
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை வெற்றிகரமாக எழுதிவிட்டு ஊருக்குள் சுற்றித் திரிந்துகொண்டிருந்தபோது, தற்செயலாக எங்கள் அப்பச்சி மூ.வடிவேல் அவர்கள் நடத்திய ரைஸ்மில்லுக்குப் போனேன். அன்று நெல்லை அரைப்பதற்காகப் பெருங் கூட்டம் கூடியிருந்தது. ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தபோது மிஷின் ஹல்லரில் இருந்து வெளியே கொட்டிய அரிசி நிரம்பிய வாளியை மாற்றுமாறு அப்பச்சி சொன்னவுடன் அப்படியே செய்தேன். அப்புறம் அங்கிருந்து கிளம்ப இயலாமல் மாலைவரை தொடர்ந்து வாளியை மாற்றினேன். சாயங்காலம் கிணற்று நீரில் கைகால்களைக் கழுவிவிட்டுப் புறப்படும்போது என்னை அழைத்த அப்பச்சி, ரூ.2-75/- தந்தார். 1973 ஆம் ஆண்டு அந்தத் தொகை பெரியது. தேநீர் ஓரணா என்ற ஆறு காசுகள் விற்ற காலகட்டம் அது. எனக்கு ஒரே மகிழ்ச்சி. அந்தப் பணத்தை அம்மாவிடம் கொடுத்தேன். மறுநாள் வருமாறு அப்பச்சி சொன்னதைக் கேட்டு, தினமும் ரைஸ்மில் வேலைக்குப் போனேன். மொத்தம் ரூ.140/- பணம் சேர்ந்தது. அன்றைய காலகட்டத்தில் 22 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.224/-. சரி, இருக்கட்டும். தேர்வு முடிவுகள் வெளியானபோது தேர்வடைந்தது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்கப் பெரிதும் ஆர்வமில்லாமல் ரைஸ் மில்லுக்குப் போனேன். ஏன் கல்லூரிக்குப் போக வேண்டும் என்ற கேள்வி மனதில் தோன்றியது.
எழுபதுகளின் தொடக்கத்தில் நகர்ப்புறக் கல்லூரிகளில் சேர்ந்து படித்துப் பட்டம் பெறுவது என்னைப் போன்ற கிராமத்து மாணவர்களுக்கு மாபெரும் சவால். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்,.சி. வகுப்பில் தேர்வடைந்து, கல்லூரியில் பி.யூ.சி என்று குறிப்பிடப்பட்ட புதுமுக வகுப்பில் சேர்ந்து, ஆங்கில வழியில் படித்து, தேர்ச்சியடைவது கடினமான செயல். அன்று மதுரை நகரில் கொடி கட்டிப் பறந்த விக்டரி டூடோரியல் கல்லூரி, ஸ்டூடன்ஸ் டூடோரியல் கல்லூரி போன்ற தோற்றோரைத் தேற்றுகின்ற கல்லூரிகள், இன்றைய தலைமுறையினர் அறியாதவை.
சமயநல்லூர் கிராமத்தில் பள்ளிக் கல்வியை முடித்தபோது எந்தக் கல்லூரியில் சேர்ந்து படிப்பது என்று எனக்குள் குழப்பம். எனது அண்ணன்மார் பி.யூ.சி. படித்த மதுரை, ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் சேர்ந்திட நானும் விழைந்தேன். எங்கள் ஊரான சமயநல்லூருக்கும் மதுரைக்கும் இடையில் எட்டு மைல்கள் தொலைவு எனினும் அன்று மதுரை நகரில் கொடி கட்டிப் பறந்த கல்லூரிகள் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. அண்ணன் காட்டிய வழியம்மா… என்று ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விண்ணப்பம் வாங்கி, பூர்த்தி செய்து கல்லூரி அலுவலகத்திற்கு அஞ்சல்மூலம் அனுப்பினேன். கல்லூரியில் சேர்ந்திட எனக்கு அனுப்பப்பட்டிருந்த அழைப்புக் கடிதத்தைப் பார்த்தவுடன் மனசு உற்சாகத்துடன் தவித்தது. எங்கள் தந்தையாருடன் கல்லூரிக்குச் சென்று முதல்வரைப் பார்த்த பின்னர் அலுவலகத்தில் பணம் செலுத்தியபோது ஏதோ பெரிய சாதனை செய்ததுபோல இருந்தது.
