அஞ்சாதே!- போதியின் நிழல் 5

அஞ்சாதே!- போதியின் நிழல் 5
Published on

நிமிடங்கள் போதுமா ஒரு மனிதன் மாறுவதற்கு? தெரியவில்லை. நான் பயின்ற மடத்தில் தலைமை குரு சொல்லியிருக்கிறார். ‘‘குழந்தாய், மனிதமனம் என்பது சதா மாறிக்கொண்டே இருக்கும், அதைக் கட்டுப்படுத்தி ஒரு நிலையில் வைத்திருப்பது சாமனியர்களால் இயலாது. அச்சம் குரோதம், ஆசை ஆகியவற்றிலிருந்து உன் மனதைக் காத்துக்கொள்.’’ என்பார்.

பந்தனுக்கு நேர்ந்தது என்ன என்று எனக்கு உடனடியாகப் புரியவில்லை. ஆனால் அவன் பெரிய மாறுதலுக்கு உட்பட்டிருக்கிறான் என்பதை அவன் உடல் அசைவுகள் கனமாக இருப்பது கண்டு ஊகித்திருந்தேன். உருவிய வாளுடன் என்னை நோக்கி வருவது கண்டு எழுந்து அமர்ந்துகொண்டேன். பிக்குவிடம் ஏது வாளும் வேலும்? எதிர்த்துப்போரிடுதல் யாரையும் துன்புறுத்தாமையை இயல்பாகக் கொண்ட எம்மால் இயலுமா? வாள் வீசக்கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்கு சிறுவயதில் உண்டு. தந்தையாரின் நீண்ட வாளை சில முறை இருகையாலும் தூக்கி சுழற்றிப் பார்த்திருக்கிறேன். ஆனால் வாளை விட அவரது சுவடிகள்தான் எனக்குப் பிடித்தனவாக இருந்தன.

இந்நிலையில் தனிமையில் நான் செய்வது ஏதுமில்லை. எனக்குப் புதிராக இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் பந்தனின் வாள் அல்ல. அவன் இருந்த இடத்தில் தெரிந்த கரிய உருவமே. என பயணத்தில் இதுபோன்ற அமானுஷ்ய சக்திகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதை நான் அறிந்திருந்தபடியால் போதி சத்துவர்களை நோக்கி முறையிடுவது தவிர எனக்கு எந்த உபாயமும் இல்லை. அமர்ந்தவாறே சுலோகங்களைச் சொல்ல ஆரம்பித்தேன். மனம் திடீரென்று ஒருமை பெற்றது. என்னைச்சுற்றி சொல்லொணாத அமைதி ஒரு குடையாய்க் கவிவதைக் கண்டேன். பந்தன் என் மிக அருகில் வந்திருந்தான். ஒரு கணம் திகைத்து நின்றான்.பின் அரைவட்டம் அடிப்பது போல் சுற்றித் திரும்பி தான் படுத்திருந்த இடத்துக்கே எந்திரம் போல இயங்கி நடந்து சென்று படுத்துக்கொண்டான். எந்த சலனமும் இல்லை. அந்த கரிய உருவமும் மறைந்துபோய்விட்டது.

பின் மெல்ல சரிந்து படுத்துக்கொண்டேன். என்னையறியாமல் ஏற்பட்டிருந்த அமைதியான உணர்வுடன் அப்படியே உறங்கிப் போனேன். விடிகாலையில் சூரியன் விழிப்பதற்கு முன்பு நாங்கள் கிளம்பினோம். சற்றுதூரம் பந்தன் முன்னே சென்றான். இரவில் நடந்தது பற்றி நான் ஏதும் கேட்கவில்லை,. ஆனால் அவன் நடையிலும் அவனது குதிரையின் நடையிலும் தயக்கம் இருந்ததைக் காணமுடிந்தது.

‘‘பிக்குவே’’ பந்தன் குதிரையை நிறுத்திவிட்டான்.

‘‘நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் பின்னே வருகிறேன்’’ என்றான்.

எனக்கென்னவோ அது சரியாகப் படவில்லை. உள்ளுணர்வு எச்சரிக்க, ‘‘நான் அதற்கு ஒருபோதும் உடன்படமாட்டேன். நீதான் முன்னே செல்லவேண்டும்’’ என்றேன்.

பந்தன் குதிரை சில அடிகள் முன்னோக்கிச் சென்றது.

