சமூகம் மனிதர்களால் ஆனது, குலகுழுக்களின் சடங்குகள் , பழக்கங்கள் , சம்பிரதாயங்கள் என்கிற நூல்களால் பின்னபட்டது . சமூகத்தின் ஓட்டத்தோடு இணைந்தோடியும் முரண்பட்டு எதிர்நீச்சல் போட்டும் , தனது இருப்பைத் தக்கவைத்து கொள்வதில் தான் மனித குலம் மற்ற இனங்களில் இருந்து வேறுபடுகிறது. அத்தகைய வாழ்வியல் சாரங்களும் போராட்டங்களுமே இலக்கியமாக உருவாகின்றன . மனித வாழ்வின் உன்னதத்தை வெற்றி தோல்விகளை குண அடுக்குகளை , திறம்பட எடுத்து சொல்லும் போதே அந்த படைப்பு வெற்றி பெற்ற படைப்பாக மிளிர்கிறது.
வளவ துரையனின் மலைச்சாமி - அந்த வகையில் ஓர் ஜெயக்கொடி நாட்டிய புதினமென்பதில் மிகையில்லை.
' மலைச்சாமி ' - வளவதுரையனின் முதல் புதினம் கவிதை , கதை , விமர்சனம், கட்டுரை, என சின்ன மீன்களை பிடித்து கொண்டிருந்தவர் ' மலைச்சாமி ' மூலம் பெரிய மீனை பிடித்திருக்கிறார் .காரணம் , தமிழில் கவிதை நூலாகவே அதிகமாய் வெளியிடபடுகின்றன, பின் சிறுகதைகள் ,சமகாலத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் , ஜெயமோகன், சாருநிவேதா போன்றவர்களே வெற்றி பெற்ற நாவலாசிரியர்களாக அறியப் பாடுபடுகிறார்கள், புதினத்துக்கு நீண்ட காலம் தேவை பாத்திர படைப்பு , காலம் , களம் என மையங்கெடாமல் ஒரே மூச்சில் எழுதபட்டாலன்றி புதினங்கள் வெற்றி பெருதல் என்பது சிரமமான காரியம்தான்.பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் ( ஊரின் பெயர் இங்கு குறிப்பிடவில்லை) தெரு ஒன்றில் வசிக்கும் மூன்று நான்கு குடும்பங்களிலிருந்து சில பாத்திரங்கள் மூலமே நாவலை நகர்த்தி சென்று விடுகிறார் ஆசிரியர்.
- பகுத்தறிவு சிந்தனை கொண்ட பிராமணக்குடும்பத்து விவசாயி.
- பாசத்தால் கட்டுண்ட முருகேஷன் பெரியசாமி சுமதி.
- தம்பிசாமி - சுலோசனா தம்பதியர்
- கதை நாயகி மாலதி - இவர்கள் யாவரையும் இணைக்கும் நாயகன் கோபு என குருகிய பாத்திர படைப்புகள் .
சின்ன அய்யர் குருமணி - சார்ந்த உறவுகளை பிராமணர்களாக அடையாளபடுத்தும் ஆசிரியர் ஏனைய பாத்திரங்களின் சாதிய பின்னணிகளை ஏன் குறிப்பிடவில்லை எனத் தெரியவில்லை.இதை குறிப்பிடக் காரணம் , கிராமத்தில் சாதியம் தனது ஆழ்ந்த வேர்கள் கொண்டது . ஒவ்வொரு சமூகத்துக்கும் சடங்குகள் சம்பிரதாயங்கள் மாறுபாடு கொண்டது.
குருமணி படித்தவர் , பகுத்தறிவு சிந்தனையாளர் , தனது தந்தையார் இறந்த பின் செய்யவேண்டிய மதம் சார்ந்த காரியங்களை செய்யாமல் புறக்கணிக்கிற விஷயம் பெரிதுதான் ! ஆனால் அதைவிட பெரியது முருகேஷன் இறந்துவிட்டதாக கருதி , அண்ணி சுமதியை , தம்பி பெரியசாமிக்கு திருமணம் செய்து வைப்பது .
மலைச்சாமி - புதினத்தை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ளலாம்
1. மாலதி - மயக்கம் போட்டு விழுவது - அவளுக்கான சிகிச்சை -ஆற்றுப்படுத்தல் - கோபுவுடனான திருமணம்.
2 . முருகேஷன் , தம்பி பெரியசாமியுடன் பெண் பார்க்கச் செய்வது - விபத்து - திருமணம் - மீண்டும் விபத்து - முருகேசன் இறந்ததாய் எண்ணி , பெரியசாமி - சுமதி திருமணம் - முருகேசன் மும்பை ஓடிப்போவது - காம பிசாசு ஒருத்தியிடம் சிக்குவது - மீண்டும் தமிழகம் - கேரளா - ஆன்மீகம் - மலைச்சாமியாய் மாறுவது.
