ஒரு நாள் ஒரு கனவு

இன்னொருவனின் கனவு - 32

"சாகசம் பயங்கரமானது என்று எண்ணினால்
சாதாரணமாக வாழ்ந்து பார்.அது மிகப் பயங்கரமானது."

-மார்க் ட்வைன்

பயணம் என்பது பலருக்கும் அவ்வப்போது நிகழும் அனுபவம் அல்லது ஏற்பாடு.

பயணம் சிலருக்கு பணி.சிலருக்கு கட்டாயம்.சிலருக்கு வாழ்க்கை.

அப்படி நாம் அறிந்த கட்டாய ஜாலிலோ ஜிம்கானோ பயணி ஒருவரின் பெயர் பாண்ட்.

ஜேம்ஸ் பாண்ட்.007.

'நான் போகாத ஊருமில்ல,பாக்காதபொண்ணுமில்ல,வேட்டு வைக்காத நாடுமில்ல' என்பதையே தத்துவமாகக் கொண்டு என்றும் நம் மனதில் நீங்காமல் வாழும் நம் அன்பு பிரிட்டிஷ் உளவாளி!

இங்கிலாந்து பத்திரிகையாளர்,எழுத்தாளர்,நேவல் இன்டலிஜன்ஸ் ஆபிசர் இயன் பிளெமிங் (ian fleming) இன் அபார கற்பனை கதாபாத்திரம் தான் ஜேம்ஸ்பாண்ட்(1952).

ஆறு அட்டகாசமான நடிகர்கள்,சீன் கானரி (Sean connery),ஜார்ஜ் லேசன்பி (George Lazenby)ரோஜர் மூர் (Roger Moore),திமோத்தி டால்ட்டன் (Timothy Dalton),பியர்ஸ் பிராஸ்னன் (Pierce Brosnan),டேனியல் கிரெய்க் (Daniel Craig) ஜேம்ஸ் பாண்ட் ஆக கலக்கும் அரும் பாக்கியம் பெற்றவர்கள்.1962-ல் ஆரம்பித்த ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் இது வரை 22 படங்கள் வெளிவந்திருக்கின்றன.

இருபத்து மூன்றாவது ஜேம்ஸ் பாண்ட் படம் ஸ்கை ஃபால்(SKY FALL).சாம் மென்டிஸ் இயக்க,டேனியல் கிரெய்க் (Daniel Craig) நடிக்கும் இந்த படத்திற்காக பாண்ட் இந்தியா வந்து சென்றிருக்கிறார் என்பது இனிப்பான செய்தி.பெனிலோப் க்ரூஸ் இன் கணவர் சேவியர் பார்டெம் தான் வில்லன்.இன்னொரு இனிப்பான விஷயம், ஒன் அன்ட் ஒன்லி ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இது ஐம்பதாவது வருடம்!



ஜேம்ஸ்பாண்ட்களுக்கு கொஞ்சம் கூடக் குறையாத அட்டகாச சாகசங்கள் நிறைந்த இன்னொரு கட்டாயப் பயணி ஒருவர் இருக்கிறார்.பாண்ட் கற்பனை என்றால் இவர் அக்மார்க் அசல்.நம்மில் ஒருவர்!

அவர் பெயர் மிஸ்டர் பப்பராத்சி (paparatsi).

அவரைப் பற்றி அறிந்து கொள்ள, உலக சினிமாவின் ,எட்ட இயலா சாகச படைப்பாளி ஒருவரை நாம் அறிய வேண்டும்.அவர் நிகழ்த்திய சாகசங்கள் ஏராளம்.எனினும் முக்கியமானது அவர் சினிமாவின் இலக்கணங்களை உடைத்து எறிந்தது தான்.

பெட்ரிகோ பெலினி (Federico Fellini,January 20, 1920 – October 31, 1993).

என்னுடைய சினிமா என்பது நான் தான் என்று அறிவித்த கர்வக் கவிதை மனது கொண்டவன்.

நியோ ரியலிசம் வகை யதார்த்த சினிமாவுக்கும்,நியூ வேவ் சினிமா என்று அழைக்கப் படும் பிரெஞ்சு புதிய அலை சினிமாவுக்கும் பாலமாக இருந்த கலைஞன்.சினிமாவின் சூடாறிப் போன வழக்கங்களையும்,இலக்கண,வியாபார நான்சென்ஸ்களையும் தனது சினிமாவில் துடைத்து எறிந்தவன். இத்தாலியின், சினிமா இதிகாசம்.

