ராணி மங்கம்மாள்

ராணி மங்கம்மாள்

மதுரைக்காரய்ங்க-22

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி

ஆண்கள்தான் அரசர்களாக ஆட்சி செய்த நாயக்கர் மரபில் ராணியாக ஆட்சி செய்த அபூர்வமான பெண்மணி மங்கம்மாள். திறமையான ஆட்சியாளர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் சாணக்கியத்தாலும் முறியடித்தவர். பதினெட்டாண்டு காலம் தென் தமிழகத்தை தன் கைவசம் வைத்திருந்த பெண்ணரசி. அந்த பதினெட்டு ஆண்டுகால ஆட்சியில் அவர் செய்த சாதனைகள் இன்னும் அவரது பெயரை நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான் அவர் மதுரைக்காரய்ங்க தொடரில் இடம்ப் பெறக் காரணம்.

மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் (1659 -1682) தளபதியாக இருந்த லிங்கம நாயக்கரின் மகள் தான் ராணி மங்கம்மாள்,. சொக்கநாத நாயக்கர் மங்கம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். ஆயினும் அவரை ராணியாகப் பட்டம் சூட்டவில்லை. அதற்குக் காரணம் தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்ய சொக்கநாத நாயக்கர் ஆசைப்பட்டார். அது கைகூடவில்லை. அதற்காக போரும் நடத்தினார். ஆனால் போரில் சொக்கநாத நாயக்கர் ஆசைப்பட்ட தன் மகளைக் கொன்று விஜயராகவ நாயக்கர் தானும் பிடிபட்டு செத்துப்போனார். 1682 -ல் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது அவரது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாதக் குழந்தை. எனவே, தன் மகனைக் காக்க வேண்டி உடன் கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினை காப்பாளராக ஏற்றுக் கொண்டார்..

மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு உரிய வயது வந்ததும் சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்து வைத்து அவருக்கு முடிசூட்டினார். அன்னையின் உதவியோடும் அறிவுரைகளோடும் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார் . தந்தை சொக்கநாத நாயக்கர் காலத்தில் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார்.

மலேசியாவில் வாழும் வரலாற்று ஆய்வாளர் ஜேபி எனப்படும் ஜெயபாரதி தனது கட்டுரை ஒன்றில் முத்துவீரப்பர் காலத்தில் நடந்த முக்கியச் சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஔரங்கசீப் காலத்தில் யானையை அலங்கரித்து அதன் முதுகில் ஆடம்பரமாக பீடம் அமைத்து, அதன் மீது ஒரு தங்கத் தாம்பாளத்தில் ஔரங்கசீப்பின் செருப்பு ஒன்றை வைத்து, ஊர் ஊராக ஊர்வலம் வந்தார்கள். கூடவே, ஜுல்பிர்கான் என்ற தளபதியோடு ஒரு படைப் பிரிவும் வரும். யாராவது மன்னர்கள், இந்தச் செருப்பை மதிக்கவில்லை என்றால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதற்குப் பயந்து, பல மன்னர்கள் யானையை எதிர்கொண்டு வரவேற்று செருப்பை வணங்கி மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு நகரிலும், இந்தச் செருப்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மன்னரின் அரசாளும் இருக்கையில் வைக்கப்படும். அந்த மன்னர் விழுந்து வணங்கி ஔரங்கசீப்புக்கு அடங்கிக் கப்பம் கட்டுவதாக சாசனம் எழுதிக் கொடுக்க வேண்டும். இந்தச் செருப்பு ஊர்வலம் மதுரை நாட்டின் எல்லையான காவிரிக் கரைக்கு வந்து சேர்ந்தது.  மன்னர் முத்துவீரப்பர் கண்டுகொள்ளவில்லை..   கோட்டைக்குள் செருப்புத் தாம்பாளத்தைத் தூக்கிவந்தனர். முத்துவீரப்பரோ, அதை வணங்குவதற்குப் பதிலாக தன்னுடைய ஒரு காலை அந்தச் செருப்புக்குள் நுழைத்துக்கொண்டு தங்கத் தாம்பாளத்தை ஓங்கி எத்திவிட்டார். 'முட்டாளே, உங்கள் டில்லி பாஷாவுக்கு மூளை இல்லையா? ஒரு காலுக்கு மட்டும் செருப்பை அனுப்பி இருக்கிறானே? இன்னொரு செருப்பு எங்கே? எனக்கு வேண்டியவை இரண்டு செருப்புகள் அல்லவா?' என்று கேலியாகக் கேட்டார் முத்து வீரப்பர். அதோடு, ஔரங்கசீப் தன் செருப்பு ஊர்வலத்தை நிறுத்திக்கொண்டார் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

