போஜன குதூகலம்!

போஜன குதூகலம்!

சிறிது காலத்துக்கு முன்பு சென்னையிலிருந்து குமரி ஈறாக பல ஊர்களுக்குத் தனிப்பட்ட பிரயாணம் ஒன்று செய்ய வேண்டியிருந்தது.அப்போது பல்வேறு உணவு விடுதிகளில் சாப்பிடவும் வேண்டியிருந்தது.அவ்வாறு சாப்பிட்டுக்கொண்டே பிரயாணிக்கையில் உணவு விடுதிகள் குறிப்பாக சைவ உணவு விடுதிகளில் தமிழகமெங்கும் ஒரு சில காய்கறிகளே வெஞ்சனங்களாக பயன்படுத்தப்படுகின்றன என்று கவனித்தேன்.வெஞ்சனம் என்றால் சமைத்த கறியுணவு. பொதுவாக பதார்த்தத்துக்கு துணை உணவாக தொடு கறியாக வருவது. அவியல்,பொரியல்,கூட்டு முதலியவை. நான் தமிழகமெங்கும் சில காய்கறிகளே எல்லா உணவு விடுதிகளிலும் துணை கறிகளாக வருகின்றன என்று கவனித்தேன்.அவையாவன; பீட் ரூட், கேரட், உருளைக் கிழங்கு. முட்டைக் கோஸ், சவ் சவ், முள்ளங்கி போன்றவை மிக அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன.

இவை எவையுமே நமது நாட்டுக் காய்கறிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பெரும்பாலும் கிழங்கு வகைகள். மேலை நாடுகளின் குளிர்ந்த வெப்ப நிலையினால் தரைமேல் எதுவும் வளர முடியாமல் நிலத்தினடியில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள்.குறிப்பாக முட்டைக்கோஸும் உருளைக்கிழங்கும் ஏழைகளின் உணவாகக் கருதப்பட்டன. சார்லஸ் டிக்கன்சின் கதைகள் இங்கிலாந்தில் அனாதைச்  சிறுவர்களுக்குக் காப்பகங்களில் நீர்த்த முட்டைக்கோஸ் ஜூஸ் மட்டுமே கொடுக்கப்பட்டன என்கிற தகவலைத் தெரிவிக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைக்கிழங்குப் பஞ்சத்தினால் லட்சக் கணக்கான ஐரிஷ் மக்கள் உயிரிழந்தனர். இடம் பெயர்ந்தனர்.உருளைக் கிழங்கை ஒரு பூஞ்சைத் தாக்கியதால் இந்தப் பஞ்சம் ஏற்பட்டது. உள் நாட்டில் இவ்வாறு நிகழ்ந்துகொண்டிருந்தும் அயர்லாந்தை ஆக்கிரமித்துக் கொண்டு ஆண்டுகொண்டிருந்த இங்கிலாந்து அதை தொடர்ந்து ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. இதனால் அயர்லாந்து மக்கள் கிளர்ச்சி செய்தனர். நாளடைவில் அது மிகப்பெரிய ஆயுதக் கிளர்ச்சியாக மாறியது. (இங்கிலாந்து இந்தியாவிலும் இதே கொடூரத்தைச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வங்காளத்தில் பஞ்சத்தினால் லட்சக்கணக்கில் மக்கள் செத்துக் கொண்டிருந்தபோது அது டன் கணக்கில் கோதுமையை தனது நாட்டுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது.இது பிரிட்டிஷார் உருவாக்கிய செயற்கைப் பஞ்சம் என்று சசி தரூர் தனது The inglorious empire என்ற புத்தகத்தில்

சொல்கிறார். சில சரித்திர ஆய்வாளர்கள் இது சரித்திரத்தில் மறைக்கப்பட்ட ஒரு இன அழித்தொழிப்பு என்றுகூட சொல்கிறார்கள்.)

இப்படிப்பட்ட பீட் ரூட்டும் முட்டைக் கோசும் உருளைக் கிழங்கும் இப்போது இந்திய உணவகங்களில் பஞ்சமின்றி கிடைக்கின்றன.உண்மையில் இவை தவிர வேறு எதுவுமே கண்ணில் படுவது அரிதாக இருக்கிறது.தேரையரின் பதார்த்த குண சிந்தாமணி நூல் நூற்றுக்கணக்கான காய்கறிகள் பதார்த்தங்கள் அவற்றின் குண நலன்கள், சேட்டைகள் பற்றி விவரிக்கிறது.அவை எல்லாம் எங்கே போயின? சில சமயம் கத்திரிக்காய், வெண்டைக்காய், முற்றின முருங்கைக் காய் போன்றவை நமது குழம்புகளில் தென்படுகின்றன என்பது உண்மைதான்.அதற்கு நீங்கள் பரிசாரகர்களிடம் இணக்கமாக இருக்க வேண்டும். சமீப காலமாக கோவைக்காயைப் பொரியலாகப் பயன்படுத்தும் வழக்கம் தோன்றியிருக்கிறது. விலை மலிவாகக் கிடைக்கிறது போல. பதார்த்த குண சிந்தாமணி போன்ற பழைய நூல்களில் தேடிப்பார்த்துவிட்டேன். கோவைப் பழத்தை பெண்களின் உதடுகளாக மயங்கி சாப்பிட்டிருக்கிறார்களே தவிர கோவைக்காயைப் பொறித்து பொரியலாகச் சாப்பிட்ட சரித்திரச் சுவடுகளைக் காணமுடியவில்லை. ஏனிப்படி கனியிருக்கக் காய் கவர்கிறார்கள் தெரியவில்லை.

இளவயதில் எப்போதாவது அப்பா ‘இங்கிலீஷ் காய்கறி.இதைச் சாப்பிட்டால் இரத்தம் ஊறும்.இதைச் சாப்பிட்டுச் சாப்பிட்டுதான் இங்கிலீஷ் காரன் செவேலென்று இருக்கிறான்‘என்ற அடைப்ப-மொழியுடன் பீட் ரூட்டை வாங்கி வருவதுண்டு. அதனால் எவ்வளவு சமைத்தாலும் மண்வாசனை அடிக்கும் அதை நாங்கள் ஒரு சாப்பிடும் ஃபேர் அண்ட் லவ்லியாகக் கருதி முழுங்குவதுண்டு.ஆனால் இப்போதெல்லாம் ரத்தம் ஊறுகிறதோ இல்லையோ ஹோட்டலில் பீட் ரூட்டைப் பார்த்தாலே என் ரத்தம் கொதிக்கிறது.

ஜூன், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com