அனுகிரஹா

கவிதைத்திருவிழா

முதல் மிதிவண்டிப் பயணம்

வீதியின் விசும்பல்கள்
காற்றோடியைந்த ராகமாகி
செவிகளைத் துன்புறுத்தாது
மறைந்தன.

தெருவோர நிகழ்வுகள்
பல முகங்களின் வாழ்க்கையை
அம்பலப்படுத்தின
பார்க்க முனைந்த
விழிகளுக்கு மட்டும்

பலவித மரங்களும்
சூழலோடு புணர்ந்து
அகன்ற வீதியின் ஓரங்களிலே
தம் இருப்பைப் போற்றாது மரியாதையோடு
முகம் நிமிர்த்தி நின்றிருந்தன
தம்மை உணராதவர்க்கும் நிழலாக

உலகம் என் கண் முன்
மெதுவாக நகர்ந்தது
தன் எல்லா உறுப்புகளையும்
விரிவாக விளக்கியவாறு,
அசுர வாகனங்கள் நிரம்பிய வீதியின்
ஓர் ஓரத்தில் என்
மிதிவண்டிப் பயனம்
தொடர்கிறது.

சிறகுகள் முளைத்த சுதந்திரத்துடன்
கவலையின்றிப் பார்க்கிறேன்
கவலை தோய்ந்த முகங்கள்,
முன்னேற முந்துவதை.

வியர்வைத் துளிகள்
வீசிய தென்றலால்
குளிர்ந்தன.
****** ***** *****
தேடல்

கலையா? வாழ்க்கையா?
இவ்விடையில்லாத்
தேடலின் தூண்டிலில்
சிக்குவதில்லை
நீரோடோடும்
மீன்கள்.

****** ***** *****

காலக்கடல்

பலர் சிலராவர்
சிலர் பலராவர்
காலக்கடலின்
ஒவ்வொரு அலையின்
எழுச்சியிலும்!

ஒவ்வொரு எழுச்சியும்
ஒரே கடலில்தான்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
ஒரே கரையில்தான்

****** ***** *****

பிம்பம்

நிலைக் கண்ணாடியில்
பிம்பங்களைக் காண
நானும் ஒரு பிம்பமென
சட்டகம் முழுதும் நிறைய
என்னைத் தாண்டிய
முப்பரிமாணத்தை
மறைத்து விட்டேன்.

****** ***** *****

மழை

மழைப் பருவம் மயக்கியது
மண் மணக்கும் வீதியில்
நீர் குட்டைகளைக்
கலைக்கும் மழை

நானும் கலைக்க முனைய,
உடனே என்னை
உயர்த்தி தேரளில்
சாய்த்துக் கொண்டார்.
விநோத பாஷையில்
வியாதி ஒன்றைச் சுட்டி

தோள் சவாரியும் சுகம்தான். . . .
குடை, உலகை மறைக்க,
கஷ்டப்பட்டுத்தான் அதைக்
கண்ணிலிருந்து துரத்தினேன்

கடவுளிடம் கேட்டு
நானே மேகப்பஞ்சைப்
பிழிய வேண்டும். . . .
மழை நின்றது
"சாமிக்கே கை
வலிக்குமா என்ன?"

அருகில் ஒரு மரம்
சோம்பல் முறித்து,
துளிகள் தெளித்தது.
நின்று கொண்டே இருக்கின்றன.
அவை சோம்பேறிகள்.

அட வண்ணமயமாய் பூச்சிகள்!
கடவுள் ஏதேனும்
சேதி சொல்லி அனுப்பியிருப்பாரோ?
கோயிலில், அன்று
அவரிடம் ஒன்று கேட்டிருந்தேன். . . .

வீட்டு வாசலில் இறக்கிவிட்டு
அப்பா சொன்னார்
"அம்மா, . . .என்ன மழை!"
ஹ்ம்ம்ம் . . . . அதற்குள் வந்துவிட்டோமே?!

பிப்ரவரி   08 , 2008

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com