பொதுவாகக் கல்லூரி என்ற பெயரைச் சுற்றி ஏதோவொரு மாய வட்டம் மின்னுகிறது. இளம் தலைமுறையினர் பெரிய அளவில் கவலையற்று உல்லாசமாகக் கூடி மகிழும் இடமாகக் கல்லூரி பற்றிய பிம்பம் பொதுப்புத்தியில் பதிவாகியுள்ளது. ஆசிரியர்களிடமிருந்து அடி, திட்டு வாங்கிய வெறுப்புக்குரிய இடமான பள்ளிக்கூடத்தில் இறுதி ஆண்டில் படித்தபோது, மாணவர்கள் கல்லூரி பற்றிய கனவுகளில் மிதந்தனர். ஒருவிதமான சுதந்திரமான ’லஹரி’ கல்லூரி என்ற பெயரைக் கேட்டபோது எனக்குள் உருவானது. அது ஒரு கனாக் காலம்.
கல்லூரி தொடங்கிடும் நாள் குறித்துக் கடிதம் வந்தவுடன், தகரப் பெட்டியில் உடைகள், தலையணை, சமுக்காளம், போர்வை போன்றவற்றைத் திணித்துக்கொண்டு முதல் நாள் இரவில் கல்லூரி விடுதிக்குத் தந்தையாருடன் போனேன். விடுதி அறிக்கைப் பலகையில் அறை எண்17 இல் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அறைக்குப் போனேன். அந்த அறையில் ஏற்கனவே நான்கு மாணவர்கள் தங்கியிருந்தனர். என் தந்தையார் கிளம்பிப் போனவுடன் ஏதோ திக்கு தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டது போலிருந்தது. பெற்றோர், உடன் பிறந்தோரைப் பிரிந்த நிலை, துயரமளித்தது. எப்படி ஓரு வருடம் அங்கேயே இருப்பது என்ற தவிப்பு ஏற்பட்டது. எப்படியோ தூங்கி விட்டேன். காலையில் எழுந்தபோது விடுதி நாகமலை அடிவாரத்தில் இருந்ததைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. நடந்து செல்லும் தொலைவில் வறண்ட சுக்கான் பாறைகளுடன் விரைத்திருந்த நாகமலை, ஆறுதலாக இருந்தது.
கிராமத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று தேர்ச்சியடைந்த மாணவர்கள் வேட்டி அல்லது பேண்ட் மாட்டிக்கொண்டு கல்லூரிக்குச் சென்றனர். கிராமத்தில் கூரை வேய்ந்த கட்டட வகுப்பறையில் படித்த என்னைக் கல்லூரியில் பரவியிருந்த பெரிய கட்டடங்கள் மிரட்டின. அன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மட்டும் சேர்ந்து பயின்ற கல்லூரியில் ஆசிரியர்களும் ஆண்கள்தான். பேராசிரியர்கள் கோட், சூட், டை, ஷூவுடன் டக்டக்கென நிமிர்ந்த நன்னடையுடன் நடந்து வருவதைப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கும். பேராசிரியர் கட்டாயம் 'கோட்' அணியவேண்டும். விரிவுரையாளர், பயிற்சியாளர் (Tutor) விளக்குநர் (Demonstrator) போன்றவர்கள் 'டை' கட்டி, ஷூ அணிய வேண்டியது அவசியம். ஒருமணி நேரம் வகுப்பறையிலுள்ள மேடையில் கம்பீரமாக அங்குமிங்கும் நடந்தவாறு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் வேடிக்கை பார்த்தோம்.
