கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகம் பெருமளவு மாற்றங்களைச் சந்தித்திருப்பதைப் போல தமிழ்ச் சமூகமும் அதனளவில் மாற்றங்களுக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக மனிதர்கள், அவர்களின் பணிகள், பொறுப்புகள் பற்றிய கண்ணோட்டங்கள் மாறியிருக்கின்றன. மதிப்பீடுகளும் கூட.
80களுக்கு முன் தமிழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பேராசிரியப் பணி என்பது கவர்ச்சிகரமான ஒரு பணி அல்ல. ஏனெனில் ஆசிரிய மற்றும் பேராசிரியப் பணிக்கான ஊதியம் என்பது வெளியே சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கவில்லை. வாத்தியார் வேலை வக்கத்த வேலை என்ற சொல்வழக்கு பேராசிரியர்களுக்கும் பொருந்தக்கூடியதாகவே இருந்தது. நிலைமை அப்படியிருக்க இந்த பேராசிரியப் பணியை செய்யத்துணிந்தவர்கள் யார் என்ற வினா எழக்கூடும். பெரும்பாலானவர்கள் ஆசிரியப் பணியை விரும்பி ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தனர். தொடர்ந்து வாசிப்பது, கற்றுக்கொள்வது, கற்றதைப் பகிர்ந்து கொள்வதில் இயல்பாகவே ஆர்வம் சிலருக்கு இருக்குமல்லவா? அவர்கள் விரும்பிய துறையாக பேராசிரியப் பணி இருந்தது. பொதுவாகவே பேராசிரியர்களுக்கு உரையாடுவதிலும் விவாதிப்பதிலும் ஆர்வம் இருப்பதைக் கவனித்திருப்போம். வெளிப்படையாகச் சொன்னால் சில பேராசிரியர்களிடம் சிக்கினால் மீள்வது பெரும்பாடாகிவிடும். அது அந்த தொழிலின் அடிப்படை இயல்புதான். மொத்தத்தில் ஆசிரியப் பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட ஏராளமானவர்களால் தமிழக உயர்கல்வி நிலையங்கள் நிரம்பியிருந்தன.
நான் பணிபுரிந்த கல்லூரியில் வெங்கட்ராமன் எனும் ஓர் அறிவியல் பேராசிரியர் 60களிலேயே அமெரிக்காவில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, அங்கே நாசாவில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தும் நான் ஆசிரியப் பணிக்கே திரும்புகிறேன் என்று மதுரை எனும் சிறு நகரத்தில் இறுதிவரை பணியாற்றினார். பீட்டர் எனும் பேராசிரியர் அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றபின்னும் அமெரிக்க கனவுகளுக்கு ஆட்படாமல் ஆசிரியராகவே பணியை நிறைவுசெய்தார். ஓய்வு பெற்றபின்னும் கூட 10ஆண்டுகளுக்குமேல் ஆசிரியப் பணியை விரும்பிச்செய்தார். இத்தனை பல்கலைக்கழகங்கள் இல்லாத அந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் முதுகலை ஆங்கில இலக்கியத்தில் ஒரே ஒரு மாணவர்தான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். அந்த மாணவர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்ற வசந்தன் என்பவர். ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றிருந்த அவருக்கு ஆங்கில ஊடகத் துறையில் பெரும் வாய்ப்புகள் இருந்தும் அவருக்குப் பிடித்த பேராசிரியப் பணியையே தேர்ந்தெடுத்து பணிநிறைவு செய்தார். இப்படி நான் பணிசெய்த கல்லூரியிலேயே பலரையும் சுட்டிக்காட்ட முடியும்.
