ஆட்டத்தை முடிப்பவன்!

ஆட்டத்தை முடிப்பவன்!

2011, ஏப்ரல் 2. மும்பையின் வான்கடே மைதானம். உலகக்கோப்பை இறுதிப்போட்டி. 274 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி ஆடிக்கொண்டிருந்தது இந்தியா. சச்சின், சேவாக் இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகிவிட்டார்கள். அடுத்து கோலி ஆடிக்கொண்டிருந்தார். கோலி அவுட் ஆவதற்கு சற்று முன்னதாக உள்ளறையில் இருந்து ஜன்னலில் டொக் என்று தட்டினார் கேப்டன் தோனி. வெளியே அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், தலையை உயர்த்தினார். ’அடுத்து நான் இறங்கப்போகிறேன்’ சைகையால் சொன்னார் தோனி. வழக்கமாக அடுத்து இறங்கவேண்டியவர் யுவராஜ் சிங் தான்! கிறிஸ்டன் யோசிக்கவில்லை! தலையை அசைத்து ஒப்புதல் அளித்தார். கோலி விக்கெட் வீழ்ந்ததும் உள்ளே போனார் தோனி! அதன் பிறகு அந்த ஆட்டத்தை அவர் எப்படி முடித்தார் என்பது வரலாறு!

கிரிக்கெட்டின் கடவுள் இந்தியாவில்தான் வாழ்கிறார் என்றபோதிலும் அவரால் ஒரு முறைகூட உலகக்கோப்பையை கையில் வாங்க முடியவில்லையே என்பது 2011 வரை இந்நாட்டின் பல கிரிக்கெட் ரசிகர்களின் உச்சகட்ட ஏக்கம். நிச்சயம் அது தோனிக்கும் இருந்திருக்க வேண்டும். மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் வெற்றிக்கான ஆறு ரன்களை அடித்துவிட்டு தலைவன் தோனி சொன்னது: இது சச்சினுக்காக. ஆம் அவருக்காக இந்த கோப்பையை வெல்ல விரும்பினோம்!. ஒரு தேசமே இதற்காக தோனிக்கு நன்றி சொன்னது. கோப்பையை தோனி தன் வசம் வைத்திருக்கவே விரும்பவில்லை வெற்றி  நிகழ்வின் போது! டெண்டுல்கரைச் சுமந்துகொண்டு இந்திய அணி மைதானத்தைச் சுற்றி வந்தபோது, தோனி வெறுங்கையராக, மென்மையான புன்னைகையுடன், அப்போதுதான் அரைக்கணத்தில் ஸ்டெம்பிங் செய்து எதிராளை ஆட்டமிழக்கச் செய்தவரைப் போல் நடந்துவந்தார். ஒரு அணித் தலைவனாக இந்த உலகக் கோப்பையை அவர் வென்றது மிகப்பெரிய பங்களிப்பு.

1975-ல் இங்கிலாந்தில் தொடங்கின உலகக்கோப்பை ஆட்டங்கள். அதிலிருந்து 2011 வரை எந்த கிரிக்கெட் அணியும் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதே இல்லை. 1983-ல் உலகக்கோப்பையை வென்றபின் 28 ஆண்டுகளாக காத்திருந்தனர் இந்திய ரசிகர்கள் இடையில் நிறைய கோப்பைகளை அணி வென்றிருந்தாலும் உலகக்கோப்பை என்பது நிறைவேறாத கனவாகவே இருந்தது. இந்த கனவை நனவாக்கும் பெரும் பொறுப்புடன் தான் தோனியின் தலைமையிலான அணி இந்தியாவில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்றது. ஆனால் சொந்த மண்ணில் நடக்கும்போது சொதப்புவதுதானே இது வரை வரலாறு என்பதால் உதறல் கூடுதலாகவே இருந்தது. கொல்கத்தாவில் ஏற்கெனவே அசார் தலைமையிலான அணி இலங்கையிடம் 1996-ல் அரையிறுதியில் பரிதாபமாகத் தோற்ற நினைவு எல்லோருக்கும் நிழலாடிக் கொண்டிருந்தது. இச்சூழலில் வழக்கத்துக்கு மாறான ஆட்டத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினால்தான் இந்திய அணி வெல்ல முடியும். அதற்கான நபராக காலம் தோனியை முன்னிறுத்தியது,

