கண்ணகி நகர் என்று கூகுள் தேடுபொறியில் அடித்தவுடன் கிடைத்த முதல் தகவல் இப்படி ஆரம்பிக்கிறது- “சென்னையின் தெற்குப்பகுதி யிலுள்ள கண்ணகிநகர் சுமார் 1.25 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு மோசமான சமூகமாகும். மிகப்பெரிய மீள்குடியேற்ற குடியிருப்புகளைக் கொண்ட இது, நகரத்தின் குற்றச் செயல்களுக்கான மையமாக அறியப்படுகிறது. இது தானாகவே இந்த சமூகத்தை பெண்கள், குழந்தைகளுக்கு அதிக ஆபத்துள்ள பகுதியாக மாற்றுகிறது.”
சென்னை மாநகர் முழுவதற்கும் கண்ணகி நகரிலிருந்துதான் அனைத்துக்குற்றங்களும் ஏற்றுமதியாகின்றன என்பதுபோன்ற அயோக்கியத்தனமான கருத்தில்லையா இது? மக்களைப் பாதிக்கும் ‘வொயிட் காலர்’ குற்றவாளிகள் நகரெங்கும் நிறைந்திருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் அவர்கள் யாரும் சேரிப்பகுதிகளிலோ, உடலுழைப்பால் வாழும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இல்லை. அதையெல்லாம் விடுத்து ஏழை மக்கள் நிறைந்த ஒரு பகுதிபற்றி குற்றப்பிரதேசமாக கருத்தை உருவாக்கி வைத்திருப்பதே உள்நோக்கம் நிறைந்த கீழ்த்தரமான அரசியலாகும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க விரும்பும் ஆற்றங்கரை, கடற்கரை, ஏரிக்கரை என்ற பகுதிகளில் வாழும் ஆதிக்குடிகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அள்ளிக்கொண்டுவந்து கொட்டும் இடமாகத்தான் 2000-மாவது ஆண்டில் கண்ணகிநகர் ஆரம்பிக்கப்பட்டது. மழை நீர் வடிகால் எதுவுமின்றி, போதிய சாக்கடை வசதிகளற்ற ஒரு குடியிருப்பில் தங்கள் வாழ்விடத்தைவிட்டு துரத்தப்பட்ட மக்கள் வாழ நேர்ந்தது.
எல்லாப்பகுதிகளையும் போலவே அங்கும் சில சமூகவிரோத, குற்றச்செயல்களைச் செய்பவர்கள் இருந்திருக்கலாம்தான். ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தப்பகுதி முழுவதையும் குற்றப்பிரதேசமாகச் சித்தரிப்பதன் மூலம் அதிகாரவர்க்கம் உழைக்கும் மக்களை வாழ்விடம்விட்டுத் துரத்தும் தங்கள் குற்றவுணர்ச்சியை மறைத்துக்கொண்டது. இதன் மறுவிளைவாக வந்த இடத்திலும் அவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கோர இயலவில்லை. பொதுச்சமூகம் எந்த ஆதரவையும் தராமல் அவர்களை ஒதுக்கியே வைத்திருக்கிறது.
கண்ணகி நகர் என்ற பெயரைச் சொன்னால் எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காது, அந்தக் குழந்தைகளுக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்காது, இதுதான் கண்ணகி நகரின் தலபுராணம்.
கார்த்திகாவைப் பற்றிச் சொல்வதற்கு எதற்கு கண்ணகி நகரைப்பற்றி இவ்வளவு விரிவாகச் சொல்லவேண்டுமென்றால், கண்ணகி நகரின் அவலத்தைப் புரிந்துகொண்டால்தான் கார்த்திகாவின் பெருமையைப் புரிந்துகொள்ள முடியும் என்பதே.