இதுபோன்று தமிழகத்தின் பழம்பெரும் கல்லூரிகளில் பலபேராசிரியர்கள் கற்பித்த காலம் ஒன்று இருந்தது. மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஒரு பேராசிரியரின் வகுப்புகளைக் கவனிக்க தியாகராசர் கல்லூரி, மதுரைக் கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வருவது உண்டாம். அதுபோல தியாகராசர் கல்லூரிக்கும் மதுரைக் கல்லூரிக்கும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் செல்வதுண்டாம். அத்தகைய ஆசிரியர்களும் மாணவர்களும் இருந்த நாட்களின் கல்விச்சூழல் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான். இருபதாண்டுகளுக்கு முன்வரைகூட தமிழகக் கல்லூரி வளாகங்கள் செயலூக்கம் மிக்கனவாக இருந்தன. சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைக் கிறித்தவக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி போன்ற பல கல்லூரிகள் தனித்துவமான வளாகக் கலாச்சாரங்களைக் கொண்டிருந்தன. சமூக அரசியல் பற்றிய தீவிரமான பார்வைகளும் விவாதங்களுமாக இருந்த நாட்கள் அவை. அப்போதைய பேராசிரியர்களிடம் பெரும் பணப்புழக்கம் இருந்திருக்கவில்லை. ஆனால் அறிவுச்செருக்கும், அதன் பொருட்டான கர்வமும் ஆளுமையும் இருந்தன. அவர்களிடம் பயின்ற மாணவர்களால் அவர்கள் வெகுகாலம் பேசப்படக்கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது கல்வியின் மையம் ஆசிரியர்கள்தான். சிறந்த ஆசிரியர்களே உயர்தரமான கற்றல் அனுபவத்தைச் சாத்தியப்படுத்தக் கூடியவர்கள். வகுப்பறைகள், கட்டடங்கள் இன்னபிற வசதிகள் அனைத்தும் இரண்டாம் பட்சமானவைதான்.
காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறத்தானே செய்யும். இப்போது தமிழகம் இந்தியாவுக்கே உயர்கல்வியின் மையமாகமாறிவிட்டது. 1940களில் இந்தியாவில் 16 பல்கலைக்கழகங்கள், சிலநூறு கல்லூரிகள் இயங்கின. ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களே உயர்கல்வி கற்றனர். 2020களில் 1168 பல்கலைக்கழகங்கள் மற்றும் 45000 கல்லூரிகளில் 3 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். ஆனால் அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் உயர்கல்வித்தரம் அன்றாடம் சரிந்து கொண்டிருப்பது வெளிப்படையான உண்மையாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் அடிப்படையான காரணம் ஆசிரியர்களின் தரத்தில் காணப்படும் வீழ்ச்சியே.
மேற்கண்ட அந்த லட்சிய ஆசிரியர்கள் எங்கே போனார்கள்? அத்தகைய ஆசிரியப் பெருமக்கள் அழிந்துவிட்ட அரிய உயிரினமாகிவிட்டார்களா? உலகநாடுகளோடு ஒப்பிட்டு, எதிர்காலத் தலைமுறைகளை அறிவார்ந்தவர்களாக உருவாக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர்களின் சமூகப் பொருளாதாரத் தரத்தை மேம்படுத்தும் விதமாக பல்கலைக்கழக மானியக்குழு புதிய ஊதியவிகிதத்தை 90களில் அமல்படுத்தியது. இதன்விளைவாக சிறந்த திறன்படைத்த ஆசிரியர்களை ஈர்க்கமுடியும். அதனால் 21ஆம் நூற்றாண்டுச் சவால்களைச் சந்திக்கக்கூடிய மாணவர்களை உருவாக்கமுடியும் என்பதே அரசின் திட்டமாக இருந்தது. இந்த ஊதிய உயர்வே நம் உயர்கல்வியின் தரத்தை குழிதோண்டிப்புதைக்கும் என்பதை யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இந்த பலமடங்கு ஊதிய உயர்வு கல்வி நிறுவனங்களையும் கல்வித் துறை மற்றும் அரசையும் ஊழலுக்குள் தள்ளியது. தகுதியை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் நேரடியாக லட்சங்களில் பணியிடங்களுக்கு பணம் வாங்கத் தொடங்கியபிறகு ஆசிரியப் பணியை விரும்பும் தகுதியுள்ள நபர்களால் இந்த ஊழல் கோட்டையை அணுகமுடியவில்லை. சாதி, மதம், செல்வாக்கு, சிபாரிசு, பணம் ஆகியவற்றின் பல்வேறு இணைவுகள் அர்ப்பணிப்புள்ள ஆசிரிய இனத்தையே அழித்துவிட்டன. இன்று அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களில் மிகச் சிறுபான்மையினரே ஆசிரியப் பணியின் தீவிரம் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இதற்கிடையே கடந்த சில பத்தாண்டுகளில் சுயநிதிக் கல்லூரிகளும், அரசு நிதிஉதவிபெறும் கல்லூரிகளில் சுயநிதிப்பிரிவுகளும் கணக்கில்லாமல் தொடங்கப்பட்டன. இப்போது புதிதான ஒரு பேராசிரிய வர்க்கம் உருவானது. மாத ஊதியம் ரூ 80,000-த்தில் தொடங்கும் ஒரு ஆசிரியருக்கு பக்கத்து இருக்கைகளில், அனைத்து தகுதிகள் இருந்தும் சமூக பொருளாதார செல்வாக்கற்ற ஒரு பேராசிரியர் ரூ 10000/-இல் தன் கல்விப்பணியைத் தொடங்குகிறார். 70% க்கும் மேல் சுயநிதியில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் வந்தபின் இப்படியானதோர் ஒரு அப்பாவி பேராசிரியர் கூட்டம் ரூ 25000 ஊதியம்பெற போராடிக்கொண்டிருக்கிறது.
