தாய்மொழியில் தள்ளாட்டம்.... இன்னொரு மொழிப்போர்?

திசையாற்றுப்படை - 24
தாய்மொழியில் தள்ளாட்டம்....
இன்னொரு மொழிப்போர்?
Published on

இந்தியாவிற்கு புதிய கல்விக் கொள்கை தேவையா? என்றால் தேவை என்பதுதான் நியாயமான பதிலாக இருக்கமுடியும். ஏனெனில் கடந்த 50 ஆண்டுகளின் அறிவியல், தொழில்நுட்பம், வேலைச் சந்தை அனைத்தும் பாரதூரமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

கூடுதலாக செயற்கை நுண்ணறிவு வேலைச்சந்தையில் விளைவிக்கப் போகும் சிக்கல்களைப் பற்றிய பல்வேறு அநுமானங்களும் எதிர்காலம் பற்றிய எதிரும் புதிருமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. ஒரே வகையான எளிமையான உடலுழைப்பு சார்ந்த வேலைகளை செயற்கை நுண்ணறிவு ஈடுசெய்யும்போது உழைப்பு சார்ந்த எளிய ‘எதற்கும் லாயக்கற்றவர்கள்’ என்று சொல்லத்தக்க மக்கள் கூட்டம் உருவாகப் போகிறது என எதிர்காலவியலாளர்கள் அச்சுறுத்துகிறார்கள். வரலாற்றில் இத்தகைய சூழலை இதுவரை மனித சமூகம் சந்தித்ததில்லை. இந்தகைய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்திற்கான வாழ்வாதாரத்தை உருவாக்குவதே இன்றைய மக்கள் நல அரசுகளின் சிந்தையாக இருக்கவேண்டும். மேற்கத்திய நாடுகள் இந்தச் சூழலை மனதில்கொண்டு பல்வேறு மாற்று மாதிரிகளை திட்டமிடத் தொடங்கியுள்ளன. ஆனால் நம் ஒன்றிய அரசின் செயல்பாடுகளும் திட்டங்களும் எத்தகையனவாக இருக்கின்றன என்பதை விளக்கிக் கூறவேண்டிய அவசியமில்லை.

இன்று நமது நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 50% இளையோராக இருக்கிறார்கள். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இப்போது நாட்டிற்குள்லேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியாக வேண்டும். அல்லது உலக நாடுகளின் மனிதவளத் தேவையைப் பூர்த்திசெய்யும் விதத்திலான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இன்று நம்முன்னிருக்கும் பெரும் சவால் மனிதவளத்தை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதுதான். குறிப்பாக கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் மனிதவளப் பற்றாக்குறையால் சிரமப்படும் நாடுகளாகவுள்ளன. ஆக பெருமளவில் இந்த நூற்றாண்டுக்கான திறனுள்ளவர்களாக நம் இளைஞர்களை உருவாக்கியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆக இளைஞர்களைத் தகுதிப்படுத்த கல்வியில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். ஆகவேதான் இன்று இந்தியாவின் உயர்கல்விச் சந்தை மேலும் மேலும் விரிவடைந்துகொண்டே இருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருந்தும் இந்திய உயர்கல்வி சேர்க்கை 27% த்திலேயே இருக்கிறது. தமிழகம் மட்டுமே 57% த்துடன் முன்னணியில் இருக்கிறது. ஆக இன்னும் ஆயிரக்கணக்கான உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேவை முதன்மையானதாக இருக்கிறது. ஆனால் இப்போதிருக்கும் கல்வி முறை வகுப்பறைக் கல்வியாகவும் 5% - 15% மாணவர்களை மட்டுமே வேலைத் திறன்படைத்தவர்களாகவும் உருவாக்கி வருகிறது என்பதால் ஒரு புதிய கல்விக் கொள்கை தேவையானதே. அப்படியிருக்கும்போது ஒன்றிய அரசு, கல்வியில் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை மாதிரியாகக் கொண்டு வெளிப்படையான விவாதங்களை முன்னெடுத்து காலத்திற்குப் பொருத்தமான ஒரு கல்விக்கொள்கையை உருவாக்கியிருக்க முடியும். தேசிய அளவிலான சில பொது நோக்கங்களோடு, மாநிலச்சூழல்களுக்கேற்ப அவர்கள் நிரப்பிக்கொள்ளத்தக்க வாய்ப்புகள் இருந்திருக்கவேண்டும். ஆனால் புதிய கல்விக்கொள்கையில் நடந்ததோ இந்தியாவிற்கு மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டுக்கே எதிரான கொள்கைப் பிரகடனங்களுடனானதாக வரையப்பட்டிருக்கிறது என்பதே கல்வியாளர்களின் கவலை. வேதகால கல்வி, பாரம்பரியம் என்ற பெயரில் காலத்திற்குப் பொருந்தாத பல்வேறு வேண்டாத ஆணிகளுள் ஒன்றுதான் இந்த மும்மொழி ஆணியும்.