‘‘பிக்குவே, பாதையோ கொடியது. முன்னே வெறும் மணல்தான். புல் இல்லை. தண்ணீர் இல்லை. நிழல் இல்லை. மனிதர்கள் இல்லை..... இனியும் முன்னே செல்வது சரிதானா?’’
இந்தக் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன். இது பந்தன் குரலே அல்ல. அவன் திரும்பிப்பார்க்கவும் இல்லை. ஆனால் அவனிடமிருந்துதான் குரல் வந்தது.


‘‘என்னை கண்டதுண்டமாக வெட்டிப்போட்டாலும், மரணமே நேர்ந்தாலும் என் லட்சியம் மாறாது’’

‘‘அப்படியானால் என்னை விட்டுவிடும். எனக்கு உம்மோடு வர சம்மதமில்லை. பட்டினியில் தாகத்தில் சாக எனக்கு விருப்பமில்லை’’ அதே கர்ண கடூரகுரல்.

நான் போதிசத்துவரை அமைதியாகத் துதித்தேன்.

முன்னே சென்ற பந்தனின் குதிரை கனைத்தது. அது பின்னோக்கித் திரும்பியது. பந்தனின் முகம் மேகம் போல் கறுத்து இருப்பதைக் கண்டேன். அவன் கண்கள் இரண்டும் அனல்துண்டுகளாக இருந்தன. அவன் ஏதோ துஷ்ட சக்தியாகத் தோன்றினான்.

என் உதடுகளில் போதி சத்துவர் துதி பெருகிற்று. அவன் குதிரை வந்த வழியே திரும்பி என்னைத் தாண்டி ஓட ஆரம்பித்துவிட்டது. அதன் புழுதி என் மேல் படர்ந்தது.

குதிரை கண்ணுக்கு மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தேன். அவனை நினைத்தால் எனக்கு பரிதாபம் மேலிட்டது. எந்த அபாயமும் இன்றி அவன் வீடு போய்ச்சேரவேண்டுமே என்று வேண்டிக்கொண்டேன். இனி தனியாகத்தான் மேற்கு நோக்கிச் சென்றாகவேண்டும். என் குதிரை தானாகவே ஓட ஆரம்பித்தது. முன்னோக்கிச் செல்லச் செல்ல நிலத்தோற்றம் சிவக்க ஆரம்பித்தது. செம்புழுதி. கண்ணை எப்படி திருப்பினாலும் புழுதிதான். அங்கங்கே சில மரங்கள் காய்ந்துப்போய் எலும்புக்கூடுகளாய் நின்றன. மேடும் பள்ளமுமாய் ஏறி இறங்கியது பாதை. ஒரு பள்ளத்திலிருந்து மேட்டுக்கு ஏறினேன். ஏறியவுடன் என்னை வரவேற்றது ஒரு மனித எலும்புகூடு. குவிந்திருந்த குதிரைச்சாணம், மேலே செல்லச்செல்ல விலங்குகளின் எலும்புகளையும் சாணத்தையும் காண முடிந்த்து. சில இடங்களில் அவற்றின் துர்நாற்றம் என் நாசியைப் பிளந்தது.
கதிரவன் உச்சிக்கு வந்திருந்த வேளையில் ஒரு மேட்டில் என் குதிரை பிரத்யனப்பட்டு ஏறியது. மேலிருந்து விரிந்திருந்த மணல்பரப்பைப் பார்த்து பெருமூச்சு விட்டபோதுதான் என் இதயத்துடிப்பை பனமடங்கு பெருகச்செய்த அக்காட்சியைக் கண்டேன்.

ஒராயிரம் வெண்ணிறப்புரவிகள் மிகுந்த வேகத்தில் எதிரே வந்துகொண்டிருந்தன. வேல்களும் வாளும் பிடித்த விரர்கள் அவற்றில் ஆரோகணித்து இருந்தார்கள். தூரத்தில் இருந்து பார்க்க அவர்களின் வேலும் வாளும் வெயிலில் மின்னின. பதாகைகள், கொடிகள், தலைக்கவசங்கள் என்று பார்க்கையில் போர்க்களம் செல்லும் படைஎன்று தோன்றியது. பெரும் ஆற்று வெள்ளம்போல் என்னை நோக்கி அப்படை வந்தது. பெருத்த இரைச்சல். குளம்பொலிகள் வாழ்த்தொலிகள், முழக்கங்களால் உருவான இரைச்சல். அப்படையின் பிரவாகம் என்னை அடித்துச் சென்றுவிடுமோ எனத் தோன்ற நான் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன். இன்னும் ஒரு நொடியில் அப்படைப் பிரவாகம் என்மீது மோதிவிடும். குதிரையை ஒதுக்கக்கூட இயலாது என்கிற நிலையில்தான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த படைவரிசைகள் அனைத்தும் மறைந்துபோய் வெற்றுவெளியே என் முன்னால் இருந்தது. திகைத்து அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.