ஏழாண்டு காலம் மங்கம்மாள் வழிகாட்டுதலோடு ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் அம்மை நோயால் 1688-ல் காலமானார்.

உடனே உடன்கட்டை ஏற முயற்சித்தார் சின்ன முத்தம்மாள். அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் உடன் கட்டை ஏற உற்றார், உறவினர் அவரை அனுமதிக்கவில்லை. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே   சின்ன முத்தம்மாள் இறந்தார். அவர் தீக்குளித்து உயிர் நீத்தார் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ குழந்தை பெற்ற சில தினங்களில் தற்கொலை செய்யும் நோக்கோடு தூய பன்னீரை நிரம்பக் குடித்து குளிர் காய்ச்சல் கண்டு இறந்தார் என்றும் கூறுவர். அவரது குழந்தை  விசயரங்க சொக்கநாதருக்குப் குழந்தை பருவத்திலேயே பெயரளவில் பட்டம் சூட்டப்பட்டது. அவர் சார்பில் அவருடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் காப்பாட்சியராக பதவி ஏற்றுக்கொண்டு, ராணி மங்கம்மாள் என்ற பெயரில் ஆட்சி நடத்தினார்.

மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சுற்றியுள்ள உள்ள அரசுகளிடம் இணக்கமான உறவைத் தொடர விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களின் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. ராஜதந்திரத்துடன் இப்பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்தார் மங்கம்மாள்.

 முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தக்காணம் வரை தனது பேரரசை விரிவு செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்தார். செஞ்சிக் கோட்டையில் பதுங்கி இருந்த மராத்திய மன்னன் ராசாராமைக் கைது செய்ய, தம் தளபதி 'ஜுல்பிர்கான் அலிகான்' என்பவரை அனுப்பினார். ஜுல்பிர்கான் நீண்ட காலம் செஞ்சிக்கொட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை நடந்து கொண்டிருக்கும் போதே மற்ற தமிழக அரசுகளைப் பணிய வைத்துத் திறைப்பொருளைச் வசூலிக்க படைகளை அணுப்பினார். மைசூர் மன்னரும் தஞ்சை மராத்தியரும் பணிந்து திறை செலுத்தினர்.

முகலாயர் படையின் வலிமையை ராணி மங்கம்மாள் நன்குணர்ந்திருந்தார். எனவே முகலாயருக்குப் பணிந்துபோக முடிவு செய்தார். விலையுயர்ந்த பொருள்களை தளபதி ஜுல்பிர்கான் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து மதுரையுடனான போரைத் தவிர்த்தார். பின் முகலாயர்களின் உதவியால், மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார். உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றியிருந்த மதுரையின் பகுதிகளும் மங்கம்மாள் வசம் வந்தன.

அப்போது மதுரை நாயக்க அரசுக்கு உட்பட்ட சிற்றரசாக திருவிதாங்கூர் அரசு இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் ரவி வர்மா, மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தவில்லை. மேலும் கல்குளம் பகுதியில் (இன்றைய குமரிமாவட்டம்) இருந்த நாயக்கர் படையையும் தாக்கி அழித்தான். எனவே, தளவாய் நரசப்பையா என்பவர் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தது. திறைப்பொருளாக பொன், பீரங்கி முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது.

