ராஜாவுடன் நடந்த நாள்கள்

திசையாற்றுப்படை - 36
இளையராஜா
இளையராஜா
Published on

1980களின் தொடக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சங்கர்-கணேஷ், கே.ஜே.ஜாய், வி.குமார், ஜி.கே.வெங்கடேஷ், சந்திரபோஸ், ஷ்யாம், டி.ராஜேந்தர், விஜயபாஸ்கர், சலீல் சௌதிரி மற்றுமான முப்பதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இசையமைத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த இசைப்பந்தயத்தில் மூச்சுவாங்க 80களில் இளையராஜாவோடு தம்பிடித்து ஓடிக்கொண்டிருந்தவர்கள் சங்கர்-கணேஷும், எம்.எஸ்.வி.யும். சொல்லப்போனால் 80களின் தொடக்கத்தில் அதிகப்படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா அல்லர். சங்கர்-கணேஷ்தான். 1980 ஆம் ஆண்டில் சங்கர்-கணேஷ் 27 படங்களுக்கும், எம்.எஸ்.வி. 15 படங்களுக்கும் இசையமைத்தபோது இளையராஜா 24 படங்களோடு இருவருக்கும் நடுவில் இருந்தாலும், மக்கள் செல்வாக்கில் முன்னணிக்கு வந்துவிட்டிருந்தார். எம்.எஸ்.வி.யின் இசையமைப்பில் திரிசூலத்தில் டி.எம்.எஸ். ‘மலர் கொடுத்து, கைகுலுங்க வலையலிட்ட’ போது குரலில் வயோதிகம் வெளிப்படையாகத் தெரிய, எம்.எஸ்.வி.யின் தாளவாத்தியக் கலைஞர் பிரசாத் தபலாவை கட்டுப்பாடில்லாமல் குமுக்கிக் கொண்டிருக்க, சிவாஜி தேவிபோன்ற இளம் நாயகிகளோடு அண்மைக்காட்சிகளில் பயமுறுத்திக்கொண்டிருந்தார். ஒருவகையில் அது எம்.எஸ்.வி.யின் தேய்பிறைக்காலமாக இருந்தது. எம்.எஸ்.வி. என்று சொல்வதைவிட சிவாஜி, எம்.ஜி.ஆர்., நீலகண்டன், திருலோகச்சந்தர் என்ற ஒரு சகாப்தம் இயற்கையெய்திக்கொண்டிருந்தது. இசையில் ஒப்பீட்டளவில் சங்கர்-கணேஷ் கொஞ்சம் நவீனமாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தார். மொத்தத்தில் தமிழ்த் திரையிசை பாணிகள் தேய்வழக்காக மாறிக்கொண்டிந்த சுற்றுச்சூழலில்தான் 1976இல் புறப்பட்ட இளையராவின் இசை ரயில் 80களில் அதிவேகம் எடுத்து சீறிப்பாயத் தொடங்கியிருந்தது.