இத்தாலியில், 1920-ல்,அட்ரியாடில், ரிமினி (rimini) என்னும் கடலோர ரிசார்ட் நகரில் பிறந்தவர் பெலினி.கத்தோலிக்க குடும்பம்.கத்தோலிக்க பள்ளி,என்று அவரின் சிறுவயது, சர்ச் மற்றும் அதன் சமய,சமூக நிலைப் பாடுகளின் பாதிப்பு நிறைந்ததாக இருந்தது.அவரது பிற்கால சினிமாக்களில் இதன் சாதக பாதகங்கள் சர்ச்சுக்கும்,அதன் மத அடிப்படை வாதிகளுக்கும் பெரும் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியவை.அவரது திரைப் படங்களில் நாம் காண நேரிடும் ஆன்மீக பரிமாணத்திற்கும் இதுவே காரணமாக இருந்தது.அவரைப் பாதித்த இன்னொரு விஷயம்,கார்ட்டூன்.அவரது சின்னஞ்சிறு பால் மனது முழுதும் அவர் படித்த,நேசித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களால் நிரம்பி வழிந்தது.ரிமினிக்கு அடிக்கடி வந்து நிகழ்ச்சிகள் நடத்திச் சென்ற பல்சுவை நடிகர்களின் (vaudeville performers) வெரைட்டி ஷோ,ஆடல்,பாடல்,சேஷ்டைகள் அவரை மிகவும் ஈர்த்தன.கிட்டத் தட்ட சர்க்கஸ் மாதிரியான விஷயம் அது.இந்த அவரின் ஈர்ப்புகளை பெலினி வெளிப்படுத்தத் தொடங்கிய முதல் கலை வடிவம் ஓவியம்.ஓவியங்களால் ஆனது என்றும் சொல்லலாம் பெலினியின் சிறு பிராயத்தை.ஓவியம் பிற்பாடு பெலினியை தேர்ந்த கார்டூனிஸ்ட் ஆக மாற்றியது.

கனவுகள் நிறைந்த பால்யம் கொண்ட, பெலினியின் பதினாறு வயது யதார்த்தம் ரோம் நகரில் ஆரம்பித்தது.பெற்றோர்களின் பிரியத்திற்கு என ரோம் பல்கலைக் கழகத்தில் சட்ட மாணவனாக சேர்ந்தார் பெலினி.ஆனால்.அவரின் ஆர்வம் மற்றும் அலைதல் அவருடைய பால்ய கால ஆதர்சங்களுக்கு உள்ளேயே தான் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.



கார்ட்டூன்களும்,கேக் ரைட்டிங்(gag writing) எனப் படும் நகைச்சுவைத் துணுக்கு கட்டுரைகளும் பெலினியின் இளமைக் கால சம்பாதிப்புத் தளங்கள் ஆக இருந்தன.தவிர,அவர் ஒரு கிரைம் நிருபராகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அவருடைய வாழ்க்கையை மாற்றிய விஷயங்கள் என இரண்டு சந்திப்புகளைக் கூறலாம்.

முதல் சந்திப்பு நிகழ்ந்தது மார்க் ஆரிலோ(Marc’Aurelio) எனப் படும் இத்தாலியின் அக் கால புகழ் பெற்ற மாதமிருமுறை நகைச்சுவை பத்திரிகையில்.அதில் தான் பெலினியின் முதல் நகைச்சுவைக் கட்டுரை பிரசுரம் ஆனது.நான்கு மாதங்களுக்கு பிறகு,அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார் பெலினி."நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதைக் கேட்பீர்களா" என்பது தான் அவர் முதன் முதலில் எழுத ஆரம்பித்த தொடர் பத்தி(column).1939-1942 ஆகிய நான்கு வருடங்கள் இந்தப் பத்திரிகையில் தான் கழிந்தன.அவரின் ஆக சந்தோஷ கால கட்டம் அது.அவர் எடுத்த சினிமா பேட்டிகள் அவரை சினிமாவின் சில முக்கிய ஆளுமைகளை நேரடியாக அறிய உதவின.அவருடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய நியோரியலிச பிதாமகனும்,மார்க்சிய கோட்பாளரும்,திரைக் கதாசிரியரும் ஆன சிசரே ஜாவிட்டினி (Cesare Zavattini) யின் அறிமுகம் பெலினியின் சினிமா உலக ஆரம்பத்தின் அஸ்திவாரமாக அமைந்தது.எதிர்காலத்தில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றப் போகிற தோழன் பெர்னடினோ ஜாப்போனி(Bernardino Zapponi) யையும் அவர் அங்குதான் கண்டு பிடித்தார்.

