இசையரசி

இசையரசி

பி.சுசீலா- ஒரு சாதனை சரித்திரம் -1

When the nightingale sings,
The trees grow green,
Leaf and grass and blossom springs –

நைட்டிங்கேல் எனப்படும் அல்லிசைப்புள் என்னும் பறவை இசைக்கும் போது மரங்கள் துளிர்க்கின்றன: இலைகளும், புற்களும் பசுமை பெறுகின்றன: மொட்டுக்கள் மலர்கின்றன.

-         பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கும் பெயர் தெரியாத கவிஞரின் கவிதையின் கையெழுத்துப் பிரதி

பறவை இனங்களில் பாடும் தன்மை கொண்டவை என்று குயில், வானம்பாடி, அல்லிசைப் புள் (ஆங்கிலத்தில் நைட்டிங்கேல்) என்று சொல்வார்கள்.

 

இவை பாடினால் எப்படி இருக்கும்? 

 

நம்மில் யாராவது இவை பாடி கேட்டிருக்கிறோமா?

 

“குயில் மாதிரி பாடுறே” என்று உதாரணத்துக்கு சொல்லிகொண்டு  இருக்கிறோமே தவிர உண்மையில் குயிலின் கீதம் எப்படி இருக்கும் என்று நம்மில் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவிகிதம் பேர் கேட்டே இருக்க மாட்டோம். கர்ணபரம்பரையாக யாரோ சொல்லி வைத்ததைக் கேட்டே அடித்து விட்டுக்கொண்டிருக்கிறோம்!

 

நைட்டிங்கேல் என்னும் அல்லிசைப்புள் பாடும் போது அதன் குரலில் இருக்கும் இனிமையும் விதவிதமான நாதமும் நம்மை அப்படியே மெய்மறக்கச் செய்துவிடும் என்பார்கள்.

 

இவை உண்மையா என்று நமக்கு எப்படித் தெரியும்? 

 

கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் யுரேஷியாவின் அடர்ந்த காடுகளுக்குத்தான் அதுவும் இரவு நேரத்தில் செல்லவேண்டும்.

 

அப்படி என்றால் இவற்றின் இனிமையான குரலைக் கேட்க முடியாதா?

 

மற்ற நாடுகளில் எப்படியோ.. ஆனால் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாகத்  தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழ் மக்களாகிய நாம் எல்லோரும் நைட்டிங்கேல் மட்டும் என்று அல்ல, குயில், வானம்பாடி என்று குரலின் இனிமைக்காகவே பெயர் பெற்ற அனைத்துப் பறவைகள் எழுப்பும் அத்தனை சுனாதங்களையும் ஒரே குரலில் கேட்கும் மாபெரும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.

 

அந்த ஒரே குரலில் நவரசங்களையும் உணரமுடியும். 

 

அந்த ஒரே குரலுக்கு கல் மனதையும் கரையவைக்கும் வல்லமை உண்டு.

 

அந்த ஒரே குரல் காற்றலைகளில் தவழ்ந்து வரும்போது நம் மனதில் இருக்கும் பாரங்களை எல்லாம் லேசாக்கி இனம் புரியாத இன்பப் பரவசத்தில் நம்மை ஆழ்த்தும் சக்தி படைத்தது.

 

செவிகளில் தேனைப் பாய்ச்சி மனதுக்குள் ஊடுருவி நம்மை எல்லாம் அப்படியே சுவர்க்கானுபவத்தை அடைய வைக்க முடியும்.

 

ஈடு இணையற்ற அந்த ஒரே குரலுக்குச் சொந்தக்காரர் ..

 

இசை அரசி என்று நம்மால் கொண்டாப்படும் போற்றுதலுக்குரிய “புலபாக சுசீலா” என்னும் பி. சுசீலா.

 

தென்னிந்தியத் திரை இசையின் வரலாற்றுப் பக்கங்களைப்  பி. சுசீலா அவர்களைத் தவிர்த்துவிட்டு எழுத யாராவது முயற்சித்தால்  வெறும் வெற்றுப் பக்கங்களாகத்தான் அந்த வரலாற்றை நிரப்ப முடியும்.

 

அந்த அளவுக்கு இமாலயச் சாதனை புரிந்த மகத்தான இசை அரசி அவர்.

 

கின்னஸ் சாதனைச் சான்றிதழுடன் இசையரசி
கின்னஸ் சாதனைச் சான்றிதழுடன் இசையரசி

ஆம். இமாலயச் சாதனைதான். 

 

 

உலக அளவிலேயே 17,965 பாடல்களைப் பாடிய ஒரே பாடகியாக கின்னஸ் உலக சாதனை வரலாற்றில் இடம் பிடிப்பதென்றால் அது சாதாரண விஷயமா என்ன?

