மூன்றாவது  முக்கியமான வெற்றி சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றிய நிகழ்ச்சி!

மூன்றாவது முக்கியமான வெற்றி சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றிய நிகழ்ச்சி!

ஆட்டத்தை முடிப்பவன் 5

தோனி தலைமையிலான இந்திய அணி பெற்ற மூன்றாவது  முக்கியமான வெற்றி சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றிய நிகழ்ச்சி! 2013-ல் இங்கிலாந்தில் நடந்த போட்டிக்கு தோனியின் அணி சென்றபோது எப்போதும்போல் எதிர்பார்ப்புகள் இருந்தன. முன்னதாக 2002ல் இலங்கையுடன் இந்த கோப்பையைப் பகிர்ந்துகொண்டதுதான் இந்தியாவின் சாதனையாக இருந்தது. இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே நடக்கும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு இருந்தாலும் அதே சமயம் என்ன கிழித்துவிடப்போகிறார்கள் என்ற கசப்பும் இருக்கத்தான் செய்தது.

அதே சமயம் ஐபிஎல் போட்டிகளில் பெட் கட்டி அதற்கு ஏற்ப வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு கிளம்பி இந்திய கிரிக்கெட்டை குழப்பத்தில் ஆழ்த்தி இருந்த தருணம் அது.

முதல் போட்டி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக. சீனியர்கள் எல்லாம் விலகி, முழுவதும் இளைஞர்கள் நிரம்பிய அணி இந்தியா. ஷிகர் தவானின் சதத்துடன் 331 ரன்களைக் குவித்தது. தென் ஆப்பிரிக்கா பதிலுக்கு 305 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது.

அடுத்த ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியுடன். முதலில் ஆடிய மே.தீ. அணி 233 ரன்களுக்குள் சுருட்டப்பட்டது. ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஸ்கோரை இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 39வது ஓவரிலேயே எட்டியது. இதிலும் ஷிகர் தவன் சதம் அடித்தார்.

இந்த வெற்றிகளால் அரை இறுதிக்கு நுழைவது உறுதியான நிலையில், பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. ஆட்டம் மழையால் இடை நிறுத்தப்பட்டதால் 40 ஓவர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட, பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 தான் சேர்க்க முடிந்தது. இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் அமைத்துத்தர, மீண்டும் மழை. 22 ஓவரில் 102 ரன்களை அடிக்கவேண்டும் என இலக்கு குறைக்கப்பட்டது. 19 ஓவரில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டது.

அரையிறுதி இலங்கை அணியுடன். 182 ரன்களுக்குள் இலங்கையை சுருட்டி, 35வது ஓவரில் இலக்கை எட்டியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இஷாந்த் சர்மாதான் ஆட்ட நாயகன். மூன்று விக்கெட்டுகள். இந்த ஆடுகளம் ஈரமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சுக்குப் பெரிதும் கைகொடுத்தது. இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரைக் கொண்டு முதல் 22  ஓவர்களை தோனி வீசச் செய்தார். சுழற்பந்து ஆட்டக்காரர்களை இறக்க மிகவும் தாமதித்தார்.

இந்த ஆட்டத்தில் 24வது ஓவரை வீசியது யார் தெரியுமா?

கையுறையைக் கழற்றி தினேஷ் கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டு தானே முன்வந்து வீசியவர் தோனி! நான்கு ஓவர்கள் மிதவேக பந்து வீசி 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த அளவுக்கு ஆடுகளத்தில் பந்து ஸ்விங் ஆனது.

இறுதிப்போட்டி சொந்த மண்ணில் ஆடும் இங்கிலாந்து அணி உடன். ஆட்டத்தில் மழையும் இறங்க, ஓவர்கள் 20 என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா முதலில் ஆடி 129 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து 124 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைய சாம்பியன்ஸ் கோப்பை இந்தியா வசம் வந்தது.

இந்த தருணத்தில்தான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தோனியைப் பார்க்க முடிந்தது. பெரிய கோப்பைகளின் வெற்றியின் போது அமைதியாக இருக்கும் தோனி, இம்முறை மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இந்த போட்டித்தொடரின் சிறந்த கேப்டன் என்றும் தோனியே அறிவிக்கப்பட்டார்.

தன் வீரர்களை இறுதிப்போட்டியின்போது எப்படி ஊக்குவித்தேன் என்பதை வெளிப்படையாக தோனி கூறினார். ”நாங்கள் எடுக்க நினைத்த ஸ்கோரை எட்டவில்லை. எனவே ஆட்டம் கடினமாக இருக்கும் என்பதால். வீரர்களிடம் இவ்வாறு கூறினேன்: ’கடவுள் நம்மைக் காப்பாற்ற வரப்போவதில்லை. கோப்பை வேண்டுமானால் நாம்தான் போராடவேண்டும். நாம் உலகின் நம்பர் ஒன் அணி. எனவே இந்த குறைந்த ஸ்கோரை எட்டக்கூட இங்கிலாந்து அணி திணறவேண்டும் என்று காட்டுவோம்.  நமக்கு ஆதரவு  ‘வெளியே’ இருந்து வரும் என்று எதிர்பார்க்கவேண்டாம்’.

தோனி சொன்னார். அணி நிமிர்ந்தது.

மே   24 , 2019  

logo
Andhimazhai
www.andhimazhai.com