1943-ல் பெலினியின் வாழ்க்கையை மாற்றிய இன்னொரு சந்திப்பு நிகழ்ந்தது.தன் வாழ்நாள் முழுதும் அவரால் மிகவும் நேசிக்கப் பட்ட காதல் மனைவியான ஜியுலியட்டா மாசினா(Giulietta Masina) வை பெலினி சந்தித்து,பழகி,திருமணமும் செய்து கொண்டார்.சிறந்த நடிகை ஆன மாசினா பெலினியின் சில சிறந்த சினிமாக்களில் கதாநாயகியாக பங்கு பெற்றிருக்கிறார்.தன் வாழ்வில் வந்த மிகச் சிறந்த ஆளுமை,தன் படைப்புகளில் அவரின் பாதிப்பு,சிந்தனை கட்டாயம் இருந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் பெலினி தன் மனைவி மாசினாவைப் பற்றி.

பெலினியின் முதல் சினிமா பிரேக் 1945-ல்,முதல் நியோ ரியலிச சினிமா ஆகக் கருதப் படும் ஓபன் சிட்டி,தி ரோம் (Roberto Rossellini) தான்.அதில் ராபர்ட்டோ ரோசல்லினி யின் இணை இயக்குனராகவும்,இணை திரைக்கதாசிரியர் ஆகவும் பணி புரிந்தார்.அதில் அவருக்கு ஒரு ஆஸ்கர் நாமிநேஷனும் வந்தது.பரவலாக அவர் பெயர் சினிமா உலகில் அறியப் பட்டதும் அப்போது தான்.

நியோரியலிசம்(neo-realism) என்பது சில புதிய கோட்பாடுகளின்,விதிமுறைகளின் மூலம் சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு செல்ல முயற்சித்தது.இரண்டாம் உலகப் போரின் முடிவில் முசோலினி வீழ்ந்த நிலைமையில்,இத்தாலியின் ஸ்டுடியோக்கள் போரினால் சேதமடைந்த நிலையில்,காலத்தின் கட்டாயமாக தெருக்களில் உருவான சினிமா கோட்பாடு எனவும் நியோ ரியலிசத்தைக் குறிப்பிடலாம்.தேர்ந்த நடிப்பு,ஒப்பனை,அலங்காரம் எல்லாம் கைவிடப் பட்டு யதார்த்தம் என்பதை அமெச்சூர் நடிகர்களிடம் இருந்தும்,கதை என்பதை அன்றாட நிகழ்வுகளில் இருந்தும்,படப் பிடிப்பு என்பதை வீதிகளிலும் மேற்கொண்ட சினிமா கோட்பாடு நியோரியலிசம்.



உலகம் முழுதும் இருந்த அதன் தாக்கத்தின் ஆரம்ப இந்திய உதாரணங்கள் சத்யஜித்ரே,பிமல் ராய்,பாரதி ராஜா.பெலினியின் முதல் படம் வெரைட்டி லைட்ஸ் -Variety Lights (Luci del varietதூ-1950).ஊர் ஊராக சென்று வித்தை காட்டும் சர்க்கஸ் காரர்களின் கதை.அவரது பால்ய தாக்கம்.இதில் அவர் கோ டைரக்டர் ஆக பணிபுரிந்தார்.பெலினி தனியாக இயக்கிய படம் தி ஒயிட் சேக் (The White Sheik-1951).பெலினியின் பேர் சொன்ன படம் லா ஸ்ட்ராடா (La strada-1952).பெலினியை இத்தாலியும்,உலக சினிமாவும் உச்சத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடிய படம் லா டால்ஸ் வீட்டா (La Dolce Vita).பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.கத்தோலிக்க சர்ச்சுகளை ஹிட் பண்ணிய சினிமாவும் கூட. பொறுப்பற்ற, நீதியற்ற, அசிங்கமான,ஆபாச சினிமா என்று பழமை வாதிகளால் புலம்பித் தீர்க்கப் பட்ட,கருப்பில் டிக்கெட் விற்றுத் தீர்ந்த பெலினியின் மாஸ்டர் பீஸ்.அவரது நியோ ரியலிச பாணி கடைசி சினிமாவும் கூட.

