நான் ஒரு சாதாரண டீக்கடைக்காரன்தான்!

பெருவழிப்பாதை - 28
நான் ஒரு சாதாரண டீக்கடைக்காரன்தான்!
Published on: 

கடந்தமாதம் டங்கல் கதைபோன்ற ஒரு நாயகனின் கதையைப் பார்த்தோம். இந்த மாதம் அயோத்தி நாயகனைப் பற்றிய கதையைச் சொல்கிறேன்.

அயோத்தியின் நாயகன் என்றால் ராமனின் கதையல்ல... அப்துல்மாலிக்கின் கதை, அயோத்தி திரைப்படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அப்துல் மாலிக்காக சசிக்குமார் வருவாரே... அந்த அப்துல்மாலிக்கின் உண்மையான பெயர் ஹரிகிருஷ்ணன், அயோத்தி என்பது கதையல்ல, நிஜம்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரின் கதையை திரைப்படமாக்குவதற்காக எழுதிக்கொண்டிருந்த இயக்குநர் மந்திரமூர்த்தி, தன் கதையில் வருவதுபோல ஒரு மனிதன் வாழ்ந்துகொண்டிருப்பதை ஒரு பத்திரிகை வாயிலாக அறிந்துகொண்டார்.

மதுரையிலிருக்கும் இந்த ஹரிகிருஷ்ணனைத் தேடிவந்து அவருடனே சிலகாலம் இருந்து தன் கதையை இன்னும் வலுப்படுத்திக்கொண்டார். இது ஹரிகிருஷ்ணன் என்னும் மனிதரின் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டது என்று படத்தின் ஆரம்பத்திலேயே அறிவித்தார்.

யார் இந்த ஹரிகிருஷ்ணன்...?

மதுரை ராஜாஜி மருத்துவமனையின் பின்புறம் பிணவறை செல்லும் வாயிலின் எதரில் மாருதி காபி பார் என்னும் டீக்கடையை வைத்திருப்பவர்தான் ஹரி...அவருடைய சொந்த ஊர் திருச்சி.

மதுரையிலுள்ள தன் மாமனின் மகளைத் திருமணம் செய்த ஹரி, மதுரைக்கே வந்து மனைவி வழிவந்த இடத்தில் டீக்கடை வைத்தார்.

மெல்ல மெல்ல கடையில் வியாபாரம் சூடு பிடித்தது. மார்ச்சுவரியிலிருந்து தரப்படும் சடலங்களுக்குச் சுற்றும் துணி, பூஜைப்பொருட்களைத் தேடி, அதை வாங்கச் செல்லும் மக்கள் அலைவதைக்கண்ட ஹரி, தன் கடையின் நடுப்பகுதியில் அந்தப் பொருட்களை வாங்கிவந்து விற்கத் தொடங்கினார்...

2003ஆம் வருடத்தின் ஒரு நாள்... காலை...

டீக்கடையில் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டிருந்தார் ஹரி. கலங்கிய முகத்தோடு வந்த வயதான பெண்மணியொருவர் வந்தார்.

“டீ வேணுமாம்மா...?” என்று ஹரி கேட்டார்.

வேண்டாமென்பதுபோலத் தலையாட்டிய அந்தத் தாய் தயங்கித் தயங்கி கல்லா மேசையின் மீது ஒரு சோடிக் கொலுசுகளை வைத்தார்.

“எதுக்கும்மா இது...?”

“என் மகள் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாள். பிரேதப்பரிசோதனை முடிஞ்ச பிறகு சடலத்தைத் தருவாங்க. நான் வெளியூரு, கைல காசுமில்ல, துணைக்கு யாருமில்ல. என் மகளைச் சுத்திக் கட்டறதுக்குத் துணியும், பூஜைக்குக் கொஞ்சம் விபூதி சந்தனமும் வேணும். ஊருக்கு எடுத்துட்டுப் போறதுக்கு வண்டிக்கூலிக்கும் பணம் வேணும்.”

ஹரி கலங்கிப்போனார். கொலுசுகளை அவரிடமே திருப்பிக்கொடுத்து விட்டு, துணியையும், பூஜைப் பொருட்களையும் கொடுத்தார்.

அத்துடன் அந்த ஏழைத்தாய் தனது மகளின் சடலத்தை ஊருக்குக் கொண்டுசெல்ல உதவிசெய்தார் ஹரி.

அரசாங்க ஆவணங்களுக்காக பிணவறையிலிருக்கும் சடலங்களைப் படமெடுத்துக் கொள்வது காவல்துறையின் தேவை. சுபகாரியங்களுக்குப் படமெடுக்கும் புகைப்படக்காரர்கள், ஸ்டுடியோக்காரர்கள் பெரும்பாலும் இதற்கு வரமாட்டார்கள். எனவே இதற்கு புகைப்படக்காரர்களைத் தேடி அலைவது காவல்துறையினரின் தலைவலி.

