நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?

நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?

திசையாற்றுப்படை - 13

சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது. உங்க பசங்க என்ன பண்றாங்க என்றதற்கு, மூத்தவர் சட்டம் படிக்கிறார். இரண்டாமவர் இப்பதான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்றார். இப்போதெல்லாம் பெற்றோர்கள் சொந்தப் பிள்ளைகளைக் கூட உரிமையாய் அவன், இவன் என்று அழைப்பதில்லை. அவர், இவர் தான்.

ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி காலேஜ்ல சேத்தாச்சு சார். காலேஜ் கொஞ்சம் தள்ளி இருக்கு. காலேஜ்ல சேர்ந்தபிறகு ‘அப்பா காலேஜுக்கு நான் எப்பிடி போறதுன்னு கேட்டான். நான் பஸ்ஸுலதாம்ப்பா போகணும்னு சொன்னேன். அதுக்கு அப்ப நீதான் காலேஜுக்கு போகணும்ங்கிறான். அப்புறம்? அப்புறமென்ன... லோன்போட்டு ஒண்ணு சில்ல்றைக்கு ஒரு பைக் வாங்கித் தந்து ருக்கேன். டெய்லி 200 ரூபா பெட்ரோலுக்கு..

பருவத்தேர்வுகள் முடிந்தபின் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பது வழக்கம். கணவனை இழந்த ஒரு கூலிவேலை செய்யும் அம்மா கூறுகிறார்... தவணைக்கு வாங்கி பீஸ் கட்டியிருக்கேன். பத்தாயிரத்துக்கு இந்த செல்போன் வாங்கிக் குடுத்துருக்கேன். இவ்வளவு வெலைக்கு போன் ஏன் வாங்கிக் குடுத்தீங்க? ஒத்த பையன் சார்.. சாப்பிடாம பிடிவாதம் பிடிக்கிறான்... அந்த ஏழைத்தாய்க்கு சொல்வதற்கு என்ன இருக்கிறது?

இதுஒருபுறமென்றால் இன்னொரு வகை பெற்றோர்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெற்றோர், அவர்களின் +2 மகளிடம் நாள் தவறாமல் ‘நீ என்னவேணாலும் ஆகிக்கோ... ஆனா நம்ம சொந்தங்களுக்கு என்ன பதில் சொல்றது? சித்தி பையன் நீட் கிளியர் பண்ணிட்டான்... மாமா வீட்ல ரெண்டு டாக்டரு... எங்களுக்கு பிரச்சனையில்லை... ஆனா அவங்க மூஞ்சில முழிக்க முடியாது.. பாத்துக்க..' என்று சொல்லிச் சொல்லி, தேர்வு முடிவுகள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் மூளையில் ரத்த நாளங்கள் வெடித்து படுத்த படுக்கையாக ஆகிப் போனாள் அந்தப் பெண். பிள்ளையை சாமர்த்தியமாக ஊக்கப்படுத்தியது ஒரு தவறா?

நான் சில வகுப்புகளில் பேச்சுப் பயிற்சிக்காக, உங்களுக்குப் பிடித்த அல்லது உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர் ஒருவரைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேசுங்கள் என்று பணிப்பேன். ஏறத்தாழ 90% பேர் எனக்குப் பிடித்தவர் என் தந்தை அல்லது தாய். ஏனென்றால் நான் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டார். எப்படியாவது வாங்கித் தருவார். ஒரு சிலர் மாமா, சித்தப்பா என நெருங்கிய உறவினர்களைச் சொல்வதுண்டு. 20ஆண்டுகளுக்கு முன்பென்றால் பதில்கள் சற்று வேறு மாதிரி இருக்கும். சிலர் எழுத்தாளர்களை, அரசியல் தலைவர்களை சிலர் ஆசிரியர்களைத் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான மனிதர்களாகக் கூறுவார்கள். ஆனால் இன்று சூழல் மாற்றமடைந்திருக்கிறது. பெரும்பாலும் வீட்டுக்கு ஒரு குழந்தை. அதிகபட்சமாய் இரண்டு.

கையில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. குழந்தைகளைச் சீராட்டுவதன் தன்மையும் அளவும் மாறியிருக்கிறது. ஆகவே பெற்றோர்களும் அருகாமையில் உள்ள உறவினர்களுமே நம்குழந்தைகளின் ஆதர்ச புருசர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். பெற்றோர்களாக இருப்பதாலேயே அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வழி காட்டிவிடமுடியுமா என்ன? ஒரு வெற்றிபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சொல்கிறார், என் அப்பாவிற்கு சினிமா என்றாலே பிடிக்காது. நீ சினிமாவுக்கு போகக் கூடாது. போனால் கெட்டுப் போய்விடுவாய் என்று கூறிக்கொண்டே இருப்பார். என்னை மிக நன்றாக வளர்த்தார். அதனால் அவர் மறைந்த பின்னரே நான் திரைத்துறைக்கு வந்தேன். வெற்றி அடைந்தேன் என்கிறார். இதில் தந்தையார் செய்தது சரியா? அல்லது மகன் செய்தது சரியா?

உலகிலேயே பெற்றபிள்ளைகள் மேல் அதிக அன்பு செலுத்துபவர்கள் நாம்தான். குழந்தைகளுக்காகவே வாழ்ந்து தேவைக்கதிகமான தியாகங்களைச் செய்பவர்கள். அதனாலேயே அவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்ப்பவர்களும்கூட.

