ஜில்லு: கேட்க விரும்பாத கதை

திசையாற்றுப்படை - 21
Jillu
ஜில்லு
Published on

2024ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் முக்கியமான அதே நேரத்தில் அதிகமும் கவனிக்கப்படாத திரைப்படம் ஜில்லு. இப்படம் திருநங்கையரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இதுவரை திருநங்கையரை சில்லறைப்பாத்திரங்களாகச் சித்திரித்த படங்கள் கணிசமான அளவில் உண்டுதான் என்றாலும் அவர்களையே மையப்பாத்திரங்களாகக் கொண்டு தமிழில் வெளிவந்த முழுநீளத் திருநங்கையர் திரைப்படமாக ஜில்லுவையே குறிப்பிட வேண்டும்.

1960களில் அமெரிக்காவில் ஒருபால் ஈர்ப்பாளர்களின் கூடுகைகளைத் தடுக்கும்விதமான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டது. 1969இல் நியூயார்க் நகரின் அருகாமையில் உள்ள கீரின்விச் எனும் சிறுநகரின் ஸ்டோன்வெல் எனும் ஒருபால் ஈர்ப்பாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் கூடும் மதுக்கூடம் ஒன்றில் போலீசார் புகுந்து கைதுநடவடிக்கையில் ஈடுபட்டதைத் தொடர்ந்த எதிர்வினைகளே Stonewall riots என்று அழைக்கப்படுகிறது. பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி உண்மையான குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துவதைவிட்டு, இத்தகைய மனித அடிப்படை உரிமைகளைத் தடைசெய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடுவதிலான அதிருப்தியைப் பொதுச்சமூகமும் குடிமை உரிமை அமைப்புகளும் முன்வைத்து, போலிசாரின் நடவடிக்கைகளுக்கான கடுமையான எதிர்வினைகளை ஆற்றினார்கள். தொடர்ந்த விழிப்புணர்வின் காரணமாக 1980களில் LGBT (lesbian, gay, bisexual, and transgender) எனும் கூட்டிணைவு உருவானது. மனிதர்களுக்கான அனைத்து உரிமைகளையும் அங்கீகாரங்களையும் பெறுவதற்கான அமைப்பாகத் தங்களை ஒன்றினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார்கள் இந்த பால் புதுமையர். 1990களில் கூடுதலாக LGBT என்பதோடு ‘QUEER’ என்பதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘Q’ வையும் இணைத்து LGBTQ என்பதாக இன்று அறியப்படுகிறார்கள். LGBTQ என்பது ஆண், பெண், திருநங்கை மற்றும் திருநம்பி என்பனவற்றோடு கூடுதலாக 20க்கும் மேற்பட்ட பாலினங்களையும் உள்ளடக்கக் கூடியதாக பாலினங்கள் விரிவுபெற்றுள்ளன. நவீன மரபணுவியலும் ஏனைய அறிவியல் துறைகளும் மனிதர்களில் இத்தகைய பல்வேறு வகையான பாலினங்கள் இருப்பதான புரிதலை இன்று உறுதிப்படுத்தியுள்ளன. ஆகவேதான் மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் Queer Studies எனும் கல்விப் புலங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1999இல் Boys don’t cry என்றொரு படம் ஹாலிவுட்டில் வெளியானது. பிராண்டன் டீனா எனும் ஒரு பெண் தன்னை ஆணாக உணர்ந்து ஒரு திருநம்பியாக மாற எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களையும் போராட்டங்களையும் உள்ளடக்கியதாக அப்படம் இருந்தது. தன்வரலாற்றுப் படமாக வெளியாகி ஆஸ்கார் முதலிய பல்வேறு விருதுகளை வென்று பரவலாகப் பேசப்பட்ட படமாகவும், வணிகரீதியில் லாபகரமான திரைப்படமாகவும் அமைந்தது. இதற்கு முன்னரும் திருநங்கை, திருநம்பியரைப் பற்றிய படங்கள் பல இருந்தாலும் ‘பாய்ஸ் டோண்ட் கிரை’ பொதுவெளியில், திரையுலகில் மூன்றாம் பாலின கதைக் களங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த படமாக அமைந்தது. பாலியல் சுதந்திரம், கட்டுக்கடங்காத தனிமனித உரிமைகள், சமத்துவம் ஆகியனவற்றை தேவைக்கதிகமாகப் பேசும் அமெரிக்காவிலேயே மாற்றுப்பாலினத்தவரின் வாழ்வியலை உரக்கப்பேசும் படங்களுக்கான அங்கீகாரம் 90களில்தான் சாத்தியமானது.

