காற்றில் உந்தன் கீதம்!

திசையாற்றுப்படை - 35
காற்றில் உந்தன் கீதம்!
Published on

ஜானகியும் இளையராஜாவும் எனக்கு ஒன்றாகவே அறிமுகம் ஆனார்கள். அன்னக்கிளி படத்தின் பாடல்களில் பாடியிருப்பவர் ஜானகி என்றொரு பாடகி என்பதைக் கண்டுகொள்ள சில வருடங்கள் ஆனது. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பாடியிருந்தாலும் ஜானகியின் பொற்காலம் இளையராஜாவுடன் அன்னக்கிளியிலிருந்தே தொடங்குகிறது.

ஜானகி முறையான இசைப்பயிற்சி எதையும் தீவிரமாகக் கற்றதாகத் தெரியவில்லை. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஜானகி தனது 19வது வயதில் கன்னடமொழியில்தான் தன் முதல் பாடலைப் பாடினார். 1957இல் தொடங்கிய ஜானகியின் திரையிசைப் பயணத்தில் கன்னடமொழியில்தான் அதிகப் பாடல்களையும் பாடியிருக்கிறார். அதே ஆண்டில் மலையாள மொழிப் படத்திலும் பாடத்தொடங்கிய ஜானகி அடுத்த சில ஆண்டுகளிலேயே தென்னிந்திய மொழிகளில் பரவலாகப் பாடத்தொடங்கிவிட்டார். 60 ஆண்டுகளில் ஏறத்தாழ 48000 பாடல்கள் பாடியிருப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் 60 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 800 பாடல்கள் பாடியிருக்கவேண்டும். நாளொன்றுக்கு குறைந்தது 2 பாடல்கள். இந்தியாவில் அதிகப் பாடல்கள் பாடியவர்களாக ஜேசுதாஸ் (ஏறத்தாழ) 50000, லதா மங்கேஷ்கர் 30000த்திற்கும் மேல், பாலசுப்ரமணியம் 40000த்திற்கும் மேல், முகம்மது ரஃபி 28000, சித்ரா 25000, சுசீலா 17000, குமார் சோனம் 21000 என்பதாக கணக்கு நீள்கிறது. அகில உலகத்திலும் இதுபோல் ஆயிரக்கணக்கில் பாடல்கள் பாடியிருப்பவர்கள் இந்திய திரைப்பாடகர்கள் மட்டுமாகவே இருப்பார்கள். இத்தகைய அதிர்ஷ்டமும் வாய்ப்பும் வேறெங்கும் சாத்தியமில்லை. பாப் உலகின் முடிசூடா மன்னரான மைக்கேல் ஜாக்சன்கூட 100 பாடல்களைத் தொடவில்லை.

