வருந்த வைக்கும் திருமண விருந்துகள்!

வருந்த வைக்கும் திருமண விருந்துகள்!

திசையாற்றுப்படை - 4

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுத் திருமணம். குடும்பத்தோடு வந்துவிட வேண்டும் என்று அன்புக் கட்டளை வேறு.

மட்ட மத்தியானத்தில் முகூர்த்தம். வேலை நாள் வேறு. குடும்பம் கொந்தளித்துவிடும் என்பதால் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து போவது என்று தீர்மானித்திருந்தோம். இப்போதெல்லாம் திருமணங்களில் குடும்பத்தினரைத் தவிர முகூர்த்த நேரத்தில் யாரும் இருக்கவேண்டுமென்று  நினைப்பதில்லை. திருமணவீட்டாரும் எதிர்பார்ப்பதில்லை. 10 மணிக்கு முகூர்த்தமென்றால் 12 மணிக்குமேல் போனால் சரியாக இருக்கும் என்று திட்டமிட்டுக்கொண்டோம். வேறென்ன, சாப்பிட சரியான நேரமாக இருக்கும் என்பதுதான்.  நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்தபோது கூட்டம் அலை மோதியது. பெரிய மண்டபம். அளவில்லாத ஆடம்பரம். ஒரே மகனல்லவா! மணமக்களை வாழ்த்தி பரிசோ, பணமோ கொடுத்துவிட்டு பின் விருந்துண்ணச் செல்வது என்பதெல்லாம் கலாவதியாகி பலகாலமாகிவிட்டது. இப்போதெல்லாம் திருமணங்களில் கலந்துகொள்வதில் சில அநாகரிகமான நடைமுறைகள் சகஜமாக புழக்கத்திற்கு வந்துவிட்டன. இப்படி  சாப்பிட்டபின் மணமக்களை வாழ்த்துவதும் அவற்றில் ஒன்று. வாசலில் சில சிறுமிகள் பட்டுப்பாவாடையில் கல்கண்டு, பன்னீர் செம்பு சகிதம் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்ததைத் தவிர ‘வாங்க..' என்று வரவேற்க யாருமில்லை. திருமணவீட்டாரின் குடும்பத்தினர் யாராவது வாசலில் நின்று கைகூப்பி ‘வாங்க... வாங்க‘ என்று வரவேற்பதெல்லாம் பழைய கதை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் இருப்பார்கள். புகைப்படம் மற்றும் வீடியோக்களில் இருந்தாகவேண்டுமே. விருந்தினர்களை வரவேற்பதைவிட வரலாறு முக்கியமல்லவா?

மணமக்களை வாழ்த்த நின்றிருந்த நீண்ட வரிசையைப் பார்த்த நண்பர், வாங்க.. சாப்பிட்டுவிட்டு அப்புறம் பார்க்கலாம்.. என்றார். அப்புறமென்ன. ‘பாம்பு திங்கிற ஊருல நடுத்துண்டம் நமக்கு' என்று போவதுதானே தமிழர் நாகரிகம். மெல்ல நகர்ந்து பந்தி நடக்கும் கீழ்த்தளத்திற்குச் சென்றோம்.

சாரை சாரையாக மக்கள் நிமிர்ந்து பார்க்காமல் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அசைவ மணம் மூக்கைத் துளைத்தது. மதுரை வட்டாரத்தில் திருமணம் என்றாலே கறி விருந்து என்றாகி விட்டது. ஆடுகளை வாங்கி உறித்து ஆட்டின் தோலையும் பல்லையும் தவிர அத்தனை சமாசாரங்களையும் வகை தொகையாய் சமைத்துவிடுவார்கள். குடல் கறி, ரத்தப்பொறியல், எண்ணெய்ச் சுக்கா, கறிகுழம்பு என்பது வளமையான பட்டியல். உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தால் மேற்கண்டவை போக வறுபட்ட பிராய்லர் கோழிகளும் முட்டைப் பணியாரமும் துணைக்கு வரக்கூடும். மேலோட்டமாக நோட்டம் விட்டதில் ஆடும் கோழியும் பேதமில்லாமல் இலைகளில் கிடந்தன. இந்த விருந்திற்காக 30 ஆடுகள் தங்கள் இன்னுயிரை ஈந்திருப்பதாக பக்கத்து உரையாடலில் தெரிந்தது.