இந்தக்கட்டுரை எழுதுவதற்குக் காரணம் சமீபத்தில் நான் சந்தித்த ஒரு மாணவ நண்பர். அவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்று அகில இந்திய தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பணிவாய்ப்பைத் தேடிவருபவர். கற்பதிலும் கற்பிப்பதிலும் ஆர்வம் உடையவர். ஒரு நல்ல கல்விச் சூழலுள்ள கல்லூரியைத் தேடிக்கொண்டிருப்பவர். தொடர்ந்து பணிக்கான நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்ட அவர் அனுபவத்தை விவரித்தபோது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. நேர்முகத்தேர்வுக்குச் செல்வதற்குமுன் இன்று புற நகர்ப் பகுதிகளில் முளைத்திருக்கும் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளைப் பற்றி சிறிது பேசியாகவேண்டும். அதாவது தமிழகத்தில் உயர்கல்விகற்க விரும்புபவர்களின் சதவீதம் தேசிய சராசரியைவிட அதிகம் என்பதோடு, நாளுக்கு நாள் எளிய மக்களும் தங்கள் பிள்ளைகளை உயர்கல்விக்கு அனுப்பித்தான் பார்ப்போமே என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அதற்கான சமூக பொருளாதார ஏற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்த சூழலை ஒரு வணிகவாய்ப்பாக புரிந்துகொண்ட திடீர் கல்வித் தந்தைகள், ரியல் எஸ்டேட் காரர்கள், அரசியல்வாதிகளால் பெரும்பாலான கல்லூரிகள், கடந்த 20 ஆண்டுகாலத்தில் அவசரகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவரவர் சமூக (சாதி) மேம்பாட்டுக்காக 50ஆண்டுகளுக்கும் முன் ஆரம்பிக்கப்பட்ட பழம்பெரும் கல்லூரிகளின் நிர்வாகங்களும் கூட இன்றுள்ள வணிக சாத்தியங்களால் மாசுபட்ட சூழல் நிலவுகிறது. அங்கு செயலராகவும் நிர்வாகக் குழுவிலிருப்பவர்களுக்கும் உயர்கல்விக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. அவர்களுக்குத் தோதான ஒரு பலவீனமான நபரை முதல்வராக அமர்த்திவிடுகிறார்கள்.