நாம் பார்க்க விருக்கும் பப்பராசி சினிமாவும் லா டால்ஸ் வீட்டா தான்.

La Dolce Vita(The Sweet Life)-1960.
உலக சினிமா வரலாற்றில் வெளியீட்டின் போது அதிக பட்ச பரபரப்பை ஏற்படுத்திய திரைப் படம் பெலினியின் லா டால்ஸ் வீட்டா தான்.இனிய வாழ்க்கை என்று அர்த்தம் தரும் அந்தப் படத்தைக் கசந்த மனதுடன்,பதை பதைப்புடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முதல் பார்வையாளர் வாட்டிகன்!

அந்த சினிமா முடிந்தவுடன் கசப்பை வெறுப்பாக வெளிப்படுத்திய ஒரே பார்வையாளரும் வாட்டிகன் தான்.

ச்சீ.

அந்தப் பழமைவாதிகளின் ஒற்றை வரி விமர்சனம் மேற்சொன்னது.
ஆனால்,இத்தாலிய,மக்கள் வேறு மாதிரியாக பேசிக் கொண்டார்கள்.உண்மை தான் இந்தப் படத்தின் பல காட்சிகளில் அதிர்ந்து போனது உண்மை,தான்.ஆனால்,லா டால்ஸ் வீட்டா மனதை வசீகரிப்பதாகவும்,புதிய ரசனை ஒன்றை உருவாக்குவதாகவும் இருந்ததும் உண்மை தான்.

பாருங்கள்!வசனங்கள்,காட்சிகள்,கதாபத்திரங்கள் எல்லாமே எவ்வளவு தைரியமாக தங்களை வெளிப் படுத்திக் கொண்டிருக்கின்றன! தடைகள்,பழைய நச நச பாணிகள் எல்லாம் உடைத்தெறியப் பட்டாயிற்று. அதுவரை வாட்டிகனால் போற்றிப் பாதுகாக்கப் பட்டு வந்த அவர்களால் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒழுக்க மதிப்பீடுகள் யாவும் இந்த ஒரு சினிமாவில் தூக்கிக் கடாசப் பட்டிருக்கின்றன.அதன் இயக்குனராலும்,அதை வரவேற்று கூட்டம் கூட்டமாக அச்சினிமாவை காணச் செல்லும் அதன் சொந்த சமுதாயத்தின் மக்களாலும்.பெலினியின் முன் பின் அத்தனை சினிமாக்களிலும் மாபெரும் அலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய,மகத்தான வெற்றி பெற்ற சினிமா லா டால்ஸ் வீட்டா தான்.வாழ்க்கை மிக இனிமையானது!

ஒரு நாள் ஒரு கனவு, என்பது மாதிரி,ஒரு பத்திரிகையாளனின் வாழ்க்கையில் நிகழும் ஏழு நாள் கனவு வாழ்க்கை தான் லா டால்ஸ் வீட்டா.இதன் காண் அனுபவமே ஒரு சிக்கலான கனவு தான் இன்றைக்கும்.தனித் தனியாக தெளிவாகவும்,சேர்ந்து யோசிக்க வைக்கும் சிக்கல் மன அனுபவமாகவும் இரு உணர்வுகளை ஏற்படுத்தும் சினிமா.ஒவ்வொரு உச்ச கட்ட சந்தோசத்துக்கு பின் நிகழும் அதீத விரக்தி அல்லது வெறுமை,காதலுடன் கூடவே வரும் மரணத்தின் வாசனை,அழகுடன் கூடவே வரும் அருவெறுப்பு உணர்வு,இப்படி எதிரும் புதிருமான உணர்வுச் சந்திப்புகளின் மீள் சுழல் அனுபவம் லா டால்ஸ் வீட்டா.மேலோட்டமான ஒரு பார்வையில் துள்ளலும், கொண்டாட்டமும், காமமும்,காதலும்,ஒரு விதமான வாயரிசமும் கலந்த ஏமாற்றும் கண் கட்டித் திரைக்கதை பெலினியின் "இனிய வாழ்க்கை" உடையது.இந்த மாதிரி ஆள் அசத்தும்,அதிர்ச்சி ஊட்டும் அம்சங்கள் உடைய,யதார்த்தமும் கனவும் சேர்ந்து பிரதிபலிக்கப்பட்ட "லா டால்ஸ் வீட்டா" பாணிப் படங்கள் பிற்காலத்தில் எடுக்கப் பட்டபோது அவை பெலினிஸ்க்' (Felliniesque')என்று அழைக்கப்பட்டன.

