சமூக நலக் குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவின் இருபதிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம். கல்வி, தொழில், பொது சுகாதாரம் என பெருமை கொள்ளத்தக்க வளர்ச்சி.
ஏறத்தாழ 90 சதவீதத்துக்கும் மேல் பள்ளிக் கல்வி கற்பவர்களும் எண்பது சதவீதத்துக்கும் கூடுதலாக மேல்நிலைக் கல்வி கற்பவர்களும் இருக்கும் மாநிலம் நம்முடையது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 50%த்திற்கும் அதிகமானவர்கள் உயர்கல்விகற்கும் மாநிலமாகவும் இருக்கிறது.
கல்வி வளர்ச்சி பெற்ற சமூகம் என்பதற்கு பல்வேறு குறியீடுகள் இருப்பினும், பண்பட்ட, குடிமைப்பண்புகளைப் பேணும் சமூகம் என்பதும் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கவேண்டும். அத்தோடு தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியலுக்கு நூறாண்டு வரலாறும் உண்டல்லவா! ஆனால் தொடர்ந்து நடக்கும் ஆணவ, சாதியக் கொலைகள் அதிர்ச்சியையும் பல்வேறு அடிப்படைக் கேள்விகளையும் எழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக கிராமங்களில் படிப்பறிவில்லாத பாமரர்கள் உணர்ச்சிவயப்பட்டு செய்துவந்ததாகக் கருதப்பட்ட இத்தகைய கொலைகள் தற்போது படித்த நடுத்தரவர்க்க நகரச்சூழல்களில் நடக்கத் தொடங்கியிருப்பது கூடுதலான கேள்விகளை எழுப்புகிறது.
இந்திய மனங்களில் சாதி சுரண்டிக் கழுவ முடியாத களங்கமாகப் படிந்திருப்பதற்கு சமூகவியலாளர்கள் பலநூறு காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள். ஒரு கல்வியாளனாக இதற்கான அடிப்படைக் காரணங்களில் முதன்மையானதாக நமது கல்விமுறையின் போதாமையையே சொல்வேன். பத்து முதல் பனிரெண்டு ஆண்டுகள் கல்வி பெறும் நமது மாணவர்கள் எதைக் கற்கிறார்கள்? சமூக அறிவியல், சமூக வரலாறு, விழுமியக் கல்வி (value education ), அறக்கல்வி (ethical studies) எல்லாவற்றையும் கற்றுத்தானே வெளியேறுகிறார்கள்.
சமூக வரலாற்றில் அவர்கள் வாழும் தமிழ்ச்சமூகம் பற்றியும் அதனுள் நிலவும் சமூக முரண்களைப் பற்றியும் நடைமுறைக்கு உகந்தவாறு ஏதாவது கற்றுக் கொள்கிறார்களா? தொடர்ந்து மாணவர்களோடு உரையாடுகிறவன் என்ற அளவில் ‘இல்லை’ என்பதே நேர்மையான பதிலாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் வகுப்பறையில் சாதி பற்றிய உரையாடல்களை முன்னெடுப்பது வழக்கம். அப்போதெல்லாம் வகுப்பறைகளில் வழக்கத்திற்கு மாறான ஒருவித இறுக்கம் நிலவுவதைக் கவனித்திருக்கிறேன். இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களே பெரும்பான்மையாக எழுவதையும் கவனித்திருக்கிறேன். வேடிக்கை என்னவென்றால் இடஒதுக்கீட்டினால் பலன் பெறும் மிகவும் பிற்பட்ட, பிற்பட்ட சமூகமாணவர்களும் உரத்தகுரலில் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதைக் காணமுடிந்திருக்கிறது. கூடுதலாக ‘இடஒதுக்கீடு பட்டியல் சாதியினருக்கு மட்டுமானதல்ல. 30% பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கானதுதான்..’ என்று புள்ளிவிவரங்களை எடுத்துச் சொன்னபின், இன்னும் கூடுதலாக அவர்கள் அசவுகரியமாக மாறுவதைக் கவனித்திருக்கிறேன். சரி. கிராமப்புற மாணவர்கள். வகுப்பறைக் கல்வி தவிர்த்த போதுமான வாசிப்புப் பழக்கமும் அனுபவமும் இல்லாதவர்கள். இப்படித்தான் இருப்பார்கள் என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளலாம். ஆனால் அமெரிக்காவில் ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பொறியாளர் சாதிரீதியான ஒடுக்குதலுக்கு தான் ஆளானதாக புகாரளித்தபோது உலகம் அதிர்ந்துதான் போனது. பிறப்பினடிப்படையில் உலகில் அனைவரும் சமம் என்று அரசியல் சட்டத்தில் முதலில் பிரகடனப்படுத்திய அமெரிக்காவில் சாதியா? பொதுவாக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் தங்கள் உடமைகளோடு எடுத்துச்செல்லும் ஊறுகாய், பருப்புப் பொடி, பிள்ளையார் பெருமாளோடு சாதியையும் மறக்காமல் எடுத்துச்சென்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