ஐரோப்பிய நாடுகளிலும் ரஷ்யாவிலும் பயணம் செய்தபோது, அங்கு பெரும்பாலும் ஆங்கிலம் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருப்பதை கவனிக்க முடிந்தது. முடிந்தளவு தாய்மொழி வழி கல்வியே ஊக்குவிக்கப்படுகிறது. ஆங்கில மேலாதிக்கம் தங்கள் மொழிகளை கபளீகரம் செய்துவிடும் என்ற அச்சத்தையும் எச்சரிக்கையுணர்வையும் அதில் பார்க்க முடியும். இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் அறிவிப்புகளும் அறிவிப்புப் பலகைகளும் காணப்படுகின்றன. ஆனால் அங்கு சிங்களத்தைக் கற்றே ஆகவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தமிழர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தையும், சிங்களர்கள் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தையும் கற்கிறார்கள். சிங்கப்பூரிலும் கூட அந்தந்த இனத்தவர் அவரவர் மொழிகளைக் கற்பது கட்டாயமானது. சீனர்கள் சீன மொழியையும், மலாய்காரர்கள் மலாய் மொழியையும், தமிழர்கள் தமிழையும் கூடவே அனைவரும் ஆங்கிலத்தையும் கற்கிறார்கள். மொத்தத்தில் தாய்மொழியை முதன்மையாகவும் ஆங்கிலத்தை தேவையின் அடிப்படையிலும் கற்றாகவேண்டிய சூழலே உலகெங்கிலும் நிலவுகிறது. ஆனால் இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் 700க்கும் மேற்பட்ட மொழிகளுள் நடைமுறைப் பயன்பாட்டிலிருக்கும் ஒரே தொன்மையான மொழியாக தமிழ் இருந்தும் அதன் அங்கீகாரத்திற்காய் பெரும் போராட்டங்களை வரலாறு முழுவதும் நாம் நிகழ்த்திக்கொண்டிருக்க வேண்டியிருப்பதை என்னவென்று சொல்வது?

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது நியூயார்க் நகரின் பாதாள ரயில் நிலையத்தில் எந்தப்பக்கம் செல்லும் ரயிலில் ஏறுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்ததில் நிலையத்திற்குள் இந்தியர் நடத்தும் ஒரு சிறிய பெட்டிக்கடையைப் பார்த்தவுடன் ஏற்பட்ட ஆசுவாசத்துடன் ஆங்கிலத்தில் என் ஐயத்தைக் கேட்டேன். அவர் சிநேகமற்ற முகபாவத்துடன் என் வினாவிற்கு பதில் சொல்லாமல், நீங்கள் இந்தியர்தானே… ஏன் இந்தியில் பேசக்கூடாது? என்றார். அமெரிக்காவிலிருக்கும் இந்தியப் பெட்டிக்கடைக்காரரின் மொழிப்பற்று எனக்கு விசித்திரமாகப் பட்டது. இந்தி தெரியாமல் ஆங்கிலம் தெரிந்ததனால்தான் எங்கள் ஆட்கள் மருத்துவர்களாகவும், மென்பொருள் வல்லுனர்களாகவும் இருக்க, நீ பெட்டிக்கடை வைத்திருக்கிறாய் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். இந்த பெட்டிக்கடைக்காரரின் மனநிலையில் ஓர் ஒன்றிய அரசு கல்விக் கொள்கைகளை வகுக்கத் தொடங்குவது ஒரு வரலாற்று சோகம்தான்.

