அடிபட்ட பாம்பு

செவக்காட்டு சொல்கதைகள் 15

விதியைப்பற்றி நிறைய நாட்டுப்புறக்கதைகள் உள்ளன. அக்கதைகளில் பெரும்பான்மையானவை , விதியை வெல்ல முடியாது என்ற கருத்தையே வலியுறுத்துகின்றன. இக்கருத்தை , அன்று எழுதிய எழுத்தை , அழித்து எழுத முடியாது , எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பன போன்ற கிராமத்தில் உலவும் வழக்குத்தொடர்களும் விதியின் வலிமையைப் பேசுகின்றன.

விதியின் வலிமையைப்பற்றி பேசும் ஒரு கதையைச் சொல்ல போகிறேன் “ என்றார் தாத்தா. கூடியிருந்த சபையினர் கதைகேட்கத் தயாரானார்கள் .

ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டியும் , புருஷனும் இருந்தாங்க, அவங்களுக்குத் தொழில் அரிசி வியாபாரம். மொத்தமாக அறுவடைக்காலங்களில் நெல் மூடைகளை சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று வாங்கி , மாட்டுவண்டியில் ஏற்றி , அவற்றை ஒரு அறையில் அடைத்து வைத்து விடுவார்கள் . இப்படி நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் இடத்தை அந்தக் காலத்தில் ’சேர்’ என்று சொல்வார்கள்.

பொண்டாட்டிக்காரி தினமும் காலையில் எழுந்ததும் , முதல் வேலையாக ஒரு மூடை நெல்லை அவித்து காயப்போடுவார் . மாலையில் முந்தைய நாள் அவித்துக் காயவைத்த நெல்லைக் குத்திப் புடைத்து அரிசியாக்குவாள்.

புருசக்காரன் அந்த அரிசி மூட்டையை ஒரு கோவேறு கழுதையில் ஏற்றி ஊர் ஊராகச் சென்று விற்றுவிடுவான், தினப்படி , புருசனும் பொண்டாட்டியும் இப்படியாக உழைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் , அந்தப்பெண் நெல் அவித்து கொண்டிருக்கும் போது அந்த வழியாகச் சென்ற எமதூதர் இன்று நெல்லை அவிக்கும் , இந்தப் பெண் நாளை , நெல் அவிக்கவும் மாட்டாள், உயிருடன் இருக்கவும் மாட்டாள் . பாம்பு கடித்து செத்துவிடுவாள் “ என்று கூறினார்..

எமதூதர் சொன்னதை அப்பெண்ணின் வீட்டருகே நின்ற வேங்கை மரத்தில் குடியிருந்த அண்டண்ட பச்சி, பழங்காலத்தில் வாழ்ந்த வினோதமான ஒரு பறவை, இப்போது அப்பறவை இனம் அழிந்துவிட்டது,  கேட்டது. அந்தப்பறவை பேசும் சக்தி கொண்டது . சில பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் . அதை பறவை பாஷை என்று சொல்வார்கள். பறவை பாஷையை புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்களும் பழங்காலத்தில் வாழந்தார்கள் என்று புராணக்கதைகள் கூறுகின்றன.

எமதூதர் சொன்னதைக் கேட்ட அண்டண்ட பறவை , அச்செய்தியை மற்றோர் பறவையிடம் கூறியது, அவ்வழியே அரிசி விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அரிசி வியாபாரி , அப்பறவை கூறுவதைக் கேட்டு அதிர்ச்சியுற்றார்.