லா டால்ஸ் வீட்டா வின் முதல் காட்சியே ஏரியல் ஷாட் தான்.அறுபதில் அதைப் பார்த்தவர்கள் அதற்கு முன்னும்,இப்போது நாமும் (2012) இப்படி ஒரு ஓபனிங் ஷாட் டை மறுபடியும் பார்க்க இயலவில்லை.கற்பனை செய்ய முடியாத ஷாட்.ஒரு ஹெலிகாப்டர்.அதன் சக்கரங்களுக்கு நடுவே,கேளுங்கள் தரப்படும் என்று இரு கரம் விரித்து இவ்வுலகை அன்பால் அழைத்த இயேசு பிரானின் பிரமாண்ட சிலை நம்மை ஆசீர்வதிப்பது போல் கட்டப் பட்டிருக்கிறது.அது புராதன ரோமின் பகுதியில் இருந்து மாடர்ன் ரோம் நகருக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.அதற்கு பின்னால் இன்னொரு ஹெலிகாப்டர்.ஒரு ஸ்டைல் ஆன பத்திரிகையாளனும்,அவன் அருகில் கேமரா வுடன் அவனது புகைப் படத் தோழனும்.

உதடுகளில் எப்போதும் சிகரெட் வழியும் பரபரப்பான அதிபுத்திசாலிப் பத்திரிகையாளன் மர்செல்லோ மாஸ்ட்ரியான்னி(Marcello Mastroianni). அவனது,ஆல்வேஸ் குடைச்சல் கொடுக்கும் அதி பரபரப்பு புகைப் படத் தோழன்,பப்பராசோ-Paparazzo(Walter Santesso).அந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் ரோம் நகரின் நவ நாகரீக கட்டிடங்களின் மேல் தாழப் பறக்கின்றன.இயேசு அறியாத புதிய ரோம்.நீச்சல் உடையில்,மொட்டை மாடி ஸ்விம்மிங் பூலில் அழகு இத்தாலியப் பெண்கள் இயேசு வைச் சுமந்து செல்லும்,அந்த ஹெலிகாப்டரைப் பார்த்ததும் உற்சாகமாக ஹாய் என்று அவரின் விரித்த கரங்களுக்கு கை அசைக்கிறார்கள்.அவர் எப்போதும் போல புன்னகைத்தபடி அவர்களைக் கடக்கிறார்.ஆனால்,பின்னால் வரும் சேட்டைத் தோழர்கள் இந்த இத்தாலிய அழகிகளைப் பார்த்ததும் உற்சாகம் ஆகி,அவர்களிடம் ஹாய் சொல்லி,போன் நம்பர் கேட்கிறார்கள்.முடியாது என்று சிரித்தபடி மறுக்கும் அவர்களைக் கடந்து இயேசுவைப் பின் தொடரும் தங்கள் வேலையில் தீவிரமாகிறார்கள்.இயேசு வாட்டிகனுக்குப் போகிறார் என்பது மட்டும் நமக்கு உணர்த்தப் படுகிறது.