இந்தப் பின்புலத்தில் புத்தாயிரத்தில்தான் தமிழகத்தில் மூன்றாம் பாலினம் ஒன்று உண்டு என்பதைக் கருத்தளவில் ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது நமது புராணங்களிலும் இலக்கியங்களிலும் திருநங்கையர் பற்றிய பதிவுகள் உண்டு. ஆனால் அவர்களை ஆண் பெண்ணுக்கு இணையாக அல்லாமல் பிறழ் பிறவிகளாகப் பார்க்கும் பார்வையே உண்டு. 90களில்தான் ஆண், பெண் தவிர்த்துப் பல்வேறு பாலினங்கள் இருப்பது இயற்கையானதே என்ற அறிவியல் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உருவானது. உலகத் திரைப்படங்களில் இதரபாலினங்களைப் பற்றிய படங்கள் கணிசமாக வரத்தொடங்கியுள்ள நிலையில், இன்று பிற பாலினங்களைப் பற்றிய உரையாடல் சிறு அளவில் நமது நாட்டிலும் தொடங்கியுள்ளது. இந்தி, மலையாளம் மற்றும் வங்காள மொழிகளில் தயாரிக்கப்பட்ட சில காத்திரமான முயற்சிகளாக Fire (1996), My Brother… Nikhil (2005), Memories in March (2010), Margarita with a Straw (2014), Aligarh (2015), Nagarkirtan (2017), Moothon (2019), ‘Geeli Pucchi’ (2021) ஆகிய படங்களைக் கூறாலாம். ஆனால் இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கு ‘ரேசன் கார்டு’ வழங்கி அவர்களை அதிகாரப்பூர்வ குடிகளாக அங்கீகரித்த தமிழகத்தில், திருநங்கையரின் அல்லது இதர பாலினத்தவரைப்பற்றிய முழுமையான கதைப்படங்கள் இதுவரைஇல்லை. அத்தகைய அரிதான முயற்சியாக ‘ஜில்லு’ திரைப்படத்தைக் கொள்ளலாம்.

இந்தப்படம் முழுக்க தமிழக பொதுவெளியில் அதிகம் படிக்காத, நடுத்தர, கீழ் நடுத்தர குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு பதின்பருவத்தில் வெளியுலகில் தங்களுக்கான வாழ்க்கையைத் தேடிப் போராடும் திருநங்கையரின் உலகம் அப்பட்டமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெரும்பான்மையினரான திருநங்கையரின் வாழ்க்கைக் கதை என்பது ஒரே கதைதான். பெண்சாயலினான உடல் மொழி வெளிப்பட ஆரம்பித்தவுடன் பள்ளி கல்லூரிகளில் சக மாணவர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகி படிப்பைத் துறப்பது, அப்பா அல்லது சகோதரர்களின் கொடுமைகள் தாளாமல், சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி, அலைந்து திரிந்து திருநங்கையர் சமூகங்களில் இணைவது, வயிற்றுப்பாட்டிற்கு பிச்சையெடுப்பது பாலியல் தொழில் செய்யத் தொடங்குவது, வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி பாலின உறுப்புகளை நீக்குவதற்கான அறுவைச்சிகிச்சைகளுக்காகப் பணம் சேர்ப்பது. அறுவைச்சிகிச்சைக்குப் பின் மனதளவிலும் உடலளவிலும் பெண்ணாக உணர்ந்து மீண்டும் அதே பிச்சை, பாலியல் தொழிலுக்குள் தங்களை இணைத்துக்கொள்வது. இதுவே பெரும்பாலான திருநங்கையரின் கதையாக இருக்கிறது. இதுவரை இலக்கியப் பதிவுகளாக, சுயசரிதைகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளவற்றை, படித்து உணர்ந்தவற்றை காட்சி ஊடகத்தில் பார்க்கும்போது பெரும் அதிர்வுகளை உணரமுடிகின்றது. அதிலும் குறிப்பாக காலை முதல் மாலை வரை பணிசெய்து, 7 மணிக்கு முன் இரவு உணவை முடித்து, தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து 10 மணிக்கு ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றுவிடும் ஒரு நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்களை இப்படம் உலுக்கிவிடக்கூடும். திருநங்கையரின் பலதரப்பட்ட அன்றாட வாழ்க்கைப் பாடுகள், அவர்களுக்குள் நிலவும் உறவு முறைகள், அவர்களின் நீடிக்காத காதல் அனுபவங்கள், மனமுடைவுகள், தற்கொலைகள் என்று அடர்த்தியான சம்பவங்களின் பதிவுகளாக இப்படம் அமைந்துள்ளது.