நான் அப்போதுதான் அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் சேர்ந்திருந்தேன். நான்காம் வகுப்பு படித்தகாலத்தில் வேகாத வெயிலில் ஒருநாள் சுற்றுப்பயணமாக மதுரையைப் பார்த்தது. மீனாட்சி கோயில், நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் என்று அவசரமாக அறிந்துகொண்ட மதுரை. குழந்தைகளுக்கான சுற்றுலாக்கள் எப்படியிருக்கவேண்டும் என்று நம் ஆசிரியர்களுக்கு யாராவது சொல்லித்தரவேண்டும். கல்லூரியில் சேர்ந்து சிலநாட்களில் நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டு திரிந்தபோது மதுரை சினிப்பிரியா திரையரங்கில் ஒரு மத்யானப் பொழுதில் ஒதுங்கினேன். நிழல்கள் என்று ஒரு படம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தபோது படத்தில்வரும் ராஜசேகர் பாத்திரம் கஞ்சா அடித்துக்கொண்டு விட்டேத்தியாக அலையும், கனவுகளில் வாழும் ஒரு லட்சிய இளைஞன். அப்போதைய கலக மனநிலைக்கு உகந்த பாத்திரம். வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கொரு சேதி தரும் என்று பாடுபவன். 70களின் வேலையின்மை, இளைஞர்களின் விரக்தி, வெறுமை என்று அக்காலத்தைப் அப்பட்டமாக பிரதிபலித்த படம். ரொம்பவே மனதில் ஒட்டிக்கொண்டது. அதிலும் பொன்மாலைப் பொழுதின் பல்லவி முடிவதற்குள்ளாகவே பித்துப்பிடிக்கச் செய்துவிட்டார் இந்த மனுசன். முதலில் பறவைகளின் கீச்சொலிகள், அடுத்து கிடார் வருகிறது. சரி. அப்புறம் வயலின்கள் கூட்டமாக. சரி அப்புறம். தொடர்ந்து அது என்ன வாயில் கூழாங்கல்லை ஒதுக்கிக்கொண்டு முனகுவதுபோல ஒரு குழப்பமான இனிப்புச்சரடு. அது முடிந்தவுடன் இந்த அசகாயசூரன் எஸ்.பி.பி. தன் கொஞ்சும் குரலில் ‘ஹே… ஹோ…ஹா… லல்லல்லா..’ என்று ஆரம்பிக்க, சீரான லயத்தில் கூட்டு வண்டியில் பயணிப்பதுபோன்ற தாள கதியில் இதுவரை கேட்டிராத பாணியில் தபலாவும் கூடுதல் கருவிகளும் இணைய… கடவுளே என்ன நடக்கிறது…என்ன இது… என்று கொஞ்சம் ஆசுவாசம் அடைவதற்குள்ளாகவே ‘பூங்கதவே தாழ் திறவாய்’. சிறு ஓடையாய் தொடங்கி ஆறாக ஓடி அருவியாய் கொட்டுவதான… ஒற்றை வயலினில் ஆரம்பித்து படிப்படியாக இணைந்துகொள்ளும் செல்லோக்கள், வியாலோக்கள், டபுள் பேஸ் எனக் வயலின்கள் குடும்பமாகக் கூடி கும்மியடித்தபின், ஒன்றுமே நடக்காததுபோல் ஒரு வீணை தனியாளாய் வந்து… ஏப்பா… தீபன் சக்கரவர்த்தி, வந்து ஆரம்பிப்பா…’ என்று சொல்லவும் பாடல் தொடங்கவும்… அடப்பாவி மனுசா, அல்வா சாப்பிட்டு வாயைத் துடைப்பதற்குள்ளாக ஜிலேபியைத் திணிக்கிறானே இந்த மனுசன்…என்று நிதானிப்பதற்குள் ‘மடை திறந்து’. என்னத்த சொல்ல. ஒரு சிம்பொனித்திருவிழாவை நிகழ்த்திக்காட்டியிருந்தார். ஆனால் நிழல்கள் ஒரு அவலச் சுவையுள்ள படமாக அமைந்திருந்தது. பெரிய வணிக வெற்றியைப் பெறவில்லையாயிணும் அதன் மூன்று பாடல்களும் சாகாவரம் பெற்றவையாகிவிட்டன.