மிகக்குறுகிய காலத்திலேயே இசையமைப்பாளர்களின் விருப்பமிகு தேர்வாக ஜானகி மாறியதற்கு எவையெல்லாம் காரணங்களாக இருக்கமுடியும் என்ற வினா எழுவது இயல்பானது. பொதுவாகவே திரையிசையில் பாடகர்களின் தேவை மிக அதிகமாக இருந்தாலும், எண்ணிக்கையில் மிகக் குறைவான பாடகர்களுக்கே தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. காரணம் திரையிசையில் மெட்டமைக்கப்பட்ட ஒரு பாடலை சிலமணிநேரத்திற்குள் உள்வாங்கிக் கொள்ளும் திறன் முதன்மையான தகுதியாகக் கருதப்படுகிறது. மிகச்சிறந்த குரல்வளம் கொண்ட, முறையான சங்கீதப் பயிற்சி மிக்க பல பாடகர்களுக்கும்கூட புதிதான ஒரு மெட்டை புரிந்துகொண்டு வெளிப்படுத்தும் திறன் இருப்பதில்லை. இரண்டாவதாக பாடலுக்குத் தேவைப்படும் ‘பாவம்’ அல்லது உணர்ச்சி என்பது. அது காதல், காமம், தாய்மை, வெறுமை, நம்பிக்கை, இயலாமை என பல்வேறு கதைச்சூழல்களைக் கொண்டிருக்கும் என்பதால் பாடகர்கள், பாடலின் ஆன்மாவை சட்டென உள்வாங்கக் கூடியவர்களாக இருக்கவேண்டும். மூன்றாவதாக குரலின் தனித்துவம். மனிதக் குரல்கள் என்பவை மனித முகங்களைப் போலவே தனித்துவமானவை. ஒருவரின் குரலைப்போல் இன்னொருவரின் குரல் இருப்பதில்லை. ஒரு வகையில் எல்லாவகையான குரல்களும் இசைக்கத் தகுந்தவையே. ஆனால் திரையிசையில் காலந்தோறும் இசையமைப்பாளர்களின் தனிப்பட்ட ரசனை மற்றும் தேர்வால் ஒரு வகையான ‘தரப்படுத்தல்’ (Standardisation) நிகழ்ந்துவிடுகிறது. தொடக்ககால தமிழ்த்திரையிசையில் நாடகங்களின் செல்வாக்கு இருந்த காரணத்தால் தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் போன்ற உச்ச ஸ்தாயி பாடகர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். எஸ்.பாலச்சந்தரின் ‘பொம்மை’ திரைப்படத்தின் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ எனும் பாடலே ஜேசுதாசின் முதல் தமிழ்ப்பாடல். அது முதல் ஏசுதாசின் ‘கீழ் ஸ்தாயி’ ஆண்குரலின் அடையாளமாக மாறியது எனக்கருத இடமிருக்கிறது. பின் 1990களுக்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ‘உச்ச ஸ்தாயி’ பாடகர்களை அறிமுகப்படுத்தினார். விளைவாக பாகவதர் குரலுக்கு இணையான, சுக்வீந்தர் சிங், சித் ஶ்ரீராம் போன்ற பாடகர்கள் செல்வாக்குப் பெற்றனர். அதுபோலவே பெண்குரல் என்பது எளிதாக உச்ச ஸ்தாயியில் சஞ்சரிக்கக்கூடிய குரலாக இருந்தாக வேண்டியிருந்தது. அந்த வகையில் ஜானகி எல்லா வகையிலும் இசையமைப்பாளர்களின் விருப்பமிகு தேர்வாக இருந்தார்.

1958இல் வெளியான ‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்காக எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்துடன் இணைந்து பாடிய 'சிங்கார வேலனே தேவா’ பாடும்போது அவர் தன் இருபதுகளைத் தாண்டியிருக்கவில்லை. மிக நீண்ட இசைப்பயிற்சியும் அபாரமான இசையறிவும் கொண்டவர்களால் மட்டுமே இப்படியொரு பாடலை எதிர்கொள்ளமுடியும். ஜானகி எப்போதுமே பாடும்போது பாடலுக்குத் தேவையான அலங்காரங்களை உள்ளார்ந்து கற்பனைசெய்து முழுக்க குரலால் வெளிப்படுத்துவார். எத்தனை சிக்கலான பிர்காக்களையும் ஆலாபனைகளையும் பாடும்போதுகூட உடலில் சிறு அசைவுகளையும் அவரிடத்து காண இயலாது. சில பாடகர்களின் கையசைவுகளும் தலை யாட்டல்களும் பாடலின் நுணுக்கத்தைவிடவும் கூடுதலாக இருப்பதைக் காணமுடியும். அசையாமல் பாடுவதுதான் சிறந்தது என்பதல்ல. அடிப்படையில் ஜானகி ஒலிப்பதிவுக்கூடத்தில் பாடுபவர் மட்டுமே. அவர் ஒரு நிகழ்த்துபவர் அல்ல. மேடைகளில் பாடும்போதும் உடலில் சிறு அசைவையும் வெளிப்படுத்தமாட்டார். அந்தக்கால மரபு அப்படித்தான் இருந்தது. மங்களகரமான பெரிய வட்டப்பொட்டுடன் கழுத்துவரை மூடிய உடையுடன் ஒரு தனி அடையாளத்தைப் பேணிவந்தார். இதன் தொடர்ச்சியாக மெல்லிசைக் கச்சேரிகளில் பாடும் பாடகிகள்கூட ஜானகியின் பாணியையே பின்பற்றினார்கள். அடக்க ஒடுக்கமாக அசையாமல் பாடுவதை ஒரு கூடுதல் தகுதியாக அக்கால ரசிகர்கள் கருதினார்கள். இப்போது பாடகர்கள் நிகழ்த்துபவர்களாக மாறிவிட்டார்கள். கவர்ச்சிகரமான உடை, அங்க அசைவுகள், முடிந்தால் நடன நகர்வுகள் என்று அடுத்த தளத்துக்கு இசை நிகழ்ச்சிகள் நகர்ந்துவிட்டன.

இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களைப் பாடும் பேறு ஜானகிக்கு வாய்த்தது. ஏற்கனவே பல அவர் பாடியிருந்த பாடல்களை ராஜா கவனித்து அவரின் பன்முக பரிமாணங்களை உணர்ந்திருக்கக்கூடும். அதனாலேயே பெண்குரலில் வேறுபட்ட சுவைகள் தேவைப்படும் போதெல்லாம் ஜானகி ராஜாவின் முதல் தெரிவாக இருந்திருக்கிறார். உச்ச ஸ்தாயிக்குச் செல்லும்போது சற்றுக் கீச்சிடுவதையும், ஆண், பெண், மழலை, மூதாட்டி என குரல் மாற்றுவதையும் ‘மிமிக்’ செய்கிறார் என்று அவற்றைக் குறைகளாகச் சிலர் குறிப்பிடுவதுண்டு. ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு பாடல்களை ஒலிப்பதிவு செய்துவிடும் இளையராஜா போன்ற ஒருவருக்கு கற்பூரம் போல் பாடலின் ஆன்மாவைப் பற்றிக்கொள்கிற ஜானகி போன்ற ஒருவர் உடனிருப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லைதான்.

ராஜாவின் இசையமைப்பில் அபாரமான பாடல்களை அநாயசமாக பாடியவர் ஜானகி. முதல்மரியாதையில் ‘ராசாவே ஒன்ன நம்பி’ ஒரு அற்புதமான பாடல். அது வைரமுத்து உச்சத்தைத் தொட்ட பாடல்களில் ஒன்று என்றும் கூறலாம். முழுக்க பேச்சுத்தமிழும், வட்டாரத் தமிழிலுமாக எழுதப்பட்ட பாடல்.

‘பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது

ஒன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மியடிக்குது

களங்கம் வந்தா என்ன பாரு அதுக்கும் நெலான்னுதான் பேரு

அட மந்தையில நின்னாலும், அது வீரபாண்டி தேரு’

என்று திரைப்பாடல்கள் சிலசமயங்களில் கவிதைக்கு அருகில் சென்றுவிடும். அத்தகைய அபூர்வ தருணங்களைக் கொண்ட பாடல். இந்தப்பாடலில் ஜானகி சோகம், பரிவு, ஆறுதல் ஆகிய அத்தனை உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஜானி திரைப்படத்தின் ‘காற்றில் எந்தன் கீதம்’ இன்னொரு தேன் துளி. ராஜாவின் கற்பனை வளம் மிக்க மெட்டு. ஒரு மெல்லிய கோடுபோல் ஆரம்பிக்கும் ஜானகியின் ஆலாபனையும் ராஜாவின் இடை இசையின் வர்ணஜாலங்களும் ஜானகியின் இன்னொரு பரிமாணம். இதற்கு இணையாக எத்தனையோ பாடல்களைச் சொல்ல முடியும். ‘பொன்வானம் பன்னீர் துவுது இந்நேரம்’(இன்று நீ நாளை நான்), புத்தம் புது காலை ( அலைகள் ஓய்வதில்லை), சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் (மைக்கேல் மதன காமராஜன்), தென்றல் வந்து தீண்டும்போது (அவதாரம்), சங்கத்தில் பாடாத கவிதை (ஆட்டோராஜா), கண்மணியே காதல் என்பது (ஆறிலிருந்து அறுபதுவரை) ரஹ்மான் இசையில், நெஞ்சினிலே (உயிரே), மார்கழித்திங்கள் அல்லவா (சங்கமம்) இன்னும் எண்ணற்ற பாடல்களில் விதவிதமான உணர்வுகளை மெனக்கெடாமல் வெளிப்படுத்தியவர். உச்சரிப்பு சுத்தத்தோடு கச்சிதமான உணர்வும் உயிரும் ததும்பும் பாடல்களைத் தந்த, நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு பாடல்களை பாடிக்கொண்டிருந்த ஜானகி இசையின் ஆதாரமான நிசப்தத்தில் ஆழ்ந்துவிட்டார். ஆனால் உலகின் எந்த மூலையிலும் ஜானகியின் குரல் பாடல்களாக காற்றில் மிதந்து கொண்டிருப்பதை யார் தடுக்க முடியும்?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com