எழுத்தும் சமூகமும்

எழுத்தும் சமூகமும்

Published on

இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பாக அவ்விருது அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. அந்த எழுத்தாளருக்கு முன்மொழியப்பட்டது என்பதற்காகவே ஒன்றிய அரசு பதறிப்போய் அந்த விருதுகளையே ரத்து செய்தது என்று யூகித்தார்கள்.  அப்படி விருது பறிக்கப்பட்ட எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன்.

அரசு அப்படிப் பதறவேண்டிய அவசியமென்ன..?

காரணம் தமிழ்ச்செல்வன்  ஓர் இடதுசாரி எழுத்தாளர். அதுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பண்பாட்டு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர். அப்படியானவர் ஒன்றிய அரசின் விருதுக்குத் தேர்வு பெறலாமா.. அதனால்தான் விருதுக்கலைப்பு என்றார்கள்.

ஆனாலும் பொறுப்புள்ள கலைஞனாக தமிழ்ச்செல்வன் சொன்னார், ‘எனக்கு விருது தராவிட்டாலும் பரவாயில்ல, ஆனால் விருது கொடுப்பதை நிறுத்திவிடாதீர்கள்.’

தமிழ்ச்செல்வன் சிறந்த சிறுகதை ஆசிரியர், அவரது  ‘வெயிலோடு போய்’ இன்றுவரைக்கும் போற்றப்படும் தொகுப்பு. அதிலிருந்த ஒரு சிறுகதை இயக்குநர் சசியால் பூ என்னும் திரைப்படமாக்கப்பட்டது. ஆனாலும்  தனிப்பட்ட முறையில் தன்னை எழுத்தாளனாக வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளைத்துறந்து இயக்கவாதியாக சமூகப்பணியாற்றும் மனிதர்தான் ச.தமிழ்ச்செல்வன்.

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்தவர் தமிழ்ச்செல்வன். இவரின் தாய்வழிப்பாட்டனார் மதுரகவி பாஸ்கரதாஸ் தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் படத்தின் பாடலாசிரியர். தந்தை எம்.எஸ்.சண்முகம் திராவிட இயக்க எழுத்தாளர்.

தமிழ்ச்செல்வன் ஆரம்பகாலத்தில் காந்தியவாதியாகத் திகழ்ந்தார். நா.பா.வின் குறிஞ்சிமலர் நாயகன் அரவிந்தனை தனது ஆதர்சமாகக்கொண்டு, அரவிந்தனைப்போலவேவெள்ளைவேட்டி வெள்ளை சட்டையுடன் திரிந்ததாக அவரே சொல்லியிருக்கிறார்.

காந்தியமும், தேசபக்தியும் தூண்டியதால் அவர் ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு ஆங்கில நாவல்களைப் படிக்கத்தொடங்கினார்.கமலாதாஸ் கவிதைகள், பிரித்தீஷ் நந்தி, சஸ்தி பிரதா, பாரதிமுகர்ஜி ஆகியோரின் நாவல்களும் அவருக்கு விருப்பமானவையாக இருந்தன.

பட்டாளத்தில் எந்தவிதமான தனி அடையாளமும் இல்லாத அதன் இயந்திரத்தனமான ஒழுங்குகளுக்குள் பொருத்திக் கொள்ளமுடியாமல் சில ஆண்டுகளில் ஊர் திரும்பிய அவர் கோவில்பட்டியில் குடியேற நேர்ந்தது. இன்று பரவலாக அறியப்பட்டிருக்கும் பல இலக்கியவாதிகளோடு பல முற்போக்கு இலக்கிய இளைஞர்களின் தலைநகரமாக கோவில்பட்டி இருந்தது. தமிழ்ச்செல்வனும் அவர்களில் ஒருவரானார். ஜோதிபாசு முடிதிருத்தகம் என்னும் கடைதான் அவர்களின் தலைமைச் செயலகம்.

அப்போது அதிதீவீர இடதுசாரிக் கவிதைகள் எழுதுபவராக இருந்தார். கிழக்கு என்னும் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். அப்போது அவர் தன்னைப்பாதித்த காட்சியினைப்பற்றி அவர் கூறுகிறார், “எங்கள் தெருவில் பெரும்பாலும் எல்லாக்குழந்தைகளும் தீப்பெட்டி ஒட்டுவார்கள். மாலை நேரங்களில் ஒரு மிட்டாய்வண்டி சுற்றிலும் கலர்கலராக கண்ணாடி அடைத்து உள்ளே பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்துடன் விதவிதமான பண்டங்களுடன் அசைந்துவரும். டைண்... டைண்டைண்... என்ற அவ்வண்டியின் மணிச்சத்தம் கேட்டதும் தீப்பெட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் குழந்தைகள் எல்லோரும் அம்மாக்களின் கூப்பாடுகளைமீறி அந்த வண்டியைப் பார்க்க தெருவுக்கு ஓடிவருவார்கள்.மிட்டாய்வண்டியை வேடிக்கை பார்ப்பதால் கிடைக்கும் பரவசத்துக்கு ஈடுஇணை ஏது?