நான் சேர்ந்திருந்த புதுமுக வகுப்பில் மொத்தம் 80 மாணவர்கள் சேர்ந்திருந்தனர். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு முன்னுரிமை தரப்பட்ட நிலையில் தமிழும் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டன. ஆங்கில அகர வரிசைப்படி எனக்கு 40 என்ற எண் ஒதுக்கப்படிருந்தது. முதல் நாள் முதல் வகுப்பு இப்பவும் நினைவில் உள்ளது. ஏற்கனவே பள்ளியில் ஒன்றாகப் படித்து இப்பொழுது கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர். எனக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. என்ன செய்வது என்று புலப்படாமல் சோர்வுடன் இருந்தேன்.
பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் பேரமைதி நிலவியது. அவர் ஒவ்வொரு மாணவராக எழுந்து நின்று பெயர், வாங்கிய மதிப்பெண்கள், கணக்குப் பாடத்தில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றைச் சொல்லுமாறு ஆங்கிலத்தில் சொன்னார். முதல் பெஞ்சில் இருந்த 01 இலக்கமிட்ட மாணவர் எழுந்து ஆங்கிலத்தில் பதில் அளித்தார். என் இதயத் துடிப்பு அதிகமானது. எப்படி ஆங்கிலத்தில் பேசுவது என்று ஒருவிதமான பயம். எனது முறை வந்தபோது மெல்ல எழுந்து பெயரைச் சொல்லிவிட்டு Three hundred and ninety eight, Maths mark Ninety என்று சொல்வதற்குள் நடுங்கிப் போனேன். ஒரு மொழி, ஒரு இளைஞனை இந்தப் பாடு படுத்துகிறதே என்று நினைத்தேன். எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்று அறிந்தபோது, எப்படி சாத்தியப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டது. எத்தனை திரைப்படங்களில் கல்லூரி மாணவர்கள் என்றாலே உற்சாகமான காட்சிகள், பாடல்கள் என்று அறிந்திருந்த எனக்கு யதார்த்தம், பீதியைக் கிளப்பியது.
வகுப்பறையில் தமிழைத்தவிர பிற பாடங்களை ஆங்கிலத்தில் விரிவுரையாளர்கள் பொழிந்திட, என்னைப் போன்ற கிராமத்து மாணவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தவாறு மௌனமாக உறைந்திருப்போம். எப்பொழுதாவது ஒருசில ஆசிரியர்கள் சில வார்த்தைகள் தமிழில் பேசுவார்கள். சில பேராசிரியர்கள் வாய் தவறியும்கூடத் தமிழில் பேச மாட்டார்கள். ஆங்கிலத்துறையில் பணியாற்றிய அருள்ராஜ் என்ற விரிவுரையாளர், ஒரு நாள்கூடத் தமிழில் பேசி யாரும் கேட்கவில்லை. அவருடைய ஆங்கில உச்சரிப்பு மிகவும் நேர்த்தியாக இருக்கும். வகுப்பறைக்கு வெளியிலும் அவர் மாணவர்களுடன் ஆங்கிலத்தில்தான் உரையாடுவார். அவருடைய தோற்றமும் ஆங்கில உச்சரிப்பும் எனக்கு விநோதமாகத் தோன்றின.
முதல் நாளில் எப்பொழுது வகுப்பு முடியும் மணி அடிக்கும் எனக் காத்திருந்தேன். மாலையில் விடுதி அறைக்குப் போனேன். அறை நண்பர்கள் உள்ளிட்ட பிறரிடம் இயல்பாகப் பேசுவதற்குத் தயக்கமாக இருந்தது. மெஸ்ஸில் வழங்கப்பட்ட உணவு சுவையாக இருந்தது. சில நாட்களில் விடுதி வாழ்க்கை பழக்கமானது. தனிமையில் இருக்கும்போது அம்மாவின் நினைவினால் மனம் துயரமடைந்தது.