கலிபோர்னியாவில் இயங்கும் சிஸ்கோ நிறுவனத்தில் சாதியபாகுபாட்டால் தான் ஒதுக்கப்படுவதான புகாரை ஜான் டோ எனும் ஊழியர் தன் மேலதிகாரியான சுந்தர் ஐயர் என்பவர்மேல் வெளிப்படையாக சுமத்துகிறார். சுந்தர் மும்பை ஐஐடியில் படித்தவர். அதே ஐஐடியில் படித்தவர்தான் அங்கு பணியாற்றும் ஜான் டோ. தேவை எதுவும் இல்லாமலே அவர் ஒரு தலித் என்பதை சக ஊழியர்களுக்குக் கசியவிடுகிறார். தொடர்ந்து பல்வேறு வகைகளில் அவரை நாசூக்கான வழிகளில் மன உளைச்சலுக்குள்ளாக்குகிறார் என்பது புகார். 2015இல் அவர் அளித்த புகாரை தட்டிக் கழித்தது சிஸ்கோ. ‘சாதிய ஒடுக்குமுறை சட்டரீதியான குற்றம் அல்ல' என்று புகாரை முடித்தது. தொடர்ந்து சுந்தர் தன் செல்வாக்காலும் சாணக்கியத்தனத்தாலும் ஜானை பழிவாங்குகிறார். அவருடைய பதவி உயர்வை தடுக்கும்வேலைகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு அடுத்து ஜான் டோ ‘California Department for Fair Employment and Housing’ எனும் அமைப்பில் புகார் அளிக்கிறார். வழக்கமாக ஆறு மாத காலத்திற்குள் இத்தகைய புகார்களை விசாரித்து முடித்துவைக்கும் அவ்வமைப்பு ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டு விசாரிக்கிறது. மனித உரிமை அமைப்பான இது இந்தப் புகாரில் உண்மையிருப்பதாகக் கருதி சட்டரீதியான விசாரணைக்கு அனுமதி அளிக்கிறது. இந்த விசாரணைக்குள் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று Hindu American Foundation எனும் அமைப்பு உள்ளே நுழைகிறது. இந்த அமைப்பு ‘சாதி, இந்து மதத்தின் தர்மங்களில் ஒன்று’ என்று சுந்தரைத் தாங்கிப்பிடிக்க முயல்கிறது. சிஸ்கோவில் ஜான் புகார் அளித்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு முடிவில் ஜான் சாதிரீதியாக ஒடுக்குதலுக்குள்ளானதாக தீர்ப்பு வருகிறது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பணியிடங்களில் சாதியரீதியான ஒடுக்குமுறைகள் வெவ்வேறு வடிவங்களில் நடப்பது உறுதியாகியுள்ளது.
தேன்மொழி சவுந்தர்ராஜன் எனும் அமெரிக்காவில் வாழும், Equality Labs எனும் அமைப்பின் நிறுவனர், கலிபோர்னியாவில் வளர்ந்துவரும் ‘சாதிய ஒடுக்குதல்கள்’ குறித்து நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான சில உண்மைகளை வெளியிட்டார். 25% தலித்துகள் பணியிடங்களில் வாய்மொழி, உடல்ரீதியான வன்முறைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். மூன்றில் ஒருவர் கல்வி கற்குமிடங்களிலும் மூன்றில் இருவர் வேலையிடங்களிலும் சாதியின் காரணமாக மோசமாக நடத்தப்படுவதாகக் கூறினர். 60% தலித்துகள் சாதி ரீதியான இழிவுபடுத்தும் ‘கமண்ட்கள்’ மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள் சொல்லப்பட்ட சந்தர்ப்பங்களை நினைவுகூர்ந்தனர். 40% தலித்துகளும் 14%பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் வழிபாட்டுத் தலங்களில் புறக்கணிப்பை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கலிபோர்னியாவில் பணிபுரியும் மும்பை ஐஐடியில் கல்வி கற்ற ஒருவராலேயே, அவர் பணிசெய்யுமிடத்தில் தற்காலிகமாகவேனும் சாதியக் காழ்ப்பை ஒதுக்கிவைக்க முடியாமல் இருக்கும்போது திருநெல்வேலி அர்ஜுன் அரிவாள் எடுத்ததில் அதிசயிக்க ஒன்றுமில்லை.
இன்று அமெரிக்காவில் இயங்கிவரும் அம்பேத்கர் கிங்ஸ் படிப்பு வட்டம் சாதிய ஒடுக்குதல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்பட்டு வரும் அமைப்பாகும். இவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்திப்பவர்களுக்கான ‘ஹெல்ப் லைனையும்’ செயல்படுத்தியுள்ளனர். இடைக்காலத்தில் சிஸ்கோ ‘சாதி ரீதியான ஒடுக்குதல்களும் சட்டரீதியான விசாரணக்குரியதே’ என ஏற்றுக் கொண்டுள்ளது. கூடுதலாக சியாட்டில் நகரில் 2020இல் சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான சட்டமும் இயற்றப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சுந்தர் நம் நன்றிக்குரியவர்தான்.
