இலக்கற்ற  பயணங்கள்

இலக்கற்ற பயணங்கள்

திசையாற்றுப்படை - 6

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக சிங்கப்பூர் போன பரவசம் இப்போது இல்லை. அப்போது விமானப் பயணங்கள் விசேஷமானவையாக இருந்தன. அது ஒரு மேன்மக்களின் சமாசாரம். விமானப் பணிப்பெண்களின் உடல்மொழி, உபசாரம் எல்லாம் அமோகமாக இருக்கும். இடையில் ஒரு குட்டிக்கதை.
என்னுடைய நண்பர்கள் இருவர் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்யச் செல்கிறார்கள். அவர்கள் பரம்பரையிலேயே முதன்முறையாக மதுரையிலிருந்து சென்னைக்கு வானத்தில் பறக்கப் போகிறவர்கள் அவர்கள்தான். அந்த மமதையோடும் முதல் பயணத்துக்குரிய பதட்டத்தோடும் விமானத்தில் ஏறி உள்நுழையும் தருணத்தில், விமான நுழை வாயிலில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானப் பணிப்பெண், மதுரையில் காணக்கிடைக்காத பேரழகி, இவர்கள் இருவரையும் எதிர்கொண்டு, மலர்ந்த புன்னகையோடு, இரு கரத்தையும் கூப்பி வணக்கம் கூறினாள். நண்பர்களில் ஒருவர் பதட்டமாகி கையிலிருந்த சூட்கேசை கீழே வைத்துவிட்டு, இரு கரத்தையும் கூப்பி பதில் வணக்கம் செய்திருக்கிறார். பயணம் முடிந்து மீண்ட நண்பர்கள் இருவரும் ‘கைப்பெட்டியை வைத்துவிட்டு வணக்கம் வைத்து என் மானத்தை வாங்கிவிட்டார்' என்று பரஸ்பரம் கூறிக்கொண்டார்கள்.

இன்றைய தேதிவரை யார் மானத்தை யார் வாங்கியது என்ற ரகசியத்தை அறியமுடிந்ததில்லை. விஷயம் என்னவென்றால் இப்போதெல்லாம் விமான பணிப்பெண்கள் இருகரம் கூப்பிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. போனால் போகிறதென்று இரண்டு சென்டிமீட்டர் புன்னகைத்தால் நாம் பாக்கியசாலிகள். தமிழகத்தின் ரிலையன்ஸ் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களின் ஊழியர்கள் கைகூப்பி வணக்கம் சார் என்று கூறத் தொடங்கியதை நினைத்து மகிழ்வதா? விமானப் பணிப்பெண்கள் நிறுத்தியதை நினைத்து வருந்துவதா? கண்ட நாயெல்லாம் பறக்க ஆரம்பிச்சிட்டுது... என்று முதல் தலைமுறை விமானப் பயணிகளான நாம்  கற்பனை செய்து கொள்வதை தவிர்க்க முடியவில்லை. 

சில வருடங்களுக்கு முன், மேகாலாயாவில் சுற்றிக் கொண்டிருந்தபோது ஓர் இளம்பெண்ணை முதுகுப்பையுடன் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் ஒரு டூரிஸ்டா? என்று கேட்டபோது, அவர் ஏதோ கெட்டவார்த்தையைக் கேட்டதுபோல் பதட்டத்துடன்...‘நோ...நோ... ஐ ஆம் நாட் எ டூரிஸ்ட். ஐ ஆம் எ டிராவலர்' என்றார். அதாவது நான் உன்னைப் போன்றவள் அல்ல. வேறு சாதி என்று சொல்லிவிட்டார். ஆக,  கவிஞரை  சினிமா பாடலாசிரியர் என்று கூறிவிடமுடியாதல்லவா? அதுபோல் டிராவலர் (பயணி) என்று சொல்லிக் கொள்வதில் ஒரு கூடுதல் மதிப்பு ஏறிவிடுகிறது.

சரி சுற்றுலாவாசிக்கும் பயணிக்கும் என்னதான் வேறுபாடு? 
பயணி என்பவர் குறைந்த சுமைகளுடையவர். பெரும்பாலும் ஒரு முதுகுப்பையில் எல்லாவற்றையும் அடக்கிவிடுபவர். நட்சத்திரவிடுதிகளைத் தவிர்ப்பவர். பகட்டு, ஆடம்பரங்களைத் தவிர்ப்பவர். எளிய உள்ளூர் உணவுகளை ருசிப்பவர். வழக்கமான வழித்தடங்களில் பயணிக்காமல் குறுக்குவெட்டாகத் திரிபவர். சுற்றுலாவாசிகள் வழக்கமாகச் செல்லுமிடங்களை கவனமாகத் தவிர்த்துவிட்டு, இடிந்த கோயில்கள், சிதைந்துகிடக்கும் கோட்டைகள், ஆளரவமற்ற சந்துகளில்  நடமாடுபவர். குறிப்பாக கண்ட இடங்களில் செல்ஃபி எடுக்க முனையாதவர். இப்படியான அங்க லட்சணங்கள் எதுவுமற்ற நான் ஒரு எளிமையான சுற்றுலாவாசிதான். இந்தக் கட்டுரையைப் படித்துமுடிக்கும்போது ஒரு சுற்றுலாவை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதுபோன்ற செய்திகள் கிடைக்கும் என்று நம்பவேண்டாம்.

