வைகோ: மதுவுக்கு எதிரான பயணம்

மதுரைக்காரய்ங்க 10

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி.

போதைக்கு எதிரான வைகோவின் நடைபயணம் இன்றைக்கு அல்ல 2004-லேயே தொடங்கி விட்டதாக  எனது நினைவு. தற்போது அந்தப் பிரச்னையிலும் தீவிரமெடுத்திருக்கிறார் வைகோ. தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கடந்த 12.12.2012 அன்று தமிழகத்தின் கடலோர கிராமங்களில் ஒன்றான உவரியில் இருந்து மதுரையை நோக்கி, தனது தொண்டர்களுடன் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். டிசம்பர் 25 அவர்கள் மதுரை வந்தார்கள். மாலையில் மதுரையில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ , “மதுவின் பிடியில் இளைய சமுதாயம் சிக்கி விழுந்து விடக்கூடாது, ஒழுக்க சிதைவுகளுக்கு இளைஞர்கள் ஆளாகக் கூடாது, 1971ம் ஆண்டு ராஜாஜி, கோபாலபுரத்திற்கு நேரில் சென்று அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து மதுவை திணிக்காதீர்கள், அந்த திட்டத்தை உடனே கைவிடுங்கள் என்றார். ஆனால் கருணாநிதி மறுத்து விட்டார். அப்போது வந்த மது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தில் 26 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் மதுவினால் வருகிறது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதுவினால் ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் கோடி மேல் வருமானம் வருகிறது. வாரத்திற்கு 500 புதியவர்கள்  மது குடிக்க வருகிறார்கள் என்று பெருமையுடன் சொல்லியிருக்கிறார். அரசு திட்டங்கள் செயல்படுத்த அதிக பணம் செலவாகிறது என்கிறார்கள். மக்களை வாட்டி வதைக்கும் அரசு திட்டங்கள்  எதற்கு? குஜராத் மாநிலத்தில் மதுவுக்கு அனுமதி இல்லை. அங்கு தொழில் பெருகவில்லையா, பொருளாதாரம் பெருகவில்லையா. காமராஜர் காலத்தில் மது இல்லை. ராஜாஜி காலத்தில் மது இல்லை. மது இருந்தால் இனி பெண்கள் தெருவில் போக முடியாது. உலகில் அதிக விபத்து எங்கு நடைபெறுகிறது தெரியுமா? தமிழ்நாட்டில் தான். இதற்கு காரணம் மிதமிஞ்சிய மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால்தான்.  இதற்கான என் பயணம் தொடரும் என்றார்.

நடைபயணம் வரும் வழியில் வைகோ கிராம மக்களிடம் பேசியதைக் கேட்டேன். “நான் உங்களிடம் ஓட்டுக்காக வரவில்லை. இந்த நடைபயணத்தின் காரணமாக யாரும் எனக்கு ஓட்டுக்கூட போடத் தேவையில்லை. என்றாவது ஒருநாள் தமிழகம் மதுவின் கொடுமையில் இருந்து வெளிவரும்போது, இத்தகைய மனிதர் ஒருவர் மதுவை எதிர்த்து, மக்களின் நல்வாழ்விற்காக தொடர்ந்து போராடினார் என நினைத்தாலே போதும்” என்றார். "உடலை வருத்தியும் அதை தனக்கு சாதகமான ஓட்டாக்காமல் விட்டுவிடுறாரே.." என நம்முடன் வந்த போட்டோகிராபருக்கு ஆதங்கம்.

வைகோ சிவகாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது, அவர் தொகுதியில் குழந்தைகளுக்கான மஞ்சள்- காமாலை தடுப்பு ஊசி போட முடிவு செய்திருந்தார். அதற்கு மதுரையிலுள்ள பத்திரிக்கைகளுக்கு அழைப்பும் இருந்தது. அப்போது நானும் தற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருக்கும்  நண்பர் ஸ்ரீகிருஷ்ணாவும் சென்றிருந்தோம்.