ஒரு புறம் உலகத்திலேயே மிகவும் தவறாக வளர்க்கப்படுகிறவர்கள் இந்தியக் குழந்தைகள் என்றும் சொல்லலாம். தேவைக்கதிகமாக பிள்ளைகளைச் சீராட்டுவதன்மூலம் அவர்களைத் தந்திரமானவர்களாக, உணர்வுரீதியாக பெற்றோர்களை சுரண்டுபவர்களாக, ஆளுமையற்றவர்களாக மாற்றிவிடுகிறோம்.

இன்னொருபுறம் உலகத்திலேயே அதிக மன அழுத்தத்தோடும், புற அழுத்தங்களோடும் வளர்பவர்கள் இந்தியக் குழந்தைகள்தான். மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கார்பரேட் பணிகளுக்காகக் குழந்தைகளைத் தயார் செய்வதில் தங்களையும் குழந்தைகளையும் வருத்திக் கொள்பவர்கள் நம் பெற்றோர்கள். எல்லாம் அவங்க நன்மைக்குத்தான சார். நாமளா கொண்டு போகப் போகிறோம்? இந்த வெற்றி நோக்கிய பந்தயத்தில் மிகச் சொற்பமானவர்களே பதக்கங்களைச் சூடிக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்.

எந்த ஒரு கல்லூரி வகுப்பறையிலும் நுழைந்து, இந்தப் பாடப்பிரிவை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? நீங்கள் விரும்பித்தான் தேர்ந்தெடுத்தீர்களா? என்று கேட்டுப்பார்த்தால் நமக்குக் கிடைக்கும் பதில் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும். ஏனென்றால் நமது பிள்ளைகளுக்குத் தங்களுக்கு என்ன வேண்டும் அல்லது தாங்கள் என்னவிதமான தொழிலை, வேலையை வாழ்வாதாராமாகத் தெரிவுசெய்தால் பொருத்தமாக இருக்கும் என்பது பற்றிய சிந்தனை இருப்பதில்லை. நமது பள்ளிக் கல்வியிலும் ஒருவன் தன் ஆர்வத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வாய்ப்பு இல்லை. பெற்றோர்கள்தான் தங்கள் குழந்தையின் அருகாமையில் இருப்பவர்கள். ஒருவேளை தங்கள் பிள்ளைகளோடு போதுமான நேரத்தைச் செலவிடுவதன் மூலம் அவர்களின் ஆர்வங்களை கண்டறிந்து அவர்கள் சாதிக்கக் கூடிய துறைகளுக்கு வழிகாட்டக்கூடும்.

ஆனால் நம் பெற்றோர் மிகவும் திட்டவட்டமானவர்கள். முதல் தலைமுறையாக படித்து ஒரு நல்ல மாதச் சம்பள வேலைக்கு வந்தவுடன் அவர்கள் தங்களை ஒரு வெற்றிபெற்ற மனிதராகக் கருதிக்கொள்கிறார்கள். மட்டுமல்லாமல் தன்னால் தன் குழந்தைக்கு சரியான வழியைக் காட்டமுடியும் என்றும் நினைக்கிறார்கள். நாம் பெற்றவர்களாக இருப்பதாலேயே நம் பிள்ளைகளுக்கு நல்லதைச் செய்துவிட முடியும் அல்லது என் பிள்ளைக்கு நான் எப்படி கெடுதல் செய்வேன் என்று எளிமையாகச் சிந்திக்கும் பெற்றோரே அதிகம்.

அவன் ஒரு நிரந்தரமான வேலைக்குப் போகணும்... ஒரு நல்ல அரசாங்க வேலைக்குப் போகணும் என்றுதானே இந்தப்பாடு படுறேன் என புலம்பும் கீழ் நடுத்தரவர்க்கப் பெற்றோரும், எப்படியாவது டாலர் தேசங்களுக்கு அனுப்பி பிள்ளைகளை வெளிநாட்டுப் பிரஜைகளாக ஆக்கிவிடத் துடிக்கும் மேல் நடுத்தரவர்க்க பெற்றோர்களும் சிலவிசயங்களை கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. உலகமய சூழலுக்குப் பின் வேலை வாய்ப்புகளின் தன்மை மாறிவிட்டது. இளையோர் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையும் மாறிவிட்டது.

பொறியியல் படித்துவிட்டு கருப்பட்டி காபி கடை வைக்கிறார்கள். மருத்துவம் படித்துவிட்டு ஆட்சிப் பணிக்குப் போய்விடுகிறார்கள். மேலாண்மை படித்து விட்டு குறும்படம் எடுக்கக் கிளம்பி விடுகிறார்கள். கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு இயற்கை வேளாண்மை செய்கிறார்கள். பேராசிரியர் வேலையை உதறிவிட்டு வனவிலங்குகளை புகைப்படமெடுக்க அலைகிறார்கள். சற்று தாமதமாகவேணும் தங்கள் மகிழ்ச்சியைக் கண்டு கொள்கிறவர்களையும், திக்குத் திசை தெரியாமல் தவிப்பவர்களையும் ஒருசேரக் கண்டுகொண்டிருக்கிறோம்.

வேலைக்குச் செல்வது, கை நிறையச் சம்பாதிப்பது, உற்றார் உறவினர் முன் தலை நிமிர்ந்து நிற்பது என்பதைத் தவிர்த்து சுய திருப்தி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்வதான நம்பிக்கை, மற்றவர்கள் முன் நிமிர்ந்து நின்று தனக்குள்ளாக கூனிக்குறுக வேண்டாத மனத்தெளிவு... இவையெல்லாமும்தான் முக்கியமானது என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டிய காலம் வந்துவிட்டது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com