தினமும் இரவில் 08-30 முதல் பத்து மணி வரை ஸ்டடி ஹவர்ஸ். அப்பொழுது விடுதி முழுவதும் அமைதி நிலவும். மாணவர்கள் அரட்டையடிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. விடுதியில் தங்கியிருந்த துணை வார்டன்களான சிவலிங்க நாடார், பாஸ்கர் போன்றோர் அவ்வப்போது சுற்றி வந்தனர். மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தால் கண்களை உருட்டி எச்சரிக்கின்ற சிவலிங்க நாடார் சாரைப் பார்த்துப் பெரும்பாலான மாணவர்கள் பயந்தனர். வகுப்பறையில் நிலவிய இறுக்கமும் விடுதி அறையில் நிலவிய கட்டுப்பாடும் வெறுப்பை அளித்தன. வெளியே இருந்து அவதானித்த கல்லூரி பற்றிய பிம்பத்திற்கு மாறான அன்றாட வாழ்க்கை, சிறைக்கூடத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.
வகுப்பறையில் ஒரு மணி நேரம் விரிவுரையாளர், இடைவிடாமல் ஆங்கிலத்தில் நடத்திய பாடங்களைக் கேட்கும்போது பித்துப் பிடித்த மனநிலையில் இருந்தேன். சமயநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புத்திசாலி என்றும் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்றும் பெயர் எடுத்திருந்த என்னுடைய ‘நான்’ நொறுங்கிப் போனது. பள்ளிக்கூடத்தில் தமிழ்மூலம் அறிந்திருந்த கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் இடம் பெற்றிருந்த கலைச்சொற்களை விரிவுரையாளர் ஆங்கிலத்தில் சொல்லியபோது, புரிந்திட சிரமமாக இருந்தது. என்னைப் போன்று கிராமத்து அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த பெரும்பாலானோர் எதிர்கொண்ட பிரச்சினைகள், அளவற்றவை.
கல்லூரிப் பாடத்தில் ஆய்வுக்கூடங்களில் ஏதாவது ஆய்வைச் செய்து பார்த்தல் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் பிப்பெட், பியூரெட், புன்சன் அடுப்பு என்று வேதியியல் பாடத்தில் மனப்பாடம் செய்த கருவிகளை நேரில் பார்த்ததும், டெமான்ஸ்டிரேட்டர் செய்து காட்டிய வழியில் வால்யுமெண்டிரிக் அனாலிசிஸ் சோதனைகள் செய்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள். இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் ஆய்வுகளைச் செய்தபோது என்னை விஞ்ஞானியாக மனதில் உருவகித்துக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அறிவியல் பாடங்களின் தியரியைவிட செய்முறைகள் எளிதாக இருந்தன.
புதுமுக வகுப்புப் படித்த ஓராண்டில் பெரிதும் ஆர்வமில்லாமல் இருந்தேன் என்பதுதான் உண்மை. எப்படி பாடங்களைப் படிப்பது என்று யோசிப்பதற்குள் காலம் காற்றில் பறந்தது. கல்லூரி வளாகத்தில் நூலகம்தான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. வாசிப்பு அறையில் இருந்த பத்திரிகைகளில் பெரும்பாலானவை இதுவரை நான் அறியாதவை. தென்மொழி, தீபம், கணையாழி, யுனெஸ்கோ கூரியர், கலைக்கதிர், போன்ற மாத இதழ்களை உற்சாகத்துடன் வாசித்தேன். ஆங்கில இதழ்களான இல்லஸ்டிரேட் வீக்லி, காரவான், மதர் இந்தியா போன்றவற்றைப் புரட்டிப் பார்த்து மெல்ல வாசிக்கத் தொடங்கினேன். நூலகத்தில் இருந்த புத்தக அடுக்குகள் பிரமிப்பை ஏற்படுத்தின. ஒரு மாணவர் இரு டோக்கன்கள்மூலம் புத்தகங்களை நூலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையின்படி கதைப் புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நூலக அடுக்கில் இருந்த தமிழிலக்கியம் தொடர்பான பல்வேறு புத்தகங்களைப் புரட்டும்போது புதிய விஷயங்கள் புலனாகின. கல்லூரியில் என்.சி.பிஹெச். பதிப்பகத்தினர் நடத்திய புத்தகக் கண்காட்சியில் சோவியத் ரஷியா, மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தை வாங்கினேன். வண்ணப் படங்களால் நிரம்பியிருந்த ’நீச்சல் பயிற்சி’ என்ற குழந்தை நூல் என்று நினைவு.