1930க்களிலும் 60களிலும் இந்தித்திணிப்பிற்கு எதிராக எழுந்த போராட்டங்களுக்கும் தற்போது தமிழகம் நடத்திவரும் போராட்டத்திற்குமிடையேயான பெரும் வேறுபாடு உண்டு. அன்று இந்தியை எதிர்த்து ஒற்றைக் குரலாய் ஒலித்த நிலைமாறி இன்று எவ்விதமான அறிவியல் அணுகுமுறைகளுக்கோ தர்க்க நியாயங்களுக்கோ உட்படாத எதிர்க்குரல்களை நமக்குள்ளேயே சந்திக்கவேண்டியுள்ளது.

இந்தியையோ, வேறு ஒரு இந்திய மொழியையோ படிப்பதால் எங்களுக்கு என்ன பலன்? வட மாநிலங்களில் எங்கும் மும்மொழிக் கோட்பாடு இல்லையே? பலஅமைச்சர்கள், தலைவர்கள் பிள்ளைகள் யாரும் நாலந்தா பல்கலைக்கழகத்திலோ வாரனாசி இந்துப் பல்கலைக்கழகத்திலோ சமஸ்கிருதம் படிக்கவில்லையே? அன்றாடம் மாட்டிறைச்சியும் பன்றி வறுவலும் ருசிக்கும் மிலேச்சர்கள் நடத்தும் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில்தானே படிக்கிறார்கள்? ஏன்.. தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் அவர்கள் குழந்தைகளை, பேரக்குழந்தைகளை வேதபாடசாலைகளுக்கு அனுப்பிவிட்டார்களா? அனைவரும் ஆங்கிலப்பள்ளியில்தானே படிக்கிறார்கள்? அப்படியென்றால் தாய்மொழியோடு ஆங்கிலமே இந்த நூற்றாண்டின் அத்தியாவசிய மொழி என்பதும், மேற்குலகம் முன்னெடுத்துள்ள அறிவியலே காலத்தின் கட்டாயம் என்பதும் எத்தனை எளிமையான உண்மைகள். இப்படி எத்தனைவிதமான கேள்விகளுக்கும் எந்த நியாயமான பதிலும் இல்லை. மாறாக தொடர்ந்து சொல்லும் பொய்களை உண்மையாக மாற்றிவிடத்துடிக்கும் செயல்பாடுகள் அதிதீவிரமாக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

வெகுமக்களின் பொது உளவியலை ஒருமுகப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான எளிய வழியாக மதத் தீவிரவாதம் தேவைப்படுகிறது. அதற்கு எதிர்நிலையில் ஒரு வில்லன் தேவைப்படுகிறான். அதற்கு ஒரு மதம் முன்வைக்கப்படுகிறது. அதுபோல் பிராந்திய அடையாளங்களை ஒழிப்பதற்கு இந்தியும் தேவைப்படுகிறது.

இந்தியாவின் அல்லது உலகின் எந்த நகரத்தில் வாழும் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தினரின் இல்லங்கள், உடை, பயன்படுத்தும் சாதனங்கள், அழகியல் பார்வைகள், பொழுதுபோக்குகள், உயர்கல்வி, தொழில் நுட்பம் என எதை எடுத்துக்கொண்டாலும் அவை மேற்கத்திய உலகம் சார்ந்தவையாக மாறியுள்ளன. இந்நிலை சரி அல்லது தவறு என்பதல்ல நம் விவாதப் புள்ளி. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று உலகை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளின் கல்வியும், அறிவியலும், தொழில்நுட்பங்களுமே ஆளுகின்றன. இந்த நூற்றாண்டையும் இனி வரும் நூற்றாண்டுகளையும் நடத்திக்கொண்டிருக்கிற கனிணி மயம், தரவு அறிவியல், இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், உயிர் வேதியல் மற்றுமான துறைகளின் வளர்ச்சியில் ஆசிய ஆப்பிரிக்க மத்தியகிழக்கு நாடுகளின் பங்கு எத்தனை சதவீதம்? இந்தத்துறைகள் இல்லாமல் இன்று உலகில் எந்த ஒரு நாடாவது இயங்குவதற்கான சூழல் உண்டா? நவீன அறிவியல் தொழில்நுட்பமும், நுகர்விய முதலாளித்துவமும் இணைந்து விரித்துள்ள இந்த வலையில் சிக்காத தேசங்கள் உண்டா?