 

இதோடு நிற்காமல்  ஆசியா கண்டத்திலேயே இந்திய மொழிகளில் அதிகமாகப் பாடிய வரலாற்றுச் சாதனைக்காக Asia Book of Records அங்கீகாரம் வேறு.

 

ஆனால்... இந்தச் சாதனைகளை அவர் ஒரே நாளில் நிகழ்த்திக் காட்டிவிடவில்லை.

 

“ROME WAS NOT BUILT IN A DAY” – என்று சொல்வார்கள்.

 

இசை அரசி பி. சுசீலா அவர்களின் சாதனைகளும் அப்படித்தான். 

 

இன்று அவர் கனகம்பீரமாக வீற்றிருக்கும் இசை அரசி என்ற இரத்தின சிம்மாசனத்தை  அவருக்கு ஒரே நாளில் “இந்தா பிடி” என்று தங்கத் தாம்பாளத்தில் வைத்து யாரும் கொடுத்துவிடவில்லை.

 

அவரது ஆத்மார்த்தமான ஈடுபாடும், உழைப்பும், பொறுமையும் தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது.

 

திரை இசையில் ஒரு சகாப்தமாகத் திகழும் அந்தச் சரித்திர நாயகியின் சாதனை வரலாற்றை தெரிந்து கொள்ள வாருங்கள் வாசகர்களே.. நாம் முதலில் விஜயநகரம் நோக்கி பயணிப்போம்.

 

****

விஜய நகரம் – ஆந்திர மாநிலத்தில் உள்ள அருமையான சரித்திர பிரசித்தி பெற்ற நகரம்.

கிழக்கில் ஸ்ரீகாகுளம்-மேற்கில் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், வடக்கில் பார்வதிபுரம் மான்யம் தெற்கில் விசாகபட்டினம், அனகாபள்ளி, தென்கிழக்கில் வங்காள விரிகுடா கடல் ஆகியவற்றின் நடுவில் அமைந்த ஊர் இது. சரிபில்லி திப்பிலிங்கேச்வரர் ஆலயமும், ஜெயந்தி மல்லிகார்ஜுனர் ஆலயமும் சரித்திர பிரசித்தி வாய்ந்தவை.

இந்த நகரத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் முகுந்தராவ். 

இவரது மனைவி சேஷாவதாரம் அம்மாள். இந்தத் தம்பதியினருக்குக் குழந்தைச் செல்வத்திற்கு குறைவே இல்லை.  பத்து குழந்தைகள்.  ஏழு ஆண்கள்; மூன்று பெண்கள்.

இவர்களில் ஐந்தாவது குழந்தையாக  - அருமை மகளாக 1935ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதியில் பிறந்த மகள் தான் நமது இசை அரசி பி. சுசீலா அவர்கள். “அஞ்சாவது பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது” என்பார்கள். அப்படி வரமாகக் கிடைத்த மகளை அருமை பெருமையாக வளர்த்தார்கள் அவரது பெற்றோர்கள்.

முகுந்தராவ் – சேஷாவதாரம் தம்பதிகள்
முகுந்தராவ் – சேஷாவதாரம் தம்பதிகள்

தந்தை முகுந்தராவ் அவர்கள் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.  பூஜை அறையில் அவர் வீணை வாசிக்க ஆரம்பித்தால் அருகில் சென்று அமர்ந்து கொண்டுவிடுவாள் சிறுமி சுசீலா.

அதை வைத்து மகளின் இசை ஆர்வத்தை உணர்ந்துகொண்ட முகுந்தராவ் தானே ஆரம்பப் பாடங்களை மகளுக்குக் கற்றுக்கொடுத்தார்.

 “ஸ ரி க ம ப த நி ஸ

ஸ நி த ப ம க ரி ஸ”

-என்று சப்த ஸ்வரங்களும் அந்தச் சின்னஞ் சிறுமியின் தேன்குரலில் நுழைந்து தங்களுக்கான இடங்களை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டன.

எதையும் தூரத்தில் இருந்து பார்க்கும் நேரத்தில் நமக்கு அதில் உள்ள அழகு மட்டும் தான் கண்களுக்குத் தெரிந்து மனதை பிரமிக்க வைக்கும்.

ஆற்றின் கரையில் நிற்கும்போது அதன் நீரோட்டம் மனதை மயக்கும். 

அதே ஆற்றில் இறங்கி நீச்சல் பழகும்போது அதன் ஆழமும் சுழல்களும் நம்மைத் திணறவைக்கும் அல்லவா.?

அதுபோலத் தான் சிறுமி சுசீலாவுக்கும் இருந்தது.

