லியோ
லியோ

வன்முறையைவிற்றுப்பிழைக்கிறதா தமிழ் சினிமா?

திசையாற்றுப்படை – 10

சமூகத்தில் வன்முறை இல்லையா? ஆம். இருக்கிறது. கொலைகள், வழிப்பறிகள், வன்புணர்வுகள், மனைவிகளைக் கொலை செய்யும் கணவர்கள், கணவர்களைக் கொல்லும் மனைவிகள். எல்லாம் இருக்கவே செய்கின்றன.
சமீப காலங்களில் கணவர்களைக் கொன்றுவிட்டு நண்பர்களோடு மாட்டிக்கொள்ளும் மனைவியர் எண்ணிக்கை கொஞ்சம் கூடியிருக்கிறது என்று வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் பெரும்பான்மையான சாமானியர்களின் அன்றாட வாழ்வில் இவையனைத்தும் செய்திகள்தான். அவர்கள் அவற்றை எதிர்கொள்ள நேர்வதே இல்லை. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அரிவாள் கலாச்சா ரத்தின் தலைநகரான மதுரையில் வாழ்பவன் நான். இதுவரை அரிவாளோடு ஒருவரை விரட்டி ஓடும் வீரத்தமிழர் ஒருவரை எதிர்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதே இல்லை. கழுத்தில் 300 சவரன் நகைகளோடு உலா வரும், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவராக கருதப்படும் வரிச்சியூர் செல்வத்தை விமான நிலையத்திலும், நட்சத்திர விடுதி வரவேற்பறையிலும் சந்திக்கும் பாக்கியம் இருமுறை கிட்டியது. ஒரு ஆட்டோகிராப் வாங்க அணுகலாம் என்றால், திரும்பச்சொல்லி முதுகில் சூரிக்கத்தியால் ஆட்டோகிராப் போட்டுவிடுவாரோ என்ற தயக்கத்தில் அதையும் தவிர்த்துவிட்டதால் அவரையும்கூட ஒரு கண்ணியவானாகத்தான் எதிர்கொள்ள முடிந்ததேதவிர அவருடைய களச் செயல்பாட்டை காணும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

ஆக நம்முடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது குற்றங்கள் கட்டுக்குள் இருப்பதாகவே கொள்ளவேண்டும். மேலைநாடுகளில் போன்று ‘கூட்டத்தில் நுழைந்து கண்மண் தெரியாமல் சுட்டுத் தள்ளினார்' என்பதுபோன்ற காரணமற்ற வன்முறைகளை நாம் அதிகம் சந்திக்க நேர்ந்ததில்லை.  ஆனால் நம் திரைப்படங்கள் காட்சிப்படுத்தத் தொடங்கியுள்ள வன்முறையின் அளவும் தன்மையும் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. 
சென்ற வாரம்  விடுமுறை நாளொன்றில் தமிழ்த் திரைப்படம் பார்க்கும் உத்தேசத்தில் இணையத்தில் தேடியதில் நெட்ஃபிளிக்சில் ரஜினியின் ‘ஜெயிலர்' தென்பட்டார்.

