
வீட்ல கப்பு வெக்க எடமில்லை சார்… சின்னக் கப்பையெல்லாம் அண்டாவுல போட்டு வச்சிருக்கேன், பெரிய கப்பையெல்லாம் போர்டு ரூம்ல வச்சிருக்கோம்…” – என்கிறார் இந்திராணி.
“எங்கம்மா சிரிச்சே நான் பாத்ததில்ல சார்; இன்ன்னைக்கு எங்கம்மா சிரிக்கறாங்க.” எனப் பூரிக்கிறார் கீர்த்தனா..
யாரிந்த இந்திராணி, யாரிந்த கீர்த்தனா?
சென்னை காசிமேட்டில் வசிப்பவர் இந்திராணி. கீர்த்தனா அவருடைய மகள். கிடைத்த வேலைகளுக்குத் தினக்கூலியாகச் செல்பவர் இந்திராணி. இவருக்கு மகளுடன் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் துணிக்கடையில் வேலைசெய்கிறார்கள்.
பத்துக்குப் பத்து அளவுள்ள மழைக்கு ஒழுகும் வீட்டில் வசிக்கும் கீர்த்தனா, மாலத்தீவில் அண்மையில் நடந்துமுடிந்த சர்வதேச கேரம் போட்டியில் ஒற்றையர், இரட்டையர், குழுப்போட்டி என மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வந்திருக்கிறார்.
கீர்த்தனாவின் தந்தை லோகநாதனும் தினக்கூலித் தொழிலாளி. அவரும் கேரம் விளையாட்டு வீரர்தான். தன் மகள் ஆறு வயதாக இருக்கும்போதிருந்தே அவளுக்கு சிறிய போர்டை வைத்து கேரம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் லோகநாதன். கீர்த்தனாவும் தன் வயதிற்கேற்ற போட்டிகளில் பங்கேற்று வென்றுவந்தார்.
கடந்த 2017-இல் கீர்த்தனாவின் தந்தை மாரடைப்பால் காலமானார், அதைத் தொடர்ந்தது கொரானா கால வறுமை, தன் படிப்பையும் விளையாட்டையும் விட்டு ஒரு ஸ்டீல் பட்டறையில் வேலைக்குப் போனார் கீர்த்தனா.
தந்தையின் மரணமும், குடும்பத்தைச் சூழ்ந்த வறுமையும் அந்தக் குழந்தையின் கனவுகளைத் தோண்டிப்புதைத்தது. கேரம் காயின்களோடு விளையாடிய விரல்கள், பாத்திரம் செய்யும் இயந்திரங்களில் தேய்ந்துகொண்டிருந்தன. வறுமையில் புதைந்துபோன பல கோடி குழந்தைகளின் கனவைப் போல, கீர்த்தனாவின் கேரம் கனவும் புதைந்து போயிருக்கவேண்டியது… ஆனால், அப்படி ஆகிவிடாமல் காப்பாற்றினார், நித்யானந்தம்!
அவர் அந்தப் பகுதியின் கேரம் பயிற்சியாளர். உலகப் பதக்கத்தை வெல்லவேண்டிய ஒரு பெண்ணின் திறமை ஸ்டீல் பட்டறைக்குள் கருகிவிடக்கூடாது என்று அவர்தான் கீர்த்தனாவிடமும் அவரின் அம்மாவிடமும் பேசினார். அவர்களுக்கும் கீர்த்தனா கேரம் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் வாழ்வாதாரம்?
குடும்பப் பொறுப்புகளை, தான் பார்த்துக்கொள்வதாக கீர்த்தனாவின் மூத்த சகோதரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது விளையாட்டிற்கான செலவுகளை தான் பார்த்துக்கொள்வதாக நித்தியானந்தம் முன்வந்தார். இப்படியாக மீண்டும் தன் விளையாட்டைத் தொடங்கிய கீர்த்தனா மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிகளை ஈட்டினார்.
தொடர்ச்சியாக, 2025 மார்ச் மாதம் நடைபெற்ற 52ஆவது தேசிய கேரம் போட்டியில் வென்று தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார். தேசிய சாம்பியன் என்னும் தகுதி அடிப்படையில் மாலத்தீவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது,
இதையறிந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கீர்த்தனாவை முதலமைச்சரிடம் அழைத்துச்செல்கிறார்… முதலமைச்சரின் ஆசியுடன், துணை முதலமைச்சர் ஒன்றரை லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ”என் மகள் வெற்றி பெறுவதற்கு இவையும் முக்கிய காரணம்.” என்கிறார் இந்திராணி.
கீர்த்தனாவின் கவனம் ஒருபோதும் வெற்றி தோல்வியில் இருந்ததில்லை, ஒவ்வொரு வாய்ப்பிலும் காயினை பாக்கெட் செய்யவேண்டும் என்பதைத் தாண்டி அவர் வேறெதையும் யோசிப்பதே இல்லை. எதிராளியின் முகத்தைக்கூடப் பார்ப்பதில்லை. பல நேரங்களில் தன்னோடு ஆடுவது யார் என்பதைக்கூட அவர் கவனத்தில் கொள்வதில்லை. அம்பைத் தொடுத்த அர்ஜூனனின் கண்களுக்கு குருவியின் கழுத்து மட்டுமே தெரியும் என்பதைப்போல ஆட்டத்தின்போது கேரம்போர்டின் நான்கு சட்டங்களைத் தாண்டி வேறு எதுவுமே அவரின் கண்களுக்குத் தெரியாது.
உலகக் கோப்பையை வென்ற ஆட்டத்தில்கூட எதிரில் ஆடியவர் பாராட்டிக் கைகுலுக்கியபோதுதான் ஆட்டம் முடிந்துவிட்டது என்பதும், தான் வெற்றி பெற்றோம் என்பதும் கீர்த்தனாவுக்கு தெரிந்தது என்கிறார், பயிற்சியாளர் நித்தியானந்தம்.
விளைவுகளைப் பற்றிய நோக்கமில்லாமல் செய்யும் செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் கீர்த்தனா இதன்மூலம் சொல்லும் செய்தியாகப் படுகிறது.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு அத்துறையின் அமைச்சர் உதயநிதிக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை.வென்றுதிரும்பியதும் ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கி பெருமைப்படுத்தினார்கள், முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும். இம்மாம்பெரிய ஊக்குவிப்போடு இன்னுமொரு சிறு அங்கீகாரமாக ஓர் அரசுப் பணியையும், அரசு வீட்டையும் தனி விழாவாக நடத்தி வழங்கினால், கீர்த்தனாவைப் போல கடுமையாகப் பாடுபட்டு உலகமே பாராட்டும்படியாக உயர்ந்துநிற்க வளரும் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும்.
ஏற்கெனவே உலகக்கோப்பையை வென்ற காசிமா.எம்.பாஷாவும் காசிமேடு பகுதியில் இருக்கிறார். அரசு சார்பில் ஒரு கேரம் அகாடமியை வடசென்னையில் தொடங்கி, இந்த உலக சாம்பியன்களைக் கொண்டு பயிற்சியளித்தால், மேலும் பலர் உலகப் புகழ் பெறுவார்கள்.