தன்னலங்கருதாமல் மிகப்பெரும் செயல்களை சில ஆளுமைகள் இந்த சமூகத்தின் வெளிச்சத்துக்கு வராமலே செய்துகொண்டிருப்பார்கள். நிழல் திருநாவுக்கரசு அவர்களுள் ஒருவர்.
திருநாவுக்கரசு இரண்டு தளங்களில் இயங்கிக்கொண்டிருப்பவர். முதலாவது பல்வேறு நாடுகளின் மாற்றுத் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை தமிழுக்கு அறிமுகம் செய்யும் நிழல் மாத இதழை கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்திக்கொண்டு வருகிறார்.
சொல்லப்படாத சினிமா, ஈரானிய சினிமா, அரசியல் சினிமா, ஆப்பிரிக்க சினிமா, தலித் சினிமா, நாவலும் சினிமாவும், சினிமா சட்டமும் சாளரமும், 1931 முதல் 1960 வரையான தமிழ் சினிமா விமர்சனத்தொகுப்பு, இண்டர்நெட் உலகில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என மிக முக்கியமான நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.
ஹாலிவுட் படங்களும், பெருவணிகப் படங்களும் மட்டுமே பரவலாக அறிகும் பெற்றிருந்த சூழலில்ஈரான், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கத் திரைப்படங்களை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்ததும், ஆவணப்படுத்தியதும் அரசின் பெருஞ்சாதனை. இதை அவர் செய்யத்தொடங்கியது இணையம் என்பதே இல்லாத வெறும் வி.எச்.எஸ். காணொளி நாடாக்கள் மட்டுமே இருந்த காலம் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இப்படியான படங்களைப் புத்தகமாக அறிமுகம் செய்ததுடன் நிற்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் பயிற்சி முகாம்களை நடத்தி, இவ்வாறான படங்களைப்பற்றி நேரடியாகவும் அறிமுகம் செய்துவருகிறார். வெறும் பாடங்களோடு நின்றுவிடாமல் பல்வேறு ஆளுமைகளைக்கொண்டு பயிற்சியளித்து முகாம்களில் பயிற்சிபெறும் மாணவர்களை குறும்படங்கள் எடுக்க வைக்கிறார்.
2003-ஆம் ஆண்டு அவிநாசி அருகிலுள்ள முதலிபாளையத்தில் தொடங்கிய முதல்முகாமில் மறைந்த இயக்குநர் அருண்மொழி பயிற்சியளித்தார். திருப்பூர் பாரதிவாசனின் பதியம் அமைப்பின் உதவியோடு தொடங்கிய இந்தக் குறும்படப் பயிற்சி முகாம் இதுவரை 71 ஊர்களில் நடந்துமுடிந்திருக்கிறது. 72-வது முகாம் கும்பகோணத்தில் நடக்கவிருக்கிறது. இந்த முகாமில் கலந்துகொள்பவர்கள் திரைப்படம்குறித்த ஆர்வமிருந்தும் அதை நோக்கிச்செல்லும் வழிமுறை அறியாத கிராமப்புற இளைஞர்கள். அவர்களுக்கு திரைப்படம் குறித்த அடிப்படை அறிவைப் போதித்து, தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்து குறும்படத்தை உருவாக்கும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன இம்முகாம்கள்.
இந்த முகாம்களில் பயிற்சிபெற்ற மாணவர்களில் 13 பேர் திரைப்பட இயக்குநராகியிருக்கிறார்கள். சுமார் முந்நூறுபேர் பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்களாகப் பணியாற்றுகின்றனர்.
மாற்று சினிமா குறித்த இந்தப் பார்வையும், தேடலும் எங்கிருந்து தொடங்கியது என்னும் கேள்விக்கான பதிலையும் ஒரு ஆவணம்போலவே சொல்லத்தொடங்குகிறார் திருநாவுக்கரசு, இனிவருவது அவரது வார்த்தைகள்.
“எண்பதுகளின் முற்பகுதிகளில் சென்னை ஃபிலிம் சொசைட்டி நடத்தும் திரைப்பட விழாக்கள் மிக முக்கியமானவை. சோவியத் கலாச்சார மையத்தில் நடக்கும் திரைப்படக்காட்சிகளுக்கு என்னைத் தனது சைக்கிளில் அழைத்துச்சென்றவர் கவிஞர் பழநிபாரதி. மேக்ஸ்முல்லர்பவன், அலியான்ஸ் பிரான்சிஸ் போன்ற இடங்களில் நடக்கும் திரைப்படக்காட்சிகளுக்கும் தவறாமல் செல்வோம். கவிஞர். பசுமைக்குமார் புதவ்கின் ஃபிலிம் கிளப் என்ற அமைப்பை நடத்திக்கொண்டிருந்தார். அவரும் பல ரஷ்யத்திரைப்படங்களைத் திரையிடுவார். அவர்மூலமாக சோவியத்நாடு நூலகத்திலிருந்து திரைப்படங்கள் குறித்த பல புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துவந்து படிக்க முடிந்தது. அதிலிருக்கும் பல அரிய திரைப்படங்களை எங்கள் விருப்பத்தின்பேரில் திரையிடும் வாய்ப்பையும் நாங்கள் பெற்றிருந்தோம். போரும் வாழ்வும், தாய் போன்ற உலகப்புகழ்பெற்ற நாவல்களின் திரைவடிவங்களை இவ்வாறு காணநேர்ந்தது.