3. சுலோச்சனா - கோபுவின் எல்லை மீறிய உறவின் தொடக்கம் - மிக இயல்பாய் விலகல்.
வளவதுரையனின் மொழி வாசகனுக்கு மிக நெருக்கமானது . கதை சொல்லல் நேர்கோட்டிலானது.எனவே வசிக்க இலகுவாய் இருக்கிற இந்த நாவலில் காமம் மிகப்பெரிய மையம் கொள்கிறது. தன்னைவிட வயது குறைந்த கோபுவுடன் உறவு ஏற்படுத்தி தொடர்கிற சுலோச்சனாவுக்கோ தங்களிடம் வேலை பார்க்கிற முருகேஷனை தனது உடல் தேவைக்காய்ப் பயன்படுத்தி கொள்கிற முதலாளியின் பெண்ணுக்கும் காமமே பிரதானம் . கோபுவும் முருகேஷனும் கருவிகள்.
நாவலின் மிக முக்கியமான சம்பவம் , பெரியசாமியும் சுமதியும் மலைச்சாமியை சந்தித்து திரும்புவது .
" என்னா சுமதி ஒண்ணும் பேச மாட்டேங்கறே ? உம்முன்னு வரே. " என்றான் பெரியசாமி .
சுமதி தலை நிமிர்ந்தாள் . வண்டியின் மேல் பக்கத்தைப் பார்த்து கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள் .
" எனக்கு அவரை புடிக்கல. " (பக் : 144 )
- பெண் மனத்தின் நுட்பமான உளவியல் வெளிப்படும் நுண்ணுணர்வுகளால் நெய்த பகுதி இது , உளவியல் கடல் போன்றது , மனித மனங்களும் உளவியல் என்ற பெருங்கடலும் முருகேஷன் , தனக்கு தானே திதி கொடுத்துக் கொள்வதும் (பக் : 152) , கோபு மாலதி திருமணத்திற்கு , சமகாலப் படைப்பாளிகளான , வே.சபாநாயகம் , பழமலய், எச்.ஸார்சி , இதயவேந்தன் , அன்பாதவன், வளவதுரையன் உட்பட பலர் வந்து வாழ்த்துவதும் தமிழுக்குப் புதுசு .(பக் : 169)
மலறினும் மெல்லியது காமம் , சிலர் மட்டுமே அதிலிருந்து மீண்டு வெளிவருவார் , சுலோச்சனா காமப்புயலில் சிக்குண்டவன் தான் , எனினும் மிக அழகாக வெளிவருகிறான்.
" சுலோச்சனா என்ன நினைத்தாளோ தெரியவில்லை இருடா - என்று அவனை கட்டிபிடித்தாள் . கட்டை விரலில் நின்று கொண்டு அவன் இதழ்களை தன் வாயால் கவ்வினாள் , ஒரு நொடி தான் சரி போதும் போடா ' என்றாள் (பக் : 168)
மிக இயல்பாக தனது முடிவை அடையும் புதினத்தில் இடமும் சாலமும் - குறிப்பிடாது புரிந்து கொள்ளலில் சிரமத்தை தருகிறது.
மல்லாட்டை ஜில்லா வின் மண்வாசம் வீசும் விழுப்புரம் சார்ந்த மொழிகளும் , உரையாடல்களும் , ' நல்லார்க்கு ' எழுத்துப் பிழைகளுக்கு ஏதேனும் விருது உண்டெனில் மருதாவுக்கு தான் முதல் பரிசு , அதே நேரம் மிக அழகான முகப்புக்காக பாராட்டவும் செய்யலாம்.' வாழ்வின் விமர்சனம் தான் படைப்பு ' என்பார் சி.மணி (பின்னுரை : கரந்த நிழல்கள் ) ஆனால் மனித வாழ்வை அளக்க , விமர்சிக்க துலாக்கோல்கள் ஏதேனும் உண்டா..? வளவதுரையன் முயற்சித்திருக்கிறார், ஜெயித்திருக்கிறார்.ஆனால் அதையெல்லாம் மீறி வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது தன் சுயமுகங்காட்டாமல் முருகேஷன் மாதிரி ... இல்லையில்லை மலைச்சாமி மாதிரி...
திங்கள் தோறும் இரவு - அன்பாதவனின் இதமாய் பெய்யும் மழை அந்திமழையில் வெளிவரும்....
அன்பாதவனின் ' இதமாய் பெய்யும் மழை ' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.