இளையராஜா
இளையராஜா

பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜாவின் இசை!

திசையாற்றுப்படை – 16

மதுரையில் ‘பிரேம விலாஸ்’ பிரபலமான அல்வா கடை. மாலை நேரத்தில் சூடான அல்வா காய்ந்த இலையில் வைத்துக் கொடுப்பார்கள். நின்று கொண்டே சாப்பிட்டு முடித்தவுடன் நீங்கள் விரும்பினால் ஒரு கைப்பிடி அளவு காரமான மிக்சர் இலவசமாக கிடைக்கும்.

பிரேம விலாஸ் அல்வாவைத் தொடர்ந்து வரும் மிக்சர் போலத்தான் எனக்கு இளையராஜா பாடல்களில் பாடல் வரிகள். எனக்கு மட்டுமல்ல. எண்ணற்ற எளிய இசை ரசிகர்களுக்கும்.  மிக்சர் சாப்பிடுவதற்காக நான் ஒன்றும் பிரேமவிலாஸ் போகவில்லை. எனக்கு அல்வாவே பிரதானம். குறிப்பாக ராஜாவின் பாடல்களில் இசை என்பது பாடல் வரிகளைக் கடந்தது மட்டுமல்ல. அது இடம்பெறுகின்ற படங்களையும் கடந்து செல்லக்கூடியது. இதில் இரண்டு தரப்புகள் இருக்கின்றன. இரண்டு தரப்புகள் என்றுகூடச் சொல்ல முடியாது.  ஒன்று பெரும் எண்ணிக்கையிலான எளிமையான இசை ரசிகர்கள். இன்னொரு பக்கம் ஒரு குறுங்குழுவான கவிஞர்களை உள்ளடக்கிய இலக்கியவாதிகள். இங்கு சாமான்ய இசை ரசிகர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இலக்கியவாதிகள் அதாவது எழுத்தாளர்கள், கவிஞர்களே பாடலுக்குள் கவிதையைத் தேடுபவர்கள்.

நூற்றாண்டுத் தமிழ்த் திரையிசையை எடுத்துக்கொண்டால் அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு கனபரிமாணங்களைக் கொண்டதாக இயங்கியிருக்கிறது. தமிழ்த் திரையிசையில் மூன்று காலகட்டங்கள் உண்டு. முழுவதும் குரலிசை முக்கியத்துவம் பெற்று ஒலித்தகாலம். நாடகப் பாடல்கள், கீர்த்தனைகள் பக்க வாத்தியங்களின் துணையோடு இசைத்த காலம். பக்கவாத்தியம் எனும்போது பாடகரின் குரலோடு சேர்ந்து ஒலிக்கும் புல்லாங்குழல் அல்லது வயலின். தாளமாக மிருதங்கம் அல்லது தபலா. இடையிசையாக வயலின், கிளார்னட் போன்ற கருவிகள். அவ்வளவுதான்.  எம்.கே.டி., பி.யூ. சின்னப்பா காலம். நாடகங்களில் உச்ச ஸ்தாயில் அமைந்த பாடல்களாக அவை இருந்தன. வெகுசன இசை (popular music) என்றொரு வகைமை உருவான காலம். வெகுசன ஊடகங்களான சினிமா, வானொலி போன்றவற்றால் விநியோகிக்கப்பட்ட அந்த இசை என்பது ஒருவகையில் மக்கள்மேல் திணிக்கப்பட்டதுதான்.  சொந்தமாக கிராமபோன்கள் வைத்திருந்த மேல்தட்டு மனிதர்கள் வேண்டுமானால் இறக்குமதி செய்யப்பட்ட இசைத்தட்டுகள் மூலம் பிற இசை வகைகளை கேட்கும் வாய்ப்புப் பெற்றிருக்கக் கூடும். ஆனால் சாமான்யர்களுக்கு வழங்கப்பட்ட ஒரே இசை (நாட்டுப்புற இசை தவிர்த்து) சினிமாப் பாடல்களே. அதிலும் திரையில் நடிகர்கள் தோன்றுவதும் அவர்கள் பாடுவதுமே ஒரு அதிசயமாக இருந்த நாட்களில் திரைப்பாடல்கள் எப்படி ரசிகர்களால் உள்வாங்கப் பட்டிருக்கும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