 முகலாய அரசு தக்காணத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். ராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

ராணி மங்கம்மாளின் முதலும் கடைசியுமான மிகப்பெரிய தோல்வி என்றால் அது ராமநாதபுரம் போர். மதுரைக்கு எதிராகவும் தஞ்சைக்கு ஆதரவாகவும் ராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி இருந்ததால் 1702 ல் ரகுநாத சேதுபதிக்கு எதிராக ராணி மங்கம்மாள் தனது படைகளை அனுப்பினார். இந்த போரில் மதுரையின் தொடர் வெற்றிகளுக்குக் காரணமான தளவாய் நரசப்பைய்யா வீர மரணம் அடைந்தார். இது போரின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

இன்று பெரிதாகப் பேசப்படும் மதங்கள் தொடர்பான நல்லிணக்கத்தை திருமலை நாயக்கர் தொடங்கி மங்கம்மாள் வரையிலான நாயக்க வம்சத்தினர் இயல்பாகக் கடைப்பிடித்தார்கள். சமணர்கள் கழுவேற்றப்பட்ட மதுரையில் மத உணர்வு எந்த அளவுக்கு தீவிரமாக இருந்ததோ அதே மதுரைச் சீமையில் மத சமரசம் நிலவச் செய்திருக்கிறார்கள் நாயக்க வம்சத்தினர்.  

ராணி மங்கம்மாள் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர். ஒவ்வொரு நாளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோயிலில், 'ஆண்டாளுக்கு நைவேத்யம் ஆகிவிட்டது...’ என்று தெரிந்த பிறகுதான் மங்கம்மாள் சாப்பிடுவார் .

 மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார்.   1704-1705-ம் ஆண்டு சௌராஷ்டிரர்கள் பூணூல் அணியலாமா என்ற வழக்கு ராணி மங்கம்மாள் முன் வந்த போது, அவர்களும் வடநாட்டிலிருந்து வந்த அந்தணர்களே. ஆகையால் அவர்கள் பூணூல் அணியலாம் என்று கவிதார்க்க சிம்மம், தண்டலம் வெங்கட கிருஷ்ணய்யங்கார் போன்றோர் அடங்கிய அறிஞர் குழு தீர்மானிக்க, ராணி மங்கம்மாள் அவ்வாறே ஆணை இட்டார். இது தொடர்பான சாசனம் தெலுங்கில் உள்ளது. இன்றும் மதுரையில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் சௌராஷ்டிர சமூகத்தினர் பூனூல் அணிகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மனுக்கு பல்லக்கு மற்றும் தங்க ஆபரணங்கள் பலவற்றை வழங்கினார். ஆனி மாதத்தில் ஊஞ்சல் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விழாக்கள் நடைபெறும்போது, ராணி மங்கம்மாள் தமது செங்கோலை அம்மனின் முன்வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சித்திரை முழு நிலவு நாளில் ராணி மங்கம்மாளும் இளவரசரும் தமுக்கம் அரண்மனையில் தங்கினர். மீனாட்சி அம்மன் திருமணத்தைக் கண்டு களித்தனர். ஆற்றில் இறங்கும் கள்ளழகரை அவர்கள் இருவரும் வழிபட்டனர்.

இந்துவாக இருந்தாலும்  மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். "ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைப் கைக்கொண்டு வாழ்வதே தருமம் " என்ற கொள்கையைக் மங்கம்மாள் பின்பற்றினார். கிறிஸ்துவர் மற்றும் இசுலாமியர்களையும் மங்கம்மாள் மதித்தார். கிறித்துவ மத குருமார்களை சமயப் பேருரை செய்ய அனுமதி அளித்தார். சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்டிருந்த 'மெல்லோ' பாதிரியாரை விடுதலை செய்ததோடு, 'போசேத்' என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தளித்தார்.

(தொடரும்)

சஞ்சனா மீனாட்சி மதுரையை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர், தமிழின் முக்கியமான செய்தித்தாள்கள், வார இதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் எழுதும் இத்தொடர் வாரந்தோறும் புதன் அன்று வெளிவரும்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com