கண்ணகி நகரின் குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையோடு உழன்றுகொண்டிருந்தபோது கே.ராஜி என்னும் ஒரு பட்டதாரி இளைஞரின் முயற்சியால் உருவானதுதான் கண்ணகி நகர் பெண்கள் கபடிக்குழு. அங்குள்ள பெண்கள் பெரும்பாலும் அதிகம் படிக்காதவர்கள், அதனால் கபடி விளையாட தங்கள் மகள்களை அனுப்ப முன்வரவில்லை. தங்கள் பெண்கள் அரைக்கால் டவுசரும், பனியனும் அணிந்து விளையாடுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை சமாதானப்படுத்தி ஓர் அணியை உருவாக்கினாலும், அவர்களை வெளியூர் அழைத்துச்சென்று விளையாடுவதற்கு அனுமதி வாங்குவது பெரும் சவாலாக இருந்தது.
அதையும் தாண்டி கண்ணகிநகர் பெண்கள் கபடிக்குழு பெற்றுவந்த வெற்றிகள் அந்தப்பகுதி மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும், பெருமிதத்தையும் உண்டாக்கியது. சுஜி, காவியா போன்றவர்கள் நட்சத்திர ஆட்டக்காரர்களாகப் புகழ்பெற்றார்கள்.
இந்நிலையில்தான் காவ்யாவைத் தொடர்ந்து தன் இரண்டாவது மகள் கார்த்திகாவையும் கபடி விளையாட அனுப்பி வைத்தார் அந்தக் கண்ணகி நகர்த் தாய்.
தொடங்கியநாள் முதல் கார்த்திகா பெற்ற வெற்றிகளும், விருதுகளும் ஏராளம். கடந்த மாத தொடக்கத்தில் உத்தரகாண்டில் நடைபெற்ற 18-வயதுக்கும் கீழுள்ளவர்களுக்கான தேசிய கபடிப்போட்டியில் தமிழ்நாடு அணியின் தலைவியாக வழிநடத்திச் சென்றவர் கார்த்திகாதான், இந்த அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது.
அண்மையில் தேசிய அணிக்கான பயிற்சி முகாமுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார், விரைவில் இந்தியப் பெண்கள் அணிக்குத் தேர்வாவார் என்பது உறுதி.
இந்த வருடத்திற்கான முதல்வர் கோப்பைக்கான போட்டியில் கார்த்திகா தலைமையிலான கண்ணகிநகர் அணியே வென்றது, இதற்காக துணை முதலமைச்சரால் பாராட்டப்பட்டு, முதலமைச்சரின் கரங்களால் பரிசு பெற்றார்.
தனியார் விளையாட்டு அமைப்புகள் நடத்தும் மாநில மற்றும் தேசிய அளவிலான பல கபடிப்போட்டிகளில் தனது அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்ததுடன், சிறந்த வீரர்களுக்கான சாம்பியன் கோப்பைகளையும் வென்றுள்ளார். உலகம்முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கும் கார்த்திகாவுக்கு அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் கார்த்திகா எக்ஸ்பிரஸ்!
இவ்வளவு சிறப்புகளைப் பெற்றிருக்கும் கார்த்திகாவின் வயது பதினாறு. கண்ணகிநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பில் படிக்கிறார். அவரை ஒரு கல்லூரியில் பேச அழைத்தார்கள், உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லுகிறேன் என்று ஆரம்பிக்கிறார் கார்த்திகா:
சேரிப்பகுதியிலுள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளி, புதிதாக வேலைக்கு வந்த அதன் கணக்கு ஆசிரியர் ஒரு மாணவியைப் பார்த்து ஆங்கிலத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறார், ‘நான் உனக்கு இப்போது இரண்டு சாக்லேட்கள் தருகிறேன், வகுப்பு முடிந்து கிளம்பும்போது இரண்டு சாக்லேட்கள் தருகிறேன்... அப்படியானால் உன்னிடம் மொத்தம் எத்தனை சாக்லேட்கள் இருக்கும்..?’
‘என்னிடம் ஐந்து சாக்லேட்கள் இருக்கும் டீச்சர்..’
மாணவிக்கு ஆங்கிலம் புரியவில்லை என்று நினைத்த டீச்சர் மீண்டும் அதே கேள்வியைத் தமிழில் கேட்கிறார், ‘கவனமாக கேள்வியைப் புரிந்துகொள்...’
