உண்மைக் காதல்

செவக்காட்டு சொல்கதைகள்-6

சொல்கதைகளில் புதிர்க் கதை என்று ஒரு ரகம் இருக்கிறது , இத்தகைய கதைகள் கதை கேட்கிறவர்களை சிந்திக்க வைக்கும் , இத்தகைய கதைகள் கேட்கச் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

அப்படிபட்ட கதை ஒன்றைச் சொல்கிறேன் என்ற பீடிகையுடன் கதை சொல்ல ஆரம்பித்தார் சுப்புத்தாத்தா.

புதிர் , சிந்தனை , என்பன போன்ற வார்த்தைகளைக் கேட்டதும் , கதை கேட்கக் கூடி இருந்த ரசிகர்களும் குசியாகிவிட்டார்கள்.

ம்…சீக்கிரமா கதையைச் சொல்லுங்க என்று அவசரப்படுத்தினார்கள் . இப்படிபட்ட நேரத்தில் மீசையைத் தடவுவது , தொடையை தட்டுவது , யோசிப்பது போல வானத்தைப் பார்த்து பாவனை செய்வது என்று ‘பிரியக்காலை க் காட்டி நேரத்தப் போக்குவார் தாத்தா.

கதை கேட்க கூடியிருந்தவர்கள் பொறுமை இழந்து “ கதையைச் சொல்லுங்க தாத்தா என்றார்கள் .

தாத்தா ஒரு டோஸ் பொடியை தன் பொடி மட்டையில் இருந்து மூக்கில் ‘கிர்’ என்று ஏற்றிக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார் இளவட்டப்பிள்ளைகள் ‘ ம்’ கொட்டி கதை கேட்கத் துவங்கினார்கள்.

ஒரு ஊர்ல ஒரு அழகான பெண் இருந்தாள். அழகென்றால் அழகு , அப்படி ஒரு அழகாய் இருந்தாள் , தேவலோக கன்னித் தேவதை மாதிரி இருந்தாள் . வயசுக்கு வந்து திருமணத்திற்குத் தயாராக இருந்தாள்.

அந்த ஊரில் நாலு வில்லாலகண்டர்கள் இருந்தார்கள் . எதையும் செய்யும் ஆற்றல் பெற்ற நாலு பேரும் அந்த அழகான பெண்ணைத் தான் கட்டி கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள்.

ஆனால் அந்தப் பெண்ணின் தகப்பனோ , என் மகள் யாரை விரும்புகிறாளோ அவனுக்குத் தான் என் மகளைக் கட்டிக் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டான்.

எனவே , நாலுபேரும் அந்தப் பெண்ணின் மனதை எதையாவது செய்து கவரவேண்டும் என்று நினைத்தார்கள் , ஆனால் அதற்குள் அந்தப்பெண் மறு நாளே , பாம்பு கடித்துச் செத்துட்டாள்.

அழகி செத்துட்டாள் என்றதும் நாலு பேரும் , முட்டி மோதி அழுதார்கள் , கடைசியில் நாலு பேரும் சேர்ந்து அப்பெண்ணின் தகப்பனிடம் செத்துப் போன இந்த அழகியின் பிணத்தை எரிக்கவும் கூடாது, , புதைக்கவும் கூடாது. பிணத்தை எங்களிடம் தாருங்கள் என்று கேட்டார்கள்.

அப்பெண்ணின் தகப்பனார், பாவம் நாலு பேரும் அவளை உயிருக்கு உயிராய் காதலித்தார்கள் அவர்களுக்கு பிள்ளையைத்தான் கட்டிக் கொடுக்க முடியவில்லை , பிணத்தையாவது கொடுப்போம் என்று நினைத்து தன் மகளின் பிணத்தை ஒரு சவப்பெட்டியில் வைத்து நாலு பேரிடமும் ஒப்படைத்து விட்டார் , நாலு பேரும் சவப்பெட்டியை ஆளுக்கு ஒரு மூலையில் பிடித்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமான ஒரு மண்டபத்தில் கொண்டு போய் வைத்தார்கள்.

முதலாவது காதலன் ; எனக்கு பழக்கமான ஒரு மாந்திரிகன் இருக்கிறான் , நான் அவனிடம் சொல்லி இந்த பெண்ணின் பிணத்திற்கு உயிர் கொடுத்து விடுகிறேன் “ என்றான்.

இரண்டாவது காதலன் ; எனக்குத் தெரிந்த மாந்திரிகன் இருக்கிறான் நான் அவனிடம் , இந்தப்பெண்ணிற்கு அறிவைக் கொடுத்து விடுகிறேன் என்றான்.

மூன்றாவது காதலன்; எனக்குத் தெரிந்த மாந்திரிகன் இருக்கிறான் , நான் அவனிடம் சொல்லி இந்தப் பெண்ணுக்கு , மானம், ரோசம், சூடு, சொரனை, போன்ற உணர்ச்சிகளை கொடுத்து விடுகிறேன் என்றான்.

நான்காவது காதலன் , எனக்கு எந்த மாந்திரிகனையும் தெரியாது, நான் அவளுக்கு எதையும் கொடுக்க முடியாது . என்னைப் பொருத்த வரை, அவள் இறந்துவிட்டால் , இனி நான் அவளுடன் வாழ முடியாது , எனவே நான் அவளை நினைத்து உருகிய படியே வாழப்போகிறேன் என்று சொல்லிவிட்டான்.