முதல் காலகட்டத்தில் கர்நாடக சங்கீதமும் அதற்குப்பின் ஏறத்தாழ அதே ராகங்களை முன்னிறுத்திய செமி கிளாசிக்கல் வகை பாடல்களாக இருந்தன. அவையும்  ஒற்றை இழையுள்ள  (single layer) பாடல்கள். அதில் பாடலுக்குப் பக்கவாத்தியங்கள் மட்டுமே உண்டு. இசைச் சோடனை (arrangement) என்பது கிடையாது. இரண்டாம் கட்டத்தில் மெல்லிசை மரபு ஆரம்பிக்கிறது. கர்நாடக ராக அடிப்படைகளை விலக்கி கலந்திசையான (fusion) மெட்டுகள் உலவத்தொடங்குகின்றன. அதைத் தொடங்கி வைத்தவர் யாரென்று துல்லியமாகக் குறிப்பிடமுடியாவிட்டாலும், ஜி. ராமநாதனை அதன் தொடக்கமாகவும் அதன் உச்சமாக எம்.எஸ்.வி. யையும் குறிப்பிடலாம். இந்த மெல்லிசை மரபில்தான் பக்கவாத்தியம் ‘பக்கா’ வாத்தியமாக மாறுகிறது. கிதாரில் கார்ட்ஸ், பேஸ் கிதார்  (Chords, bass) பயன்படுத்துவது, பாடகரின் குரலுக்கு ஒத்திசையும் இரண்டாவது இழையாக வயலின்களைப் (group violins) பயன்படுத்துவது ஆகிய முறைகள் பயன்பாட்டுக்கு வருகின்றன. இப்போது சோர்வூட்டும் கர்நாடக பாணி ஒற்றை இழை இசைக்கு மாற்றாக மேற்கத்திய பாணியிலான இசைச் சோடனை (arrangment) பாடலின் உணர்வையும் அழகியலையும் வேறொரு தளத்திற்குக் கொண்டுசெல்கிறது. இந்தக் காலத்தில்தான் திரையிசை ஒரு கலாபூர்வமான வடிவத்திற்கு வருகிறது. அதே நேரத்தில் ஒரு வகையான தரப்படுத்தலுக்கும் (standardise) உள்ளாகிறது. குறிப்பாக பாடல் வரிகளும் இசையும் சமமாக மதிக்கப்பட்ட, மதிக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்குள்ளான காலம். கண்ணதாசன் இசையமைப்பாளருக்கு சமமான இருக்கையில் அமர்ந்துகொள்கிறார். சில நேரங்களில் இசையமைப்பாளர்களுக்கு சற்று உயரத்திலும். இசையமைப்பாளர்கள் கண்ணதாசனுக்காகக் காத்திருந்த காலம்.