ஒருநாள் நான் வேடிக்கை பார்த்துக் ்கொண்டிருக்கையில் அக்குழந்தைகள் கண்ணாடிக்கு வெளியே கையை நீட்டி லட்டு ஜிலேபி என்றுஅவரவர்களுக்குப் பிடித்தமான பண்டங்களுக்கு நேராக கையைநீட்டி எடுத்துச் சாப்பிடுவதுபோல பாவனைசெய்து மென்று தின்பதுபோல ஞம் ஞம் என்று சத்தம்போட ஆரம்பித்தனர். காற்றுவெளியெங்கும் ஞம் ஞம் என்ற சத்தம் எதிரொலித்து என்னை முற்றிலும் நிலைகுலையச்செய்துவிட்டது

ஞம் ஞம் என்பதை அடுத்து அதை விழுங்குவதுபோல் கடக் கடக் என்று சத்தம் எழுப்பி தொடர்ந்து கூட்டமாக ஒரு சிரிப்புச் சிரித்தார்கள்.. அந்தச் சிரிப்புத்தான் என்னை இப்படி மாற்றியது என்று தோன்றுகிறது..”

அஞ்சல்துறையில் பணியாளராகச் சேர்ந்தார், அங்கிருந்த தொழிற்சங்கப்பணிகள் அவரை ஈர்க்கவே அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் சேர்ந்து கிளைச்செயலாளராகி, அதன் மாநிலத் தலைவர் பொறுப்புவரைக்கும் உயர்ந்து இருப்பது அவரது பொதுவுடமை இயக்க வரலாறு,

அரசுத் திட்டமான அறிவொளி இயக்கத்தின் தன்னார்வலராக ஊர் ஊராகச் சென்று வயதுவந்தோர் கல்வி, பெண்கல்வியினை வளர்ப்பதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரும்பங்கு வகித்தது. தோழர் ச.மாடசாமி இதில் பெரும் பங்காற்றினார். தமிழ்ச்செல்வனும் இதில் மகத்தான பணியாற்றினார்.

தமிழ்ச்செல்வனின் ஒப்பற்ற சமூகச்செயல்பாடு சமையறையிலிருந்து பெண்களை விடுவிப்பதாகும்.  ஆண், பெண் சமத்துவமெல்லாம் வீடுகளின் வாசல்வரைக்கும்தான் சாத்தியமாகிறது. வீட்டுப்பணிகள் குறிப்பாக சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலை கிடைக்கவேயில்லை, பெரும் நிர்வாகப்பணிகள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள் என்னும் உயரங்களை எட்டியிருந்தாலும் சமையலறை பெண்களை விடுவிக்கவில்லை.

இந்தப் பின்னணியில்தான் ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது என்று புத்தகம் எழுதிய தமிழ்ச்செல்வனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆண்கள் சமைக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை ஒரு தொடரியக்கமாக முன்னெடுத்து வருகிறார் தமிழ்ச்செல்வன். இதன் தொடர்ச்சியாக பல ஊர்களில் ஆண்களுக்கு சமையல் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. கம்யூனிஸ்ட் மாநாடுகளில் கலந்துகொள்ளும் ஆண்களுக்கான நுழைவுப்படிவங்களில் சமைக்கத்தெரியுமா என்னும் கேள்வி இடம்பெறுகிறது. இடதுசாரிகள் அரசியலைவிட்டுவிட்டு சமைக்கப்போய்விட்டார்கள் என்று ஒரு செய்தித்தாள் நக்கலடித்ததே இதன் வெற்றிக்குச் சான்றாகும்

இறுதியாக இந்தக் கட்டுரையை இப்படி முடிக்கலாம். தமிழ்ச்செல்வன் எழுதிய தமிழ்ச்சிறுகதைத்தடங்கள் என்னும் நூல்தான் சாகித்ய அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது, இதனால்தான் விருதுக் கமிட்டியே கலைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து எட்டு மொழிகளுக்கான செம்மொழி விருதை அறிவித்து அருமையான எதிர்வினையாற்றினார் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்த விருதுபெறும் முதல் நபராக தோழர் தமிழ்ச்செல்வனை அறிவிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com