முன்னதாக 2003-ல் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு கங்குலி தலைமையிலான அணி முன்னேறி இருந்தது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் அடித்த அடியில் இந்திய அணி மண்ணைக் கவ்விற்று. 2007-ல் சூப்பர் 8 நிலைக்குத் தகுதிகூடப் பெற முடியாமல் வங்க தேச அணியிடம் தோற்றுத் திரும்பி இருந்தது. கிரிக்கெட் என்பது மதம் என்றால் உலக்கோப்பை என்பது உச்சகட்ட  யாகம். வெல்லாவிட்டால் அணி வீரர்கள் ஆகுதி ஆக்கப்படுவர்!

2011 உலகக்கோப்பையில் 14 அணிகள் ஆடின. ஏழு ஏழாக இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் முதல்கட்டமாக ஆறு ஆட்டங்களை அவை ஆடவேண்டும்.

19 பிப்ரவரியில் தொடங்கிய ஆட்டம் 2 ஏப்ரலில் முடிவடையுமாறு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்திய அணியின் முதல் ஆட்டம் வங்கதேசத்தை எதிர்த்து மிர்ப்பூரில் நடந்தது. எல்லோருக்கும் வங்கதேச அணியைப் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற வெறி. சேவாக்  140 பந்துகளில் 176 ரன்களை அடிக்க, கோலி என்ற முதல் முதலாக உலகக்கோப்பையில் ஆடுகிற இளம் வீரர்( அன்னிக்கு அது) 100 ரன்களை அடித்தார். தோனி இறங்க தேவையே இல்லை. நான்கு விக்கெட் இழப்புக்கு 370 ரன்களை இந்தியா குவித்தது. வங்க தேசம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அடுத்த ஆட்டம் பெங்களூரில் நடந்தது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கிடையிலான இப்போட்டி முதல்முதலாக ’டை’யில் முடிவடைந்தது. சச்சின் 115 பந்துகளில் 120 ரன்களைக் குவித்தார். கம்பீர், யுவராஜ் ஆகியோரின் அரை சதங்களுடன் 338 ரன்கள். எப்படியும் வென்றுவிடலாம் என்று களமிறங்கினால் இங்கிலாந்து வீரர்கள் மட்டை ஆட்டத்தில் மிரட்டினார்கள். 42.4 ஓவர்களில் இங்கிலாந்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் என்ற மிக வலுவான நிலையில் இருந்தது. ரசிகர்கள் தலையில் துண்டைப் போட்டு அமர்ந்திருந்தபோது ஜாகிர்கான் பந்துவீசி இரண்டு பேரை ஆட்டமிழக்கச் செய்தார். கடைசி மூன்று ஓவர்களில் 29 ரன்கள் எடுக்கவேண்டும். 49 வது ஓவரில் பியூஷ் சாவ்லா 15 ரன்களை வாரி வழங்கிவிட, இந்திய ரசிகர்கள் கதறினர். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது ஒரு ரன் மட்டுமே இங்கிலாந்து எடுக்க, ஆட்டம் டையில் முடிந்தது. இந்திய அணி காற்றுப் போன பலூன் ஆனதென்னவோ உண்மை.

அயர்லாந்து என்கிற சொத்தை அணியுடன் அடுத்த ஆட்டம். அதுவாவது எளிதாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை. 207 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இலக்குடன் இந்தியா ஆடியபோது 167க்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பின்னர் யுவராஜும் இர்பான் பத்தானும் சேர்ந்து ஆடி மெல்ல இந்தியாவை கரை சேர்த்தனர். இதற்கு அடுத்து நெதர்லாந்துடன் டெல்லியில் ஆட்டம். இதைத்தான் எளிதாக இந்தியா வென்றது என்று சொல்லமுடியும்.

இந்த குழு ஆட்டங்களில் முக்கியமான ஆட்டம் அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் காத்திருந்தது. இங்கே தோனியின் வீரர்கள் மண்ணைக் கவ்வ வேண்டியதாயிற்று. சச்சின் அருமையாக ஒரு சதமடித்தார். சேவாக் 76 ரன்களைக் குவித்தார், கம்பீர் கூட அரை சதம். ஆனால் அதன் பின் வந்த எல்லோரும் 29 ரன்களைக் குவிப்பதற்குள் பெவிலியன் திரும்பினார்கள். ஒரே ஒரு வீரர் மட்டும் 12 ரன்களுடன் அவுட் ஆகாமல் மறுமுனையில் எல்லோரும் ஆட்டமிழப்பதைக் கண்டு நின்று கொண்டிருந்தார். அது தோனி! 296 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத்தொடங்கிய தென் ஆப்பிரிக்கர்கள், கடைசி ஓவரில் வெற்றியைச் சுவைத்தார்கள்.

சென்னையில் இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஆட்டம். இதில் இந்தியா வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் ஒரு சதம் அடித்ததுடன் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

குழு ஆட்டங்கள் முடிவடைந்து, காலிறுதிக்குள் நுழைந்தாகி விட்டது. காலிறுதியில் காத்திருந்தது ஆஸ்திரேலியா. முதலில் ஆடி 260 ரன்களை எடுத்தது. ரிக்கி பாண்டிங் சதமடித்தார். ஆனால் இந்திய அணி 47 வது ஓவரிலேயே வெற்றியை ருசி பார்க்க முடிந்தது.

அரைஇறுதி ஒரு ’ஹைவோல்டேஜ்’ ஆட்டம். இது அரை இறுதியா அல்லது இறுதி ஆட்டமா என்கிற அளவுக்கு பெரிய அழுத்தம்! ஏனெனில் எதிராளி பாகிஸ்தான். எப்போதும் இவ்வளவு அழுத்தம் நிறைந்த ஆட்டம் என்றால் கடுமையாகத் தடுமாறும் சச்சின், இம்முறை வீறுகொண்டெழுந்து, 85 ரன்கள் அடித்துக் காப்பாற்ற, 260 ரன்கள் எடுத்த இந்தியா, பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிவிட்டது.

ஓகே… 100 கோடிப்பேர் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்த இறுதி ஆட்டம். இலங்கைக்கு எதிராக மும்பையில். மகிள ஜெயவர்த்தனே 103 ரன்கள் எடுக்க, இலங்கை 274 ரன்களை ஆறு விக்கெட் இழப்புக்கு எடுத்தது. இப்போது தேவையெல்லாம் ஒரு குளிர்ந்த நிலையில் ஆடக்கூடிய தலை மட்டுமே. சச்சினும் ஷேவாக்கும் இறங்கினார்கள். 31 ரன்களிலேயே இருவரும் மலிங்காவின் பந்துவீச்சில் திரும்பிவிட்டார்கள். 96 படத்தில் ஜானு தொட்டுப்பார்த்த ராமச்சந்திரனின் நெஞ்சுபோல் எல்லோருக்கும் இதயம் துடிக்க ஆரம்பித்துவிட்டது. இன்னொரு கோப்பையையும் இழக்க யாரும் தயாராக இல்லை. கம்பீர் ஒரு முனையில் நிற்க, கோலி உள்ளே போனார். அவர் 35 ரன்களில் அவுட் ஆகி திரும்பிவிட்டார்.  இப்போது யுவராஜ் உள்ளே போகவேண்டும். தோனி எழுந்தார், நான் உள்ளே போகிறேன்! இதுதான் இந்த ஆட்டத்தின் திருப்புமுனை. இந்த கோப்பை முழுக்க தோனி ஆறாவது ஆளாகத்தான் இறங்கிக் கொண்டிருந்தார். அப்படி ஒன்றும் அதிகப்படியாக ரன்களை அவர் குவித்திருக்கவில்லை! சொதப்பினால் சிக்கலாகிவிடும். ஆனால் இது வேறு ஆட்டம். நான், சற்று முன்னதாக இறங்கவேண்டும் என்று அவரது உள்ளுணர்வு சொல்லிவிட்டது. எதிர்முனையில் கம்பீர் மெல்ல ஆட, தோனி அடித்து ஆடினார். கம்பீர் 97 ரன்களில் அவுட் ஆகி, யுவராஜ் உள்ளே வந்தார். ஆனால் தோனி விஸ்வரூபம் எடுத்து நின்றிருந்தார். பத்து பந்துகளை மிச்சம் வைத்து நுவான் குலசேகராவின் பந்தை ஆறு ரன்களுக்குத் தூக்கி தோனி வெற்றி பெற வைத்தார். அவர் எடுத்தது 71 பந்துகளில் 91 ரன்கள்! சந்தேகமே இல்லாமல் ஆட்டநாயகன் தோனிதான்!

யுவராஜ் சிங் ஏற்கெனவே காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துவிட்டார். அரை இறுதியில் டக் அவுட் ஆகியிருந்தாலும், அவர் தான் பிளேயர் ஆப் தி டோர்னமெண்ட் ஆகத் தகுதி பெற்றிருந்தார். இந்த இறுதி ஆட்டத்தின் முன்பாக யுவராஜ் வாந்தி எடுத்திருந்தார். அவர் நலமின்றி கொந்தளிப்பான மனநிலையில் இருந்தார். உலக்கோப்பை இறுதி ஆட்டம் என்கிற கட்டற்ற அழுத்த மிகுந்த ஆட்டம் அவரைப் பாதித்திருக்கக் கூடும். இதை தோனி யூகித்திருந்தார். இந்த நேரத்தில் அவரை முந்திக்கொண்டு தான் இறங்கவேண்டும் என்று அவர் எடுத்த முடிவுதான் கோப்பையை வெல்ல உதவிற்று!

மும்பை மட்டுமல்ல, இந்தியாவே வெற்றி உணர்ச்சியில் கொந்தளித்தது எனலாம்! எப்போதாவது சுவைக்கக்கூடிய அரிய வெற்றி! இலங்கையின் மூன்று வலக்கை சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலையும் சமாளிக்க ஒரு வலக்கை வீரரை இறக்குவது சரியான முடிவுதான். ஏனெனில் அங்கு ஆடிக்கொண்டிருப்பவர் இடக்கை வீரரான கம்பீர் ஆனால் இந்த கோப்பையின் நாயகனாக சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் யுவராஜுக்கு முன்னதாக தான் இறங்குவதென்றால் அதற்கு மிகுந்த மனதிடம் வேண்டும். இது ஒரு காவியத் தருணமாக இந்திய கிரிக்கெட்டில் நிலைபெற்று விட்டது!

வெற்றிக்குப் பிறகு மிகமிக இயல்பாக தோனி ஆர்ப்பாட்டமே இல்லாமல் சக வீரர்களுடன் நடந்துவந்தாலும், அவரும் உணர்ச்சிப்பெருக்கில் அழுதிருக்கிறார்!

” உலகக்கோப்பையை வெல்வதுதான் எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். 28 ஆண்டுகளுக்கு முன்புதான் நாம் வென்றிருந்தோம். எல்லோருக்கும் உலகக்கோப்பை வென்ற அணியில் ஆடிய பெருமை தேவையாக இருந்தது. உலகக்கோப்பை உறுதியானதும் உணர்ச்சிப்பெருக்கில் வீரர்கள் அழ ஆரம்பித்துவிட்டனர். நானும் அழுதேன். ஆடை மாற்றும் அறைக்குச் சென்றபோது வீரர்கள் என்னை நோக்கி வந்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டனர். நானும் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டேன். ஆனால் அதை நீங்கள் பார்த்திருக்கமுடியாது. உங்கள் யாருடைய காமிராவிலும் அது பதிவாகி இருக்காது.” –இது வெற்றிக்குப் பிறகு சிஎன் என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு தோனி அளித்த பேட்டியில் சொன்னது!

(மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை அலசும் இத்தொடர் புதன் தோறும் வெளியாகும்)

ஏப்ரல்   17 , 2019  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com