1980கள் இசைக்குழுக்கள் கோலோச்சிய காலம். குறிப்பாக தெருமுனைக் கோயில்கள் தொடங்கி ஊர்த்திருவிழாக்கள் வரை ‘ஆர்கெஸ்ட்ரா’ எனப்படும் இசைக்கச்சேரி இல்லாமல் அந்தக்கால சாமிகள் மலையேறமாட்டார்கள். இசைக்கச்சேரி என்றவுடன் மதுரை சேசகோபாலன், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் வகையறா என்று கற்பனை செய்யவேண்டாம். முற்றுமுழுதான திரைப்படப் பாடல்கள் மட்டுமே பாடப்படும் கச்சேரிகள்தான். மூன்று நாட்கள் முதல் பத்து நாட்கள் வரை பக்தகோடிகளின் சத்துக்குத் தகுந்தவாறு விழாக்கள் திட்டமிடப்படும். அதில் மூன்று நாட்கள் என்றாலும் ஒரு நாள் இசைக் கச்சேரிக்கு இடமிருக்கும். ஒவ்வொரு ஊரிலும் விழாக்குழுவினர் என்றொரு குழுவினர் இருப்பார்கள். சங்ககாலத்தில் இந்த விழாக்குழுவினர் என்றொரு வகையறாக்கள் தென்படுகிறார்களா என்று ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும். சமூக சேவகர்களான இவர்களின் அபிலாசைகள், அழிச்சாட்டியங்களைப் பற்றித் தனியாகத்தான் எழுதவேண்டும். விழாக்குழுவினர் எனப்படும் இவர்கள் வசூல் மற்றும் கலைக்குழுக்களைத் தேர்வு செய்வது, இன்னபிற ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, கலைக்குழுவினரை வரவேற்று பராமரிப்பது, ஒப்பனைசெய்யும் பெண்கலைஞர்களுக்குப் பாதுகாவலாக நிற்பது, சிற்சில சமயங்களில் தடுப்புக்கீற்றைப் பிரித்து இடுக்கில் வேடிக்கைபார்ப்பது என்று சிலமாதங்கள் தங்களைச் சமூகத்துக்காக அர்ப்பணித்துக்கொள்ளக் கூடியவர்கள். அவர்களுக்கிடையே நடைபெறும் பலசுற்று வாதப்பிரதிவாதங்களுக்குப்பின் எந்தக் குழுவை அழைப்பது என்பது முடிவு செய்யப்படும். மதுரையில் அப்போது ‘ஹையட்ஸ்’ என்றொரு இசைக்குழு ரொம்பவும் பிரபலமாக இருந்தது. சுந்தர் - ஜெகன் வழங்கும் ஹையட்ஸ் இன்னிசைக் கச்சேரி என்ற போஸ்டர்கள் நீக்கமற நிறைந்திருந்த காலம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பதுபோல் கோயில் இருக்கும் தெருமுனைகளில் எல்லாம் இசைக்கச்சேரிகள் இருக்கும். அதிலும் சுந்தர்-ஜெகன் என்றால் கூட்டத்திற்குச் சொல்லவேண்டாம். ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் கச்சேரி நள்ளிரவைத் தாண்டியும் நீளும். 70% ராஜா பாடல்களாகவும் 20% எம்.எஸ்.வி. மற்றும் 10% ரஜேந்தர், சந்திரபாபு, டி.ஆர்.மகாலிங்கம் என்ற கலவையில் பாடல் தேர்வுகள் இருக்கும். ஸ்ருதி சுத்தமாக பாடல்களை அச்சு பிசகாமல் பிரதிசெய்யக்கூடியவர்களாக சுந்தர்-ஜெகன் இருந்தார்கள். கச்சேரி முடிந்தபின் மக்கள் பட்டர்பன் சாப்பிட்டு, தேநீர் குடித்து, பரோட்டா சால்னா சாப்பிட்டு சாவகாசமாய் சகலதிசைகளிலும் கலைந்து விடிவதற்குள் வீடுபோய் சேர்வார்கள். அப்போது மதுரை உண்மையாகவே தூங்கா நகரமாக இருந்தது. இப்போது போன்ற போலீசாரின் கெடுபிடிகள் எதுவும் இருக்கவில்லை. அந்தக்குழுவின் பிரதான பெண்பாடகியான அனிதாவிற்கு நகரில் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்தக் குழுவில் எஸ்.பி.பி.யை எதிரொலிக்க ஒரு ஆண்பாடகரும் இருந்தாக வேண்டுமல்லவா? இருந்தார். வருடங்கள் உருண்டோட ‘பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா? / தங்கமாங்கனி நீ தரும தேவதை’ என்று டூயட் பாடியவர்கள் நிஜ வாழ்க்கையிலும் டூயட் பாட முடிவு செய்து திருமணம் செய்துகொண்டு தனிக்கடை விரித்ததோடு ‘ஹையட்ஸ்’ செல்வாக்கிழந்தது என்பது தனிக்கதை.

மதுரை மட்டுமின்றி ‘கோவை மல்லிசேரி’, திண்டுக்கல் அங்கிங்கு, திருநெல்வேலியில் ‘நெல்லை பிரபாகர்’ என்று சில இசைக்குழுக்களும் கொடிகட்டிப் பறந்தன. திண்டுக்கல் அங்கிங்கு புகையிலை நிறுவன முதலாளி ஒரு இசை ஆர்வலர். கலைஞர்களை மாத ஊதியத்திற்கு அமர்த்தி, சிறந்த குழுவாக அதை நிர்வகித்து வந்தார். நெல்லை பிரபாகர் திருநெல்வேலி வட்டாரத்தின் சூப்பர் ஸ்டார். பலகுரல்களில் பாடக்கூடியவர். மேடையில் நடனமாடி இளசுகளின் வரவேற்பைப் பெற்றிருந்தார். இவ்வாறு அந்தந்த ஏரியாக்களை குத்தகைக்கு எடுத்தமாதிரி இந்தக்குழுக்கள் பிசியாக இருந்த காலம். இவை போக பலகுழுக்களிலிருந்து கலைஞர்களை உருவி அவ்வப்போது கச்சேரிகள் நடத்தும் இன்ஸ்ட்டண்ட குழுக்களும் கணிசமாக இருந்தன.