இந்தியா போன்ற வேறுபட்ட மொழி, பண்பாடு மட்டுமல்லாமல் பொருளாதார வேறுபாடுகளுள்ள நாட்டிற்கு தேசம் முழுவதற்குமான கல்விக் கொள்கை என்ற ஒன்று எப்படிப் பொருந்தும்? ஒரு மாநிலத்திற்குள்ளேயே கூட கல்விநிறுவனங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளது என்பதும் அத்தகைய தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் அவரவர்களுக்கான பாடத்திட்டம் தேர்வுமுறைகளோடு சிறந்த பங்களிப்பை செய்து வருகின்றன என்பதையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.

அமெரிக்காவில் மாநிலங்களுக்கான தன்னாட்சியும், மாநிலங்களுக்குள்ளே கவுண்டிகள் எனப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்குள்ள தன்னாட்சியும் கூட்டாட்சி அரசுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளத் தக்கவை. ஒரு மாநிலம் ஒரு குறிப்பிட்ட போதைப் பொருளைப் பயன்படுத்துவதை சட்டபூர்வமாகுகிறது. இன்னொரு மாநிலம் ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கிறது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளும் அருகில் உள்ள பள்ளிகளை அவர்களே நிர்வகிக்கிறார்கள். பலகலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் ஒரேவிதமான கட்டுப்பாடுகள் எவையும் இல்லை. ஆகவேதான் உலகின் தலைசிறந்த 25 பல்கலைக்கழகங்களில் 13 பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவைச் சார்ந்தவையாக இருக்கின்றன. மிக முக்கியமான கண்டுபிடிப்புகளை அப்பல்கலைக்கழகங்கள் நிகழ்த்துகின்றன. ஒப்பீட்டளவில் இந்தியப்பல்கலைக்கழகங்கள் எவையும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தவில்லை. மேல்தட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 5% மாணவர்கள் பிற நாடுகளில் இன்றைய மென்பொருள் மற்றும் மேலாண்மைத் துறைகளில் பணிசெய்யும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். ஆகவே இன்றைய முக்கியத் தேவை மூன்று மொழிகளல்ல. தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் போதுமான மொழிப் பயிற்சி, கூடுதலாக குறிப்பிடத்தகுந்த வேலைக்கான திறன்களே.

மூன்று மொழிகளுள் ஏதாவதொரு இந்திய மொழிதான் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். அது எத்தகைய சாத்தியமற்ற ஒன்று என்பதை பல்வேறு கல்வியாளர்கள் விளக்கிவிட்டார்கள். இது இந்தியைத் திணிப்பதற்கான ஒரு தந்திர உபாயம்தான். ஆகவே இந்த வேண்டாத ஆணியைப் பிடுங்கி எறிவதில் தமிழர்கள் ஒன்றிணைந்தே ஆகவேண்டும். அதே சமயத்தில் தமிழத்தின் கல்வித் தரத்தைப் பற்றிய வெளிப்படையான விவாதங்களையும் நாம் தொடங்கியாகவேண்டும். அனைவருக்குமான தொடக்கக்கல்வி, அதிகபட்சம் பேருக்கான உயர்கல்வி எனும் முதன்மையான சமூக நீதி நோக்கத்தை நிறைவேற்றுவதில் திராவிட அரசுகளின் பணி குறிப்பிடத்தக்கது. ஒரு சிறுவன் கால்நடையாக நடந்து சென்றடையும் தூரத்தில் ஆரம்பப் பள்ளி என்று தொடங்கிய தமிழக கல்விப் பயணம் இன்று நீண்ட தூரம் பயணிக்காமல் ஒரு கல்லூரியில் பயிலும் வாய்ப்பை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பு முடிந்தபின்னும் தாய்மொழியில் பேசுவதும் எழுதுவதும்கூட இயலாத மாணவர்களை இன்று கணிசமாகப் பார்க்கமுடிகிறது. தாய்மொழியிலேயே தள்ளாடும் முதல்தலைமுறை மாணவர்களுக்கு ஆங்கிலமும்கூட பயன்பாட்டு அளவில் திருப்திகரமாக இல்லை என்பதும் கவலையளிக்கக் கூடிய விசயங்கள். மொழியின் வழியாகவே அறிவையும் திறன்களையும் கைவரப்பெற இயலும் என்ற வகையில் மும்மொழிக்கொள்கையை நிராகரிக்கும் அதே வேளையில் தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் திறம்படக் கையாள்வதற்கான வழிமுறைகளை தமிழக பள்ளி மற்றும் உயர்கல்வித்துறையினர் ஆலோசிக்க வேண்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com