பந்தியை நோட்டம் விட்டபோது எல்லா வரிசைகளிலும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களின் பின்னால் ஒரு வரிசை நின்று கொண்டிருந்தது, சாப்பிடுபவர் எழுந்தவுடன் அமர்வதற்காக. இந்தக்காட்சியும் இப்போது எல்லா திருமணவிருந்துகளிலும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. சாப்பிடுபவரின் முதுகுக்குப் பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருப்பவரின் மனவோட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.

‘எத்தனை தடவைதான் ரசம் வாங்குவ... எந்திரிச்சுத் தொலையேண்டா',

‘வாழ்நாள்ல கறிச்சோறயே கண்டதில்லையா!', ‘போன பெறவில நாயா இருந்திருப்பானோ, எலும்ப இந்தக்கடி கடிக்கிறான்' இப்படி ஒருவன் தனக்குப் பின்னால் மனதில் பேசிக்கொண்டிருப்பான் என்று யூகித்துக்கொண்டு ஒருவனால் எப்படி நிம்மதியாகச் சாப்பிடமுடியும்? இன்னொரு பக்கம் நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள் இந்த  எலும்பை (வாய்ப்பை) நான் நழுவ விடப்போவதில்லை என்று காரியத்தில் கண்ணாயிருக்கும் தமிழ்ச் சொந்தங்கள். பந்தியில் இருப்பவர்கள் உணவருந்தி முடித்தபின், அவர்களுக்குப் பின்னால் ஏற்கெனவே இடம்பிடிக்கக் காத்திருப்பவர்கள் சாப்பிட உட்காரவேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தால் மட்டுமே சாப்பிட முடியும் என்ற நிலைமை. இப்போது எங்களோடு இடம்பிடிக்கத் தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காகியிருந்தது. கடவுளே! இந்தக் கூட்டத்தில் இடம்பிடித்து இந்த விருந்தைச்  சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா?  என்ற குழப்பத்தோடு நண்பரைப் பார்த்தேன். ஏங்க மானம் அவமானம் பாத்தா கல்யாணவீட்ல சாப்பிட முடியாது.. வாங்க அங்க போகலாம்.. என்று கையை ஆட்டி ஒரு தெரிந்தவரிடம் இடம்பிடிக்க முயன்று கொண்டிருந்தார். இத்தனை கூத்துகளுக்கிடையில் பந்தியை ஒழுங்குபடுத்தவோ, விருந்தினர்களை அமரவைக்கவோ யாரும் இல்லை. கீழே சாப்பாடு இருக்கிறது. சாமர்த்தியம் இருந்தால் சாப்பிடுங்கள் என்பதாகவே இத்தகைய திருமண விருந்துகளைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி நீட் தேர்வு எழுதி மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்ததைப்போல் இடம்பிடித்து உட்கார்ந்தோம். பெரு முயற்சிக்குப் பின் அமர்ந்ததாலேயே பசியும் எதிர்பார்ப்பும் இருமடங்காகிவிடும்தானே. ஆவலாய் கறிசோற்றைப் பிரட்டி உருட்டி ஒரு வாய் வைக்கப் போகும்போதுதானா சரியாய் வீடியோகாரன் எங்கள் முன்னால் நிற்பான்? உருட்டிய சாதத்தை அப்படியே வைத்துவிட்டு அப்பளத்தை சிறிதாக ஒடித்து கொறித்துக்கொண்டு வீடியோ நகரும் வரை காத்திருந்தேன். இந்த வீடியோக்களை  சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சில வாரங்களில் திருமணவீடியோக்களை குடும்பமாக பார்ப்பார்களல்லவா? அப்போது, பெரிய பேராசிரியர்ங்கிறான்... எவ்வளவு பெரிய உருண்டைய  உள்ள தள்றான்... என்று போகிற போக்கில் ஒரு விமர்சனம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை மனதில் கொள்ளவேண்டியிருக்கிறது. அந்த உருண்டை என்பது வெறும் சோற்று உருண்டையல்ல. நம்முடைய குடும்ப பெருமையையும் தன்மானத்தையும்  சேர்த்துத்தான் உருட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் இருத்த வேண்டியிருக்கிறது.

விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழர்களின் இத்தகைய நடவடிக்கைகளை எப்படிப் புரிந்துகொள்வது? அழைப்பிதழ் கொடுத்து அழைத்து இப்படிப் பாராமுகமாக இருப்பது விருந்தினர்களை அவமதிப்பதாக ஆகாதா?  இது எப்படி ஒரு பண்பாட்டு பழக்கமாக நிலைபெற்றிருக்கிறது? என்று ஒரு சமூகவியல் பேராசிரியரிடம் கேட்டேன். 25 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணவீடுகளில்தான் நாம் விருந்து என்பதைச் சாப்பிடத் தொடங்கினோம். இன்றைக்கு வசதியான நடுத்தரவர்க்கம்  உருவாகிவிட்டாலும் நல்ல உணவுக்கான தேட்டம் குறைந்த பாடில்லை என்றார்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு வகையாக, நட்சத்திர விடுதிகளில் நடக்கும்  திருமணவிருந்துகள் வேறொரு ரகம். கல்யாண மண்டபங்கள், கறி  சோறு என்பதை எல்லாம் ‘வாட் நான்சென்ஸ்...‘ என்று  தரம் குறைந்ததாக எண்ணிக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பிரிவினர் நட்சத்திர விடுதிகளின் புறத்தோற்றத்தில் திருமண வரவேற்பை  அங்கு நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடக்கும் திருமண விருந்துகளுக்கென்றே பிரத்யேகமான உணவுப்பட்டியல் உண்டு. மட்டன் பிரியாணியில் ஆரம்பித்து காரட் அல்வாவுடன் ஐஸ்கிரீமை இணைத்துவிடும் சாமர்த்தியமான மெனு அது. முட்டை கோசில் மயோனைசை கலந்து ரஷ்யன் சாலட் என்று மிரட்டி விடக்கூடியவர்கள். இந்த பஃவே அல்லது பூஃபே எனப்படும் விருந்து முறையை இப்படிக் கொச்சைப் படுத்தியவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கவேண்டும். விருந்தினர்கள் தங்களுக்கு விரும்பிய பண்டங்களை விரும்பிய அளவில் எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு மேற்கத்திய விருந்து முறையாகத்தான் இந்த பூஃபே இருக்க வேண்டும். ஒரு வகையில் நம்முடைய பந்தி முறைக்கு ஒரு மாற்றாக இது இருக்க முடியும். பந்தி முறையில் எல்லா பதார்த்தங்களும் இலையில் பறிமாறப்பட்டுவிடும் சூழலில் குறைந்த பட்சம் 25% உணவு வீணாவதைப் பார்க்க முடியும். ஒரு சர்க்கரை நோயாளியின் இலையில் இனிப்புகளையும் பாயாசத்தையும் ஐஸ் கிரீமையும் பரிமாறுவது ஒரு கொலை முயற்சியல்லவா? ரசனை அடிப்படையிலும் ஒருவர் எண்ணெயில் பொறித்த பதார்த்தங்களைத் தவிர்க்க விரும்பலாம் அல்லவா? உணவு வீணாகாமலும் விரும்பியதை வேண்டிய அளவு எடுத்துக்கொள்வதையும் அனுமதிக்கும் பூஃபே ஒரு நல்ல மாற்றாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ  இன்னொரு வகையான விபரீதம். பெரும்பாலும் பூஃபே விருந்துகளில் விருந்தினர்கள் தட்டுக்களை கையிலேந்தி வரிசையாக செல்ல, உணவு பரிமாறுபவர்கள் பதார்த்தங்களை தட்டுகளில் நிறைப்பார்கள்.  வரிசையின் முடிவில் நம்முடைய தட்டை உற்றுப்பார்த்தால், அது தீபாவளியன்று வீடு வீடாக யாசகம் பெற்ற ஒரு பிச்சைக்காரரின் தட்டைப் போலிருக்கும். ஒரே ஆறுதல் கோட்டுப்போட்ட கனவான்களும் வைரம் ஜொலிக்கும் சீமாட்டிகளின் தட்டுகளும் பிச்சைக்காரர்களின் தட்டுகளைப் போலவே  இருப்பதால் நாம் தனியாகக் கூனிக்குறுக வேண்டியதில்லை. இதில் இன்னொரு முக்கியமான விஷயம், நட்சத்திர விடுதிகளில் திருமணவிருந்துகளில் பரிமாறுவதெற்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்ற சிப்பந்திகளை நியமித்திருப்பார்கள் போலும். தட்டோடு வரிசையில் நிற்பவர்களை அவர்கள் பார்ப்பதில் ஒரு இளக்காரம் இருப்பதாக தோன்றுவது எனக்குமட்டும்தானா என்று தெரியவில்லை. அவர்களின் பிரியாணி கரண்டி ஒரு கூட்டுக்குடும்பத் தலைவியின் ஜாக்கிரதை உணர்வோடு செயல்படும். அரைக் கரண்டிக்குமேல் அதற்கு அள்ளத் தெரியாது. அவர்கள் எத்தகைய பயிற்சி பெற்றிருந்தாலும் சில தமிழ்ச் சொந்தங்கள் அவர்களையும் சவாலுக்கு அழைப்பவை. நீ டீ ஸ்பூனில் அள்ளினாலும் தட்டு நிறையும்வரை நகர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வரிசையில் ஒரு சீர்குலைவை உருவாக்கிவிடக்கூடியவர்கள் அவர்கள்.