80களில்தான் மேடைக்கச்சேரிகளை மேம்படுத்தும் வகையில் மேம்பட்ட தரத்தில் ஒலிவாங்கிகள், ஒலிபெருக்கிகள் போன்ற சாதனங்களும் கிடைக்கத் தொடங்கியிருந்தன. கூடுதலாக காம்போ ஆர்கன் மற்றும் ‘சிந்தசைசர்’ என்று சொல்லத்தக்க எலக்ட்ரானிக் சாதனங்கள் இந்தியாவில் இறக்குமதியாகத் தொடங்கி கச்சேரிகளில் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கியிருந்தன. ராஜா ‘பொன்மாலைப் பொழுது, மடைதிறந்து’ பாடல்களிலேயே சிந்தசைசர்களை உருட்டி விளையாட ஆரம்பித்துவிட்டார்.

படத்திற்கு நான்கிலிருந்து ஐந்து பாடல்கள், 1980ஆம் ஆண்டு 24 படங்கள். சுமாராக 120 பாடல்கள். மாதத்திற்கு இரண்டு படப்பாடல்கள் விதவிதமாய் வந்தபடியிருந்தன. அதனால் எப்போதுமிருந்ததைவிட கூடுதலாக திரையிசை கேட்பதில் பொதுவில் ஒரு பெரும் ஆர்வம் உண்டாகியிருந்தது. கச்சேரிகளுக்கு ஏக வரவேற்பு இருந்தது. அவர்களும் தொடர்ந்து புதிய பாடல்களை பிரித்து மேய்ந்து ஒத்திகை பார்த்தவண்ணம் இருக்கவேண்டியிருந்தது. 90களில் கணினிமயமான கீ போர்டுகள் வந்தபோது, பெரும்பகுதி இசையை முன்கூட்டியே பதிவுசெய்து வைத்துக்கொண்டு மேடையில் வாசிப்பது போன்ற பாவனைகள் செய்ய இயலாத காலம் அது. திரும்பத் திரும்ப காசட் பிளேயர்களில் பாடல்களை ஒலிக்கவிட்டு பெரும்முயற்சிகள் எடுத்து பாடல்களை மீளுருவாக்கம் செய்வார்கள் கச்சேரிக்காரர்கள்.

இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும் கூடுதலாக இணைத்துக்கொள்ளவேண்டும். 80களில்தான் இந்தியாவிற்குள் காசட் பிளேயர்கள் எனும் சாதனம் நுழைகிறது. இசைகேட்கும் கலாச்சாரத்தில் காசட்பிளேயர்கள் ஒரு பெரும் புரட்சியைக் கொண்டுவந்தன. அதாவது அதுவரை ஒரு சாமான்யனைப் பொறுத்த அளவில் எந்த இசையை அல்லது யாருடைய இசையைக் கேட்பது என்பது அவனுடைய விருப்பம்சார்ந்ததல்ல. வானொலியில், திருவிழாக்களில், திருமணவீடுகளில் ஒலிபரப்புவதையெல்லாம் கேட்டாகவேண்டும். டெண்ட் கொட்டகைகளில் முதல்பாடலாக ஒலிக்கும் சீர்காழியின் ‘கோடி மலைகளிலே’ பாடலாகட்டும், தி.மு.க. பொதுக்கூட்டங்களில் ஒலிக்கும் நாகூர் ஹனிபாவின் ‘ஓடி வருகிறான் உதய சூரியனாக’ இருக்கட்டும், கிறிஸ்மஸ் காலங்களில் ஒலிக்கும் சாரோள் நவ்ரோஜியின் ‘உம்பாதம் பணிந்தேனாக’ இருக்கட்டும், அகில இந்திய வானொலிகளில் ஒலிபரப்பாகும் திரைப்பாடல்களாகட்டும், சாதி மத பேதங்களற்று எல்லாவற்றையும் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். தொடர்ந்து இந்தப்பாடல்களைக் கேட்டுக் கேட்டு இதன் வழியாகவே நம் இசை ரசனை திரள்கிறது. நம் சமூகத்தின் இசை ரசனையும் கூட. இந்த காசட் பிளேயர்கள்தான் முதன்முதலில் எளியமக்களும் அவர்களுக்கான இசைத்தேர்வைச் செய்துகொள்ள வாய்ப்பளித்தவை. கிராமபோன் சாதனமும் வினைல் இசைத்தட்டுகளும் பெரும் செல்வந்தர்களால் மட்டுமே எட்டக்கூடியவைகளாக இருந்தபோது காசட்பிளேயர்கள் இசைகேட்கும் கலாச்சாரத்தையே மாற்றியமைத்தது எனலாம்.