தமிழ்சினிமா வரலாற்றில் வசூலில் பெரும்சாதனை படைத்த ஒரு திரைப்படத்தை பார்க்காமல் இருந்தால் தமிழ்ச் சமூகம் நம்மைத் தள்ளி வைத்துவிட வாய்ப்பிருப்பதால் பார்த்துவிடுவது என்று உட்கார்ந்தேன். ஆனால் முதல்காட்சியிலேயே வில்லன் விநாயகன் சிலரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு சுத்தியலால் தலையில் அடித்து  சித்திரவதை செய்கிறார். முகங்களைச் சிதைத்து ரத்தக் களரியாக்கிக் கொண்டிருந்தார். அதாவது இவ்வளவு கொடூரமான வில்லனை ரஜினி எதிர்கொள்ளப் போகிறாராம். அது ஏறத்தாழ தமிழ்ரசிகர்களை தலைகீழாய்த் தொங்கவிட்டு அடிப்பதாகவே தோன்றியது. தொடர்ந்து தலைகீழாகத் தொங்க மனமில்லாமலும் ஐந்து நிமிடங்களுக்குமேல் அதைத் தொடரமுடியாமலும் விலகினேன். 
சில நாள்களுக்கு முன் வசூலில் 500கோடியைக் கடந்து தமிழ்சினிமாவின் புகழை தரணியெங்கும்  பறைசாற்றிக் கொண்டிருக்கும் ‘லியோ'வைத் திரையரங்கில் பார்க்கச் சென்றேன். லியோ (விஜய்) வசிக்கும் அந்த நகரத்தில் காவல்
துறையினர், ராணுவத்தினர், வனக் காவலர்கள் என அனைவருமே தங்கள் துப்பாக்கிகளை வாடகைக்கு கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஊருக்குள் புகுந்த கழுதைப்புலி மக்களை மானாவாரியாக விரட்டி விரட்டிக் கடிக்கிறது.  விஜய் அந்தக் கழுதைப் புலியை கையாலேயே அடக்கி ஊரையே காப்பாற்றுகிறார். பின்பு இந்தியா முழுவதுமிருந்து படை படையாய் வரும்  தீயவர்களும் லியோவும் வகை தொகையில்லாத வன்முறைகளை நிகழ்த்துகிறார்கள்.   இனிமேலும் நிகழ்த்தவிருக்கிறார்கள் என்ற கிலியில்  இடைவேளையோடு எழுந்துவிட்டேன். ஏறத்தாழ திரையரங்கம் முழுமையும் ரத்தச் சகதியாக இருக்குமோ என்ற அச்சத்தில் கவனமாகக் கால் வைத்து ஓடிவந்தேன்.  அந்த திரைப்படத்தின் திரைக்கதையமைப்பே ‘சண்டைக் காட்சிகளை' அடிப்படையாகக் கொண்டது என்பதை எளிதாக ஊகிக்கமுடியும்.

அடுத்த இரண்டு நாள் கழித்து வசந்தபாலனின்  ‘அநீதி'யைப் பார்க்க முற்பட்டேன். என்ன கொடுமை. அதிலும் தொடக்கக் காட்சிகளில் உணவு விநியோகிக்கும் ஒரு இளைஞனை வாடிக் கையாளர்கள் செயற்கையாக மிகவும் அநாகரிகமாக நடத்தி அவனைக் கொலைகாரனாக்குகிறார்கள். விளைவு படம் பார்க்கும் முயற்சியை ஒத்திவைத்துவிட்டு மரியாதையாக ஒதுங்கிக் கொண்டேன். ஆனால் அநீதியைப் பற்றிய சில நல்ல அபிப்ராயங்களைக் கேள்விப்பட்டதால் மீண்டும் மற்றொரு நாளில் அதைப் பார்க்கத் துணிந்தேன். முதற்காட்சியில் நாயகன் செய்யும் கொலைகள், அவர் மனதிற்குள் நிகழ்த்த நினைப்பது. உண்மையில் அவர் அந்தக் கொலைகளை நிகழ்த்தவில்லை. அதன் பின்னான திரைக்கதை  சுவாரஸ்யமான புதிய கதைதான். பார்க்கத் தகுதியான படம். ஆனால் முதல்காட்சியில் வெளிப்படும் குரூர வன்முறை அந்தப்படத்தின் தரத்தை வெகுவாக பாதிக்கிறது  என்று தோன்றியது. கதாநாயகன் உண்மையிலேயே நிகழ்த்தவில்லையென்றாலும் அது இயக்குநர் நம்மேல் நிகழ்த்திய வன்முறைதானே. அதாவது வசந்தபாலன் போன்ற இயக்குநர்களைக் கூட ‘வன்முறை' அவசியம் என்று சிந்திக்கவைக்கிற போக்கு இது. சில நல்ல திரைப்படங்களை எடுத்து முடித்தபின், தயாரிப்பாளர்ளும் விநியோகஸ்தர்களும் ‘கவர்ச்சி நடனம் அல்லது நகைச்சுவை டிராக்' ஒன்றை இணைக்கச் சொல்லி வற்புறுத்திய காலம் ஒன்று இருந்தது. இயக்குநர்களும் அதற்கு ஆட்பட்ட கதைகள் நிறையவே உண்டு. அதுபோன்ற நிலைமைதான் வசந்தபாலன் போன்ற இயக்குநர்களுக்கும்.  அடுத்ததாக தீபாவளி திரைப்பட இனிப்புகளைச் சுவைக்கலாமே என்று நோட்டமிட்டதில் நம்முடைய முதல் தேர்வாக ஜப்பான் இருந்தது. காரணம் ராஜுமுருகனின் மென்ணுணர்வு கொண்ட 
கட்டுரைகள். மனித நேயம், ஆரோக்கிய அரசியல் பேசும் முந்தைய படங்கள். கூடுதலாக ரவிவர்மன், ஜி.வி.பிரகாஷ், கார்த்தி இப்படியான பக்கபலம். ஆனால் நடந்தது.. திருட்டு, கொலை. இயந்திரத் துப்பாக்கியால் சிரித்துக்கொண்டே சுட்டுத்தள்ளுகிறார் கார்த்தி. இசையும் சிறப்பு ஒலிகளும் இணைந்த  சகிக்கமுடியாத இரைச்சல். பார்வையாளர்கள் மேல் செலுத்தப்பட்ட உச்சபட்ச வன்முறைகளுள் ஒன்றாக மாறியுள்ளது ஜப்பான். 