மூன்றாவது கால கட்டத்தில் ராஜா வருகிறார். இவர்காலத்தில் ஒலிப்பதிவுத் தொழில் நுட்பங்களில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. சிந்தசைசர் (synthesiser)போன்ற சாதனங்கள் புழக்கத்திற்கு வரத் தொடங்குகின்றன. ராஜா காலத்திற்கு முன் இசையமைப்பாளர்கள் அடிப்படையான மெட்டை உருவாக்குவார்கள். அல்லது ஏற்கெனவே எழுதப்பட்ட பாடலுக்கான மெட்டை உருவாக்குவார்கள்.  தொடக்க இசை(prelude), இடையிசை (interlude) ஆகியவை படிப்படியாக இம்ப்ரவைஸ் (improvise) செய்யப்படும். அதில் இசை உதவியாளர்கள், பிற இசைக்கலைஞர்களின் பங்கும் கணிசமாக இருக்கும். ஆனால் இளையராஜா அடிப்படை மெட்டு, கார்ட்ஸ்(chords), பேஸ் லைன்(bass line), ஊடும் பாவுமாக பல்வேறு இழைகளாகப் பாய்ந்து மீளும் இசைக் கோலங்கள் , தாளக்கட்டுகள் அனைத்தையும் மொத்தமாக, தீர்மானமாக எழுதிக்கொடுத்துவிடுபவராக இருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் ‘முழுமையான இசையமைப்பாளராக’(complete composer) ராஜா இருக்கிறார். இந்திய அளவிலும் ராஜாவின் இடத்தை யாரும் தொட்டிருக்கவில்லை. இப்போது நாம் ‘பொன்மாலைப் பொழுது, பூங்கதவே தாழ்திறவாய், ஜெர்மனியின் செந்தேன் நிலவே, என் இனிய பொன் நிலாவே, ஆனந்த ராகம்’ இப்படி எந்தப் பாடலையும் எடுத்துக்கொள்ளலாம். ராஜாவின் தொடக்க, இடை இசைகளைப் போல், அந்த ஒலியமைப்பை, சோடனையை, ஒன்றன் பின் ஒன்றாக பாய்ந்து தழுவும் இசைக் கோர்வைகளை இந்தியத் திரையிசையில் எங்காவது கேட்டதுண்டா? இங்கு இளையராஜா தொடங்கி வைத்த புதிய சகாப்தத்தில் ரசிகர்கள் ராஜாவின் இசைப் பேரலையில் மூழ்கி மூச்சுத்திணறத் தொடங்கினர். ‘ஏதோ மோகம்… ஏதோ பாவம்’ எனும் பாடலில் பாடலுக்குப்பின் நடக்கும் குரல்களின் மாயத்தில் வரிகளைத் தேடுபவர்கள் யாராக இருக்க முடியும்?

தனிப்பட்ட முறையில் நான் அன்னக்கிளி தொடங்கி 20 ஆண்டுகாலம் இளையராஜாவின் இசையில் மூழ்கிக் கிடந்திருக்கிறேன். எப்போதும் எனக்குள் பாடல் வரிகள் நுழைந்ததேயில்லை. பல நேரங்களில் நண்பர்கள் சில பாடல் வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது ( களங்கம் வந்தாலென்ன கூறு / அதுக்கும் நிலான்னுதான் பேரு / அட மந்தையில நின்னாலும் / வீரபாண்டித் தேரு) ஆமால்ல… என்று தோன்றும். கவித்துவமான வார்த்தைகள் ஒரு பாடலை மேலும் அழகாக்கக் கூடும். கேசரியில் முந்திரி நிரடுவதைப் போல. முந்திரி இல்லையென்பதற்காக கேசரியை நிராகரிக்க முடியுமா என்ன. நான் அடிப்படையில் இலக்கிய மாணவன். இலக்கியத்தைக் கற்றுக் கொடுப்பவனும் கூட. பிச்சமூர்த்தி தொடங்கி கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், தேவதேவன், தேவதச்சன், வெயில், இசை என்று சமகால கவிதைகள் வரை வாசித்துக்கொண்டுமிருப்பவன். ஆனால் நான் ஒருபோதும் திரைப்பாடல்களில் கவிதைகளைத் தேடுவதில்லை. கருத்துக்களையும் தான். ஏனெனில் ராஜாவின் பாடல்கள் அதனவில் கருத்துக்களையும் உள்ளடக்கியவைதான். ராஜாவின் பாடல்கள் என்று சொல்வதுகூட பிழைதான். ராஜாவின் இசை என்றுதான் சொல்ல வேண்டும்.  இசை வார்த்தைகளின் துணையின்றி இசையாகவே அது சொல்லவேண்டியதைச் சொல்லாவிடில் அது என்ன இசை? இசையை ஒரு தனித்த மொழியாக பின் ஏன் அடையாளப் படுத்துகிறோம்? ராஜாவின் இசையை ரசிகர்கள் சரியாகவே புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். அதனாலேயே படங்களின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அந்தப் பாடல்களைத் தனிப் பிரதியாக வாசிக்கத் தொடங்கினார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். ‘பூவே செம்பூவே’ என்றொரு பாடல் எந்தப் படம் என்று பெரும்பாலோருக்குத் தெரியாது.