ம.தி.மு.க. தொண்டர்கள் தனது, கட்சி பெயரையும், வைகோ, பெயரையும் கட்சி கொடியையும் வைத்து வளைவு அமைத்திருந்தார்கள். தடுப்பு முகாம் துவங்கும் முந்தைய நாள், ஏற்பாடுகளை பார்வையிட வந்த வைகோ, அன்று இரவுக்குள் தனது பெயரையும், கட்சி கொடியையும் அகற்ற உத்தரவிட்டார் கட்சி சார்புடைய அனைத்தையும், இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அதற்கு அவர் கூறிய காரணம் இது தான் -- "குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் வேறு ஒரு கட்சியை சார்ந்தவர்களாக இருப்பார்களானால், இது இந்த கட்சியை சேர்ந்த நிகழ்ச்சி, இங்கு எப்படி செல்வது என்று தயக்கம் வரும். வருவதற்குத் தயங்குவார்கள். அனால் குழந்தைகளுக்கு கட்சி ஏது?" என்றார் வைகோ. எங்களை அவர் காரிலேயே கூட்டிச் சென்று முகாம்களை காண்பித்தார். ஒரு ராணுவக் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டிருந்தது.

அதுபோல 1999ஆம் ஆண்டு, ஊனமுற்றோருக்கான இலவச மறுவாழ்வு சிகிச்சை முகாம் நடத்தி, பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக செய்தார். அதிலும் கட்சி கொடி இல்லை. கட்சி பெயர் இல்லை. கட்சி தலைவர் பெயர் இல்லை. அப்போதும் அவருடன் சென்றபோது இந்தத் திட்டத்தைக் குறித்தும் மிகவும் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் ஆந்திர மாநிலத்தில் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பதையும் சொன்னார். அரசியலே பேசவில்லை. ஆனால் மதுரை நண்பர்கள் சிலர் குறித்துக் கேட்டுக்கொண்டார். ஆச்சரியமாக இருந்தது.


2004ம் ஆண்டு, தனது கிராமத்தில் வரண்டு கிடந்த குளத்தில், தானே தனது சக ஊர் மக்களின் உதவியுடன் தூர் வாரி, ஆழப்படுதினார்.  "சில அரசியல்வாதிகள் செய்வது போல் புகைப்படம் எடுத்துகொண்டு, அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாரா.? என அங்குள்ள பத்திரிக்கை நண்பரிடம் கேட்டேன். "இல்லை சனி, ஞாயிறு இரண்டு நாளும், அங்கு இருந்தார். இது கண்டிப்பாக வாக்கு சேர்ப்பதற்காக செய்யவில்லை, ஏன் என்றால் தன் கிராம மக்கள் என்றும் வைகோவிற்கே வாக்களிப்பர். இது தன் கிராம மக்களுக்காக அவர் செய்த  சேவை. இதை அவர் என்றும் தனது மேடை பேச்சில் கூறியது இல்லை" என்றார். இது குறித்து அவரிடம் ஒரு முறை கேட்டபோது அவர் அதை பெரிய விஷயமாகவே கருதியிருக்கவில்லை. தனது கடமைகளில் ஒன்று போல நினைத்துக் கொண்டார் எனக் கருதினேன்.

ம.தி.மு.க. தொடங்கிய நேரம். வைகோவை மதுரை ரயில் நிலையத்தில் சந்தித்தேன். கட்சி ஆட்கள் பெரிய அளவில் இல்லை. பிளாட்பாரத்தின் இருட்டான பகுதிக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் கொஞ்சம் தயங்கி " உங்களை சாதி வளையத்துக்குள் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.  சாதி நிகழ்ச்சிகளிலெல்லாம் நீங்கள் பங்கேற்காமல் இருப்பது நல்லது எனத் தோன்றுகிறது" எனத் தயக்கத்துடன் சொன்னேன். "நிச்சயமாக.. அது குறித்தான சிந்தனையே எனக்குக் கிடைக்காது" எனத் தீர்க்கமாகச் சொன்னார். அதில் இன்றுவரை உறுதியாக நிற்கிறார்.
2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வைகோவின் சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஜாதியை பிற்படுத்தபட்ட   ஜாதியாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்தனர். வைகோவையும் பங்கு பெறுமாறு வற்புறுத்தியும், அவர் கலந்து கொள்ளவில்லை. நான் ஜாதியை பயன்படுத்தி அரசியல் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக கூறியதாக அறிந்தேன். இதற்கு அந்த ஜாதி சங்கங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் அவர் தனது கொள்கையில் சமரசம் செய்யவில்லை. இதனால் வாக்கு வங்கியை அவர் இழந்ததும் உண்டு என்று நண்பர்கள் மூலமாகக் கேள்விட்டேன்.

