உள்ளதும் போச்சி…

செவக்காட்டு சொல்கதைகள் 14

ஒரு ஊர்ல ஒரு வேடன் இருந்தான், அவனுக்கு கல்யாணம் ஆயிட்டு. மூணு பிள்ளைகள் பிறந்தன. , மூன்றும் பொட்டப்பிள்ளைகள் . அவன் மனைவி பேராசை பிடித்தவள். வேடன் ரொம்ப நல்லவன். உள்ளது போதும் என்று வாழ்பவன்.

எப்ப பார்த்தாலும் “ஐயோ , மூணு பொட்டப்பிள்ளைகளைப் பெத்து வச்சிருக்கேனே , இதுகளை எப்படி வளர்த்து ஆளாக்கி கெட்டிக் கொடுக்க.? என்று தன் புருசனிடம் புலம்பி கொண்டே இருப்பாள் . புருஷக்காரன்’மரம்’ வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் “ என்று சொல்லிவிட்டு காட்டைப்பார்த்து வேட்டைக்குச் சென்று விடுவான்.

ஒரு நாள் காட்டில் வித்தியாசமான ஐந்துபறவைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பறந்து வந்தன. “ அவைகளின் பெயர் அண்ரண்ட பட்சிகள் என்றும் அவைகள் மந்திரத்தன்மையுடையவை என்றும் அவைகளைக் கொள்வது மகாபாவம்” என்றும் வேட்டைக்காரனின் குருநாதர் சொல்லி இருந்தார். குருநாதர் சொன்னது வேட்டைக்காரனுக்கு நினைவுக்கு வந்தது .

எனவே அவைகளைக் கொல்லாமல் விட்டுவிட்டான் வேட்டைக்காரன் . அன்று இரவு சாப்பிடும் போது வேட்டைக்காரன் தன் மனைவியிடம் மந்திரிக பட்சிகளைப் பற்றிக்கூறினான்.

பேராசை பிடித்த வேட்டைக்காரனின் மனைவி, நாளைக்கு எப்படியாவது அந்த மந்திர பட்சிகளைப்பிடித்து வாருங்கள் என்று கண்டிப்புடன் கூறினாள் .

மறுநாள் வேட்டைக்காரன் வழக்கம் போல் வேட்டைக்குச் சென்றான் . அந்து மந்திரப்பறவைகளும் வேட்டைக்காரனை நோக்கிபறந்து வந்தன். வேட்டைக்காரன் அப்பறவைகளை நோக்கி குறி வைத்தான்.

மந்திர பறவைகளில் முதலாவதாக பறந்து வந்த பறவை “ஏ.. வேட்டைக்காரனே, நாங்கள் ஐந்து பேரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் , எங்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் நாங்கள் நால்வரும் அந்தக் கணமே , எங்கள் உயிரையும் மாய்த்துக்கொள்வோம் , எனவே எங்களில் ஒருவரையும் நீ கொல்லக்கூடாது , நீ எங்களைக் கொல்லாமல் இருக்க என்ன பரிசு வேண்டுமோ கேள் தருகிறோம்” என்றது

வேட்டைக்காரன் முதலாவது மந்திரப்பறவையைப்பார்த்து “எனக்கு மீன் பிடிக்க மந்திர வலை ஒன்று வேண்டும் . நான் ஆறு குளம் , குட்டை முதலிய நீர் நிலைகளில் எங்கு சென்று அந்த வலையை விரித்தாலும் என் சுமைக்கு மீன் விழ வேண்டும் . நான் அப்படிக்கிடைக்கும் மீன்களை விற்று என் காலத்தை கழித்துக்கொள்கிறேன். என்றான்.

மந்திரப்பறவையும் “சரி “ என்று சம்மதித்து மந்திரவலை இருக்கும் இடத்தைக் காட்டியது வேடனும் , அந்த இடத்திற்குச் சென்று மந்திரவலையை எடுத்து வந்தான்.