வார்த்தைகளும் மனம்கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால் ராஜாவின் ரசிகர்களுக்கு என்றும் அது விருப்பமான பாடல். மிகக் கொடூரமாகப் படமாக்கப்பட்ட பாடலும்கூட. ராஜாவின் இசைக்குள்ளிருக்கும் காட்சிப் படிமங்களைக் கண்டெடுக்க முடிந்த இயக்குநர்கள் வெகு சொற்பம். இப்படி ராஜாவின் பாடல்கள் கொலைசெய்யப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம். ஆனாலும் ராஜாவின் பாடல்கள், அப்படங்களில் இடம்பெற்ற நாயக நாயகியர், பாடல் இடம் பெற்ற சூழல், படம் வெளியான காலம் எல்லாவற்றிலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு ‘தனித்த கலைப் பிரதியாய்’ ரசிகர்களுடன் உறவாடியது.

1980களின் பிற்பகுதியில்தான் காசட் பிளேயர்கள் சந்தைக்கு வருகின்றன. எம்.கே.டி. கால அந்த முதல் தலைமுறை ரசிகர்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கேட்பதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை. ஏறத்தாழ காசட் பிளேயர்கள் வரும் வரை இந்த நிலைதான். திரையரங்கங்கள், வானொலி, திருவிழா, பல்வேறு குடும்ப விழாக்களில் தவறாமல் இடம்பெறும் ஒலிபெருக்கிகள் மூலமாகத்தான் அரைநூற்றாண்டு காலம் வெகுசனங்கள் இசை கேட்டு வந்தார்கள்.  முதன் முறையாக காசட் தொழில்நுட்பமே அவரவர் விரும்பும் பாடல்களை, இசை வகைமைகளைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்து இசை கேட்கும் வாய்ப்பை வழங்கியது. இசை கேட்பது, புத்தக வாசிப்பைப் போல் அந்தரங்கமானதாக மாறியது அப்போதுதான். காசட் பிளேயர்கள் மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட ரசிகனின் அந்தரங்கத்திற்குள்ளும் இளையராஜா நுழைகிறார். 70களில் இளையராஜா திரையிசையுலகிற்குள் நுழைந்த போது நாற்பதிற்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இருந்தார்கள் என்பது நம்புவதற்குக் கடினமான உண்மை. 1980 ஆம் ஆண்டு ஏறத்தாழ 112 படங்கள் வெளிவந்தன. அதில் இளையராஜா 24 பாடங்களுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதன் 21படங்களுக்கும், கங்கை அமரன் 7 படங்களுக்கும், டி.ராஜேந்தர் 2 படங்களுக்கும்,  கே.வி. மகாதேவன் 4 படங்களுக்கும் இசையமைத்திருந்தார்கள். இந்த ஆண்டில்  அதிகபட்ச படங்களுக்கு இசையமைத்தவர்கள் சங்கர் - கணேஷ். 28 படங்கள். கூடுதலாக வி.குமார், ஷ்யாம், எம்.எல். காந்த், சந்திரபோஸ், சலீல் சௌத்ரி ஆகியோரும் ஓரிரு படங்களுக்கு இசையமைத்திருந்தார்கள். குறிப்பாக டி.ராஜேந்தரின் ‘ஒரு தலை ராகம்’ சக்கைப் போடு போட்டது. ராஜாவின் பாடல்களுக்கு இணையாக ஒரு தலைராகம் பாடல்கள் கேட்கப்பட்டன. குறிப்பாக கல்லூரி மாணவர்களின், இளைஞர்களின் பெரு விருப்பாக அந்தப்படமும் பாடல்களும் மாறியிருந்தன. அதிலும் ‘வாசமில்லாத மலரிது’ கச்சேரிகளில், கல்லூரி இசைப் போட்டிகளில் முதலிடம் பிடித்தது. சொல்லப்போனால் மற்றெல்லாவற்றிலும் (கதை- வசனம்- நடிப்பு - பாடல் - இசை - இயக்கம்) ராஜேந்தர் செய்த அழிச்சாட்டியங்களை அவர் பாடல் வரிகளுக்காக மன்னித்துவிடலாம் எனும் அளவுக்கு நல்ல பாடல்களை எழுதியவர் அவர். இன்றைக்கு அந்தப்பாடல்களின் இடம் என்ன? அதிகப் படங்களுக்கு இசையமைத்த சங்கர்- கணேசின் பாடல்கள் எங்கே?  ஆனால் அந்த ஒரு ஆண்டில்தான் மூடுபனி, நிழல்கள், கல்லுக்குள் ஈரம், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, உல்லாசப் பறவைகள் போன்ற  ராஜாவின் அற்புதமான பாடல்கள் அடங்கிய படங்கள் இருந்தன. இந்தப்பாடல்கள் எவையும் அவற்றின் பாடல்வரிகளுக்காக சிலாகிக்கப்பட்டவை அல்ல. இசைக் கோர்வையில் அவர் செய்த ஜாலங்களுக்காகவே கேட்கப்பட்டன. இன்றும் கேட்கப் படுகின்றன. 