வேகமாக வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் , நாளை நெல் சேருக்கு செல்ல வேண்டாம். நெல்லும் அவிக்க வேண்டாம் என்றார். பாம்பு கடித்துத் தான் தன் மனைவி சாகவேண்டும் என்று விதி இருப்பதாக அப்பறவை கூறியதால் , அரிசி வியாபாரி , பாம்பு பிடிக்கும் பிடாரனை அழைத்து வந்து தன் வீடு , தோட்டம் , நெல் மூட்டைகள் அடைத்து வைக்கும் சேர் அறை முதலிய இடங்களில் பாம்பு இருந்தால் அதைப் பிடித்து கொண்டு செல்லும் படி கூறினான். பாம்பு பிடிப்பவனும் குழல் ஊதி நெல் மூட்டைகள் அடைத்து வைத்துள்ள சேரில் இருந்த நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்து அதை அரிசி வியாபாரியிடம் காட்டி , தனக்குரிய பணத்தை வாங்கி கொண்டான். பாம்பு பிடிப்பவனிடம் அரிசி வியாபாரி , அந்த பாம்பை இப்போதே என் கண் முன்னால் கொன்று விடு என்றான். பாம்பை பிடித்தவனும் ஒரு தடியால் அடித்து பாம்பை கொன்றான்.

செத்துபோன பாம்பை , சிறுவர்கள் ஒரு குச்சியால் தூக்கிக் கொண்டு போய் , குளக்கரை ஓரமாக போட்டுவிட்டார்கள். அரிசி வியாபாரிக்கு அப்பாட என்றிருந்தது , எமதூதன் , அண்டரண்ட பறவையிடம் சொன்ன செய்தியை அரிசி வியாபாரி தன் மனைவியிடம் சொல்லவில்லை.

அன்று இரவு, அவன் மனைவி தூங்கினாள் , ஆனால் அரிசி வியாபாரி தூங்கவே இல்லை , ஒரு விளக்கைப் பொருத்தி மனைவியின் பக்கத்தில் வைத்துக்கொண்டு , ராத்திரி முழுவதும் கொட்டகொட்ட முழித்துக்கொண்டே இருந்தான். பாம்பு வந்து தன் மனைவியை கடித்து விடக்கூடாது என்று ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருந்தான்.

ஒரு வழியாகப் பொழுது விடிந்தது , தன் மனைவியைப் பார்த்து இன்று நெல் அவிக்க வேண்டாம் , என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான்..

எமதூதர் சொன்னதில் ஒன்று “இந்தப் பெண் நாளை நெல் அவிக்க மாட்டாள். “ என்பது . அச்செயல் அவள் கணாவனாலேயே நிறைவேறிவிட்டது. இந்த ரகசியத்தை கூட அரிசி வியாபாரியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

மறு நாள் காலையில் அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் , குளத்திற்கு குளிக்க சென்றார்கள் , அப்போது நெல் அவிக்காமல் இன்று ஓய்வாக இருக்கும் அரிசி வியாபாரியின் மனைவியை பார்த்து மற்றப் பெண்கள் “நீதான் இன்று நெல் அவிக்கவில்லையே , எங்களுடன் குளத்திற்கு குளிக்க வாயேன் “ என்று அழைத்தார்கள்.

அரிசி வியாபாரியோ “ இன்று ஒரு நாள் மட்டும் வீட்டைவிட்டு வெளியே போகாதே என்று கூறினான்.ஆனால் அவன் மனைவியோ , தினமும் நெல் அவித்து சடைத்து (அலுப்பாகி ) விட்டது. இன்று ஒரு நாளாவது மற்றப் பெண்களைப்போல நானும் குளத்திற்கு போய் குளித்து வருகிறேனே “ என்று சொல்லிவிட்டுப் புருஷனின் பதிலுக்கு கூட காத்திராமல் , துவைக்க வேண்டிய துணி மணிகளை அள்ளி ஒரு பொட்டணமாகக் கட்டிக்கொண்டு , அப்பெண்களுடன் குளத்திற்கு சென்றாள்.

குளத்திற்கு போகும் வழியில் எல்லாம் , நேற்று பாம்பு பிடிப்பவன் வந்ததையும் , அவன் பெரிய நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்ததையும் , அதைக் கொன்றதையும் பற்றியே பேசிக்கொண்டு சென்றார்கள்.

அப்போது , நேற்றுப்பிடித்த பாம்பை அடித்து போட்ட இடம் எனக்கு தெரியும் என்றாள் ஒருத்தி , அரிசி வியாபாரியின் மனைவி “நேற்று நான் பயந்து போய் அந்தப் பாம்பை உயிரோடு பார்க்கவில்லை, இப்ப அந்தப்பாம்பு செத்த பிறகாவது ஒரு முறைபார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது என்றாள்.

