தோழர் ரோகிணியின் ஐம்பதாம் ஆண்டு!

பெருவழிப் பாதை - 11
Rohini
ரோகிணி
Published on

ஒரு திரைப்பட நாயகியின் வெற்றியை எதனைக் கொண்டு கணக்கிடுவீர்கள், அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை கொண்டா..? அவர் எத்தனை ஆண்டுகாலம் கனவுக்கன்னியாக இருந்தார் என்னும் கால அளவினாலா..? இந்த தேவதைக் கதைகளெல்லாம் காலத்தின் ஒப்பனைகள் கலையும்போது காணாமல் போய்விடும்.

ஷபனா ஆஸ்மி, நந்திதாதாஸ், போன்றவர்களெல்லாம் தேவதைகளல்லர்.. பகட்டில்லாத சாமான்ய மனிதர்களாகத் திரையில் தோன்றியவர்கள், மட்டுமன்றி பகட்டில்லாமல் ஒப்பனைகளில்லாமல் சாமான்ய மனிதர்களாக வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள்.

நம் தமிழ்நாட்டிலும் அப்படியொருவர் உண்டு- ரோகிணி, தோழர் ரோகிணி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர், சமூகநீதிக்கான குரலோடு களத்தில் நிற்பவர், தெருவிலிறங்கி சமர் செய்பவர், வாச்சாத்தி வன்கொடுமையை திரைப்படமாக எடுத்துக்கொண்டிருப்பவர்.

யாரிந்த ரோகிணி? அவர் எங்கிருந்து வந்தார்?

விசாகப்பட்டினம் வட்டாரத்தில் அனகாபள்ளி கிராமம், நான்கு சகோதரர்களோடு தன் பாட்டி வீட்டில் வளர்ந்தவர் ரோகிணி. அவரது ஐந்தாவது வயதில் தாயை இழந்தார், தங்கள் மகள் இறந்த கோபத்தில் பாட்டிவீட்டினர் பெண் குழந்தையை மட்டும் பார்த்துக்கொள்ள மறுத்துவிடுகின்றனர்.

ரோகிணியின் தந்தை அப்பாராவ் தன் மகளை மட்டும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார். நடிப்பில் ஆர்வமுள்ள அப்பாராவ் வாய்ப்புத்தேடி சைக்கிளில் சுற்றுகிறார், விட்டுவிட்டுச் செல்ல யாருமில்லாததால் மகளையும் சைக்கிளில் அழைத்துக்கொண்டு போகிறார், அப்படிப்போகுமிடத்தில் அப்பாவுக்கு வாய்ப்புக்கிடைக்கவில்லை, ரோகிணிக்குக் கிடைக்கிறது.

யசோதா கிருஷ்ணா என்னும் தெலுங்குப்படத்தில், சிறுவயது கிருஷ்ணனாக தன் நடிப்பைத் தொடங்கினார். அப்பா மறுமணம் செய்துகொள்ள ரோகிணியின் வருமானம் அந்தக்குடும்பத்திற்கு அவசியமாகிறது. குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்கள். முறையாகப் பள்ளி செல்லும் வாய்ப்பில்லை. தேவர் பிலிம்சின் முருகனடிமை என்னும் தமிழ்ப்படத்தில் வாய்ப்புக்கிடைக்கிறது, வீட்டிலேயே தமிழ் கற்றுக்கொள்ள ஒரு ஆசிரியர் ஏற்பாடு செய்யப்படுகிறார்.. அப்பா நிறையப் புத்தகங்கள் படிக்கும் வழக்கமுள்ளவர், சின்ன வயதிலேயே அந்தப்புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வருகிறது.

ரோகிணிக்கு வயது பனிரெண்டைத் தொடும்போது, குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பில்லாமல் போகிறது, எனவே நேரடியாக ஐந்தாம்வகுப்பில் பயில பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார், வயதையும், கற்கும் திறனையும் தகுதியாகக் கருதித் தரம் உயர்த்தப்பட்டு, ஏழாம்வகுப்பிற்கு அனுப்பப்படுகிறார்.

திரைப்பட விநியோகஸ்தராக இருந்த அப்பாவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் நடிக்கப்போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. செம்மீன் படத்தைத் தயாரித்த கண்மணி பிலிம்ஸ் தயாரிப்பில் தக்கா என்னும் படத்தில் கதாநாயகியாக வாய்ப்புக்கிடைக்கிறது. பிரபலமான ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்த பி.என். சுந்தரம்தான் படத்தின் இயக்குநர்.

அதனைத் தொடர்ந்து பரதன், பத்மராஜன் போன்ற தரமான இயக்குநர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது, அந்த காலகட்டத்தில் மலையாளத்தின் பிரபல நாயகியாகிறார்.