என் இணையருக்கு ஊர் சுற்றும் விருப்பம் என்னைவிட அதிகம் என்பதால் நான் பெட்டியை உருட்டிக்கொண்டு இணையரின் பின்னால் செல்வதோடு சரி. மறக்காமல் நாலைந்து புத்தகங்களையும் பெட்டியில் வைத்துக் கொள்வேன். விமானநிலையங்களில் காத்திருக்கும்போது வேடிக்கை பார்த்த நேரம்போக வாசிப்பது சுகமான அனுபவமாக இருக்கும். குளிரூட்டப்பட்ட அரங்கும், அதி சுத்தமான கழிப்பறைகளும் சுகமான இருக்கைகளுமாக, உயர்வர்க்கத்தினர் உலவும் இடமல்லவா?
பூமியின் மாசுபாட்டிற்கும், சுற்றுச் சூழல் சீர்கேட்டிற்கும் பங்களிப்பதில் சுற்றுலாக்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சொல்கிறார்கள். காடுகளுக்குள் சாலைகள் அமைக்கப்பட்டதில் தொடங்கிய இந்த தீங்கு இன்று மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சுற்றுலா என்பதை முற்றிலும் தவறுதலாகப் புரிந்துகொண்ட சமூகமோ நாம் என்று தோன்றும் அளவுக்கு 
 சுற்றுலாப் பயணிகள் நடந்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் சுற்றுலா  பெரும் திரளான மக்களின் வாழ்வாதாரமாகவும் இன்று மாறியுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில்  பெரிதாக வளரப் போகும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத் துறையை மதிப்பிடுகிறார்கள். நடுத்தரவர்க்கத்தினரின் பெருக்கம், பொதுவான வருமான உபரி ஆகியனவெல்லாம் இணைந்ததன் மூலம் சுற்றுலா இன்று நுகர்வுப் பண்பாட்டின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. 
20ஆண்டுகளுக்குமுன்னால் ஒரு வெளிநாட்டு நகரம் என்பது பூலோக சுவர்க்கமாகத் தெரியும்.

அவர்களின் நடை உடை பாவனைகள் தனித்திருக்கும்.  அவர்கள் முகத்தில் அடிக்கடி பயணிப்பதன்  
அசௌகரியமும் சலிப்பும் வெளிப்படையாகத் தெரியும். அடுத்ததாக உடல் உழைப்பை நம்பி, கடன் வாங்கி தரகர்கள் வழியாக ஒப்பந்தப் பணியாளர்களாகப் பயணிப்பவர்கள். விமானப் பயணத்தின் சொகுசுகளை மனம்கொள்ள முடியாமல் இருப்பார்கள். முதன்முறை பயணிப்பவர்களின் முகத்தில் கலக்கம், குழப்பம் தூக்கலாகத் தென்படும். நான்காவதாக நம்மைப் போன்ற மாதச்சம்பள உபரியை ஊதாரித்தனமாகச் செலவு செய்வதற்கென்றே வண்டியேறுபவர்கள். 
20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விமானப் பயணங்களில் உபசரணைகள் தாராளமாக இருக்கும். மூன்று மணி நேரப் பயணத்திற்குக் கூட மதுபானங்களும்  தரமான உணவுகளும் வழங்கப்பட்ட காலங்கள் உண்டு. இன்று தண்ணீரைத் தவிர எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டும். சென்னை விமானநிலையத்தை விட்டு பறக்க ஆரம்பித்தவுடனேயே எல்லாவற்றையும் டாலரில் வாங்க வேண்டியிருக்கும். காபி 2 
சிங்கப்பூர் டாலர். இன்றைய தேதிக்கு 124 ரூபாய். அதனால் ஆளாளுக்கு  பிஸ்கோத் மற்றும் சிப்ஸ் பொட்டணங்களுடனேயே வந்துவிடுகிறார்கள். விரைவில் இட்லி கெட்டிச் சட்னி பார்சல்களையும் காணமுடியும். காரணம் நம்மைப் போன்ற சாமான்யர்கள் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 