இசைக் கடலில் கால் நனைத்த நேரத்தில் தென்பட்ட உற்சாகம் அணையாமல் இருந்தது என்றாலும் அந்தச் சிறுமியைத் திணற வைத்த விஷயம் காலை நேரத்துச்  சாதகம் தான்.

விடியற்காலையில் எழுந்து சாதகம் செய்தால் தான் குரல் நன்றாக பிரிந்து வரும் என்பதால் முகுந்தராவ் மகளை காலையிலேயே எழுப்பி விடுவார்.

சிறுவயது சுசீலா
சிறுவயது சுசீலா

அவர் அந்தப் பக்கம் நகர்ந்ததும் மகள் மறுபடி படுத்துக்கொண்டு விடுவாள். ஏழு மணிக்கு குறைந்து எழுந்தவள் இல்லை அவள்.

“சுசீலா எக்கட?” – என்ற முகுந்தராவின் கேள்விக்கு –

“சூர்ய நமஸ்காரலு சேஸ்தோண்டி” (சூர்ய நமஸ்காரம் செய்துகொண்டு இருக்கிறாள்) என்பார் தாயார். 

விடிந்த பிறகும் படுத்துக்கொண்டிருக்கிறாள் அல்லவா?  அதைத்தான் அப்படிக் குறிப்பிடுவாராம் அவரது தாய்.

மகளைக் கட்டாயப் படுத்திப் பாட வைப்பார் தந்தை.

மகளோ அழ ஆரம்பிப்பாள்.

“அழறதுன்னு முடிவு பண்ணிட்டே.  அழு. ஆனா முதல்லே சாதகம் பண்ணிட்டு சாவகாசமா உட்கார்ந்து நல்லா அழு.” என்பார் முகுந்தராவ்.

மெல்ல மெல்ல... வளர வளர... சுசீலாவின் மனமும் இசையின் பால் முழுதாகத் திரும்பியது.

மகளின் இசைத் திறமையை மேம்படுத்த விஜய நகரத்திலேயே பிரபல வயலின் இசை மேதை துவாரம் வெங்கடஸ்வாமி நாயுடு அவர்கள் முதல்வராக பதவி வகித்த மகாராஜா அரசு இசைக்கல்லூரியில் வாய்ப்பாட்டுப் பிரிவில் மாணவியாக மகளை இசை பயில வைத்தார் முகுந்தராவ்.

சுசீலாம்மாவின் இசைத்திறமையைப் புடம் போட்ட தங்கமாக்கிய மகாராஜா இசைக் கல்லூரியைப் பற்றி நாம் சிறிதாவது தெரிந்து கொள்ளாவிட்டால் எப்படி?

1919இல் புசுபதி விஜயராம கஜபதி ராஜு என்ற விஜயநகரம் மகாராஜாவினால் தொடங்கப்பட்ட இசைக்கல்லூரி இது. தென்னிந்தியாவிலேயே இசைக்காக துவங்கப்பட்ட முதல் இசைக்கல்லூரி இதுதான். 

துவங்கப்பட்டபோது “விஜயராம கான பாடசால” என்று மகாராஜாவின் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி இது. 

மகாராஜா இசைக்கல்லூரி – விஜயநகரம்
மகாராஜா இசைக்கல்லூரி – விஜயநகரம்

சங்கதி ஜோகராவ் என்னும் மகாராஜாவின் நண்பரின் மகனான சங்கதி கங்காராஜு பார்வை இழந்தவர். 

ஆனால் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் வைத்த கோரிக்கையை ஏற்று விஜயநகரம் கோட்டைக்குப் பின்புறமிருந்த டவுன் ஹால் கட்டிடத்தை இசைக் கல்லூரிக்காக சாசனப்படுத்தி மகாராஜா அளிக்க இசைக் கல்லூரி அவர் பெயரிலேயே நிறுவப்பட்டது.  புகழ் பெற்ற பிரபல வயலின் மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடு அவர்கள் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

இந்த இடத்தில் நமது இசையரசியின் குருநாதர் துவாரம் வெங்கடசாமி நாயுடு அவர்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

வயலினில் கைதேர்ந்த இவருக்குப் பார்வைக்குறைபாடு உண்டு. ஆனால் அதனையும் மீறி அந்த வாத்தியத்தைத்  தனது ஆளுமைக்குள் கொண்டு வந்த மகாமேதை.

உலகப்புகழ் பெற்ற வயலின் மேதை யெஹூதி மெனுஹின் அவர்களையே பிரமிக்க வைத்த வாசிப்பு துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் வாசிப்பு.

மகாராஜா இசைக் கல்லூரியில் பேராசியராகச் சேர்ந்தவர் பின்னாளின் அதன் முதல்வராக உயர்ந்தார்.  