இப்போது கதைக்கு வருவோம். பேராசிரியக் கனவில்மிதக்கும் நம் மாணவ நண்பர் 7000 ரூபாய் மாத ஊதியத்தில் ஒரு கல்லூரியில் சிலமாதங்கள் இருந்து அங்கிருந்து தப்பித்து 15000 மாத ஊதியத்திற்கு இன்னொரு தனியார் கல்லூரியில் ஒரு பருவம் பணிசெய்திருக்கிறார். அடுத்ததாக குறைந்தபட்சம் 30000 கிடைக்கக்கூடிய கல்லூரிக்காக சில நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். நேர்முகத் தேர்வுகளில் பெரும்பாலும் செயலர் அல்லது நிறுவனர் இருப்பார். முதல்வர் பெயருக்கு அமர்ந்திருப்பார். பாடம் நடத்தச் சொல்லிவிட்டு அதைக் கவனிக்காமல் செல்பேசியை நோண்டிக்கொண்டிருப்பார்கள், குறுக்கே ஏதாவது உரையாடிக் கொள்வார்கள். அந்தரத்தில் நிறுத்தி உடை, முடியலங்காரம் எப்படி இருக்கவேண்டும், ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதுபற்றி ஏதாவது அறிவுரைகள் கொடுக்கப்படும். இறுதியில் ‘எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?’ என்பார்கள். அவர்கள் கொடுக்க உத்தேசித்திருக்கும் ஊதியம் ஒரு மனிதனின் ஒருமாத அடிப்படைத் தேவைகளுக்குப் போதுமானதா? என்பதைப் பற்றிய எந்த கற்பனையும் இல்லாமல் பேரம் பேசுவார்கள். மதுரையில் முனைவர் பட்டம் பெற்று சகல தகுதிகளும் உடைய ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ 25000 கிடைக்கலாம். குறைந்தபட்சமாக ரூ 8000 இருக்கிறது. பெரும்பாலும் பத்திலிருந்து பதினைந்தாயிரமே நடைமுறை. இன்றைய கல்வித்தந்தைகளுக்கு சிறந்த கல்விமான்கள் ஆசிரியர்களாக வேண்டியதில்லை. குறிப்பிட்ட நேரங்களில் வகுப்பறைகளுக்குச் சென்று ஏதாவது செய்து மாணவர்களை சமாளிக்கக் கூடியவர்களாக இருந்தால் போதுமானது. அங்கு எந்த கற்றல் - கற்பித்தல் நடவடிக்கையும் நடந்தாகவேண்டிய தேவையில்லை. ஆகவே அரசு பரிந்துரைக்கும் கல்வித் தகுதிகளோடு ஒரு அப்பாவி தேவை. ஒரு பருவத்திற்கு 2 வினாடி-வினா, 2 கட்டுரைத் தாள்கள், 2 தேர்வுத்தாள்கள் திருத்த வேண்டும். மதிப்பெண்களைப் பதிய வேண்டும். அவர்கள் ஆசிரியப் பணியோடு அலுவலகப் பணிகளையும் செய்தாகவேண்டும். சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகளுக்குச் செல்லவேண்டும். இதற்கிடையே அவர்கள் ஒரு நாளொன்றுக்கு 4வகுப்புகளுக்குச் செல்லவேண்டும். வாரத்திற்கு 18லிருந்து 20 வகுப்புகளைக் கையாளவேண்டும். இதெற்கெல்லாம் சேர்த்து அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் எந்த தர்க்கத்திற்கும் உடன்படாத ஒன்று. இந்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலி ஒரு மணி நேரத்திற்கு ரூ178/= . இதனடிப்படையில் பார்த்தால்கூட நம் பேராசிரியர்களுக்கு ஒரு மாதத்திற்கு 25 நாட்களுக்கு ஊதியமாக 35000 ரூபாய்கள் வழங்கவேண்டும். ஆனால் கல்லூரிகளை நிர்வகிப்பவர்களை கண்காணிக்க இங்கு எந்த செயல்முறையும் இல்லை. பணிப்பாதுகாப்போ, முறையான ஊதிய உயர்வோ மிகச் சொற்பமான நிறுவனங்களாலேயே வழங்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியான ஒரு இனிப்பகத்தின் விளம்பரத்தில் தூய்மைப் பணியாளருக்கு 12000- ஊதியம். ஒரு கொத்தனாருக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ரூ1000 என்பனவற்றைப் பார்க்கும்போது உயர்கல்வி நிலையங்களில் நடக்கும் சுரண்டலை எப்படிக் கையாள்வது? எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் தமிழக உயர்கல்வி சிறக்கவேண்டுமெனில் ஆசிரியர்களின் தரம் உயர்த்தப்படவேண்டும். அரசுக்கும் உயர்கல்வித்துறைக்கும் இதை யெல்லாம் பொருட்படுத்த நேரம் இருக்குமா?