தமிழில் மணிவண்ணன் இயக்கிய இளமைக்காலங்கள் படத்தில் சிறிய வேடம், அதன்பின் பாக்கியராஜ் இயக்கி நடித்த பவுனுபவுனுதான் படத்தில் நாயகியாகி தமிழில் நடிப்பைத் தொடர்ந்தார். இடையில் ரகுவரனோடு காதல் திருமணம், அவரது பிரிவு என்பது அவர் கடந்துவந்த பாதை.. ஸ்திரீ என்னும் தெலுங்கு படத்தின்மூலம் தேசிய விருதும் பெற்றார்.

பணத்தையும், புகழையும் மட்டுமே தேடும் திரைவாழ்க்கையில், சமூகமாற்றத்தைத் தேடும் வேட்கையும், இயக்கப்பணிகளுக்குள் வரும் ஆர்வமும் எங்கிருந்து கிடைத்தன என்றால் புத்தகங்களும், மலையாளத் திரையுலகும், நான் பழகிய சில மனிதர்களும் என்கிறார்.

மலையாளத்தில் நடிக்கும்போது அதை பிழைப்பிற்கான தொழிலாகமட்டுமே கருதியிருந்தேன். நெடுமுடி வேணு, கொடியேட்டம் கோபி, திலகன் போன்ற மாஸ்டர்களே திரைக்கலையின் மேன்மைகளை எனக்குப் புரியவைத்தார்கள். மேலும் அங்கு சகமனிதர்களை அவர்களின் பொருளாதாரத் தகுதிகளைக் கொண்டு ஏற்றத்தாழ்வாக நடத்தாமல் சமமாக நடத்துவதை, மற்ற மொழிகளில் நடிக்கும்போதுதான் உணர்ந்தேன்.

அப்பா நிறைய புத்தகங்கள் கொண்ட நூலகம் வைத்திருந்தார். அவரைப் பெரிய முற்போக்குவாதியென்று சொல்லமுடியாது என்றாலும், முற்போக்கு புத்தகங்களை சேமித்து வைத்திருந்தார், அவைபற்றி அறிந்திருந்தார். தெலுங்கானாப் புரட்சிபற்றியெல்லாம் எனக்குச் சொல்லியிருக்கிறார். அவரிடமிருந்த புத்தகங்களே எனக்கு மாற்றுப்பார்வையைக் கற்றுக் கொடுத்தன.

தொடர்ந்து மார்க்ஸ், பெரியார், அம்பேத்கரை படித்து அறிந்தேன், தலைவர்கள், ஆளுமைகளின் உரைகளைக் கேட்கும் வழக்கம் எனக்குள் நிறைய சாளரங்களைத் திறக்கின்றன.

எனக்கு ஸ்மீதாபாட்டீல், நஸ்ரூதின்ஷா போன்றவர்களின் நடிப்பு பிடிக்கும். அவர்களெல்லாம் நாடக இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்பதால் நானும் தியேட்டர் குழுக்களோடு என்னை இணைத்துக்கொண்டேன். அங்கு நான் சந்தித்த பிரளயன், பிரசன்னா ராமசாமி, குமரன் வளவன் போன்றோரின் நட்பு எனக்கு புதிய புரிதல்களை ஏற்படுத்தியது.

மகளிர் மட்டும் படத்தில் நடிக்கும்போது நாசர் அறிமுகமானார், அவருடைய எளிமையும், நேர்மையும், சமூகப்பார்வையும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தன,

தோழர் தமிழ்ச்செல்வனையும் எனது சமூகப்பார்வைக்கான காரணமாகச் சொல்வேன், அவர் கதையில் வரும் பெண்களும், பெண்கள் குறித்த அவரது பார்வையும் நான் இடதுசாரிப் பாதையைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம், அவர்தான் என்னை த.மு.எ.க.ச.வோடு இணைந்துகொள்ளச் சொன்னார் என்று சுருக்கமாக விவரித்தார் ரோகிணி.

முற்போக்கான படமாக இருந்தால்கூட அதன் திரைமொழி ஆணின் பார்வையில்தான் இருக்கிறது. அதனால் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் இடத்திற்கு நிறைய பெண்கள் வரும் சூழலை உருவாக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது.

திரைப்படம் என்பது எனது தொழில், அதனால் கிடைக்கும் கவனிப்பைக் கொண்டு சமூக மாற்றத்திற்கான குரல் கொடுக்கவேண்டும்,அதற்கான போராட்டத்தில் நிற்க வேண்டுமென்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் ரோகிணி. அவர் திரைக்கு வந்த ஐம்பதாம் ஆண்டு இது.

செந்தோழருக்கு வாழ்த்துகள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com