இளையராஜாவும் சங்கீத மும்மூர்த்திகளும்

இளையராஜாவும் சங்கீத மும்மூர்த்திகளும்

இளையராஜா தன் இசைப் படைப்புகளுக்கான காப்புரிமை தொடர்பாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு விசாரணையின் போது, எதிர்த் தரப்பு வழக்கறிஞர் ‘இளையராஜா எல்லோரையும் விட தான் மட்டுமே மேலானவர் என்று நினைக்கிறார்’ என்று கூற ராஜா தரப்பு வழக்கறிஞர் ‘இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான்; இசையுலகில் அவர் கடவுளுக்கும் மேலானவராகப் பார்க்கப் படுகிறார்’ என்றும் கூறியிருக்கிறார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் நீதி்பதிகள், ‘இளையராஜா தரப்பில் அவர் எல்லோருக்கும் மேலானவர் என்று கூறப்பட்டது. எங்களைப் பொறுத்தமட்டில் இசையுலகில் மும்மூர்த்திகளான முத்துச்சாமி தீட்சிதர், தியாகையர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவர் மட்டுமே அனைவருக்கும் மேலானவர்கள். இவர்கள் மட்டுமே தங்களை அனைவருக்கும் மேலானவர்கள் என்று கூறிக்கொள்ள முடியும் தவிர, அவர்களைப் போல இளையராஜா கூற முடியாது’ என்று கூறியிருக்கிறார்கள்.

முதலில் இசையுலகில் மேலானவர் கீழானவர் என்ற விவாதத்திற்கு காப்புரிமை பற்றிய வழக்கில் இடமிருப்பதாகத் தெரியவில்லை. எதிர்த் தரப்பு வழக்கறிஞர் ராஜாவின் பிம்பத்தைக் குலைப்பதற்காக இந்தக் கருத்தை விசமத்தனமாக எடுத்துவைத்திருக்கக் கூடும். அதற்குப் பொருத்தமான பதிலளிக்கவேண்டிய ராஜாதரப்பு வழக்கறிஞர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர் விரித்த வலையில் விழுகிறார். ராஜாவைப் பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு ராஜா மேலானவர்தான். இசையுலகில் கடவுளுக்கு அடுத்தபடியாகப் பார்க்கப்படுகிறார் என்கிறார். அவர் ராஜாவின் ரசிகர்களை மனதில் வைத்தே அப்படிக் கூறியிருக்கக் கூடும். இந்த இருவரின் வாதங்களில் இருக்கும் உண்மை இன்மைகள் ஒருபுறம் இருக்க, நீதியரசர்கள் ராஜா தரப்பு வழக்கறிஞருக்கு பதில் தரும் விதத்தில் இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார்கள். இளையராஜா தன்னை அனைவருக்கும் மேலானவராகக் கருதிக்கொள்வது தவறு என்று கூறியிருந்தால் அதில் விவாதத்திற்கு ஒன்றுமில்லை. ஆனால் குறிப்பாக கர்நாடக இசை மும்மூர்த்திகளைக் குறிப்பிட்டு அவர்கள் மட்டுமே மேலானவர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

சங்கீத மும்மூர்த்திகள் 18ஆம் நூற்றாண்டு காலத்தைத் சேர்ந்தவர்கள். கர்நாடக இசை என்ற ஒரு வகையான இசையில் மேதைகள். பெரும் பங்காற்றியவர்கள். அவர்களை திரை இசை எனும் முற்றிலும் புதிய ஒரு இசை வகைமையில் செயலாற்றும் ஒருவரை எந்த அடிப்படையில் ஒப்பிட்டுக் கூறமுடியும். உலகத்தில் செவ்வியலிசை என்று சொல்லப்படுவதில் கர்நாடக இசை மட்டுமல்ல, இந்துஸ்தானி, சுஃபி, சிம்பொனி, ஓப்ரா என்று பலவும் உண்டுதானே. ஒவ்வொரு இசை வகையும் அதற்குண்டான இசை இலக்கணங்களோடும், அழகியலோடும் வெளிப்படக்கூடியவை அல்லவா? மும்மூர்த்திகள் வாழ்ந்த அதே 18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மேற்கத்திய செவ்வியல் இசைக்கலைஞர் மொசார்ட்டால் கர்நாடக ராகத்தில் ஒரு கீர்த்தனையை இயற்ற முடியாது என்பது போலவே மும்மூர்த்திகளால் ஒரு சிம்பொனி எழுத முடியாதுதானே. இந்த இடத்தில் எந்த இசையையும் உயர்ந்தது தாழ்ந்தது என்று அணுகுவது எவ்வளவு தவறான அணுகுமுறையோ அதே போல் எந்த இரு இசை வகைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதும் கூட ஒரு தேர்ந்த ரசனையாக இருக்கமுடியாது என்பதே இசை ஆய்வாளர்களின் பார்வை.

ஆனால் நம் மும்மூர்த்திகள்தான் உலகிலேயே மேலான கலைஞர்கள் எனும் நீதியரசர்களின் கருத்தை எந்த அடிப்படையில் புரிந்துகொள்வது?