மாக்ஸ்முல்லர் பவனில் திரையிடப்பெற்ற 110 ஜெர்மன் மெளனக்குறும்படங்களை தி.சு.சதாசிவம், செ.யோகநாதன் ஆகியோரோடு பார்த்த அனுபவத்தை எப்போதும் மறக்கமுடியாது.
ஒருகட்டத்தில் நான் பெற்ற திரைப்பட அனுபவங்களை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவெ நிழல் மாத இதழை ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திரைப்படங்கள் குறித்த புத்தகங்களைப் பதிப்பித்தேன். அதிலும் ஒரு போதாமை இருப்பதாகத் தோன்றியதில் கிராமப்புற இளைஞர்களைத் தேடிப்போய் அவர்களை குறும்பட இயக்குநர்களாக உருவாக்கும் பயிற்சி முகாம்களைத் தொடங்கினேன்.” என்று சுருக்கமாக தன் பயணத்தைச் சொல்லி முடிக்கிறார் அரசு.
திருநாவுக்கரசு இயங்கும் இன்னொரு தளம் தமிழிசைக்கலைஞர்கள் குறித்த ஆவணங்களைத் தேடுதலும், அவற்றைப் பதிவுசெய்வதும். திருநாவுக்கரசு பிறந்தது தஞ்சாவூரில், அவரது தந்தை பஞ்சாபகேசன் தொல்லியல்துறையில் புகைப்படக்கலைஞராகப் பணியாற்றியதால் இயல்பாகவே அவருக்கு இசை, கலைகள் குறித்த அறிமுகம் கிடைத்தது.
“அப்போதெல்லாம் இசைக்கச்சேரிகளின் இறுதியில் தமிழை துக்கடாவாகத்தான் பாடுவார்கள். இந்தக் கோபம்தான் என்னைத் தமிழிசை குறித்துத் தேட வைத்தது, அப்படித்தான் கர்நாடக இசைக்கு மாற்றாக தமிழிசையை உயர்த்திப்பிடித்த தண்டபாணித் தேசிகரை நான் கண்டடைந்தேன்.
கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம் எனக்கு இசை குறித்த பல நூல்களைக் கற்கும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்த நூல்நிலையம் இருந்த தெருவில் வசித்தவர் பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசன். அவர் மூலமாகத்தான் இசையின் தொடக்கம் என்று சொல்லும் ‘மாய மாளவ கெளளை’ ராகம் 400 ஆண்டுகாலம் பழமையானது, ஆனால் தமிழிசையான கோடிப்பாலை என்னும் கரகரப்ரியா அதற்கும் முந்தையது, பாணர்கள் கற்றுத்தந்தது என்பதையெல்லாம் அறிந்தேன்,” என்கிறார் அரசு.
தமிழிசைக் கலைஞர்கள் மறைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களைப்பற்றிய நூல்களைப் பதிப்பித்தார். திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை, கே.பி.சுந்தராம்பாள், வீணை தனம்மாள், மதுரை மாரியப்பசுவாமிகள், மதுரகவி பாஸ்கரதாஸ், தமிழிசைத்தூதுவர் தண்டபாணிதேசிகர் ஆகியவை இவர் பதிப்பித்த இசைக்கலைஞர்கள்பற்றிய ஆவணநூல்கள். மேலும் தனிமனிதனாக 1000 தமிழ்த்திரைப்படங்களின் 3000 பாடல்களை திரையிசையில் தமிழிசை என்னும் பெயரில் ஒவ்வொரு பாடலின் ராகத்தோடு நூலாகத் தொகுத்துள்ளார்.
முப்பதாண்டுகளாக இவ்வாறு பரந்துபட்ட தளங்களில் வியாபார நோக்கமின்றி செயல்பட்டுவரும் திருநாவுக்கரசுவுக்கு இதுவரை அரசு அங்கீகாரமோ, நிறுவனங்களின் அங்கீகாரமோ கிடைத்ததில்லை. அதையெல்லாம் எதிர்பாராமல் ஒரு கடமையாகக் கருதி தனியொரு மனிதனாக தன் சேவைகளைத் தொடர்ந்து வருகிறார். அரசு அவருக்கு உரிய அங்கீகாரத்தையும், தேவையான உதவிகளையும் செய்துகொடுக்குமானால் மறைக்கப்படும் இசைத்தமிழை இன்னும் அவர் ஆவணப்படுத்துவார்.