சிங்கப்பூர் விமானநிலையம் எப்போதும்போல் மிரட்டும் தூய்மையும் ஒழுங்குமாய் வரவேற்றது. நண்பர் சசிகுமார் காருடன் காத்திருந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாய் ஆசிரியராகவும் கல்வி அமைச்சகத்தில் பொறுப்புகளிலும் இருப்பவர். எங்கள் கல்லூரியில் படித்தவர். ஆசிரியர்களோடு தொடர்பிலிருப்பதில் இத்தகைய இனிய இம்சைகளை விரும்பி ஏற்றுக்கொள்பவர். மூன்று வேறுபட்ட சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு சிறிய நாட்டை எப்படி நிர்வகிக்கவேண்டும் என்பதற்கு சிங்கப்பூர் ஓர் உதாரணம். எப்போதும் போல் ஆங்காங்கே பல்லடுக்கு கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்தன. சிங்கப்பூரில் வேலையும் வீடுமில்லாத குடிமகன்கள் இல்லை என்ற நிலை. 25 ஆண்டுகளுக்குமேல் பழமையான கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்களைக் கட்டியபடி இருக்கிறார்கள். அதற்கு பணச்சுழற்சி, வேலைவாய்ப்பு எனப் பல காரணங்கள் இருக்கக்கூடும். சிங்கப்பூரின் பசுமை முழுவதும் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது ஆச்சரியமூட்டக்கூடியது.

சிங்கப்பூரின் தமிழர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் என்றாலும் எல்லாவகையிலும் அவர்களின் மொழி மற்றும் பண்பாட்டைப் பேணுவதற்கான முழு ஆதரவை அரசு அளித்து வருவதால் வேறெங்கும் இல்லாத அளவுக்கு சிங்கப்பூர் தமிழர்கள் மிகுந்த மனநிறைவோடு இருப்பதைப் பார்க்கலாம்.
தற்போது தமிழர்களுக்கு இணையாக எண்ணிக்கையில் இந்தி பேசுபவர்களும் குடியேறியுள்ளனராம். அப்படியானால் இந்தி மொழியையும் ஆட்சி மொழியாக இணைக்கும் வாய்ப்பு எதிர்காலத்தில் உருவாகுமா? எனக் கேட்டேன். ஏற்கெனவே அத்தகைய முயற்சிகள் நடைபெற்றன. இந்திமொழிக்கு அத்தைய அந்தஸ்து வேண்டும் என்று அரசை சில அமைப்புகள் அணுகினராம். அப்போது ‘ சிங்கப்பூர் ஒரு நாடாக தன்னைக் கட்டமைத்த இக்கட்டான காலங்களில் எங்களோடிருந்து உழைத்தவர்கள் தமிழர்கள். அதனால் தமிழர்களுக்கும் தமிழுக்கும் கொடுக்கப்பட்ட இடத்தை வேறுயாருக்கும் கொடுக்க முடியாது' என்று அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தார்கள்.

பொதுமொழியான ஆங்கிலம் தவிர்த்து சீனம், மலாய் மொழிகளுக்கு இணையான எல்லா வாய்ப்புகளும் தமிழுக்கும் வழங்கப்படுகின்றன. அந்நாட்டுக் குழந்தைகள் ஆங்கிலம் தவிர்த்து அவரவர் தாய்மொழியைக் கற்பது அவசியம். தமிழகத்தின் விமானநிலையங்களில், விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை கேட்க வாய்க்காத தமிழகத்து தமிழனுக்கு இந்தச் செய்திகள் எப்படியானவை!

சாலையோர மரங்களும் புல்வெளிகளும் எல்லாக் குடியிருப்புப் பகுதிகளிலும் காணப்படும் விரிவான பூங்காக்களும் சிங்கப்பூரை ஒரு லட்சிய நாடாகக் கருத வைப்பன. குழந்தை பெற்றுக்கொண்டால் உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஒரு கணிசமான தொகையை வரவுவைக்கும் தேசத்தைக் கொண்டாடாமல் என்ன செய்வீர்கள்? கணிப்பொறியியல் துறையில் பணிசெய்யும் நம்மூர் பெண்ணொருவரிடம் 
பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் கேட்டேன். உங்கள் தகுதிக்கு நீங்கள் ஏன் அமெரிக்காவிற்கோ, பிரிட்டனுக்கோ முயற்சிக்கக் கூடாது?

அவர், ‘அத்தகைய வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் நான் சிங்கப்பூரில் வசிப்பதையே விரும்புகிறேன். குற்றங்களே இல்லாத இத்தனை பாதுகாப்பான நாடு வெறெங்கே இருக்கிறது?' என்று பதில் கேள்வி கேட்டார். உண்மைதான் உலகின் எல்லாவிதமான வாய்ப்பு வசதிகளும்,  அரசின் கரிசனமும் இருக்கும் நாடுகளில் ஸ்காண்டிநேவியன் நாடுகளான ஸ்விட்சர்லாந்து, நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து நாடுகளுக்கு இணையான ஒரு ஆசிய நாடாக 
சிங்கப்பூர் கருதப்படுவதில் குறையொன்றுமில்லைதான். ஆனால் சமீபத்தில் வெளிவந்த மகிழ்ச்சியான உலக நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 32 வது இடத்தில் ஏன் இருக்க வேண்டும்? நாளொரு வன்முறையும் பொழுதொரு துப்பாக்கிச் சூடுமாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அந்நாட்டு மக்கள் கொடுத்திருக்கும் இடம் ஏன் சிங்கப்பூருக்கு இல்லை? 

(பயணங்கள் தொடர்கின்றன)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com