இந்தப்படத்தை எழுதி இயக்கியவர் திவ்யபாரதி. இப்படத்தில் ஒரு பாத்திரமாக இவரும் இடம்பெறுகிறார். திரைக்கதையின் பாத்திரமாக அல்லாமல் இத்திருநங்கையருடன் சில ஆண்டுகள் நெருங்கிய தோழியாக அவர்களுடன் பயணித்து அதன்பின்னரே இத்திரைக்கதையை எழுதியுள்ளார். இது ஒரு வகையில் திருநங்கையரின் நம்பிக்கையைப் பெறுவதற்கான முயற்சியாக இருந்தாலும், மூன்றாம் நபராக ஒரு கதையை விவரிப்பதாக இல்லாமல் கதைமாந்தர்களோடு கலந்து அவர்களில் ஒருவராக இருப்பதன் மூலம் காட்சிகள் கூடுதலான நம்பகத் தன்மையையும் இயல்பையும் பெற்றுள்ளன. சட்டம் படித்த காலத்திலிருந்தே மூன்றாம் பாலினத்தவர் மற்றுமான ஒடுக்கப்பட்ட சமூகங்கள்மேல் அக்கறை கொண்டு செயல்படத்தொடங்கியவர் திவ்யபாரதி. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலையை ‘ஒருத்தரும் வரல’ எனும் ஆவணப்படமாக்கியவர்.

மலக்குழி மரணங்களை ‘கக்கூஸ்’ எனும் ஆவணப்படத்தால் பொதுச் சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியவர். திருநங்கையரின் வாழ்வுரிமைக்கான செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டு அவர்களோடு சிலகாலம் தொடர்ந்து பயணித்து அவர்களின் உலகைப் புரிந்து கொண்டதன் விளைவாக அவர்களின் வாழ்வியலை காட்சியில் பதிவுசெய்ய உறுதிகொண்டு இம்முயற்சியில் இறங்குகிறார். இவருடைய திருநங்கைத் தோழியரான ஜில்லு, ஸ்ரேயா ஆகியோரின் கதையை எழுதத்தொடங்கினார். ‘கக்கூஸ்’ திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க மருத்துவர் தோனி ஐ ஓலிவர் தென் தமிழக கடல்புற மீனவ சமூகத்தைச் சார்ந்தவர், அவர் இப்படத்திற்கான நிதியை வழங்க முன்வந்தார்.