தீபாவளி வெளியீடுகளில் ‘ஜிகர்தண்டா 2' ஊடகங்களில் ஊதிப்பெருக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ‘ஜிகிர்தண்டா 2ஐ' தமிழ் சினிமாவின் குறிஞ்சிப்பூ என்று பாராட்டினார். அந்தப்பாராட்டு மனமார்ந்த பாராட்டாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் ஆரோக்கியமான சினிமாக்கள் வரத்தொடங்கினால் ஜெயிலர் போன்ற மூன்றாந்தர சினிமாக்களை யார் ரசிப்பார்? ஆக வணிகசினிமாவின் போக்கை  நீட்டிக்கச் செய்யும் வகையான சினிமாவை ஆதரிப்பதும் ஒரு வணிக உத்திதானே! சரி. கதைக்கு வருவோம். ஜிகிர்தண்டா 1 இல் உருவாக்கிய கதை மற்றும் காட்சி உலகத்திலிருந்து வெளிவரமுடியாமல் இயக்குநர் மாட்டிக்கொண்டு சிக்கித்தவிக்கிறார் என்பதுதான் பிரச்னை. மூக்கின் நடுவில் வளையம் மாட்டிக் கொண்டு, கருப்பு போர்வை போர்த்திக்கொண்டு மண் பாத்திரங்களில் சரக்கு அடித்து வாழும் பழங்குடிச் சமூகம் 80களில் வாழ்ந்ததாம். அங்கே எந்த சமூக அடையாளமுமற்ற ஒரு கொடூரன் யானைகளை குருவிகளைப் போல் சுட்டுத்தள்ளி தந்தங்களைக் கடத்துகிறான். மூக்கு வளையம் மாட்டிய பழங்குடி நாயகன் அரசியல்வாதிகளுக்கு வேலைசெய்யும் பொறுக்கியாக இருக்கிறான்.  அந்த ரவுடியை படமெடுப்பதாகச் சொல்லி அவரைக் கொல்வதற்கு நாள் பார்த்திருக்கும் இன்னொரு நாயகன். இதற்கிடையே கும்பல் கும்பலாக ரவுடிகள். முத்தாய்ப்பாக யானைகளையும் பழங்குடிகளையும் அழித்தொழித்து காட்டை தனியாருக்கு தாரைவார்த்து பிரதம மந்திரியாகத் துடிக்கும் பெண்முதலமைச்சர். 