1963இல் டென்மார்க்கைச் சார்ந்த பிலிப்ஸ் நிறுவனம்தான் காசட் பிளேயரை அறிமுகப்படுத்தியது. நிறுவன மேலாளர்கள், அதிகாரிகள் கடிதங்களை வாய்மொழியாகச் சொல்லி பதிவு செய்து எழுதுவது, பத்திரிக்கையாளர்கள் களத்தில் பதிவுசெய்வது என்பனபோன்ற நோக்கங்களுக்காகவே இது உருவாக்கப்பட்டதாம். ஆனால் நாளடைவில் புதிய கண்டுபிடிப்புகள் இணையும்போது அது இசை கேட்கவும் பதிவுசெய்யவுமான சாதனமாக பரிணாமம் அடைந்தது. 60களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் டென்மார்க்கிலிருந்து பொடி நடையாக காசட்பிளேயர்கள் இந்தியச் சந்தையை அடைய 20வருடங்களை எடுத்துக்கொண்டன. 80களில் மத்தியகிழக்கு நாடுகளில் பணிசெய்பவர்கள் மற்றும் இலங்கை, சிங்கப்பூர் சென்று திரும்புபவர்களின் பெட்டிகளில் கோடாலித் தைல பாட்டில்கள், சிகரெட் பண்டல்கள், வரி இல்லாத மதுப்புட்டிகள் இவற்றோடு புதிதாக ஒரு 'டூ இன் ஒன்’ காசட் பிளேயரும் தவறாமல் இடம்பெற்றது. வெகுவிரைவிலேயே உள்ளூர் தயாரிப்புகளாக மலிவாக காசட் பிளேயர்கள் கிடைக்கத் தொடங்கியபோது தமிழர்கள் பெரும்பகுதி நேரத்தை இளையராஜாவோடு கழிக்கத் தொடங்கினார்கள்.

காப்புரிமை பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் பாடல்களைப் பதிவுசெய்துகொடுக்கும் கடைகள் இப்போதைய செல்பேசி கடைகளைப் போல் முளைத்தன. அக்காக்கள் எழுதிக்கொடுக்கும் பாடல் பட்டியல்களோடு தம்பிகளும் காதலிகளின் பட்டியல்களோடு இளவட்டங்களும் காசட் பதிவுநிலையங்களில் தவம் கிடந்தார்கள். ஒரு காசட் முழுவதும் தங்களுக்குப் பிடித்த ஒரே பாடலை திரும்பத் திரும்ப பதிவுசெய்து அதையே கேட்டுக்கொண்டிருக்கும் இசைத் தீவிரவாதிகள் தோன்றிய காலமாக அது இருந்தது. சின்ன வயதில் சட்டை தைக்கக்கொடுத்து அதை வாங்கும் நாளுக்காகக் காத்திருக்கும் பரவசத்தைப்போன்றதாக அது இருந்தது.

இதில் ‘equalizer’ போன்ற சாதனங்களை வைத்துக்கொண்டு பதிவுசெய்யும் பாடல்களில் ‘பேஸ்’ அதிகமாக வைப்பது ‘சில் சில்’ என் ஒலிக்கும் வகையில் உச்ச ஒலிகளை மிகுதிப்படுத்துவது என்று தங்கள் மேதாவித்தனத்தால் இளையராஜாவை சித்திரவதை செய்த அன்பர்கள் ஒருபுறம். மண்பானைகளில் உள்ளூர் ஸ்பீக்கர்களை கவிழ்த்துவைத்து ‘தண்ணி கருத்திருச்சி தவள சத்தம் கேட்டுருச்சி’ என்று ‘கும் கும்’ கும்பி பக்கத்துவீட்டுக் காரர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வம்பர்கள் ஒருபுறம். ‘மாப்ள அங்க ஒரு செண்டர்ல தீயா பதிஞ்சு தர்றான்’ என்று மதுரையிலிருந்து விருதுநகருக்கும் விருதுநகர்க்காரர்கள் திருநெல்வேலிக்கும் பஸ்பிடித்துக்கொண்டிருந்த கூத்துகளும் ஏராளம்.

இப்படி ராஜா இசை ரசிகர்களை பித்துப்பிடித்தவர் களாக்கியிருந்தார். காரணம், முந்தைய குரல் இசையின் மெட்டுக்கள் சார்ந்திருந்த தமிழ் திரையிசையை ராஜாவின் தொடக்க இசை, இடையிசை மற்றுமான இசைச்சோடனைகள் புதிய வகையான இசைகேட்டலைக் கோரின. அதனாலேயே உள்ளூர் விஞ்ஞானிகள் இசைகேட்பதற்கான பல்வேறு உபாயங்களையும் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் காசட் தொழில்நுட்பமும் இணைந்து வந்து சேர்ந்தது ஒருவகையில் தமிழர்களுக்கு கிடைத்த வரமாக அமைந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com