‘திரைப்படத் தயாரிப்பில் எந்தக் கள அனுபவமும் இல்லாமல் 20 லட்சத்தில் எடுத்துவிடலாம் எனத் திட்டமிட்டேன். ஆனால் முடியும்போது அது 75 லட்சமாக வளர்ந்து நின்றபோது திகைப்பாக இருந்தது. ஏனென்றால் திருநங்கையரை வைத்துப்படமெடுக்க இரண்டு மடங்கு வாடகை கொடுத்தாலும் வீடு கொடுக்க யாரும் தயாராக இல்லை. கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா நடக்கும் விழுப்புரத்திலேயே இதுதான் நிலை. ஒரு நண்பர் கொடுத்த வெட்டவெளியில் செட் அமைத்தே எல்லா காட்சிகளையும் எடுக்கவேண்டியிருந்தது. திருநங்கையர் தொடர்பான காட்சிகளைப் படமாக்கும்போது வேடிக்கை மனோபாவத்துடன் கூடுபவர்கள் தரும் இடையூறுகளைச் சமாளிப்பது, பாதுகாப்பு, காவல்துறை அனுமதி இப்படி எல்லாமே பெரும் சவாலாக இருந்தன. ஆவணப்படங்களோடு புழங்கிவந்த நான் ஒரு கதைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதைப்பற்றி சில மனக்கணக்குகளைக் கொண்டிருந்தேன். ஏற்கனவே அறிமுகமான மூத்த ஆவணப்பட இயக்குநர்கள், முற்போக்கு எண்ணம்கொண்ட இயக்குநர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பியிருந்தேன். அது எத்தனை அபத்தம் என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன். ‘இது உன்னுடைய முதல் படம். இது நல்லாயிருக்க வாய்ப்பில்லை’ என்று படத்தைப் பார்க்காமலேயே ஆசி வழங்கினார் ஓர் இயக்குநர். சில தொழில்நுட்ப ஆலோசனைகள் கேட்டபோது ‘30 வருசமா கஸ்டப்பட்டுக் கத்துக்கிட்டதை 3 நாள்ள கத்துக்கப் பாக்குறியே திவ்யா?’ என்றார் இன்னோர் ஆவணப்பட முன்னோடி. பட வெளியீடு தொடர்பாக பேசுவதற்கு வரச்சொல்லிவிட்டு செல்பேசி அழைப்பையே புறக்கணித்தவர்களையும் சேர்த்து ஒரு வணிகநோக்கமற்ற படைப்பின் மேல் அக்கறை கொள்வதற்கு யாருமற்ற சூழலில், சென்சாரில் A/U சான்றிதழுக்காக பெரும்பாடு பட்டோம். ஆனாலும் A சான்றிதழே கிடைத்தது. A என்பதாலேயே பல நிறுவனங்கள் பின்வாங்கின. திரையரங்க வெளியீடுக்கு வாய்ப்பற்ற நிலையில்தான் இணைய வெளியீட்டுக்கு முயன்றோம். இறுதியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முயற்சியில் 'பிளாக் ஷீப்’ ஓடிடி தளம் வெளியிட முன்வந்தது. 30 ரூபாய் கட்டணத்தில் வெளியான எங்கள் 8 வருட உழைப்பு, ஒருவாரத்திலேயே சட்டவிரோதமாகத் தரவிறக்கம் செய்யப்பட்டு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டது. ஒருவர் 30 ரூபாய் செலுத்தி படம்பார்த்தால் 4 ரூபாய் எங்களுக்கு கிடைக்கும். இதுவரை ஒருலட்சம் நிமிடங்களைத் தாண்டி ஜில்லு படம் பார்க்கப்பட்டதான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அதன்மூலம் எங்கள் தயாரிப்பாளருக்குக் கிடைத்தது 75ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான தொகைதான். சமூக ஊடகங்களில் 50 ஆயிரம்பேர் என்னைப் பின் தொடர்கிறார்கள். தமிழகம் முழுவதும் பல்வேறு சமூகச் செயல்பாட்டாளர்களோடு அறிமுகம் உள்ளவளாகவும் இருக்கிறேன். ஆனாலும் தனிப்பட்ட திரையிடல்கள்களோ, 30ரூபாய் செலுத்தி படம்பார்த்துவிடும் தோழர்களையோ எதிர்கொள்ள இயலவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. வணிக நோக்கமற்ற ஒரு கலைச் செயல்பாட்டை தமிழகம் எதிர்கொள்ளும்விதம் எனக்குப் பல்வேறுகேள்விகளை எழுப்பியிருக்கிறது என்கிறார் இயக்குநர் திவ்ய பாரதி.

ஐந்து நபர்களுக்கு மிகாத ஒரு படப்பிடிப்புக் குழுவைக் கொண்டு ஒரு முழுநீளத் திரைப்படத்தை தயாரித்த வகையில் காணப்படும் தொழில்நுட்பக் குறைகளையெல்லாம் கடந்து ‘ஜில்லு’ ஒரு முக்கியமான படமாக இருக்கிறது. திருநங்கையரின் வாழ்வியலை அறிந்துகொள்ளும், ஆய்வு செய்யும் ஆவலுள்ளவர்களுக்கும் மாற்றுப் பண்பாட்டுச் செயல்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கும் இப்படம் ஒரு காட்சி ஆவணமாக இருக்கும். இலக்கியம், சமூகவியல், சமூகப்பணி, ஊடகவியல், பண்பாட்டியல் போன்றவற்றைக் கற்பிக்கும் கல்விப்புலங்கள் இத்திரைப்படத்தைத் திரையிட்டு ஆதரிக்கவேண்டும். அதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு மாற்றுப்பாலினத்தவர் பற்றிய கற்பிதங்களை களைந்து பாலியல் மற்றும் பாலினம் (Sexuality & Gender) பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க முடியும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com