1300 உடல்களுக்கு இறுதி மரியாதை!

பெருவழிப்பாதை - 19
1300 உடல்களுக்கு இறுதி மரியாதை!
Published on

ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் பொதுவான ஆதங்கம், செத்தபிறகு தூக்கிப்புதைக்க ஆளில்லாத அநாதையாகப் போய்விடக்கூடாது, அதற்காவது நாலு பேரைச் சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான்.

இத்தனை கோடிப்பேர் உள்ள உலகில் அநாதையாகச் செத்துப் போவது துயரமானது, அமீரக நாடுகளுக்கு இங்கிருந்து பிழைப்பிற்காக கூலிவேலைக்குப் போனவர்கள் ஏராளம், இப்படிச் செல்பவர்களில் அகால மரணமடைந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வழிமுறைகளோ, வசதியோ இல்லாதவர்கள் நாடுவது கெளசர் பெய்க் அவர்களைத்தான்.

கெளசர் பெய்க் நம் சென்னைக்காரர். திருவல்லிக்கேணியில் பிறந்தவர். அம்மா வகையில் அமீர் மகால் குடும்பத்தின் உறவினர். தற்போது துபாயில் கழிவுமேலாண்மை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இதுவரைக்கும் இவர் ஏறத்தாழ 1300 உடல்களை உரிய முறைப்படி இறுதி மரியாதை செய்து வழியனுப்ப உதவியிருக்கிறார்.இறந்து அடையாளம் தெரியாதவர்கள் இந்தியரென்று அடையாளம் காணப்பட்டால் அந்த் அந்நாட்டுக் காவல்துறை நாடுவது கவுசரைத்தான், இறந்தவரின் உறவினர்களை தேடிக்கண்டுபிடித்து, தகவல் சொல்லி, தூதரக நடைமுறைகளை முடித்து,நண்பர்கள் உதவியுடன் அதற்கான செலவுகளை ஏற்று ஊருக்கு அனுப்பிவைப்பது வரை கடமையாகக் கருதிச் செய்கிறார்.

இறந்து நாள்பட்ட உடல்களை உறவினர்கள் அங்கேயே அடக்கம் செய்யச்சொல்வதும் நடப்பதுண்டு, அப்படியான நேரங்களில் நேரடியான ஒளிபரப்பில் அவர்கள் சொல்வதுபோல இறுதிச்சடங்குகளைச் செய்து இறந்தவருக்கு இறுதி மரியாதை செய்து அனுப்பி வைப்பது கெளசரின் வழக்கம். அந்த வகையில் இஸ்லாமியரான கெளசர் பல இந்துக்களுக்கு, குடமுடைத்துக் கொள்ளி வைத்திருக்கிறார்.

 ‘சில நேரங்களில் நாட்டைவிட்டு வந்து நீண்ட நாட்கள் தொடர்பில் வராதவர்களைப்பற்றி அவரது உறவினர்கள் மூலமாகத் தகவல் வந்து சேரும். அப்படிப்பட்டவர்கள் பற்றிய விவரமறிய பலவழிகளில் முயற்சி செய்வோம். மார்ச்சுவரிகளில் அடையாளம் தெரியாத சடலங்களாகவும் அவ்வாறு தேடப்படுபவர்களைக் காண்பதுண்டு. குறைந்தபட்சம் அவர்களின் உடலையாவது சொந்த ஊருக்கு அனுப்பவோ, அல்லது இங்கேயே இறுதிச்சடங்குகள் செய்தோ ஒரு மனிதனின் வாழ்க்கையை நிறைவு செய்வோம்,’ என்கிறார்.

எங்கிருந்து தொடங்கியது இந்தப் பணி..?

 ‘2012 – என் முகநூல் நண்பர்கள் இளங்கோவன் கீதா, கலாராணி ஆகியோர் சமூகவலைதலத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தனர், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயராஜ் என்பவர் துபாயில் தச்சுத்தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார், அவர் ஒரு விபத்தில் அடிபட்டு கோமா நிலையில் இருப்பதாகவும், அவரை ஊருக்குக் கொண்டுவர அவரது குடும்பத்தாருக்கு வசதியில்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

அவரைத் தேடிக்கண்டுபிடித்து அரசுரீதியான சம்பிரதாயங்களை முடித்து, பணமும் திரட்டி அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துவிட்டேன், ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார், நோயாளியாக ஒருவரை அனுப்புவதற்கான சம்பிரதாயங்கள் வேறு, சடலமாக அனுப்புவதற்கான சம்பிரதாயங்கள் வேறு என்பதால் திரும்பவும் முதலிலிருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டியிருந்தது, இறந்துபோனவரின் மகனுக்கு +2 தேர்வு இருந்ததால் இந்தச் செய்தியால் அவர் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடக்கூடாது என்று கருதினேன்.

அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடிப்பதற்குள் அந்தத் தம்பி தேர்வெழுதி முடித்திருந்தார். அப்போது இங்குள்ள நடைமுறைகள் எனக்குத் தெரியாதென்பதால் ஏறத்தாழ பதினைந்து நாட்கள் நான் இதற்காக அலையவேண்டியிருந்தது. அதன்பிறகு நானே ஜேசுதாசின் சடலத்தை எடுத்துக்கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டு வந்தேன்... இப்படியாகத்தான் இந்தப் பணி் தொடங்கியது,’ என்கிறார் கெளசர்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இப்படி அனுப்பி வைத்திருக்கிறார், இலங்கை, பாகிஸ்தான், அண்மையில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

இதில் நீங்கள் சந்திக்கும் சிக்கல் எதாவது இருக்கிறதா..?

இங்குள்ள அரசு சார்ந்த ஏற்பாடுகளைச் செய்வதிலோ, பணம் திரட்டுவதிலோகூடப் பிரச்னை எதுவுமில்லை... இங்கிருக்கும் ஒருவரது வீட்டிற்கு அழைத்து சம்பந்தப்பட்டவர் விபத்து அல்லது தற்கொலை காரணமாக இறந்துவிட்டார் என்பதைத் தெரிவித்தவுடன் நீங்கள் யார் என்று கேட்பார்கள். எனக்கு அவரோடு நேரடி தொடர்பில்லை என்று சொன்னால், அதை நம்ப மாட்டார்கள். அவரது மரணத்திற்கு ஏதோ ஒரு வகையில் நான்தான் காரணமென்று நம்பி என்னை விசாரணை செய்வார்கள்.

மும்பையில் சீதா கேம்ப் என்னும் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர் இங்கு ஒரு விபத்தில் இறந்துவிட்டார், அவரது உடலை நானே கொண்டு சென்றேன். அங்கிருந்தவர்கள் நான்தான் விபத்தை உண்டாக்கியவன், அந்தக் குற்ற உணர்ச்சியில்தான் உடலை ஒப்படைக்க வந்திருக்கிறேன் என என்னைச் சூழ்ந்துகொண்டு தாக்கத்தயாரானார்கள். சலீமின் தாயாரும், சகோதரரும் நிலைமையைப் புரிந்துகொண்டு காப்பாற்றி அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு இவ்வாறு செல்லும்போது அந்தப் பகுதியின் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, அவர்களின் உதவியைப் பெற்றபிறகே செல்கிறோம்.

இங்கேயே சிலருக்கு இறுதிச் சடங்கு செய்யும்போது நீ எப்படி எங்கள் சடங்குகளைச் செய்யலாம் என்று இந்துக்களும், நீ எப்படி அந்தச் சடங்கைச் செய்யலாம் என்று இஸ்லாமியர்களும் ஆட்சேபம் தெரிவிப்பதும் நடந்திருக்கிறது. அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை,’ என்கிறார்.

சடலங்களை அனுப்பி வைப்பது மட்டுமே கெளசர் செய்யும் சேவையில்லை, ஏஜண்ட்டால் ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்களை மீட்டு அனுப்பி வைப்பது, விசா முடிந்து அவதிப்படுபவர்கள் என யார்யாருக்கெல்லாம் எந்த வகையில் உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் உரிய உதவிகளைச் செய்கிறார், தனியொரு மனிதனாக இவரது சேவைகளைப் பார்த்த அதில் இணைய விரும்பிய  நல்லெண்ணம் கொண்ட நண்பர்களைக் கொண்டு HOPE என்னும் வாட்சப் குழுவை உருவாக்கி இத்தகைய சேவைகளைச் செய்கிறார்கள். 2023 முதல் செயல்பட ஆரம்பித்த இந்தக்குழு துபாய், குவைத், சவூதி, கத்தார் ஆகிய நாடுகளில் இயங்குகின்றனர். தாய்லாந்து வழியாக பர்மா சென்று விசாப்பிரச்னையில் சிக்கித்தவித்த ஐம்பது தமிழர்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

பல சிக்கல்களையும் தாண்டி, உணவின்றித் தவிக்கும் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கும் உணவு உடைகளை அவ்வப்போது அனுப்பி வைக்கிறார் கெளசர்.  ‘இது எப்போது வேண்டுமானாலும் எனக்கு பெரிய பிரச்னையை உண்டாக்கக்கூடும், ஆனால் மனசு பொறுக்காமல் இதைச் செய்கிறேன்.

இந்த உலகத்தவிட்டு போறப்ப, நாம சேத்துவெச்ச எந்தச் செல்வமும் கூடவரப்போறதில்லைங்க, கொஞ்சம் புண்ணியத்தைத் தவிர,’ முடிக்கிறார் கௌசர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com