மறுநாள் வேட்டைக்குச் செல்லும் வேளையை விட்டு விட்டு மீன் பிடிக்க சென்றான், மந்திர பறவை சொன்னதைப் போலவே அவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு சுமை மீன் கிடைத்தது, அவற்றை எல்லாம் விற்று காசாக்கித் தன் மனைவியிடம் கொண்டு போய் கொடுத்தான்.

பேராசைக்காரியான வேட்டைக்காரனின் மனைவிக்கு அடங்கவில்லை” நாளையும் வேட்டைக்கு சென்று அந்தமந்திரப்பறவைகளிடம் வேறு ஏதேனும் ஒரு பொருளை அன்பளிப்பாக வாங்கி வாருங்கள் “ என்றாள்.

மனைவியின் சொல்லைத்தட்ட முடியாமல் வேட்டைக்காரன் மறுநாளும் வேட்டைக்குச் சென்று இரண்டாவது பறவையை குறி வைத்தான், இரண்டாவது பறவை , வேடனை பார்த்து முதலாவது பறவை சொன்னதைப் போலவே சொல்லிவிட்டு , அப்பறவை தன் பங்கிற்கு மந்திர கோடாரி  இருக்கும் இடத்தைக்காட்டி அதை எடுத்துக் கொண்டு போ. ஒரே வெட்டில் உனக்கு ஒரு வண்டி விறகு கிடைத்துவிடும் . நீ அதை விற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொள், என்றது.

வேடனும் , மந்திரப்பறவை காட்டிய இடத்திற்குச் சென்று, மந்திரக்கோடாரியை எடுத்து வந்தான். அந்த மந்திரக்கோடாரி மூலமாக வண்டி வண்டியாக விறகுகளை வெட்டி , அதை விற்று கிடைக்கும் பணத்தை எல்லாம் தன் மனைவி யிடம் கொண்டு போய்க் கொடுத்தான்.

வேடனின் மனைவிக்கு அப்போதும் ஆசை அடங்கவில்லை’அந்த மந்திரபறவைகளைப் பார்த்து இன்னும் எதையாவது கேள் என்று சொல்லி வேடனை விரட்டினாள்.

மனைவியின் தொந்தரவு தாங்காமல் வேடன் மறுநாளும் காட்டிற்கு சென்று மூன்றாவது மந்திரபறவையைக் குறி வைத்தான். மூன்றாம் பறவை அதிசய உலக்கை இருக்கும் இடத்தை காட்டி , இதை எடுத்துக்கொள் , இதை கொண்டு எந்த உரலில் குத்தினாலும் அதில் நீ நினைக்கும் தானியம் வரும் என்று கூறியது  .

மந்திர உலக்கையிலும் திருப்தி அடையாத வேட்டைக்காரனின் மனைவி வேடனைப்பார்த்து நாளையும் போய் வேறு எதையாவது வாங்கி வா என்று கூறினாள் .

வேடனும் வேறு வழியின்றி , மறுநாளும் அந்தப் பறவைகளை வேட்டையாட சென்றான். இப்போது நான்காவது மந்திரப்பறவை, வேடனுக்கு மந்திரக் காராம் பசு இருக்கும் இடத்தை காட்டியது.

வேடனும்  காரம் பசுவை வீட்டிற்கு பத்திக்கொண்டு வந்து கட்டினான் , காராம் பசு குடம் குடமாகப் பால் கறந்து கொடுத்தது. ஆனாலும் வேடனின் மனைவிக்கு ஆசை அடங்கவில்லை.

அந்த மந்திரப் பறவைகள் என்ன கேட்டாலும் தரும் போலத்தேரிகிறது , எனவே அவைகளைப் பயங்காட்டி நாம் இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரியாகி விட வேண்டும் என்று நினைத்தாள்.