அது போல அவர் கூட்டங்கள் நடக்கும் இடத்தில் வழிபாட்டு தலங்கள் இருந்தால் அதற்கு உரிய முக்கியத்துவம்  அளிப்பார். அது எந்த மதம் சார்ந்ததாக இருந்தாலும சரி. ஒரு முறை மேலமாசிவீதி வடக்குமாசிவீதி சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்குள்ள கோயிலில் பூஜைக்காக மணியடிக்கப்பட்டது. சட்டென பேச்சை நிறுத்திவிட்டு மணிச்சத்தம் முடியும் வரை காத்திருந்து பேச்சைத் தொடர்ந்தார்.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டல மாநாட்டை 2008 செப்டம்பர் 15-ம் தேதி  மதுரையில் நடத்தினார். அந்த மாநாட்டையொட்டி மதுரை நகர் முழுவதும் அண்ணாவின் படங்களும் அவரது வார்த்தைகளுமே இடம் பெற்றிருந்தன. எங்கும் எதிலும் வைகோ படம் கிடையாது. அதில் அவர் கண்டிப்புடன் இருந்தார்.

நீண்டநேரம் மாநாட்டில் பேசிய அவர் கடைசியாக.. "அண்ணா அவர்களே, நீங்கள் யேல் பல்கலைக் கழகத்தின் அருமையான குறிக்கோள் வாசகத்தை உங்கள் மனம் கவர்ந்ததாகச் சொன்னீர்கள். அந்த வாசகங்கள் அருமையான வாசகங்கள். நம் தோழர்களுக்குத் தேவையான வாசகங்கள்.  நான் இல்லாவிட்டால் வேறு யார்?  இப்பொழுது இல்லாவிட்டால் வேறு எப்போது? இன்னொருவர் செய்வார் என்று எதிர்பார்க்காதே. நான் இல்லாவிட்டால் வேறு யார் செய்வார்கள். நானே இந்த வேலையைச் செய்கிறேன் என்றீர்கள்.

இந்த அக்கிரம அரசை எதிர்த்து, மக்கள்விரோத தி.மு.க. அரசை எதிர்த்து, ஊரை அடித்து உலையில் போடுகின்ற இந்த மைனாரிட்டி அரசை எதிர்த்து, இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களின் வேதனைகளுக்குக் காரணமான மன்மோகன் சிங் அரசை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டுகின்ற கடமையில் நாம் ஈடுபடுவோம்.

அண்ணா அவர்களே, எங்கள் தோள்களுக்கு வலிமையும் எங்கள் இதயத்துக்கு வலிவையும் தாருங்கள். உங்கள் கொள்கை காக்கும் கூட்டமாக மறுமலர்ச்சி தி.மு.க. போராடும். உங்கள் இலட்சியங்களை வென்றெடுக்கும் கூட்டமாக நாங்கள் போராடுவோம். அந்தக் கனவுகளுக்காகவே நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் கொண்டு இருக்கின்ற தோழமை 1972 உடன் 1993 கைகோர்த்து இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கைகோர்த்து இருக்கிறது. தேர்தல் என்றைக்கு வந்தாலும் ஆளும் அரசுகளைத் தூக்கி எறிய மக்கள் சக்தியைத் திரட்டுவோம். அந்த உறுதியோடு செயலாற்றுவோம்.

வெட்டட்டும் கூர்வாள்கள் பகையை நோக்கி
வெடிக்கட்டும் அதிர்வேட்டுப் போர்முழக்கம்
எட்டட்டும் நெடுவானை ஈட்டிக் கூட்டம்
எதிரிகளின் மார்புக்குள் குடியேறட்டும்
கட்டட்டும் மூட்டையினை இனப்பகைவர் இல்லை
கட்டாரி முத்தத்தைச் சுவை பார்க்கட்டும்
பட்டத்தைப் போல் கழகக் கொடியின் கூட்டம்
பறக்கட்டும் நெடுவானில்!... எனப் பேசி முடித்த வைகோ வார்த்தைகள் இன்னும் நம் காதில்..

சஞ்சனா மீனாட்சி மதுரையை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர், தமிழின் முக்கியமான செய்தித்தாள்கள், வார இதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் எழுதும் இத்தொடர் வாரந்தோறும் புதன் அன்று வெளிவரும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com