எனவே முதல் மூன்று காதலர்களும் அவர்கள் கூறிய படியே ஆளுக்கு ஒரு மாந்திரிகனை அழைத்து வந்தார்கள் , முதலாவது வந்த மாந்திரிகன் பிணமாக இருந்த அந்தப்பெண்ணிற்கு உயிரைக் கொடுத்தான் எனவே அவர் உயிர் பெற்று முன் போலவே அழகான பெண்ணாக , சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்தாள்.

இரண்டாவது மாந்திரிகன் , அந்தப்பெண்ணுக்கு ஒரே நாளில் உலகத்தில் உள்ள அறிவெல்லாம் வரும் படிசெய்தான்.

மூன்றாவது மாந்திரிகன் , அந்தப் பெண்ணுக்கு , அச்சம் , மடம், நாணம் , பயிர்ப்பு , போன்ற உணர்ச்சிகள் எல்லாம் வரும் படி செய்தான்.

இப்போதும் அந்த நாலு பேரும் அவளை நான் தான் கட்டிக்கொள்வேன் என்று சொன்னார்கள் , ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள் . அப்பெண்ணின் மேல் நாலு பேரும் உரிமை கொண்டாடினார்கள் .

அந்த வழியே சென்றவர் அந்த நாலு பேரையும் பார்த்து உங்களுக்குள் சண்டை போட வேண்டாம் , பக்கத்து ஊரில் ஒரு வழக்காழி இருக்கிறார். அவரிடம் சென்று உங்கள் வழக்கைச் சொல்லுங்கள் அவர் தீர்த்து வைப்பார் என்றார்.

வழிப்போக்கர்கள் சொன்னபடியே நாலு பேரும் அந்த அழகியை அழைத்துக்கொண்டு போய் வழக்காழியின் முன் நிறுத்தி தங்கள் வாதங்களைச் சொன்னார்கள்.

வழக்காழி இது என்னடா புது விதமான வழக்காக இருக்கிறதே ! இவர்களின் வழக்கை எப்படி தீர்த்து வைக்க என்று யோசனை செய்து பார்த்து விட்டு கடைசியில் அந்தப் பெண்ணிடமே “ இந்த நாலு பேரில் நீ யாரை என்ன காரணத்திற்காகக் கட்டி கொள்ள ஆசைப்படுகிறாய் ? என்று கேட்ப்போம் என முடிவெடுத்து , அந்தப் பெண்ணிடமே கேட்டார். என்று கதையை இந்த இடத்தில் நிறுத்திவிட்டு கதை கேட்டுகொண்டிருந்த இளவட்ட பிள்ளைகளைப் பார்த்து  ”அந்த அழகி யாரைக் கட்டிக்கொள்வாள் என்று உங்களில் யாராவது சொல்லுங்கள் என்றார் தாத்தா.!

கதைக் கேட்டு கொண்டிருந்தவர்களில் ஒருத்தன் , உயிர் கொடுத்தவனைத்தான் கட்டுவாள் என்றான். மற்றொருவன் அறிவு கொடுத்தவனைத்தான் கட்டுவாள் என்றான். இன்னொருத்தன் உணர்ச்சி தானே முக்கியம் , எனவே உணர்ச்சி கொடுத்தவனைத்தான் கட்டுவாள் என்றான் . ஆனால் யாரும் நாலாவது உள்ளவன் பேரைச் சொல்லவில்லை.

தாத்தா கதையின் புதிரை விடுவிக்காமல் , அவர் மீண்டும் ஒரு முறை தன் மடியில் ஒருந்த பொடி மட்டையை தட்டி எடுத்து , அதை மிக லாவகமாகத் தட்டி , அதிலிருந்து ஒரு டோஸ் பொடியை எடுத்து நாசியில் ஏற்றிக் கொண்டு கதையின் புதிரை விடுவித்தார்.

அந்த அழகான பெண் உயிர் கொடுத்தவர் எனக்கு தாயைப்போல – எனவே நான் அவரைக் கட்டிக்கொள்ள மாட்டேன் , அறிவு கொடுத்தவர் எனக்கு தந்தையை போல , எனவே நான் அவரையும் கட்டி கொள்ளமாட்டேன் , எனக்கு உணர்ச்சியை கொடுத்தவர் என் உடன் பிறந்த சகோதரனைப் போல , எனவே நான் அவரையும்கட்டுக் கொள்ளமாட்டேன் .

நான் செத்துவிட்டேன் என்று தெரிந்தும் , எனக்காக , என்னை நினைத்தே கடைசி வரை உயிர் வாழ்வேன் என்று சொல்லி மயானத்திற்குச் சென்று வனயம் (ஒரு வித தவம்) காத்தவரைத்தான் நான் கணவர் என்று ஏற்றுக்கொள்வேன் என்றாள்.

அவள் விருப்பபடியே நாலாவது உள்ளவனையே கல்யாணம் முடித்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்தாள்.

‘செத்தவன் பிழைப்பது செயற்கை தான் என்றாலும் எந்த மாந்திரிகத்தையும் நம்பாது உண்மையான அன்பால் ஒருத்தியை நினைத்து உருகுவது தான் உண்மை காதல் என்ற முத்தாய்ப் பான விளக்கத்துடன் கதையை முடித்தார் தாத்தா.

(இன்னும் சொல்வார்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com