வார விடுமுறை நாட்களில் நாங்கள் விடுதிக்குப் பின்னர் விரைத்து நின்ற நாகமலை குன்றில் உற்சாகத்துடன் ஏறி இறங்கினோம். மலைக்கு மறுபுறம் இருந்த புல்லூத்துக்குப் போய்க் குளித்துவிட்டுத் திரும்பினோம். கல்லூரிக்கு எதிர் திசையில் இருந்த சமண மலைக்குப் போனபோது அங்கிருந்த பெரிய மரங்களும் அல்லி மலர்கள் பூத்த அழகிய குளமும் சமணர்கள் தங்கியிருந்த குகையும் மகாவீரரின் புடைப்புச் சிற்பமும் சமணப் படுக்கைகளும் தமிழிக் கல்வெட்டுகளும் பிடித்தமானவையாக இருந்தன.
சனிக்கிழமை இரவு ஃப்ரி நைட். அன்றிரவு கட்டாயம் படிக்க வேண்டுமென்ற விதி எதுவுமில்லை. விடுதி மாணவர்களில் பலர் மதுரை நகருக்குப் பயணமாகித் திரைப்படம் காணச் சென்றனர். பலர் கல்லூரியில் இருந்து ஒரு மைல் கல் தொலைவில் இருந்த நாகமலைத் தியேட்டருக்குப் போயினர். அன்றைக்குத் திரையரங்க நுழைவுக் கட்டணம் 24 காசுகள். தரை டிக்கட்தான். எந்தத் திரைப்படம் என்றாலும் தியேட்டருக்குப் போய்ப் பொழுதைச் செலவழித்துவிட்டு வருவோம். வேறு வழி?
விடுதி வாழ்க்கை மெல்லப் பழகத் தொடங்கியவுடன் கேலியும் கிண்டலுமாகப் பொழுது போனது. ஆறாம் வகுப்பு முதலாக விடுதியில் தங்கிப் படித்த சில மாணவர்கள் துணிச்சலுடன் பேசுவார்கள். அப்புறம் பாலியல் விஷயத்தில் எல்லாம் தெரிந்ததுபோலக் கதைப்பதைக் கேட்டுக் கொண்டிருப்பேன். நான் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் பதினெட்டு மாணவிகளுடன் சேர்ந்து படித்தேன் என்று சொன்னவுடன் என்னை அதிர்ஷடக்காரன் என்று வியப்புடன் பார்த்தனர். அதில் என்ன இருக்கிறது? என்று எனக்குத் தோன்றும். பொதுவாக ஆம்பளப் பசங்க மட்டும் படிக்கிற ஆடவர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இளம் பெண்கள் கிளுகிளுப்பானவர்கள். இத்தகைய மாணவர்கள் விடுதியில் நடைபெற்ற பல்வேறு குழறுபடிகளுக்குக் காரணமாக இருந்தனர்.
கல்விச் சுற்றுலா என்ற பெயரில் திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு இரு நாட்கள் சென்ற சுற்றுலாவில் நானும் பங்கேற்றேன். சீனியர் மாணவர்களில் பாட்டும் கூத்தும் என்று உற்சாகமாக இருந்த பேருந்துக்குள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கேரள மண்ணின் இயற்கை எழிலும் வீடுகளின் தோற்றமும் மேலாடை இல்லாத பெண்களின் உடைகளும் கள்ளுக்கடை என்ற பெயர்ப் பலகையும் கையில் குடையுடன் திரிந்த ஆண்களின் சிவந்த தோற்றமும் புதிய உலகை அறிமுகப்படுத்தின. சீனியர்கள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என்பதை அறிந்திட அந்தச் சுற்றுலா எனக்குப் பெரிது உதவியது.
