எதிர்காலத்துக்கான போராளி!

பெருவழிப்பாதை - 29
சுந்தர் ராஜன்
சுந்தர் ராஜன்
Published on: 

வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிரானவர், அந்நிய நாட்டின் கைக்கூலி என்பதில் தொடங்கி அந்தக்கட்சியிடம் பணம் வாங்கிக்கொண்டு இதை எதிர்க்கிறார், இந்தக்கட்சியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்தப் பிரச்னையைக் கிளப்புகிறாரென்றெல்லாம் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவது சுந்தர்ராஜனின் வாடிக்கை.

-யாரிந்த சுந்தர்ராஜன்..?

பூவுலகின் நண்பர்கள் என்னும் அமைப்பைச் சார்ந்தவர்தான் சுந்தர்ராஜன்.

-பூவுலகின் நண்பர்கள் என்னும் அமைப்பு எப்படிப்பட்டது..? அதன் பணிகள் என்ன..?

பூவுலகின் நண்பர்கள் என்னும் அமைப்பு தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் மீட்பு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இயங்கும் அமைப்பாகும்.

-மரம் நடுவது, ஆறு மலைகளில் குப்பைகளை அகற்றுவது இதெல்லாந்தானே சுற்றுச்சூழல் பணி.. இதையெல்லாம் செய்யறதுக்கா அந்நியநாட்டுக் கைக்கூலின்னு பட்டம் கட்டுவாங்க..?

மரம் நடறது, காடு மலைகள்ல்ல நம்மாளுக குடிச்சிட்டு வீசிட்டுப்போன பாட்டல் பொறுக்கறதெல்லாம் நல்ல விஷயந்தான், இதனால அரசாங்கத்துக்கு எந்தக்கஷ்டமும் இல்ல, நஷ்டமும் இல்ல.. இதெல்லாம் செய்யறவங்களுக்கு விருதுகள் கூடக் கொடுப்பாங்க... ஆனால் பூவுலகின் நண்பர்களும், சுந்தர்ராஜனும் மரம் நடுவது, குப்பைகளை அகற்றுவது போன்ற வேலைகளைச் செய்வதில்லை. அணு மின்நிலையங்கள், அனல்மின்நிலையங்கள், பெரும்பெரும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு எதிராகக் குரல்கொடுக்கிறார், போராடுகிறார், இவ்வாறான நிறுவன எதிர்ப்பே அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பதற்றம் கொள்ளச்செய்கின்றன.. எனவே அவர்கள் சுந்தர்ராஜன் போன்ற போராளிகள்மீது குணக்கொலை என்னும் ஆயுதத்தை ஏவுகிறார்கள்

தொழிற்சாலைகளும், தொழிற்பேட்டைகளும் அணுமின்நிலையங்களும் வளர்ச்சித் திட்டங்கள் என்றால் அந்த வளர்ச்சி யாருக்கானது என்று கேட்கிறார் சுந்தர்ராஜன்... இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதில்லை, விலங்குகளுக்கும், இயற்கைக்கும் சொந்தமானது என்பது சுந்தர்ராஜன் வலியுறுத்தும் கருத்து. அந்த இயற்கையோடும் உயிரினங்களோடு இணைந்து வாழும் பொறுப்பு மனிதர்களுக்கு இருக்கிறது.

ஆனால் நவீன வளர்ச்சியின் பெயரால் மனிதன் தன் தேவைக்கேற்ப இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறான். இதை வளர்ச்சியின் தவிர்க்கவியலாத விளைவுகள் என்று சமாதானமடையமுடியுமா..?

ஒரு நாட்டின் வளர்ச்சியை எதைக்கொண்டு அளவிடுவது? வானுயர்ந்த கட்டடங்களையா, அகலமான சாலைகளையா..? அதிகரித்துக்கொண்டே போகும் மின்சார உற்பத்தியையா...? அப்படியானால் இந்த வளர்ச்சிகளுக்காக அழிக்கப்படும் இயற்கைக்கும், வாழ்வாதாரத்தை இழக்கும் மக்களுக்கும் என்ன பதில்? வளர்ச்சி என்ற பெயரால் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், இயற்கையையும் பலிகொடுக்கலாமா என்பதுதான் சுந்தர்ராஜன் தொடர்ந்து முன்வைக்கும் கேள்வி.

