அந்த ஓர் இஞ்ச் தான் நமக்கும் வெற்றிக்குமான தூரம்!

அந்த ஓர் இஞ்ச் தான் நமக்கும் வெற்றிக்குமான தூரம்!

ஆட்டத்தை முடிப்பவன்-9

எத்தனை முறை பார்த்திருக்கிறோம்? மோசமான சூழல்களில் இருந்து இந்திய அணியை கடந்த 15 ஆண்டுகளில் பலமுறை மீட்டிருக்கும் தோனி. இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் என்றால் இவரது வானளாவிய சிக்சர்களுக்காகவோ அல்லது சுழலும் ஹெலிகாப்டர் மட்டைக்காகவா என்றால் இல்லவே இல்லை. படு பாதாளத்தில் அணி விழும்போது ஒற்றைக் கயிறாக நின்று தூக்கி நிறுத்தும் போர்க்குணத்துக்காகத்தான் தோனியை நமக்குப் பிடிக்கிறது.

உலகக்கோப்பை அரை  இறுதி ஆட்டம் மழையால் மறுநாள் தொடங்கியபோது கிரிக்கெட் வர்ணனையாளர்கள் எல்லோரும் சொன்னார்கள் இந்தியாவுக்குத் தான் வாய்ப்பு என்று. டாஸில் வென்றபிறகு முதலில் பேட் செய்வதற்கு இணையானது இது என்று யாரோ ஒருவர் சொன்னார்.

ஆனால் ரோஹித், கோலி, ராகுல், கார்த்திக் என வரிசையாக சென்று விட மழை பெய்யாதபோதும் கருமேகங்கள் தோன்றின.

ஆனால் எதிராக எல்லாரும் வீழ்ந்தபின்னரும் இமாலய நம்பிக்கை நம்மிடம் எஞ்சி இருந்தது. காரணம் தோனி என்ற ஒற்றைப் பெயர். நியூசிலாந்து காரர்களிடம் அச்சம் பெருகிக்கொண்டே போனது. காரணம் அதே பெயர்தான்.

’’பந்த், ஹர்திக் ஆகிய இளம் வீரர்களை தொடர்ந்து அனுப்புவதற்குப் பதிலாக தோனியை முன்கூட்டியே அனுப்பி இருந்தால் அவர்களை அமைதிப்படுத்த இவர் இருந்திருப்பார். பந்த் அப்படி ஒரு ஷாட்டை அடித்து அவுட் ஆகியிருக்கமாட்டார். ஏன் தோனியை முன்பே அனுப்பத் தவறியது அணி நிர்வாகம்? ஏன் தோனி தானாக முன்வந்து முன்வரிசையில் ஆடவில்லை? ’’ என்று தோனியுடன் வெளிப்படையாகவே மோதல்போக்கைக் கடைப்பிடிப்பவரான கம்பீர் ஆட்ட வர்ணனையின்போது  சொன்னார்.

இருக்கலாம். தோனியை சற்று முன்னதாக இறக்கி இருக்கலாம். இப்படி பல லாம்கள் உண்டு. ஆனால் ரவீந்திர ஜடேஜா அந்த குறைகளைப் போக்கிவிட்டார். தோனியின் அரவணைப்பில் அவர் அடித்து ஆடி, 97 பந்துகளில் இவர்கள் இருவரும் 100 ரன்களைச் சேர்த்துவிட்டனர். மூன்று ஓவர்களில் சுமார் முப்பது ரன்களைக் குவிக்கவேண்டும் என்று இலக்கு வந்தபோது நிற்பது தோனிடா.. என்று நினைத்தோம்.

ஜடேஜா அவுட் ஆனபோதும் நாம் கலங்கவில்லை! 48வது ஓவரில் பெர்குசனின் முதல் பந்தை தோனி ஆறு ரன்களுக்கு அடித்தபோது நிமிர்ந்து உட்கார்ந்தோம். போல்ட்டுகும் ஓவர் முடிந்துவிட்டது. ஹென்றிக்கும் ஓவர் முடிந்துவிட்டது. கடைசி ஓவரை யார் போட்டாலும் பொளந்துவிடுவார் தோனி.. ஆகவே வெற்றி நம்வசம் என்றுதான் நிமிர்ந்திருந்தோம்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஓடிக்கொண்டே இருந்த கால்கள் அவருடையவை. உலகில் மிக ஷார்ப்பாக ரன்களை ஓடுவதில் அவருக்கு இணையாக யாருமே இல்லை. ப்ராவோவுடன் ஓடிப்போட்டியிட்டு அவரைத் தோற்கடிக்கும் வீடியோ ஒன்று ஐபிஎல் போட்டிகளின் போது வரும். தோனியின் மட்டை வீச்சைப் பார்க்குபோது இன்று அவரை அவுட் ஆக்கும் பந்தை வீச நியூசிலாந்தில் யாருமே இல்லை என்று தெரிந்துவிட்டது.

பந்துவீச்சால் அவுட் ஆக்கமுடியாத வீரனை அவுட் ஆக்க ஒரே வழிதான். ரன் அவுட் ஆக்குவதுதான் அது. துரதிருஷ்டவசமாக தோனி ரன் அவுட். ஒரே ஒரு இஞ்ச் தூரம்தான் அவரது பேட் பின் தங்கியது. அந்த ஓர் இஞ்ச் தான் நமக்கும் வெற்றிக்குமான தூரம்!

இப்போது சில ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது பவர்ப்ளே. உள்வட்டத்துக்கு வெளியே 5 பேர்தான் இருக்கவேண்டும். ஆனால் ஆறுபேர் இருந்தார்கள். அந்த பந்து நோபால் என்று நடுவர் அறிவித்திருக்கவேண்டும். அவர் செய்யவில்லை. நோபால் என்று தெரிந்தால் தோனி இரண்டாவது ரன் ஓடி இருந்திருக்க மாட்டார். அந்த ரன் அவுட் நிகழ்ந்திருக்காது என்று!

இந்த தொடர் முழுக்க தோனியை எதிர்மறையாக விமர்சித்தவர்களும் அவருக்கு மரியாதை செய்த போட்டியாக இது அமைந்துவிட்டது.’

தோனி வெற்றியைத் தொட வைத்திருந்தால் அக்கணமே உலகமே ஆர்ப்பரித்திருக்கும். தோளில் கதாயுதத்துடன் சிரஞ்சீவியாக நின்றுகொண்டிருக்கும் அனுமான், பீமன் போன்ற இதிகாச பாத்திரங்களுக்கு இணையாக அவர் பேசப்பட்டிருப்பார்.

ஆனால் தோனி மனிதன். அவன் வீழ்வது இயற்கை. தோல்வியின் மூலம் இதோ எங்களுக்கு மிக அருகில் நீங்களும் இருக்கிறீர்கள். வென்றுகொண்டே இருந்தால் கிரிக்கெட் இவ்வளவு இனிப்பான ஈர்ப்பான ஆட்டமாக இருக்கவே முடியாது. போராடித் தோற்பதிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. அது துவர்ப்புச் சுவை. தேசத்துக்கு இனிப்புகளுடன் அவ்வப்போது துவர்ப்புகளும் தேவை. அதுவே சமநிலைக்கு நம்மைக் கொண்டுவருகிறது.

ஆட்டத்தை முடிப்பவன் என்ற இந்த தொடரின் தலைப்பே பல அர்த்தங்களைக் கொண்டதாக இப்போது தோன்றுகிறது.

இதுதான் அவரது கடைசி உலகக்கோப்பைப் போட்டி. சந்தேகமே இல்லை. விரைவில் அவர் ஓய்வை அறிவிக்கக்கூடும். ஆனாலும் நன்றி தோனி. உங்கள் மட்டையின் ஒவ்வொரு வீச்சிலும் எங்கள் இதயங்களை துடிக்க வைத்ததற்கு..

ஜுலை   11 , 2019  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com