கூடுதலாக 80களில் கல்லூரியில் படித்த காலத்தில் நண்பர்களாகத் தொடங்கிய இசைக்குழுவில் பாடிக்கொண்டும் இருந்திருக்கிறேன். 80கள் ராஜாவின் பொற்காலம். அப்போதும் கூட நான் மேடைகளில் பாடல் வரிகளை மறந்து வேறு வார்த்தைகளை இட்டு நிரப்பிவிடும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழும். ஏனெனில் ஏற்கெனவே சொன்னதுபோல் எனக்குப் பாடல்களில் வார்த்தைகள் உள்நுழைவதேயில்லை. நினைவில் நிற்பதுமில்லை.  ஆத்தாடிக்குப் பதிலாக கூத்தாடி என்றோ காத்தாடி, பூச்சாடி  என்றோ நிரப்பிய சந்தர்ப்பங்களில் கச்சேரிகளில் எந்தக் கலவரமும் வெடித்ததில்லை. மாறாக ‘சார் அந்த கிதார் பிட்ட சரியா வாசிக்கலையே’, ‘அந்த கோரஸ் கேக்கவே இல்லியே’ என்றோ குறைபட்டுக்கொள்வார்கள்.  ராஜாவின் பாடல்கள் வார்த்தைகளைச் சார்ந்திராதவை. ஈரமான ரோஜாவே பாடலில் ‘ தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து / என்னோடு நீ பாடி வா சிந்து’ என்ற வரிகளை பகடி செய்யும் எழுத்தாளர் ஜெயமோகன் ‘ ராஜ ராஜ சோழன் நான்’ எனும் பாடல் வார்த்தைகளின் அபத்தத்தையும் சுட்டிக்காட்டி, ஒரு இலக்கிய வாதியாக வார்த்தைகளைக் கவனிக்காமல் நான் எப்படி கடந்து செல்ல முடியும் என்கிறார்.  இம்மாதிரி  மொக்கையான பாடல்வரிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘தம்தன தம்தன தாளம் வரும்’ பாடலின் மெட்டமைப்பிலும் பின்னணியில் வரும் கூட்டுக் குரலிசையிலும், தபலாவும் மிருதங்கமும் புத்தம் புதிய தாளகதியில் துணைவரும்போது இலக்கியவாதிகள் அவர்கள் இலக்கியப் பூதக் கண்ணாடிகளை வைத்துவிட்டு ஓரமாக இளைப்பாறுவதே சிறந்தது.