இப்போது நமக்கு எழும் வினா, கொட்டாம்பட்டி அரசுப் பள்ளி மாணவனிலிருந்து மும்பை ஐஐடி மேதாவிகள் வரை எல்லோருமே சாதி விசயத்தில் எப்படி ஒரே கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்?
நமது குடும்பங்களும் சமூகமும் உருவாக்கிய மூடத்தனங்களையும் நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கி எதிர் உரையாடல்களை உருவாக்கும் தலைவர்கள் சிந்தனையாளர்கள் என்று இன்று யாரும் இல்லை. அல்லது அவர்களைவிட சாதிய ஆதரவுப் பரப்புரைகள் வலுவானதாக மாறியிருக்கின்றனவா? வகுப்பறைகளும் இன்று செயலற்றவைகளாக மாறிவிட்டன. அல்லது ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களில் பெரும்பான்மையோரும் சாதியவாதிகளாகவே இருக்கின்றனர். அவர்களிடம் கல்விபெற்றவர்களே இன்றைய அதிகாரமட்டங்களில் தாசில்தார், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித்தலைவர், நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள். ஆக இந்த நச்சுச் சுழலை முறிப்பது எளிதாக இல்லை. ஏனென்றால் யாருமே சாதியத்தை அறிவியல் பூர்வமாக விளங்கிக் கொள்ள விரும்புவதில்லை. காரணம் சாதியம் இருக்கவேண்டுமென்று பெரும்பான்மையோர் விரும்புகிறோம் என்பதுதான் அடித்தளத்தில் தங்கும் கசப்பான உண்மை.
380 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகில் உயிரினங்கள் தோன்றி பெருக்கம் அடைந்தன. அதன் பின் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் ஏறத்தாழ 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனிதக் குரங்கிலிருந்து சிம்பன்சி எனும் இனமும் மனித மூதாதையாகக் கருதத்தக்க மற்றொரு இனமுமாக இரண்டு கிளைகள் பிரிந்தன. கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி வேட்டையாடிகளாக வாழ்ந்து 40லட்சம் ஆண்டுகளுக்குப் பின் அங்கிருந்து வட ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா என இடம் பெயர ஆரம்பித்தனர். அவர்கள் இடம்பெயர்ந்து வாழ ஆரம்பித்த நிலப்பரப்பின் தட்பவெப்ப உணவுப் பழக்கங்களுக்கேற்றவாறு உடல் நிறம், தோற்றம் போன்றவை மாறின. இப்படி வெவ்வேறு ஆறு மனித இனங்கள் இருந்தன. பல்வேறு காரணங்களால் 70ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மற்ற இனங்கள் மறைந்து ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ எனும் இனம் மட்டுமே எஞ்சியது. இன்று மானிடவியல், தொல்லியல், மரபணுவியல் இன்னுமான பல்வேறு அறிவியல் துறைகள் இணைந்த ஆய்வுகள், மனித இனத்தின் தோற்றம் பற்றிய பல்வேறு வினாக்களுக்கான விடைகளைத் தெளிவுபடுத்தி வருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆய்வு ஒன்றில் 70ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த ஆதி மனிதனின் மரபணுத் தொகுதியான M130 எனும் மரபணு உசிலம்பட்டியில் வாழும் விருமாண்டி என்பவரின் மரபணுவோடு ஒத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதுபோலவே இந்திய சாதிகள் மரபணுரீதியில் வேறுபட்டவையா என்ற வகையில் நடந்த விரிவான ஆய்வுகளில் ‘மரபணுக்களில் சாதிரீதியான தனித்தன்மைகள் எதுவும் இல்லை’ என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது(தமிழ்ச்செல்வன் மொழிபெயர்த்த ‘மூதாய்’ எனும் கட்டுரை விரிவாக இதுபற்றிப் பேசுகிறது). ஆக இனத்தின் அடிப்படையிலோ, நிறத்தின் அடிப்படையிலோ, மரபணுக்களின் அடிப்படையிலோ, ரத்த வகைமைகளிலோ சாதியை நியாயப்படுத்துவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. மொத்தத்தில் உலகின் கருப்பு, வெள்ளை, மஞ்சள், பழுப்பு என்பதான அத்தனை மனித இனங்களும் ஒரேதாயின் வம்சாவளியினர்தான் என்பதையும் இன்றைய அறிவியல் வலியுறுத்துகிறது.
இவ்வளவு கதைகளையும் கேட்டபின்பும் சாதியப் பாகுபாடு அடிப்படையற்ற மனித உரிமை மீறல் என்று ஒருவரால் ஒத்துக்கொள்ள இயலாதென்றால், அவருடைய மனதிலிருந்து சாதியைக் கழுவ எந்தக் கல்வியாலும் இயலாதுதான்.