது. அதைச் சுற்றிவர மட்டும் வழி இருந்தது. ததாகதரின் உடல் எரிக்கப்பட்ட இடம் என்ற எண்ணம் யுவானின் உடல், மனம் முழுக்க வியாபித்து அவரை தன்னிலை மறக்கச் செய்தது. அவரது கண்களில் அருவிபோல் கண்ணீர் கொட்டுவதை அவருடைய குழுவினர் கண்டனர்.


எத்தனை முறை அந்த ஸ்தூபியைச் சுற்றினார் என்றே தெரியவில்லை. பின்னர் களைத்துப்போய் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். சற்று நேரம் கழித்தப்பின்னர் தன்னிலைக்குத் திரும்பியபோதுதான் தன்னருகே ஓர் மூத்த பிக்கு அமர்ந்திருப்பதை உணர்ந்தார். அந்த பிக்குவின் பார்வை யுவானின் மீது கூரிய வேல்போல் விழுந்திருந்தது. அவரது பார்வை இமைக்காத பார்வை என்பதைக் கவனித்து யுவான் ஆச்சரியம் கொண்டார்.

‘‘சகோதரரே, உணர்ச்சி வயப்படாதீர்கள்’’ என்றார் அவர். குரல் வெண்கலக் குரல். பணிவை உருவாக்கும் குரல். யுவான் சட்டென்று தன் மனம் சமநிலைக்கு வந்து கொந்தளிப்பு குறைவதைக் கண்டார்.

‘‘எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு. எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. எதும் நிலையாதது. அதற்கு ததாகதரின் வாழ்வே சாட்சி. ஆகவே இதிலிருந்து விடுவிக்கப்படுவதே மனிதனை விடுதலையாக்கும். அதற்குத் தானே காவி அணிந்துள்ளோம். சீன தேசத்தின் அறிஞரான சகோதரருக்கு இதை நான் சொல்லித் தெரிவிக்க வேண்டியதில்லை. அப்படியிருக்கையில் ஏன் உமது மனம் கொந்தளிக்கிறது? அமைதியாயிரும். உமக்கு ஏராளமான வேலைகள் இந்த ஆரியவர்த்தத்தில் காத்திருக்கிறது’’.
பிக்கு எழுந்து அடர்ந்த புதர்கள் வழியாக நடந்து காணாமல் போனார். யுவானின் பார்வை ஸ்தூபியின் உச்சியை நோக்கித் திரும்பியது. உச்சியில் காகமொன்று உட்கார்ந்திருந்தது. அதன் விழிகள் அவரையே கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பின் அது தன் கரிய மூக்கைத் திறந்து ‘கா’ என்று சப்தமிட்டு பின் பறந்து சென்றது.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com