‘கேளுங்க டீச்சர்’
‘நான் உனக்கு இரண்டு சாக்லேட்கள் தருகிறேன், வகுப்பு முடிந்து கிளம்பும்போது இரண்டு சாக்லேட்கள் தருகிறேன்.. அப்படியானால் உன்னிடம் மொத்தம் எத்தனை சாக்லேட்கள் இருக்கும்..?’
‘ஐந்து சாக்லேட்கள் இருக்கும் டீச்சர்...’ சிறுமி மீண்டும் உறுதியாகக் கூறுகிறாள்.
‘முட்டாள், உனக்கு கணக்குத் தெரியாதா... முதலில் இரண்டு சாக்லேட்டும், பிறகு இரண்டு சாக்லேட்டும் கொடுத்தால் உன்னிடம் எப்படி ஐந்து சாக்லெட்கள் இருக்கும்..?’
‘என் அம்மா எனக்கு ஒரு சாக்லேட் கொடுத்து அனுப்பியிருக்கிறார் டீச்சர், அத்தோடு நீங்கள் கொடுத்த சாக்லேட்களையும் சேர்த்தால், என்னிடம் மொத்தம் ஐந்து சாக்லேட்கள்தானே இருக்கும். இதில் என்ன தவறு..?’
அந்த டீச்சரின் தவறு உங்களுக்குப் புரிகிறதா...? முதலில் அவர் அந்த மாணவிக்கு ஆங்கிலம் புரியவில்லை என்று நினைத்தார், அதன்பிறகு அவளுக்கு கணக்குத் தெரியவில்லை என்று நினைத்தார். ஆனால் அவரால் ஒரு ஏழைத்தாய் தன் மகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்திருப்பார் என்று மட்டும் நினைக்க இயலவில்லை. நம் எல்லோரிடமும் ஒரு முன் அனுமானம் இருக்கிறது, இந்தப் பகுதியில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவு செய்துகொள்கிறோம், அது தவறு’
- என்று சொல்லிவிட்டு இறங்கிப்போகிறாள் அந்த பதினாறு வயதுச் சிறுமி.
இது கார்த்திகாவின் ஒற்றைக்குரல் மட்டுமல்ல, கண்ணகி நகரின் மொத்தக்குரல். கண்ணகி நகர் குற்றப்பிரதேசம் என்பவர்கள் முகத்தில் உமிழும் குரல். இந்தியா முழுவது கபடியை அறிந்த ஒவ்வொரு நபரும் கண்ணகி நகரையும், அதன் பெருமைகளையும் அறிவர். அதைத்தான் கார்த்திகா, சுஜி, காவ்யா, ஜெஸி போன்ற வீரக்குழந்தைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த அணியின் மற்ற வீராங்கனைகளும், பயிற்சியாளர் ராஜூவும் பாராட்டுக்குரியவர்கள்.
தன் அணியின் சார்பாக கார்த்திகா வைக்கும் கோரிக்கை, ‘நாங்கள் இன்னும் மண் தரையில்தான் பயிற்சி எடுக்கிறோம். மழை பெய்தால் பயிற்சியே எடுக்க முடியாது. தேசிய, சர்வதேசப் போட்டிகள் அனைத்தும் நவீன சிந்தடிக் விரிப்புகளைக் கொண்ட உள்ளரங்குகளிலேயே நடைபெறுகின்றன, எனவே அரசு எங்களுக்கு இத்தகைய வசதிகளோடு கூடிய ஒரு உள்ளரங்குப் பயிற்சி மையத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், நாங்கள் இன்னும் சாதிப்போம்,”
கார்த்திகாவின் கோரிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு வைக்கிறோம், அவரால் இது நடந்தால் மிகவும் மகிழ்ச்சி. கொடையுள்ளம் கொண்ட நிறுவனங்களும் கண்ணகிநகர் அணிக்கு உதவ முன்வரலாம், அது இன்னும் பல கார்த்திகாகளை உருவாக்கும்!