ஆர்.நல்லகண்ணு
ஆர்.நல்லகண்ணு

போர்க்குணத்துக்கு வயது 99!

பெருவழிப்பாதை 3

நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.

பேருந்தைத் தவறவிட்டவராக இருக்கக்கூடும், தேவைப்பட்டால் வழியில் எங்கேனும் இறக்கிவிடலாம் என்று கருதி வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்கிபோய்ப் பார்க்கிறார், அங்கே படுத்திருந்தவர் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.நல்லகண்ணு.

‘ஒரு கூட்டத்துக்காக வந்தேன், கடைசி பஸ் போயிருச்சு, மொதல் பஸ்சுக்குப் போகணும், அதான் இப்படியே படுத்துட்டேன்..' என்றார் நல்லகண்ணு. - டவுன்ல ஒரு ரூமெடுத்துத் தாங்கியிருக்கலாமே அய்யா...

தோழர்கள் ரூம் போடறேன்னுதான் சொன்னாங்க, எதுக்கு வீண்செலவுன்னு வேண்டாம்னுட்டேன். சாதாரணமாகச் சொன்னார் நல்லகண்ணு, இதை ஒரு பத்திரிகை நேர்காணலில் பீட்டர் சொல்லி படித்த நினைவிருக்கிறது.. இதில் எதாவது சிறிய மிகைப்படுத்தல்கள் இருக்கலாம்.. ஆனால் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை. அப்படித்தான் இருந்திருப்பார் நல்லகண்ணு.

க ட் சி ப் ப ணி க ளி லி ரு ந் து ஓய்வு பெறும்போது அவரது ஓய்வுக்காலத்தை நிம்மதியாக வாழும்பொருட்டு பணமுடிப்பு கொடுக்கக் கட்சி விரும்பியது.. அதன்பொருட்டு நிதிதிரட்டும் அறிவிப்பை கட்சி வெளியிட்டது. ஏறக்குறைய கட்சியிலிருந்த உழைக்கும் மக்கள் அனைவரும் தங்கள் எளிய தலைவனுக்காக தங்களால் இயன்றதை அளித்தார்கள், சேர்ந்த தொகை ஒரு கோடி ரூபாய். விழாமேடையில் அந்தத்தொகை தோழரிடம் கையளிக்கப்பட்டது.. எனக்கெதுக்கு இவ்வளவு பணமென்று அதை அப்படியே கட்சி நிதியாக வழங்கிவிட்டார் தோழர் நல்லகண்ணு. அண்மையில் தமிழ்நாடு அரசு அவருக்கு தகைமைசால் தமிழர் விருதையும், பத்துலட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின், அத்தோடு தன் பங்குக்கு ரூ 5000 சேர்த்து ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதேமேடையில் தோழர் வழங்கிவிட்டார்.. 2008 - ல் அரசு அம்பேத்கர் விருதும், ஒரு லட்சம் ரூபாயும் வழங்கியது.. அதை கட்சிக்கும், விவசாயத்தொழிலாளர் சங்கத்திற்கும் பிரித்து அளித்துவிட்டார். 1925 டிசம்பர் 25 - ல் ஸ்ரீவைகுண்டம் அருகில் ஒரு சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் நல்லகண்ணு..

தற்செயலாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே நாளில்தான் தொடங்கப்பட்டது.

பள்ளியில் படிக்கும்போது அவருக்கு பொதுவுடமை நூல்களைப் படிக்கக்கொடுத்து, மார்க்சீயத்தை அவருக்கு அறிமுகப்படுத்தியவர் அவரது இந்தி ஆசிரியர் சு.பலவேசம் செட்டியார்.

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் படிக்கும்போது வ.உ.சி., வ,வே.சு. அய்யர் போன்றவர்களின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு கல்லூரிப்படிப்பைத் துறந்து விடுதலைப்போரில் ஈடுபட்டார், காந்தியாரின் உப்பு சத்தியாகிரக பாதயாத்திரையில் நடந்து சென்றார்.

ஒருவழியாக தேசம் விடுதலை பெற்றது, காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தது.

கம்யூனிஸ்ட்கள் நினைத்திருந்தால் காங்கிரசோடு சேர்ந்து அதிகாரத்தில் அமர்ந்திருக்கலாம்.

ஆனால் தேச விடுதலையை வென்றெடுத்தபின் வர்க்க விடுதலைக்கான வேலைகளில் ஈடுபட்டார்கள், விவசாயிகளும், தொழிலாளிகளும் இதற்கு பேராதரவை வழங்கினார்கள்.

ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு, தங்களுடன் சே ர்ந்து விடுதலைப்போரில் சமர்புரிந்த கம்யூனிஸ்ட்கள் மக்களின் நலனுக்காக செயல்படுவது பிடிக்கவில்லை. கம்யூனிஸ்ட்களை அவர்கள் தேசநலனுக்கு எதிராக சதி செய்வதாகச் சித்திரித்தார்கள், அவர்கள்மேல் பல பொய்வழக்குகள் புனையப்பட்டன.

தமிழ்நாட்டிலும் நெல்லை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, சென்னை சதி வழக்கு, ராமநாதபுரம் சதி வழக்கு என்று வரிசையாக பொய்வழக்குகள் பதிவாயின. இதன் உச்சமாக கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது, தலைவர்கள் தலைமறைவாகினர்.

நல்லகண்ணுவும் தலைமறைவானார், இறுதியாக ஒரு வருடத்திற்குப் பிறகு நாங்குனேரி தாலூகாவில் புலியூர்க்குறிச்சி என்னும் கிராமத்தில், ஒரு தோழரின் வீட்டில் தலைமறைவாக இருந்த நல்லகண்ணுவை காவல்துறை கைது செய்தது. மற்ற தோழர்களைப் போலவே, அவரும் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

தன் ஆதர்சத் தலைவன் ஜீவாவைப் போலவே அடர்ந்த முறுக்குமீசை வைத்திருந்தார் நல்லகண்ணு, தலைமறைவாக இருக்கும் மற்ற தலைவர்களைக் காட்டிக்கொடுக்கச்சொல்லி தோழரின் மீசையை சிகரெட்டால், அணுஅணுவாகப் பொசுக்கினான் ஒரு காவல்துறை அதிகாரி. அவனால் மீசையைக் கருக்க முடிந்த்தே தவிர தோழரின் மன உறுதியை கருக்கமுடியவில்லை.. அதன்பிறகு அவர் மீசையே வைக்கவில்லை.

வெடிகுண்டு வைத்திருந்த்தாகவும், சதித்திட்டம் தீட்டியதாகவும் புனையப்பட்ட பொய்வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.. ஏழாண்டு களுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார், அதன்பிறகும் அவரது போர்க்குணம் மாறவில்லை..

தோழர் மாயாண்டிபாரதி சொன்னதுபோல ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில் என்பதாகத்தான் அவரையொத்த கம்யூனிஸ்ட்களின் வாழ்க்கை இருந்தது.

ஸ்ரீவைகுண்டத்தில் தலித்கள் மீதான உழைப்புச் சுரண்டல், ஆதிக்கசாதி பெண்களுக்கெதிரான அடிமைத்தனத்திற்கும் எதிராக நடந்த கோட்டைச்சுவர் இடிப்புப் போராட்டம் தொடங்கி, விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்கள், அரசியல், பண்பாட்டுப் போராட் டங்கள் என தொடர்ந்து அவர் போர்க்குணமிக்க தலைவராகவே திகழ்ந்தார்.

கடைசியாக தாமிரபரணியில் நடைபெறும் மணற்கொள்ளைக்கெதிராக, களப்போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் நடத்தி, அதற்கெதிரான தடையுத்தரவைப் பெற்றார். இப்போதுஅவருக்கு வயது தொண்ணூற்றி ஒன்பது... இன்னும் உரிமைப் போராட்டங்கள் நடக்குமிடங்களில்லாம் அவர் போய் போராட்டக்காரர்களோடு நிற்கிறார்.

மக்களுக்கான போராட்டங்களிலெல்லாம் அவர் வெற்றியைத் தேடிக் கொடுத்தார். ஆனால் அவர் தேர்தலில் நின்றபோதெல்லாம் மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள் என்பது இத்தேர்தல்முறையின் அவலம், அதிலும் தொழிலாளிகளின் போராட் டங்களால் சிவந்த கோவையில் நடந்தது என்பது ஓர் அவலம்.

கொள்கை மட்டுமே பெரிது, பணமும், பதவியும் பொருட்டில்லை என்னும் மனமுள்ள தோழர் நல்லகண்ணு தேர்தல் தோல்விகளால் இம்மியளவும் மனம்வருந்தியதில்லை.

எனினும் எனக்கு ஒரு வருத்தமுண்டு, தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியல் அணியாக அமைக்கப்பட்ட மக்கள்நலக் கூட்டணி விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தியது. தோல்வியே காணட்டும், ஆனால் அப்போது முதல்வராக முன்நிறுத்தப்பட்டிருக்க வேண்டியவர் தோழர் நல்லகண்ணு. அது தோழருக்கு செய்திருக்க வேண்டிய மரியாதையன்று...

நேர்மைக்கும், தியாகத்திற்கும் செய்திருக்க வேண்டிய கடமை. மாற்று அரசியலின் மீது மக்களுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டிய நம்பிக்கை.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com