கட்டக்கடைசியில் நம்முடைய வன்முறை நாயகன் துடும்பு மேளத்தை முழங்கிக் கொண்டே காந்தியவாதியாக உயிர்துறக்கிறார். இதில் என்னைக் கவர்ந்த அர்த்தப்பூர்வமான காட்சியென்பது அந்தப் பெண் முதலமைச்சர் கோபம் வந்தால் செருப்பைக் கழட்டி அடி அடி என்று அடித்துவிடுவார். தியேட்டருக்கு வருவியா? வருவியா? என்று இயக்குநர் அடிப்பதாகவே எடுத்துக்கொண்டேன். இந்தப்படமும் வெற்றிப்படங்களின் வரிசையில் சேர்ந்துவிட்டது. 
ஹாலிவுட் வணிகப் படங்களில் க்ளைமாக்ஸ் எனப்படும் உச்சக் காட்சியில் கவனத்தை முழுமையாக ஈர்க்கின்ற அம்சம் இருக்கும். அது ஒரு குதிரை துரத்தல், கார்கள் விரட்டல், வானத்தில் நடக்கும்  சாகசம், வில்லனோடு அபாயகரமான சண்டை இப்படி ஏதாவதொன்று. இதெல்லாம் போன நூற்றாண்டு திரைக்கதை உத்திகள். க்ளைமாக்ஸ் படத்தின் கடைசியில் வருவதல்லவா? அதுவரை ‘வாட்ஸ் அப் யுகத்தின்' பார்வையாளர்களை இருத்தவேண்டுமே. ஆகவே ஹாலிவுட்காரர்கள் படத்தின் முதல் 15 நிமிடங்களுக்குள்ளேயே வன்முறை சார்ந்த ஒரு அதிரடிக் காட்சியை  கடந்த இருபதாண்டுகளாக காட்சிப் படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஹாலிவுட்  சினிமாவைக் கவனமாகப் பின் தொடர்பவர்களல்லவா நம் இயக்குநர்கள். அந்த உத்தியைச் செயல்படுத்துவதாகவே நம் தமிழ்ப் படங்களிலும் இத்தகைய அபத்தங்கள் இணையத்தொடங்கியுள்ளன.  
காரண காரியமற்ற வன்முறைக் காட்சிகள், அதிபுனைவான சாகசங்கள் அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் நாயக பிம்பம் ஆகியவையே விக்ரம், ஜெயிலர், லியோ, ஜிகர்தண்டா 2 போன்ற படங்களின் வெற்றிக்கான சூத்திரம் என்பதாகவே தயாரிப்பாளர்களும், உச்சபட்ச நாயகர்களும், இயக்குநர்களும் புரிந்துகொள்ளக்கூடும்.  இந்த வரலாறு காணாத வன்முறை தமிழ்சினிமாவிற்குள் நுழைந்து எப்படி பேயாட்டம் போடத்தொடங்கியது என்பதைப்பற்றிய தீவிரமான உரையாடல்கள் தேவை.

ஜெயிலர், லியோ, விக்ரம் போன்ற படங்களின் வெற்றி என்பது முதிரா இளைஞர்களின் ரசனையால் வந்த வெற்றி மட்டுமல்ல. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து அமெரிக்காவில் பணிசெய்யும் கற்றறிந்த மேன்மக்களும் இந்தப் படங்களைத்தான் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்தியாவில் கல்விக்கும் கலை ரசனைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை என்ற கசப்பான உண்மை மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.
இப்போதெல்லாம் நம் நாயகர்களும் வில்லன்களும் 
இரும்பு சாமான்களோடுதான் சண்டையில் இறங்குகிறார்கள். ஆக உடல்கள் சிதைவது முகங்கள் கிழிவது ரத்தப் பெருக்கு எல்லாவற்றையும் எந்த எதிர்வினையும் இல்லாமல் பக்கெட் நிறைய பாப்கார்னை சாப்பிட்டுக்கொண்டே குழந்தைகள் ஆண்கள் பெண்கள் அனைவரும் ரசிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். காட்சிரீதியான வன்முறையின் அபாயகரமான விளைவு இதுதான். வன்முறை வெறுக்கத்தக்கது. அச்சத்தையும் அருவருப்பையும் உண்டாக்கும் என்பது போய், வன்முறை ஒரு கேளிக்கையாக மாறியுள்ளது. இது மனித மனங்களின் சுரணையை மழுங்கச் செய்துவிடுகிறது.  அதனால்தான் நடைமுறை வாழ்க்கையில் பிறருக்கு நிகழும் வன்முறைகளும் கூட எந்த பாதிப்பையும் உண்டாக்குவதில்லை. நமக்கு நிகழும் வன்முறைகளும் அப்படியே கடந்துசெல்லும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com