கண்ணதாசன் - எம்.எஸ்.வி.க்கு இடையிலிருந்த புரிதல் அதற்கு முன்னும் பின்னும் வேறு யாரிடமும் இல்லை. இசையமைப்பாளர் என்பவர் ஒரு பீடத்திலும் பாடலாசிரியர் அவருக்குப் பணிவிடை செய்பவராகவும் இருக்கிறார்.  இளையராஜா பாடலாசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை எனும்  ஜெயமோகன், ராஜாவின் மேதமையை எங்கும் குறைத்து மதிப்பிடவில்லை எனினும் அவர் பாடலாசிரியர்களுக்கு உரிய இடத்தைக் கொடுக்கவில்லை என்கிறார். கஜல் போன்ற இசை வடிவங்கள் கவிதைக்கும் இசைக்கும் சம இடமளிப்பவை. ஆனால் திரைப்பாடல்கள் பரிணாம வளர்ச்சியில் இன்று இசையைப் பிரதானமாகக் கொண்டவையாக  மாறியிருக்கின்றன. ஒலிப்பதிவுத் தொழில்நுட்பமும், நுட்பமாக இசை கேட்கும் சாதனங்களின் வருகையும் இசையின் அடுக்குகளை, இசைக் கருவிகளின் புதிய ஒலித்துல்லியத்தை பிரதானமாக்கியிருக்கின்றன. 80களில் உருவாகிய அந்தப் புதிய இசையுகத்தின் தலைமகனாக ராஜா இருக்கிறார். கபடமற்ற ஒரு இசை ரசிகனுக்கு அவர் என்ன செய்தார் என்பது தெரியாமலேயே அவன் கிறங்கிக் கிடக்கிறான்.

'கீழே இன்ஸப்ஷன் படத்தின் இரண்டரை மணி நேர இசையைக் கொடுத்திருக்கிறேன். இளையராஜா எல்லாம் ஹான்ஸ் ஸிம்மரின் நிழலைக்கூடத் தொட முடியாது. எப்படி நகுலனையும் புதுமைப்பித்தனையும் கல்கி தொட முடியாதோ அப்படி’ என்கிறார் இணையப் பக்கத்தில்  சாரு நிவேதிதா. அதாவது ஹான்ஸ் ஸிம்மர் நகுலனாம். இளையராஜா கல்கியாம். ஆனால் ஸிம்மரை எந்த அடிப்படையில் ராஜாவோடு ஒப்பிடுகிறார் என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை. நான் ஒரு இலக்கியவாதி. வார்த்தைகளைக் கவனிக்காமல் எப்படி இருக்கமுடியும்? என்று ஜெயமோகன் கூறுவதை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் சாருவைப் போல் இளையராஜா ஒன்றுமே இல்லை. உலக இசை தெரியாத ரசிகக் குஞ்சுகள் ராஜா ரசிகர்கள் என்று விளிப்பதை என்னவென்று சொல்வது. போகிறபோக்கில் ஹான்ஸ் ஜிம்மரின் நிழலைக்கூட இளையராஜா தொடமுடியாது  என்று கூறுவது வீட்டுக்கு வந்த விருந்தினர் முன் கவனத்தைக் கவர நினைக்கும் சிறுபிள்ளையின் குரங்குச்சேட்டையன்றி வேறென்ன? ஓநாய் குலச் சின்னம் எழுதிய ‘ஜியாங் ரோங்க்’ கால்தூசுக்கு சாரு பெறுவாரா? என்று பதிலுக்கு  ஏன் கேட்கக்கூடாது? அப்படி ஒப்பிடுவது பேதமை என்பது நமக்குத் தெரியுமென்பதால்தான் நாம் அப்படிச் சாருவைக் கொச்சைப்படுத்தத் துணியமாட்டோம்.

ஒரு கலைஞனை அவன் வாழும் சமூகப் பொருளாதாரப் பின்புலத்தில் வைத்தே மதிப்பிடமுடியும். ஹாலிவுட் படங்களின் பட்ஜெட், கதைக்களம், தொழில்நுட்ப வசதிகள், எடுத்துக்கொள்ளும் காலம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா? அப்படியே ஒப்பிட்டாலும் இன்றைய சமகால வெகுசன இசையில் உலகின் எந்த இசைக்கலைஞரின் படைப்பாற்றலோடும் சமமாகவும், சிலவிசயங்களில் மேம்பட்டவராகவும் இளையராஜாவை அமரவைக்க முடியும். இதற்கு மெத்தப் படித்த மேதாவியாகவெல்லாம் இருக்க வேண்டியதில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com