ஆக மொத்தத்தில் ஒவ்வொரு திருமணவிருந்தில் உண்டுமுடித்து வெளிவரும்போதும் வரிசையில் முந்துவது, இடம்பிடிப்பது என்று இப்படி அற்பமாக நடந்துகொள்ள நேர்ந்துவிடுகிறதே என்ற வருத்தமும் எரிச்சலும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழர்களின் திருமணங்களில் இத்தகைய மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. திருமணங்கள் ஏன் இத்தனை ஆடம்பரமாக நிகழ்த்தப்படுகின்றன. கட்சி மாநாடுகள் போல் இத்தனை கூட்டம் திருமணங்களில் ஏன் கூட்டப்படுகிறது?

ஒருகாலத்தில் திருமணம் என்பது குடும்ப நிகழ்வாக இருந்தது. நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்ளும் அந்நியோன்யமான சடங்கு. அன்று நூறிலிருந்து இருநூறுபேர் கலந்துகொள்ளும் நிகழ்வு. இன்று அது தங்களுடைய பெருமைகளை, செல்வாக்கை சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கான நிகழ்வாக மாறிவிட்டதோ?  ஒரு மனிதன் அதிக பட்சமாக 100முதல் 150 மனிதர்களுடன் மட்டுமே  அர்த்தபூர்வமான உறவு வைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் நவீன தமிழனுக்கு சொந்தபந்தங்கள் ஐநூறு பேரென்றால், தெருவாசிகள், வங்கியில், மருத்துவமனையில், காய்கறிச் சந்தையில் பழக்கமானவர்கள் ஒரு ஐநூறு. வேலை பார்க்குமிடத்தில் ஒரு ஐநூறு என்று எண்ணிக்கை மும்மடங்காக மாறிவிடுகிறது. குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் அந்த நால்வருக்கும் இத்தகைய மூன்று வட்டங்களில் நண்பர்கள் உண்டுதானே. இதற்கேற்றவாறு இன்று விளையாட்டு மைதானத்தை ஒத்த திருமணமண்டபங்கள் கட்டப்படுகின்றன. திருமணங்களை ஒட்டிய பல்வேறு சேவைகள் வணிக நோக்கங்களோடு பலகோடி மதிப்பிலான தொழிலாக விரிவடைந்துள்ளன.

உலகெங்கும் நவீன சமூகங்கள் திருமணங்களை தனிப்பட்ட சடங்காகக் கருதி நெருங்கிய உறவுகள் நண்பர்களை உள்ளடக்கியதாய் மாற்றியிருக்கின்றன. ஐம்பதிலிருந்து நூறு நபர்கள் பங்குபெறும் நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன. உறவுகளும் நண்பர்களும் உரையாடி, சிரித்து, குடித்து, ஆடிப்பாடி மகிழும் நிகழ்வுகளாய் நிகழத்தொடங்கி வெகுநாட்களாகிவிட்டன. ஆனால் நாம்  எதற்காக வாழ்நாள் சேமிப்பை எல்லாம் திருமணங்களில் அர்த்தமில்லாமல் செலவிடத்தொடங்கியிருக்கிறோம்? இப்போதெல்லாம் திருமண விருந்தென்றால் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

மே, 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com