பி. சுசீலா அவர்களைத் தவிர இன்றளவும் தெலுங்குத்  திரைப்படப்பாடல்களின் நாயகன் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் அவர்களுக்கும் இவர்தான் குரு.

இப்படிப்பட்ட மாமேதை பதவி வகித்த மகாராஜா இசைக்கல்லூரியில் அவரது நேரடி மேற்பார்வையில் கர்நாடக இசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார் பி. சுசீலா. (பின்னாளில் சுதந்திர இந்தியாவில் 1955-இல் இந்த இசைக் கல்லூரி அரசுடைமை ஆக்கப்பட்டது).

இசையைத் தவிர தனது கல்வித் தகுதி பற்றி பல நேர்காணல்களில் பி. சுசீலா திறந்த மனதோடு தனது பள்ளிப்படிப்பைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்:

“விஜய நகரத்துலேதான் படிச்சேன். படிப்பே இல்லே. எலிமெண்டரி ஸ்கூலோட படிப்பு இல்லே.  அதுக்கப்புறம் நானே படிச்சுத் தெரிஞ்சிகிட்டேன். அங்கே படிச்சப்பவும் டிராமா போட்டா கிருஷ்ணர் வேஷம், நாரதர் வேஷம்னு பாட்டு இருக்குற வேஷமா குடுப்பாங்க. ஸ்லோகம், பாட்டுன்னு நல்லாப் பாடுவேன். ரொம்பப் பாராட்டுவாங்க. அதனாலே பாட்டு மேல ஆர்வம் வந்து படிப்புலே வெறும் ஜீரோ ஆயிட்டேன்” (குமுதம் மார்ச் 15, 2001 – பொன்மணி வைரமுத்து சந்திக்கும் “வெற்றிப் பெண்மணிகள்” நேர்காணல்.)

“ரொம்ப ஒண்ணும் பெரியதாக நான் படிக்கலே. எட்டாவதோடு நின்று போச்சு. எனக்கு அப்பவே பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனால் எனக்கு வராத பாடம் கணக்குதான்! இதுலே பாஸ் மார்க் வாங்கவே ரொம்பக் கஷ்டப்படுவேன். ரிப்போர்ட் கார்டு வரும்போது அப்பாகிட்டே காண்பிக்கக்கூட பயப்படுவேன். எப்படியாவது ட்ரை பண்ணி அடுத்த முறை நல்லா வாங்கனும்னு நெனைப்பேன். ஆனால் அந்தச் சமயம் பார்த்து ஏதாவது பாட்டுப் போட்டி வரும்.  உடனே போய் நான் பெயரைக் கொடுத்துட்டு பாட்டைப் பாடி ‘ப்ராக்டிஸ்’ செய்ய ஆரம்பிச்சிடுவேன்.” (மங்கையர் மலர்  – ஜூலை 2001)

பி. சுசீலாவிற்கு பன்னிரண்டு வயதாக இருக்கும்போது நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

விஜய நகரத்தின் கிழக்கில் இருந்த ஸ்ரீகாகுளம் என்ற ஊரில் ஒரு வளையல் கடைச்செட்டியார் வீட்டில் நடந்த ஒரு வைபவத்தில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

தந்தையுடனும், தனது சகோதரருடனும் சென்ற சிறுமி சுசீலா அந்த வைபவத்தில் சிறிதும் பயமில்லாமல் பாடி அனைவரின் மனங்களையும் கவர்ந்து விட்டாள். நிகழ்ச்சி முடிந்ததும் தந்தை திரும்பிவிட்டார். அண்ணனின் துணையுடன் இருந்த சிறுமியை செட்டியார் வீட்டுக்கு வரச்சொல்லி பால் கொடுத்து உபசரித்தார். பிறகு பொற்கிழி போல மூன்று மூட்டைகளை பரிசாகக் கொடுத்தார் செட்டியார்.

வீட்டுக்கு வந்து அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொரு “மூட்டலு” நூறு அணா என்று முன்னூறு அணாக்கள் இருந்தன.  நூறு அணா என்பது நூறு ரூபாய்க்கு சமம். இதுதான் நமது இசை அரசி பெற்ற முதல் சன்மானம்.

மகாராஜா இசைக் கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று டிப்ளமா சான்றிதழ் பெற்ற   மகளை இசையில் மேற்படிப்பான வித்வான் பட்டப் படிப்பில் ஈடுபடுத்த முகுந்தராவ் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்.

அவரது அன்பு மகளை உலகம் போற்றும் இசைக்குயிலாக மாற்றி  பெயரும் புகழும் பெறச் செய்வதற்கான முத்தான வாய்ப்புகளுடன் கடற்கரை நகரமான சென்னை அவர்களை வரவேற்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது.

(இசைப்பயணம் தொடரும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com