சாஸ்த்ரீய சங்கீதமே உன்னதமானது. பரத நாட்டியம் மேன்மையானது. வேதங்கள் கேள்விளுக்கு அப்பாற்பட்டவை என்பதான ஒரு சிந்தனை முறையின் தொடர்ச்சியாகவே நீதியரசர்களின் இந்தக் கருத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது. இசை பற்றிய சில தேய்வழக்குகள் உண்டு. அதில் முக்கியமானது இசை தெய்வீகமானது;  இசை இயற்கையிலிருந்து உருவானது என்பன. பொதுப்புத்தியில் புழங்கும் இவ்விரு கருத்துக்களுமே இசை ஆய்வாளர்களால் பொருட்படுத்தத்தக்க கருத்துகள் அல்ல. இயற்கையில் எந்த இசையும் இருக்கவில்லை. இயற்கையில் ஓசைதான் இருந்தது. குயில் கூவுவதையும் அருவியின் சலசலப்பையும் இனிமையான ஓசைகள் எனலாமே தவிர இசை என்று கூறமுடியாது. இசை எனும் கலை முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்ட கலைதான். இசைக்கலையை விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் சிக்கலாக இருப்பதாலேயே அதைப்பற்றிய சொல்லாடல்களையும் திருகலாக ஆக்கி வைத்திருக்கிறோம்.

இறைவனை  நினைத்து உருகி உருகிப் பாடிய மும்மூர்த்திகளையும் 20ஆம் நூற்றாண்டில் உருவான திரைப்படக்கலையின் அங்கமாக விளங்கும் திரையிசைக் கலைஞரான இளையராஜாவையும் ஒப்பிடுவதற்கும், மும்மூர்த்திகளின் இசையே உட்சபட்ச இசை என வரையறுப்பதற்கான அல்லது  தரப்படுத்துவதற்குமான முகாந்தரங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. மேலும் திரையிசையை தரம் குறைந்ததாகப் பார்க்கும் பார்வை இன்றைக்குக் காலாவதியாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் உலக இசை வகைமைகளையெல்லாம் உள்வாங்கி சாமான்யர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் இசை ரசனையை மேம்படுத்தி வந்திருப்பவர்கள் திரையிசைக் கலைஞர்கள்தான். திரையிசை ஒரு பயன்பாட்டு இசை வடிவம்(applied art). திரையிசை எனும் வடிவம் அற்புதமான  ஒரு வகைமையாக இன்று உலக இசைச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆகவே இளையராஜாவை ஒப்பிடுவதென்றால் இந்தியத் திரை இசையமைப்பாளர்களுடன் ஒப்பிடலாம். கூடுதலாக உலக வெகுசன இசை (popular music)யில் செயல்படக்கூடிய கலைஞர்களோடு வேண்டுமானால் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த வகையில் இந்திய திரையிசையின் மேதைகளாகக் கருதத்தக்க எவரைவிடவும் ராஜா உயர்ந்தவராகவே இருக்கிறார். ராகங்களைக் கையாண்ட விதத்திலும், மெட்டமைப்பிலும், மேற்கத்திய மரபிசையை, நாட்டாரிசையை இதுவரை யாரும் முயலாத வகையில் கற்பனையாற்றலோடு கையாண்ட வகையிலும் ராஜா ஒரு அதிசயம் என்பதை பலரும் சொல்லிச்சொல்லி மாய்ந்திருக்கிறார்கள். அதிலும் அவர் பாடல்களை உருவாக்கும் வேகம், அவற்றை எழுதும் முறை இந்திய திரையிசை வரலாற்றில் நிகழ்ந்திராதது.

எந்த அரசியல் தலைவரைவிடவும் எந்த ஆன்மீகக் குருவைவிடவும் இளையராஜா தமிழர்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கிறார். குடும்பத்தைப் பிரிந்து இமயத்தின் எல்லையில் காவலிருக்கும் ராணுவவீரனும், மத்தியகிழக்கு நாடுகளின் துறைமுகங்களில் உழைத்துக் களைத்துப் படுத்துக்கொண்டு குழந்தைகளை மனதில் நினைத்து வானத்தை வெறித்துக்கிடக்கும் எளிய ஒரு மனிதனும், எல்லாம் இருந்தும் பிறந்தமண்ணின் ஏக்கத்தோடு அமெரிக்கச் சாலைகளில் கார்களில்  ஒற்றையாய் பயணம் செய்யும் ஒரு மென்பொருள் இளைஞனும், ஆளரவமற்ற பெட்ரோல் பங்குகளில் நள்ளிரவில் தன்னந்தனியாய் பணிசெய்யும் ஒரு  கிராமத்து மனிதனும், வருடக்கணக்காய் சுவர்களையே பார்த்துக்கொண்டிருக்கும் சிறைவாசியும், படுக்கையிலேயே வாழ்நாளைக் கழிக்க சபிக்கப்பட்ட நாள்பட்ட நோயாளியும் ராஜாவின் பாடல்களோடுதான் நாள்களை நகர்த்துகிறார்கள். 

ஆகையால் கனம் நீதியரசர்களே… சட்டப்புத்தகங்களும் தர்ம சாத்திரங்களும் என்ன சொல்கின்றனவோ தெரியாது. ஆனால் கடவுளர்கள் செயலற்றுப்போன இந்த நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களை அன்றாடம் தேற்றுவதும், அரவணைப்பதும், ஆறுதளிப்பதும், ஆற்றுப்படுத்துவதுமான பணியை இளையராஜாவின் இசையே செய்து வருகிறது.

அவர்களுக்கு ராஜா கடவுளுக்கு நிகரானவராகவும் ஏன் கடவுள்களைவிடவும் மேலானவராகவும் தோன்றக்கூடும். யாரைக் கடவுளாகக் கொள்ளவேண்டும் என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் இன்னும்  யாருக்கும் வழங்கப்படவில்லைதானே!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com