மறுநாள் , தன் கணாவனைப் பார்த்து அந்த மந்திரப் பறவைகளிடம் சென்று எனக்கு அரண்மனை மாதிரி வீடும் . ஒரு குடம் நிறைய பொன்னும், வைரமும், பணமும் வேண்டும். என்று கேளும் இல்லையென்றால் உங்களைக்கொன்று விடுவேன் என்று மிரட்டும். என்று துர்யோசனை கூறினாள்.

வேடன் மறு நாளும் வழக்கம் போல் வேட்டைக்கு சென்றான். அன்றும் அந்த ஐந்து அண்டரண்டப்பட்சிகளும் , ஒன்றன் பின் ஒன்றாக பறந்து வந்தன. வேட்டைக்காரன் அவைகளை நோக்கித்தன் வில்லால் குறி வைத்தான் , ஐந்தாவது பறவை வேடனே இன்னும் என்ன வேண்டும் , கேள் என்றது. வேடன் ,எனக்கு அரன்மனை போன்ற வீடும் ஒரு குடம் நிறைய பொன்னும் மணியும் பணமும் வேண்டும் இல்லை என்றால் உங்களைக்கொல்வேன் என்றான்.

மந்திரப்பறவைகளுக்கு , வேடனைப்பற்றியும் , வேடனின் மனைவியை பற்றியும் நன்றாகத்தெரியும் . எனவே , வேடனின் மனைவிக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று நினைத்து வேடனே இது வரை நாங்கள் கொடுத்த மந்திர வலை, கோடரி , உலக்கை , காராம் பசு , முதலியவற்றை நீர் எந்த இடத்தில் எடுத்தீரோ அந்த இடத்தில் கொண்டு வைத்து விட்டு நாளை இதே நேரத்திற்கு இந்த இடத்திற்கு வந்து விடும், நீர் கேட்டதை தருகிறேன். இப்போதைக்கு எங்களை வேட்டையாடாமல் விட்டு விடும், என்றது.

வேடனும் சரி ,என்று அன்று இரவுக்குள் மந்திர வலை , கோடாரி , உலக்கை , காராம் பசு , முதலியவற்றை எடுத்த இடத்திலேயே கொண்டு வைத்து விட்டான், மறுநாள் எப்படா விடியும் என்று காத்திருந்து , பறவைகளைத் தேடிச் சென்றான், ஆனால் அன்று அந்தப்பறவைகள் அந்தத் திசைக்கே வரவில்லை. ஏமாந்து போன வேடன் மந்திரவலை முதலியவற்றை வைத்த இடத்திற்கு சென்றான் அங்கும் எதுவும் காணவில்லை.

“கடவுள் கொடுத்தற்கு மேல் ஆசைப்பட்டு கடைசியில் எதுவும் கிடைக்காமல் போய் விட்டதே ! என்று மனம் வருந்தினாலும் வழக்கம் போல் முன் போலவே வேட்டைக்குச்  சென்றான். வேடனின்  மனைவிதான்கிடைத்த செல்வம் எல்லாம்போச்சே !போச்சே என்று நினைத்துப்  பைத்தியமாகிவிட்டாள் .

(இன்னும் சொல்வார்)

(கி.ராஜநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கதைசொல்லிகளிடம் இருந்து நூற்று கணக்கான நாட்டுப்புறக் கதைகளை சேகரித்தவர் மூத்த எழுத்தாளர் கழனியூரன். அக்கதைகள் கி.ராவின் பெயரிலும் பின்னர் இவர் பெயரிலும் பல இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அவர் களப்பணி செய்து சேகரித்த கதைகளில் இன்னும் எந்த இதழிலும் பிரசுரமாகாத சில கதைகளை’அந்திமழை’ மின் இதழ் மூலம் வாசகர் பார்வைக்கு அவர் முன்வைக்கிறார். சனிக்கிழமை தோறும் இவை வெளியாகும்)

செப்டம்பர்   27 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com