இவ்வாறான நேரத்தில்தான் ஹரிகிருஷ்ணனிடம் கேமரா இருப்பதை அறிந்த உள்ளூர் போலீஸ்காரர் ஒருவர் அவரையே புகைப்படமெடுத்துத் தருமாறு பணித்தார்.

ஏற்கெனவே சொன்னதுபோன்று, தனியார் அவசர சிகிச்சை ஊர்திகளோ, அமரர் ஊர்திகளோ பரவலாக இல்லாத காலமிது. தனியார் அமரர் ஊர்திகளின் போக்குவரத்து தொடங்கியிருந்தாலும், அவர்கள் கேட்கும்தொகை சாதாரண மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாதது.

ஒரு அநாதைப் பிணத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தின் அமரர் ஊர்திக்காகக் காத்திருந்த ஒரு போலீஸ்காரர், ‘ நீயே ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி இந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு உதவி பண்ணலாமே?’ என்றார். இவ்வளவு நாள் இதைப்பற்றி யோசிக்காமல் போய் விட்டோமே என்று ஹரிக்கு தோன்றியது. உடனே செயலில் இறங்கினார்.

சாதாரணப் பயணத்திற்கான வாடகை ஊர்திகளை வாங்குவதுபோல அவசர சிகிச்சை ஊர்திகளை வாங்கி விட முடியாது.

அதற்கான அரசு நடைமுறைகள் மிகவும் கடினமானவை. இந்த நேரத்தில் ரத்தப் பரிசோதனை மையம் வைத்திருந்த ஹரியின் நண்பர் ஒருவர் உதவ முன்வந்தார்.

அவரின் நிறுவனத்தின் பெயரான நேதாஜி ரத்தப் பரிசோதனை நிலையத்தின் பெயராலேயே நேதாஜி ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது.

வசதியுள்ளவர்களிடம் நியாயமான கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் ஹரி, பாவப்பட்ட மக்களின் சடலங்களை இலவசமாக அவர்களின் சொந்த ஊருக்குக் கொண்டு சேர்க்கத் தொடங்கினார். யாருமற்ற அல்லது அடையாளம் தெரியாத சடலங்களை தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்து வருகிறார்.

மதுரையில் சாதாரண ஓட்டல் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஒரு வட இந்தியத் தொழிலாளி சாலைவிபத்தில் மரணமடைந்திருக்கிறார். விசாரித்துப் பார்க்கையில் அவர் மேற்கு வங்கத்தின் உள்ளடங்கிய கிராமத்தைச் சேர்ந்தவரென்று தெரிகிறது. ஊருக்குத் தகவல் தெரிவித்தால், அவரது உறவினர்களும், நண்பர்களும் ஆளுக்கு கொஞ்சம் பணம்போட்டு ஒரு சொற்பத்தொகையை அனுப்பி உடலை அனுப்பிவைக்கச் சொல்கிறார்கள்.

உரிய ஏற்பாடுகளைச் செய்து, அந்த ஊருக்கு அருகிலுள்ள சிறிய விமான நிலையமான சில்சாருக்கு அந்த உடலை விமானத்தில் உரிய முறைப்படி அனுப்பி வைத்தார் ஹரி. மிச்ச செலவுகளை அவரே ஏற்றுக்கொண்டார். அன்று தொடங்கி உள்ளூர் மட்டுமின்றி நாடு முழுவதும் அவரது சேவை விரிந்தது.

“நானும் ஒரு சாதாரண டீக்கடைக்காரன்தான் சார். இதையெல்லாம் முழுசா இலவசமாக செய்யறதுக்கு வசதியில்லை. யார்கிட்டயும் நன்கொடையும் எதிர்பார்க்கறதில்லை.

இந்த சேவையையும்..., தொழிலாவும்தான் செய்யறேன். வசதி உள்ளவர்கிட்ட காசு வாங்கிச் செய்யறோம். வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாச் செய்யறோம். அவ்வளவுதான்.” என்று எளிமையாகச் சொல்கிறார்.

மார்ச்சுவரியிலிருந்து எடுத்துட்டுப் போவதுமட்டுமின்றி, சாலை விபத்துகளிலோ, தற்கொலை செய்தோ இறந்தவர்களை எடுத்துச் செல்வதற்கும்கூட காவல்துறையினர் ஹரியை அழைக்கின்றனர்.

“இதைப் பாத்துப் பாத்துப் சந்தேக மரணத்தில் என்ன நடந்திருக்கும்ங்கறதையும் யூகித்துச் சொல்லுமளவிற்கு பழக்கமாயிருச்சி சார்.” என்கிறார் ஹரி. சில நேரங்களில் காவல்துறை அதிகாரிகள் இதுபற்றி ஹரியிடம் கருத்துக் கேட்பதுமுண்டு.

