தேன்மொழியின் நெருப்பு  மொழி!

பெருவழிப்பாதை – 21
தேன்மொழி சௌந்தரராஜன்
தேன்மொழி சௌந்தரராஜன்
Published on

எல்லைகடந்து வைக்கம் சென்று சமூகநீதிக்காகப் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில் வைக்கம் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது, இந்த விருது பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டோர் நலனுக்காகப் போராடும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும்.

2025-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி செளந்தரராஜனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது, யாரிந்த தேன்மொழி..? எதற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது..?

தேன்மொழி கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் மதுரையிலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள், சாதிரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தலித்திய உரிமைகளுக்காகப் போராடுபவர்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒருவர் இங்கிருக்கும் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எவ்வாறு போராடினார் என்னும் கேள்வி எழலாம், தேன்மொழி போராடுவது இங்கிருக்கும் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அன்று, அங்கிருக்கும் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்,

அமெரிக்காவில் சாதீய ஒடுக்குமுறையா, அங்கிருப்பவர்களுக்கு சாதிபற்றி என்ன தெரியும்..?

கடந்தமாதம் தீபாவளியன்று அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் சாலைகளில் பட்டாசு வெடித்து அந்தச்சூழலையே குப்பையாக்கி மாசுபடுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அறிந்திருப்பீர்கள், அவர்களில் சிலர் பட்டாசுக்குப்பைகளால் மட்டும் தங்கள் பகுதிகளை மாசுபடுத்தவில்லை, சாதிக்குப்பைகளாலும் மாசுபடுத்திவருகிறார்கள், அங்கு இவர்கள் கோவில்களை மட்டும் கட்டவில்லை, இங்கிருப்பதுபோலவே அங்கும் முழுசனாதனக்கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள், அமெரிக்காவின் சில மாகாணங்கள் சாதிக்கு தடைவிதிக்குமளவுக்கு அங்கு சாதிவெறியும், சாதிரீதியான தீணடாமையும் தலைவிரித்து ஆடிவருகிறது, இதையொட்டித்தான் தேன்மொழியின் செயல்பாடுகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும்

 ‘நான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் மகள். அவர்களின் நூற்றாண்டுகால அன்பு, உறுதித்தன்மையால்  வார்க்கப்பட்டவளும்கூட. அதில் எல்லாவற்றிற்குமான நம்பிக்கை இருக்கிறது, நமது விடுதலைக்காக உங்கள் இதயத்திலும், என்னுடைய இதயத்திலும் ஆயிரம் பூக்கள் பூக்கட்டும்’ என்பதே தேன்மொழியின் பிரகடனம்

சமத்துவத்துக்கான ஆய்வகம்(Equality Labs) என்னும் அமைப்பை நிறுவி நடத்திக்கொண்டிருக்கிறார் தேன்மொழி, அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கான சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான செயல்பாடுகளோடு நின்றுவிடாமல், நிறவேறுபாடு, இனவேறுபாடு, பாலியல் வேறுபாடுகளுக்கு எதிராகவும் அவர் முழுவீச்சோடு குரல் கொடுத்துவருகிறார், களப்போராட்டங்கள், சட்டரீதியான போராட்டங்கள் மூலமாக இவ்விதமான பாகுபாடுகளுக்கெதிரான போராளியாக நிற்கிறார்.

ஒருமுறை கூகுள் பணியாளர்கள் கூட்டத்தில் இவரைப் பேச அழைத்திருந்தனர், ஆனால் அங்கிருந்த இந்துத்துவவாதிகள் தேன்மோழி ஒரு இந்துவிரோதி என்றுகூறிப் பேசவிடாமல் தடுத்துவிட்டனர், அதற்குப்பிறகுதான் தேன்மோழி பரவலாக அறியப்பட்டார். அடங்கி ஒடுங்கிவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக தேன்மொழி பெரும் உத்வேகத்தோடு தன் பணிகளைத் தொடர்ந்தார்.

பல்கலைக்கழகங்கள், ஒத்த நோக்கம் கொண்ட அமைப்புகள், அரசாங்க மன்றங்கள் என எல்லாத்தளங்களிலும் தேன்மொழியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, இந்த உள்ளடக்கங்களோடு ராப் பாடல்களைப் பாடி தன் கருத்துகளைப் பரப்புகிறார். இந்தியத் தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்கு என்பதைப்பற்றி ஆய்வுசெய்து எழுதியிருக்கிறார்.

இதைக் கடந்தும் தன்குரல் ஒலிக்கவேண்டுமென்பதால் சாதியின் வலி (The Trauma of caste) என்னும் நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார், இதன் உள்நோக்கம்    தலித் விடுதலையை கருப்பின, லத்தீன், பழங்குடி பெண்ணிய விடுதலைக்கான போராட்டங்களுடன் இணைப்பதாகும், பிராமண சனாதனக் கட்டமைப்புகளால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உருவாக்கப்படும் அவமானம், ஆத்திரம், துக்கம், பறிக்கப்படும் எதிர்காலங்கள் பற்றிய குரலாக எல்லா வடிவங்களிலும் பரப்புரையை மேற்கொள்கிறார் தேன்மொழி, இந்தக் கட்டமைப்புகளின் வன்முறைகளிலிருந்து விடுதலையாகி சமத்துவம்மிக்க எதிர்காலத்திற்காக உழைக்கும் இவரது குரல் தமிழ்நாடு அரசு வரைக்கும் எட்டியிருப்பதே இவரது போராட்டத்தின் வீரியத்திற்கான சாட்சி.

பைடன் ஆட்சிக்காலத்தில் மனிதர்களுக் கிடையேயான வேறுபாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கமிருந்தது, ஆனால் டிரம்ப் ஆட்சி வலதுசாரிகளுக்குப் பொற்காலமாக இருக்கிறது, அமெரிக்காவாழ் சனாதனவாதிகள் அவரை தங்கள் ஆதரவாளராகக் கருதுகிறார்கள், முன்னெப்போதையும்விட சாதிப்பெருமைபேசவும், ஒடுக்கப்பட்டவர்களை அவமரியாதை செய்யவும் அனுமதி கிடைத்திருப்பதாகக் கருதுகிறார்கள். மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிவதற்காக இங்கிருந்து செல்லும் இந்தியர்கள், அந்த நிறுவனங்களில் அதிகாரம்மிக்க பதவிகளில் இருக்கும் ஆதிக்க சாதிகளால் இங்கிருப்பதைவிடவும் கூடுதல் அவமானங்களை அனுபவித்து வருவதாகச் சொல்கிறார்கள், அவர்களுக்காக தேன்மொழியின் குரல் ஒலிக்கிறது, அவரது நோக்கம் வெல்லட்டும்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com