‘அஞ்சாதே’ யாரோ என் காதில் சொன்னார்கள். திரும்பினேன். யாருமில்லை. என்னை மேலும் அச்சம் கவ்வியது.

‘‘யுவான் அஞ்சாதே.. முன்னேறு’’ என்றது அக்குரல்.

இம்முறை எனக்குத் தைரியம் வந்தது. குதிரையைத் தட்டிவிட்டேன்.
இவ்வெளியில் இருக்கும் தீயசக்திகளாக் உருவாகும் உருவெளிக்காட்சிகள் இவை என்பதை மெல்ல உணர்ந்துகொண்டேன். ஆனால் எல்லாவறையும் மாயக்காட்சிகளாக நினைக்கவும்முடியாதே.... உண்மையாகவே அப்படியொரு படைவருமெனில் என்ன ஆவது? நினைக்கையில் எனக்குப் புன்னகை வந்தது.

அப்படியே பகல்முழுக்க பிரயாணம் செய்து மாலை மங்குவதற்கு சற்று முன்னதாக தூரத்தில் ஒரு கண்காணிப்புக் கோபுரத்ம் தெரிந்தது. சீன எல்லைக் கண்காணிப்புக் கோபுரத்தில் முதல் கோபுரம். வில்லேந்திய வீரர்கள் இருப்பர். அவர்கள் கண்ணில் பட்டால் அதோகதிதான்.

ஒரு பள்ளத்தில் குதிரையை இறக்கி, இருட்டும்வரை ஒளிந்துகொண்டேன். நன்கு இருட்டியபிறகு வெளியே வந்து கோபுரத்தை கவனமாகக் கடந்து அதிலிருந்து சற்று தொலைவில் வெட்டப்பட்டிருந்த குளத்தை நெருங்கி என் தண்ணீர் குடுவையை நிரப்பவேண்டும். இதை விட்டால் அடுத்த கோபுரத்தின் அருகேதான் தண்ணீர் கிடைக்கும். அதைச்சென்றடைய இன்னொரு நாள் ஆகும்.

கும்மிருட்டில் வெளியேறி குளத்தை அடைந்தேன். ஆடைகளை சுருட்டிக்கொண்டு இறங்கினேன். எனக்கு முன்னாக என் குதிரை இறங்கி தண்ணீர் குடிக்க ஆரம்பித்திருந்தது. மெதுவாக குடுவையை அமுக்கி தண்ணீரை நிரப்பினேன்.

‘ப்ளக் ’ என்றொரு சப்தம். காற்றைக் கிழித்துக்கொண்டு ஓர் அம்பு பறந்துவந்து என் காலடியில் குத்திற்று. பதறிவிலகினேன். அடுத்த அம்பு பறந்துவந்து என் இடதுபுறம் மண்ணைத் துளைத்தது.

என் வருகையைக் கண்டுகொண்டார்கள் என்று உணர்ந்தேன்.

‘‘வேண்டாம். நானொரு பிக்கு. தலை நகரில் இருந்து பயணம் செய்பவன்’’ என்றூ உரக்கக் கத்தினேன்.

அம்புகள் வருவது நின்றது. தூரத்தில் ஒரு பந்தம் கொளுத்தப்பட்டது. அதை ஏந்திக்கொண்டு மெதுவாக என்னை நோக்கி ஒரு சீன வீரன் வந்தான். எனைக்கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. அவனது தலைவன் கூடாரத்துக்கு இட்டுப்போனான். தலைவன் பெயர் வாங் சியாங்.