வகுப்பில் சில பேராசிரியர்கள் ”பி.யூ.சி. என்ற இந்த ஒரு வருஷத்தை எப்படியாவது தேர்வடைந்து விடுங்கள். அப்புறம் டிகிரி எளிது” என்று சொல்வது என்னுடைய காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. பள்ளியில் மகிழ்ச்சியுடன் முதல்வனாக இருந்த சூழல் மாறி, எப்படித் தேர்வுகளில் வெற்றியடைவது என்ற கேள்வி இடைவிடாமல் என்னைத் துரத்தியது. வீட்டைவிட்டுப் பிரிந்த சோகம் ஒருபுறமும், ஆங்கில வழிப் பாடம் புரியாத துயரம் இன்னொருபுறமும் என்று தினமும் தவித்துக்கொண்டிருந்த எனக்கு நூலகத்தில் இரவலாகப் பெற்ற நாவல்கள்தான் ஆறுதலாக இருந்தன.
கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தல், விடுதிச் செயலர் தேர்தல் போன்றவற்றில் சீனியர் மாணவர்களின் அடாவடியான செயல்களும் பேச்சுகளும் பிரமிப்பை ஏற்படுத்தின. எப்பொழுதாவது நடைபெற்ற ஸ்டிரைக் என்ற வகுப்பறைப் புறக்கணிப்புப் போராட்டத்தில் சீனியர் மாணவர்களின் பேச்சுகளும் துணிச்சலான செயல்களும் எனக்குள் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தின. வீட்டிலும் பள்ளியிலும் எப்பொழுதும் அதிகாரத்திற்கு அடங்கிப் போவதே நல்ல மாணவனின் இயல்பு என்று போதனையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த எனக்குக் கல்லூரிப் பருவத்தில் சீனியர் மாணவர்களின் செயல்பாடுகள், புதிய திசைவழியைக் காட்டின.
வகுப்பறையிலும் விடுதியிலும் நிறையப் பேருடன் பழகியிருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான் நட்புடன் நெருக்கமாகப் பழகிய நண்பர்கள் யாருமில்லை. அன்றைய இரண்டாங்கெட்டான் பருவத்தில் சக மனிதர்கள், வாழ்க்கை, இருப்பு குறித்துப் பருண்மையான கருத்துகள் எனக்குள் முதிரவில்லை என்பதுதான் உண்மை. அவ்வப்போது மாதத்திற்கு ஒருமுறை வீட்டுக்குப் போனாலும் பிரிவு மனநிலை, எனக்குள் சோகமாக உறைந்திருந்தது. எப்படியாவது தேர்வுகளில் வெற்றியடைய வேண்டுமென்ற நோக்கத்துடன் உருண்டு புரண்டு படித்தது மட்டும் இப்பொழுது நினைவில் உள்ளது. தேர்வுகளில் வெற்றியடைந்து விடுவேன் என்று தோன்றினாலும் மனதில் சின்ன அவநம்பிக்கை.
பல்கலைக் கழகத் தேர்வுகளை எழுதியபிறகு ஒருவிதமான மனநிம்மதியுடன் விடுதியில் இருந்து டிரங் பெட்டியுடன் வீட்டுக்குக் கிளம்பினேன். டிகிரி பட்ட வகுப்பிற்கு மீண்டும் அந்தக் கல்லூரிக்கு வராமல் மதுரை நகரிலுள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கிளம்பினேன். நாகமலைப் பின்புலத்தில் உயர்ந்திருந்த கல்லூரிக் கட்டடங்களையும் பரவலாகச் செழித்திருந்த வேப்பமரங்களையும் பிரிய நேர்ந்ததில் மனதில் சின்ன வருத்தம்.