“சின்னவயசுல ஒரு டீக்கடைல வேலைபார்த்துக்கிட்டுருந்தேன். கடைல இருக்கைல என் கண்ணெதிர்ல ஒரு ஆக்சிடெண்ட், ஓடிப்போய்ப் பார்த்தாத்தான் தெரியுது, அடிப்பட்டுக்கிடக்கிறது என் நண்பன். அவனை ரோட்டுல போட்டுக்கிட்டு, போறவர்ற வண்டிகளையெல்லாம் நிறுத்தி அவனை ஏத்திட்டுப்போறதுக்குத் துடிக்கிறேன். யாருமே வரல சார்.அன்னைக்கு நான்பட்ட கஷ்டந்தான் இப்படியொரு வேலைல எறங்கறத்துக்குத் தூண்டுதலாயிருக்கும்ன்னு நெனைக்கிறேன்.” என்கிறார்.

இதுவரைக்கும் 15,000க்கும் மேற்பட்ட பிரேதங்களை உரிய இடத்திற்குக் கொண்டுபோய் சேத்திருக்கிறேன். நானே அடக்கம் பண்ணியிருக்கிறேன். என் மனைவி முழுக்க முழுக்க எனக்கு உதவியா இருந்தாங்க. பணமில்லாத சமயத்துல அவங்க மூக்குத்தி கம்மலைக்கூட அடகுவைக்கறதுக்குக் கொடுத்திருக்காங்க.

நான் இதைத் தொடங்கறப்ப என் மூத்த பொண்ணு சுவாதிக்கு மூணு வயசு. அவ வளர்ந்து பெருசானப்புறம் விளாத்திகுளம் டி.எஸ்.பி.யா இருந்த பீர்முகமது சார்தான் சொன்னாரு, உன்னைமாதிரியே ஒரு பையன் இருக்கான் ஹரி, ஹெல்த் இன்ஸ்பெக்டர், கொரோனா சமயத்துல மக்களுக்காக அவ்வளவு உதவி செஞ்சாரு, உம் பொண்ணுக்குப் பொருத்தமா இருப்பாருன்னு சொல்லி அவரேதான் பேசி முடிச்சாரு.

ரெண்டாவது பொண்ணு ஷிமோகா அனஸ்தீஸ்யா படிச்சுக்கிட்டிருக்கா, அப்பறம் எனக்கு உதவியா இருக்கா. பெருசா சொத்தெல்லாம் சேக்கல, நம்ம கணக்குல கொஞ்சம் புண்ணியம் மட்டும் சேர்ந்திருக்கும்ன்னு நெனைக்கிறேன். என்று சொல்லும்போது ஹரியிடம் இதுபோதும் என்னும் நிறைவு தெரிகிறது.

மதுரை மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த லோகநாதன், காவல்கரங்கள் என்னும் சேவை அமைப்பை ஏற்படுத்தினார்். ஆதரவற்ற முதியோர், சிறாரை மீட்கும் இந்நடவடிக்கைக்கும் ஹரியைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

ஜோதிடத்தின் உதவியாலும் தற்போது ஒரு நல்லகாரியம் நடந்துவருகிறது என்று ஹரி சொல்லும் செய்தி விநோதமாகவும், ஒருவகையில் வரவேற்கத்தக்கதுமாக இருக்கிறது. குறிப்பிட்ட ஏதோவொரு தோஷத்துக்கு அநாதைப்பிணங்களை அடக்கம் செய்வதுதான் பரிகாரமாம். மாந்தி தோஷம் எனப்படும் அந்த தோஷத்திற்காக சிலர் ஐநூறோ, ஆயிரமோ எனக்கு அனுப்பி, ஏதாவதொரு பிரேத நல்லடக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறார்கள்.

தன்னைப் பாராட்டுபவர்களுக்கு ஹரி வைக்கும் வேண்டுகோள் இதுதான்:

“கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாளுன்னு சுபகாரியங்களை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவுகொடுக்கறது நம்ம மக்களோட வழக்கம். இதைச் செய்யறதுக்கு நெறையபேர் இருக்காங்க. இதைப்படிக்கிற நீங்களும் செய்யுங்க, மத்தவங்களுக்கும் சொல்லுங்க. உங்க பக்கத்துல இருக்கற பெரியாஸ்பத்திரிக்கும் போங்க. அங்க இருக்கற மார்ச்சுவரில எடுத்து அடக்கம் செய்யறதுக்கு ஆளில்லாம சில சடலங்கள் இருக்கும். அதை நல்லடக்கம் செய்யிறதுக்கு உதவுங்க, இதைச் செய்யிறதுக்குத்தான் ஆளில்லை.”

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com