சுற்றுச்சுழலைப் பாதுகாப்பது என்பது இயற்கை வளத்தைப் பாதுகாப்பது மட்டுமன்று. அதனைச்சார்ந்து வாழும் மனிதர்களையும், விலங்கு, பறவையினங்களையும் காப்பதுமாகும், இவற்றையெல்லாம் தனித்தனியாகப் பார்க்காமல் ஒன்றோடொன்று தொடர்புடைய சமூகப்பிரச்னையாகப் பார்க்கவேண்டுமென்பதுதான் சுந்தர்ராஜன் இயங்கும்தளமாகும். சுற்றுச்சூழல் என்பது சேவைத்திட்டமல்ல, அரசியல் இயக்கம் என்பதாலேயே கார்ப்பரேட் முதலாளிகளால் இயங்கும் அரசாங்கங்கள் சுந்தர்ராஜன் போன்றவர்களை எதிரியாகப் பார்க்கின்றன.

இவர் தற்போது கவனப்படுத்தும் முக்கியமான விஷயம் காலநிலை மாற்றம்.. சில ஆண்டுகளுக்கு முன்புவரை காலநிலை மாற்றம் என்பது பொதுமக்களுக்குச் சற்றுத் தொலைவான விஷயமாக இருந்தது. பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்ற செய்திகள் வந்தாலும், அவற்றுக்கும் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதைப் பலரும் உணரவில்லை.கோடைக்கால வெப்பம் அதிகரிக்கிறது. பருவமழையின் தன்மை மாறுகிறது. சில பகுதிகளில் கடுமையான மழையும் வெள்ளமும் ஏற்படுகின்றன. வேறு சில பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் காலநிலை மாற்றம் முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. நிலப் பயன்பாடு, நீர்நிலை ஆக்கிரமிப்பு, நகரமைப்பு போன்ற உள்ளூர்க் காரணிகளையும் ஆராய வேண்டும்.

காலநிலை மாற்றம் என்பது வெறும் வெப்பநிலை அதிகரிப்பைப் பற்றிய பிரச்னை மட்டுமல்ல. அது உணவுப் பாதுகாப்பைப் பற்றியது. குடிநீரைப் பற்றியது. விவசாயத்தைப் பற்றியது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியது. எல்லாவற்றையும்விட, எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையைப் பற்றியது.

ஒரு மரத்தை வெட்டுவதற்குமுன் அது எத்தனை ஆண்டுகளாக வளர்ந்திருக்கிறது என்று யோசிக்க வேண்டும்.

ஓர் ஏரியை மூடுவதற்குமுன் அந்த ஏரி எத்தனை தலைமுறைகளுக்குத் தண்ணீர் கொடுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஒரு மலையை உடைப்பதற்குமுன் அந்த மலையை நம்பி எத்தனை உயிரினங்கள் வாழ்கின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்குமுன் அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை முழுமையாக ஆராய வேண்டும்.

இத்தகைய சிந்தனைகளைச் சமூகத்தில் வளர்ப்பதற்காகவே சுற்றுச்சூழல் இயக்கங்கள் செயல்படுகின்றன. அந்த இயக்கங்களின் குரல்களில் ஒன்றாகச் சுந்தர்ராஜன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அவர்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் ஒவ்வொருவரின் உரிமை.

ஆனால், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் பொதுநல அக்கறையைப் புரிந்துகொள்வது அவசியம்.

அவருடைய குரல் ஒரு தனிமனிதரின் குரலாக மட்டும் நின்றுவிடவில்லை.இயற்கையின் பாதுகாப்பு குறித்துப் பொதுச்சமூகத்தைச் சிந்திக்க அழைக்கும் குரலாகவும் ஒலிக்கிறது.ஏனெனில் பூமியைக் காப்பது என்பது வெறும் சுற்றுச்சூழல் பணி அல்ல.

அது மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் காக்கும் பொறுப்பு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram