’இவன் ஒரு மேட்ச் வின்னர்!

’இவன் ஒரு மேட்ச் வின்னர்!

ஆட்டத்தை முடிப்பவன் -7

கேள்வி:அடுத்த உலகக்கோப்பை விளையாடுவீர்களா?

பதில்: ஒரு சுவாரசியமான பதில் சொல்கிறேன். நீங்கள் தான் முடிவெடுக்கவேண்டும் நண்பர்களே. ஊடகத்தினர் நன்றாக ஆராயுங்கள். சிலநாட்கள் கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் நான் தரும் ஆலோசனை நீங்க எந்த முடிவுக்கு வந்தாலும் சரி, எழுதுகையில் அதற்கு நேரெதிராக எழுதுங்கள். அதுதான் சரியாக இருக்கும். நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் நண்பர்களே.

(2015- ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரை இறுதியில் தோற்ற பின்னர் தோனி செய்தியாளர்களிடம்)

சென்னையின் மீன் ஜோசியம், வேலூர் ரசிகரின் நாக்கு காணிக்கை இதெல்லாம் மீறி 2015-ல் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் நன்றாக உதைவாங்கி இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.

ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே டெஸ்ட் தொடரை இழந்தது, முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமைஆகிய ‘தகுதிகளோடு’தான் இந்தியா அந்த உலகக்கோப்பையை எதிர்கொண்டது. ஆனால் தொடர்ந்து எட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்குச் சென்றது யாருமே எதிர்பாராதது. அதுவும் எப்படிப்பட்ட வெற்றி எனில் எட்டுபோட்டிகளிலும் எதிர் அணி வீரர்கள் அனைவரையும்50 ஓவர்களுக்குள் முழுமையாக ஆட்டமிழக்கச் செய்து வென்றனர். மிக பலவீனமான பந்துவீச்சு என்று கருதப்பட்ட இந்திய அணியின் பந்துவீச்சு‘பயங்கரமான’ பந்துவீச்சாக பொலிவு பெற்றது.

இதற்கிடையில் அமைதியான சாதனை ஒன்று நடைபெற்றது. வேறொரு சமயமென்றால் கொண்டாடித் தீர்த்திருப்பர். ஆனால்உலகக்கோப்பையில் தோல்வி என்பது கடப்பாரையை விழுங்கியதுபோல் ஆகிவிட்டதால் ரசிகர்கள் அமைதி காத்தனர். காலிறுதியில் பங்களாதேஷை இந்தியா வென்றபோது அமைதியே உருவான ‘கேப்டன் கூல்’ தோனியின் தலைமையில் 100வது வெற்றியை இந்திய அணிபெற்றது. உலகில் 100 ஒரு நாள் போட்டிகளில் வெல்லும் அளவுக்குத் தாக்குப் பிடித்த காப்டன்கள் மூன்றே மூன்று பேர்தான். ரிக்கி பாண்டிங்(167), ஆலன்பார்டர்(107) ஆகிய பெயர்களுடன் தோனியின் பெயரும் இணைந்தது.

நம் காலத்தின் இணையற்ற அணித் தலைவர்களில் தோனியும் ஒருவர். ஆனால் அவரது பின்னணி மிகச்சுமாரானது. பெரு நகர நடுத்தர வர்க்கத்தின் வெற்றிக்கதை அல்ல அவருடையது. அவரது கதை  மிகவும் பின் தங்கிய மாநிலமான ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியின்வெற்றிக்கதை. மும்பை டெல்லி கல்கத்தா சென்னை போன்ற பெருநகரங்களின் வீரர்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னுக்கு வந்தவர். இந்த விவரங்கள் இத்தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்க வேண்டியவைதான். இருந்தாலும் இப்போது பார்த்துவிடலாம்!

1998-இல் ராஞ்சியில் இருந்த மத்திய நிலக்கரி நிறுவனத்துக்கு கிரிக்கெட் அணி ஒன்று உருவாக்கப்பட்டது. அப்போது பள்ளிகளுக்கிடையிலானஇறுதிப்போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரன் ஒருவன் கவனத்தைக் கவர்ந்தான். நிலக்கரி நிறுவனத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில்அந்த மாணவனும் ஒருவன் ஆனான். எல்லோருக்கும் 2000 ரூபாய் மாத உதவித் தொகை வழங்கப்பட்டது. அவனுக்கு மட்டும் 200 ரூபாய்கூடுதலாக 2200 ரூபாய்! அணித் தேர்வாளர் சொன்ன காரணம் ’இவன் ஒரு மேட்ச் வின்னர்!’

தோனியின் தந்தை 1964-ல் வேலைக்காக ராஞ்சிக்கு வந்து அங்கேயே குடியமர்ந்தவர். 1981ல் பிறந்த தோனி வளர்ந்தது ஒற்றை படுக்கை அறைகொண்ட வீட்டில்தான். சின்னவயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம்.  கால்பந்து கோல்கீப்பராக நன்றாக செயல்படுகிறானே என்றுஅவர் படித்த பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் கிரிக்கெட் அணியிலும் விக்கெட் கீப்பராக சேர்த்தார். ஏனெனில் அன்றைக்கு எப்போதும் விளையாடவரும் விக்கெட் கீப்பர் பையன் வரவில்லை. அப்போது தோனி ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அதன் பின்னர் கிரிக்கெட்டில் அவரதுமுழு கவனமும் திரும்பியது. 2000-ல் பீஹார் சார்பாக ரஞ்சி அணியில் ஆட வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ஜார்க்கண்ட் பிரிக்கப்படவில்லை.பீஹார்தான். அடுத்ததாக 2000--  2001-ல் முதல் முதலில் தோனிக்கு துலீப் கோப்பை கிழக்கு மண்டல அணியில் விளையாட வாய்ப்புகிடைத்தது.  தோனிக்கு அவர் அணியில் சேர்க்கப்பட்டதே தகவல் தெரிவிக்கப் படவில்லை. செய்தி தாமதமாகத் தெரிந்து ஒரு டாடா சுமோவாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ராஞ்சியிலிருந்து பறந்தார்கள். அகர்தலாவில் போட்டி. நேரத்துக்குப் போகமுடியவில்லை. ஆனால் அணியில் சேர்ந்துகொண்டார்.  அடுத்த ஆட்டம் புனேயில் மேற்கு மண்டலத்துக்கு எதிராக. முதல்முதலாக சச்சின் டெண்டுல்கரைப் பார்க்கிறார்.ஆனால் அணியில் 12-வது ம் நபராகத் தான் இடம்  கிடைத்தது. சச்சின் அந்த ஆட்டத்தில் 199 ரன்கள் அடித்தார். ஆட்ட இடைவேளையில்  சச்சினுக்கு தண்ணீர் கொடுக்க தோனிக்கு வாய்ப்புக் கிடைத்தது. சச்சினுடன் ஒரு ஆட்டமாவது ஆடிவிடவேண்டும்என்பதுதான் அப்போது தோனிக்கு ஒரே கனவு.

சச்சின் 2010ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளின் முதல் இரட்டை சதத்தை அடித்தபோது எதிர் முனையில் இருந்தவர் தோனி! சச்சின் டெஸ்ட்போட்டிகளில் தன்னுடைய ஐம்பதாவது சதத்தை அடித்தபோதும் எதிர்முனையில் இருந்தவர் தோனி! எனக்குக் கேப்டனாகஇருந்தவர்களிலேயே சிறந்த கேப்டன் தோனிதான் என்று பின்னாளில் சச்சின் சொன்னார். உலகக்கோப்பை ஒரு நாள் போட்டியை வென்றுசச்சினின் ஆசையை நிறைவேற்றி அவரிடம் கோப்பையைக் கொடுக்கும் வாய்ப்பும் தோனிக்குத் தான் கிடைத்தது. ஒரு கனவு நிறைவேறினால்இப்படி அல்லவா நிறைவேற வேண்டும்!

2003-ல் துலீப் கோப்பை இறுதிப்போட்டி வடக்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம் இடையே மொஹாலியில் நடந்தது. அதில் விளையாடியபந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் உடல் தகுதியைப் பரிசோதிக்க தேசிய கிரிக்கெட் தேர்வாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆட்டத்தைப்பார்த்தபோது கூடுதலாக அவர்களின் கவனத்தைக் கவர்ந்தது கிழக்கு மண்டல அணியின் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி பின்னி பெடல் எடுத்த வீரர்தான்!  நெஹ்ரா போட்ட முதல் பந்தை தூக்கி நான்கு ரன்களுக்கு அடித்தார். அடுத்த பந்து குத்தி எகிறி தலைக்கு மேல் வந்தது. அதை ஆறுரன்களுக்கு தலைக்கு மேல் சுழற்றி அடித்தார் அந்த இளம் வீரர்! அத்துடன் அந்த போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்த அந்த வீரர் 5 பேரைஆட்டமிழக்கவும் காரணம் ஆகியிருந்தார். நல்ல விக்கெட் கீப்பர் ஆட்டக்காரருக்காக தேடிக்கொண்டிருந்த இந்திய அணித் தேர்வாளர்களின்கண்கள் விரிந்தன. அடுத்த ஆண்டில் அந்த இளம் வீரர் தோனிக்கு இந்திய அணிக்கு அழைப்பு வந்துவிட்டது.  உண்மையில் சொல்லப்போனால் அந்தபோட்டியில் விக்கெட்கீப்பராக ஆடியிருக்க வேண்டியவர் சீனியர் ஆட்டக்காரரான விஜய் தாஹியா. அவருக்கு ஆட்டம் தொடங்கும் நாளில் நலக்குறைவு ஏற்படவே தோனி ஆடினார்!

இதற்கிடையில் கென்யாவில் முத்தரப்புப்போட்டிக்காக பயணம் செய்த ஜூனியர் அணியில் விளையாடி போட்டியின் சிறந்த ஆட்டக்காரர்விருதுபெற்றார். அவர் குவித்த ரன்கள் 362!

போதும். தோனி இந்திய அணிக்குள் வந்தாச்சு. தன் ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பட்டையைக் கிளப்பி சதம்அடித்தார்! பின்னந்தலையில் வழியும் நீண்ட முடியுடன் ஆடிய தோனி உடனே இந்திய ரசிகர்களின் டார்லிங் ஆனார். அவர் ஒரு நாளைக்கு பத்துலிட்டர் பால் குடிக்கிறார் என்று அப்போது வந்த செய்திகள் ஞாபகம் இருக்கலாம். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த அதே நாளில் ஒருபன்னாட்டு நிறுவன மார்க்கெட்டிங் நிர்வாகி ஒரு கிரிக்கெட் வீரரை தங்கள் பிராண்டுக்கு விளம்பரத் தூதராக ஒப்பந்தம்போடப் பயணம்மேற்கொண்டிருந்தார். வழியில் அவருக்கு தலைமையகத்தில் இருந்து அழைப்பு. ‘கையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தைக் கிழித்துப்போடுங்கள்.அந்த இடத்தில் தோனியின் பெயர் எழுதிய புதிய ஒப்பந்தம் வருகிறது!’

அது 2005-ல்.   பின்னர் தோனியின் ஓராண்டு மொத்த வருமானம் 150 கோடியைத் தாண்டியது. அவரிடம் 35 பைக்குகள் இருக்கின்றன. ஒரு ரேசிங் டீம்வைத்துள்ளார்.சென்னையின் எப்சி என்ற கால்பந்து அணியின் இணை உரிமையாளர். ராஞ்சி ரேய்ஸ் என்ற ஹாக்கி அணி உரிமையாளரும் கூட.ஜார்க்கண்டில் மிக அதிகமாக வருமான வரி கட்டும் தனி நபர் ’தல’ தான்!

கிரிக்கெட்டைக் கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குத் தெரியும். தோனி சிறந்த விக்கெட் கீப்பராகவும் அதே சமயம் சிறந்த ஆட்டக்காரராகவும் அதேசமயம் சிறந்த காப்டனாகவும் இருப்பதுதான் இந்திய கிரிக்கெட்டில் 2007 வரைக்கும் இல்லாமல் இருந்த ஒரு விஷயம். அது ஒன்றுதான் இந்தியஅணியை டி20 உலக்கோப்பை வெற்றி, 2011-ல் ஒரு நாள் போட்டிகளில் உலககோப்பை, டெஸ்ட் போட்டிகளில் முதல் இடம், நியூசிலாந்தில்தொடர் வெற்றி, இங்கிலாந்தில் டெஸ்ட் வெற்றி, ஆசியக்கோப்பை வெற்றி, சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி போன்றவற்றிற்கு அழைத்துச்சென்றதில் மிக முக்கிய பங்காற்றியது.

2007-ல் உலகக்கோப்பையில் முதல்சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. அப்போது அணியில் ஒரு வீரராக இடம்பெற்றிருந்த தோனியின்கொடும்பாவி ராஞ்சியில் அவர் வீட்டுக்கு முன்னால் எரிக்கப்பட்டது என்பதை முன்னரே பார்த்தோம். அதிலிருந்து தோனியும் சரி குடும்பத்தினரும் சரி ஊடகங்களுக்குப் பெரியகும்பிடு போட்டுவிட்டார்கள். தோனி பொதுவான அவசியமான ஊடக சந்திப்புகளில் பேசுவதுடன் சரி. அதிலும் கேள்விகளுக்கு எச்சரிக்கையாகபதில் சொல்வார். எதையும் பிடுங்கவே இயலாது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் இருக்கும் தோனியின் பதிலைப் படியுங்கள்.

(மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை அலசும் இத்தொடர் புதன் தோறும் வெளியாகும்)

ஜுன்   12 , 2019  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com