எனவே பெண்கள் எல்லோரும் சேர்ந்து செத்துப் போன அந்தப் பாம்பைப் பார்க்க போனார்கள் , அரிசி வியாபாரியின் மனைவி , பாம்பின் அருகில் சென்று அதை உற்றுப்பார்த்து “அடே யப்பா, அம்புட்டுப்பெரிய பாம்பு , எம்மா நீளம் இருக்கு , என்று சொல்லி மூக்கின் மேல் விரலை வைத்தாள்.

பாம்பு பிடிப்பவன் அந்தப்பாம்பைப் பொய்யடியாகத்தான் அடித்திருக்கிறான், எனவே அபபாம்பின் உயிர் போகவில்லை, அது மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறது , அதற்குள் சின்னஞ்சிறு பிள்ளைகள் சேர்ந்து மயங்கிய நிலையில் இருந்த பாம்பைத்தூக்கிக் கொண்டு வந்து குளக்கரையில் போட்டுவிட்டார்கள்.,

மயங்கிய நிலையில் கிடந்த பாம்பு இரவெல்லாம் காற்றைக்குடித்து (சுவாசித்து) கொண்டே இருந்திருக்கிறது, எனவே அதற்கு உயிர் வந்து விட்டது, என்றாலும் குறுக்கில் மரக்கட்டையின் அடி பலமாகப் பட்டிருந்ததால் அப்பாம்பு நகர முடியாமல் அந்த இடத்திலேயே கிடந்தது.

அரிசி வியாபாரியின் மனைவி பாம்பின் மிக அருகில் சென்றதால் , யாரும் எதிர்பாராத படி அப்பாம்பு தன் தலையை தூக்கி , அவளைக் கொத்திவிட்டது. கண் எதிரே நடந்த விபரீதத்தைப் பார்த்து அவளுடன் சென்ற பெண்கள் குய்யோ முய்யோ என்று அலறினார்கள்.

அப்பெண்களில் தைரியமான சிலர் , அருகில் கிடந்த கல்லையும் , கட்டியையும் மெடுத்து பாம்பின் தலையில் போட்டு பாம்பை கொன்றார்கள்.

அரிசி வியாபாரியின் மனைவி சிறிது நேரத்தில் நுரைதள்ளி செத்துவிட்டாள். ‘விதியை யாராலும் வெல்ல முடியாது “ என்று உண்மை அரிசி வியாபாரிக்கு அப்போதுதான் புரிந்தது.

ஒரு பெரியவர் , நல்ல பாம்பை அடித்தாலும் , அதை அப்படியே தூக்கி வெளியே போடகூடாது , அதற்கு ஒரு குழி வெட்டி அதில் அடிபட்ட நல்லபாம்பை போட்டு கொஞ்சம் பாலையும்  ஊற்றி புதைக்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பின் தான் அடிபட்டு செத்த பாம்பைப் புதைக்காமல் போனது நம் தப்பு தான் என்று அரிசி வியாபாரி நினைத்தான் , எது எப்படி என்றாலும் விதியை யாராலும் வெல்ல முடியாது அதற்கு கடவுளும் விதி விலக்கல்ல , என்று கதையை சோகத்துடன் சொல்லி முடித்தார் சுப்புத்தாத்தா.

-இன்னும் சொல்வார்

(கி.ராஜநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கதைசொல்லிகளிடம் இருந்து நூற்று கணக்கான நாட்டுப்புறக் கதைகளை சேகரித்தவர் மூத்த எழுத்தாளர் கழனியூரன். அக்கதைகள் கி.ராவின் பெயரிலும் பின்னர் இவர் பெயரிலும் பல இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அவர் களப்பணி செய்து சேகரித்த கதைகளில் இன்னும் எந்த இதழிலும் பிரசுரமாகாத சில கதைகளை’அந்திமழை’ மின் இதழ் மூலம் வாசகர் பார்வைக்கு அவர் முன்வைக்கிறார். சனிக்கிழமை தோறும் இவை வெளியாகும்)

அக்டோபர்   04 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com