என்னை இன்னார் என்று அறிந்ததும் அவன் ஆச்சரியமடைந்தான். ‘‘நீங்கள் தலைநகருக்குத் திரும்பிச்சென்றுவிட்டீர்கள் என்றல்லவா எனக்கு ஓலை வந்தது?’’ என்றவன் அறையில் இருந்த நெருப்பை மேலும் தூண்டி பெரிதாக எரியவிட்டான்.

நான் என்னிடம் இருந்த ஓலைகளைக் காட்டினேன். என் பெயர்தாங்கிய எழுத்துக்களைக் கண்டதும்தான் அவனுக்கு நம்பிக்கை வந்தது.
‘‘பிக்குவே, தாங்கள் இப்பயணத்தைத் தொடரவேண்டாம். எனக்குத் தெரிந்த கற்றறிந்த மூத்த பிக்கு ஒருவர் இருக்கிறார். அவரிடம் உங்களை அழைத்துப்போகிறேன். இப்பயணத்தை நீங்கள் கைவிடுங்கள். உங்கள் உடல் தாங்காது. ’’

எல்லோரும் சொல்லும் வார்த்தைதான். அவனுக்கு பலவாறு சொல்லி விளங்கவைத்தேன்.

‘‘பிக்குவே உம்மைப் புரிந்துகொண்டேன். இந்த எல்லையைக் கடக்கும் எத்தனையோ மனிதர்களைக் கண்டுள்ளேன். அனைவருமே பொருளாசையால் பாதிக்கப்பப்பட்டவர்கள். நீங்கள் மட்டுமே அறிவுசுடராகத் தகிக்கிறீர்கள். இன்று இரவு மட்டும் இங்கே தங்கிக்கொள்ளுங்கள். களைப்பாக இருக்கிறீர்கள், நாளை காலை புறப்படலாம்’’ என்று வேண்டிக்கொண்டான்.
எனக்கும் ஓய்வு வேண்டியிருந்தது. அங்கே இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்கினேன்.

அதிகாலையில் எனக்கு முன்பே வாங் எழுந்து காத்திருந்தான். என் தண்ணீர்க்குடுவைய நிரப்ப ஆள அனுப்பியவன் என் குதிரையைத் தயார் செய்தான். எனக்குத் தேவையான் உணவுகளை கட்டி குதிரையில் வைத்தான். பின் என்னுடன் கொஞ்சதூரம் வந்தான். அந்த ஆளற்ற மணல்பரப்பில் ஒரு பாதை எங்கோ பிரிந்து சென்றது. அங்கே வந்ததும் நின்றுகொண்டான்.

‘‘பிக்குவே, இனி என்னால் வர இயலாது. உம்முடன் ஜம்புத்தீவம் வரை கூட எனக்கு ஆசைதான். ஆனால் என் விதியில் அது எழுதப்படவில்லை. யான் இங்கேயே காவல்காத்து மடிவேன். இந்த சாலைவழியாகச் செல்லுங்கள். நான்காவது கண்காணிப்புக் கோபுரம் வரும். அங்கிருப்பவன் என் உறவினனே. அவனிடம் நான் அனுப்பியதாகச் சொல்லுங்கள். உங்களுக்கு உதவிசெய்வான்’’ என்றான்.

அருகே வந்து என்னைக் கண்ணீருடன் தழுவி விடைபெற்றான் வாங். நான் மெதுவாக அவன் காட்டிய சாலையில் சென்றேன். வெகுநேரம் வாங் அங்கேயே நிற்பது தெரிந்தது.

பகல் முழுக்க பயணம் செய்து இரவில் நான்காவது கோபுரத்தை அணுகினேன். குளத்தை அணுகி வீரர்களின் அம்புவிடும் வல்லமையை நான் சோதிக்க விரும்பவில்லை. நேராக காவல்கோபுரத்தை அணுகி வாங்கின் உறவுக்காரனைக் கண்டேன். மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பினேன். இரண்டு நாள் பயணம் கழிந்து யீமா என்ற ஊற்றை அடைந்தேன். இதற்குப் பிறகு பாலைவனம்.

இதைக் கடப்பது சாமானியர்களுக்கு சாத்தியமில்லை என்று காவல்தலைவன் கூறியிருந்தான்.இன்னொரு பகல் பிரயாணத்துக்குப் பிறகு அந்த பாலைவனத்தில் பிரவேசித்தேன். என் குதிரையின் கால்கள் நடுங்கி, புழுதியில் புதைவதை என்னால் உணர முடிந்தது.

-பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com