அடுத்த காட்சி,பல்சுவைக் கோமாளி ஒருவரின் பாவனைகளில் இருந்து ஆரம்பிக்கிறது. அவரது முகம் புத்தரைக் கொண்டிருக்கிறது. கூடஇரண்டுபேர். அது ஒரு பிரசித்தி பெற்ற இத்தாலிய உயர்குடி மக்கள் மட்டுமே வருகிற மது மற்றும் உணவு ரெஸ்டாரன்ட். அங்கே உணவு அருந்த வந்திருக்கும் இளவரசரையும், அவருடன் இருக்கும் பெண்ணையும் கண்காணிக்கிறார்கள் மர்செல்லோவும் பப்பரசோவும். அங்குள்ள மேனேஜருக்கு சில்லறையைக் காட்டி, அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன மது அருந்துகிறார்கள், என்பதை அறிந்துகொள்கிறான் மர்செல்லோ. பப்பரசோவைவிட்டு அவர்களைப் புகைப்படம் எடுக்கச் சொல்கிறான். கேமரா பிளாஷ் மின்னியதும் பரபரப்பகிறது அந்தஇடம். பிலிமைக் கொடுத்துவிடு என்கிறார்கள் இளவரசரின் ஆட்கள், பப்பரசோவிடம். பிலிமே இல்லை என்று கைவிரிக்கிறான் பப்பரசோ. உம்மென்ற முகத்துடன் உட்கார்ந்திருக்கிற அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்த இளவரசர் மர்செல்லோவை அழைக்கிறார். இது நியாயமா என்று கேட்கிறார் அவனிடம். இதனால் அந்த பெண்ணின் கணவருக்கு விஷயம் தெரிந்து அவளது வாழ்க்கை(!) நாசமானால் என்ன செய்வாய் என்று கேட்கிறார், காலை உடைத்துவிடுவேன் என்று மிரட்டவும் செய்கிறார். மிஸ்டர் கூல் மர்செல்லோ அது என் வேலை, அப்புறம் இந்த பப்ளிசிட்டியில் தானே உங்கள் பொழைப்பு ஓடுகிறது என்று, சிகரெட்டைப் பற்றவைத்தபடி சொல்கிறான். சற்றுநேரத்துக்குப் பின் அங்கு வருகிறாள் அந்த அழகிய பெண். இன்றைக்கும் அவன்வரவில்லையா என்று பார்டெண்டரிடம் கேட்டு அலுத்தபடி, ஒரு லார்ஜ் விஸ்கி கேட்கிறாள். அவளை மர்செல்லோவுக்கு ஏற்கனவே தெரியும். அவளிடம் சென்று பேசுகிறான். டான்ஸ் ஆடலாமா என்று கேட்கிறான், இன்றைக்கு மூட் இல்லை என்கிறாள். மடேல்லேனா அவளது பெயர். பணக்கார இளம் பெண். ரோமின் வாழ்க்கை அவளுக்கு போர் அடிக்கிறது. அவளுடன் சேர்ந்து வெளியே கிளம்புகிறான் மர்செல்லோ. வழக்கம் போல்,அவள்வெளியே வந்தவுடன் பப்பரசோவும், இன்னும் சில புகைப்படக் கலைஞர்களும் அவளை இடைவிடாது பிலிமில் சுட்டுத் தள்ளுகிறார்கள். தினமும் இதையே செய்கிறார்களே, உன் பப்பரசோவும், அவன் கூட்டாளிகளும் அவர்களுக்கு அலுக்கதா என்று அலுத்துக் கொள்கிறாள் மடேல்லன்னா. விடு எல்லாம் ஒரு விளம்பரம் தானே என்று மார்செல்லோ சிரித்தவாறு அவளைச் சமாதானப்படுத்துகிறான்.

அவர்கள் இருவரும் அந்த இரவில் ரோமை வலம் வருகிறார்கள். காதலையும், பணத்தையும் பற்றி விவாதிக்கிறார்கள். அப்புறம், நடுவில் காரில் ஏறிய ஒரு பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு சென்று, இரவைக் கழிக்கிறார்கள். அவர்கள் தூங்கினார்களா அல்லது செக்ஸ் வைத்துக் கொண்டார்களா என்பது தெரியாது. இதுதான் இப்படத்தின் முதல் பகுதி. முதல் இரவு. லாடால்ஸ் வீட்டா, இப்படி ஏழு இரவுகளை, உள்ளடக்கிய பயணம். வாழ்க்கையின் பயணம். இனிப்பு என்பதான கானல் பிம்பத்தில் ஆடும் நாகரீக வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை, கசப்பு. இப்பகுதியின் ஒரு தருணத்தில் மடேல்லன்னா மார்செல்லோவிடம் சொல்வாள் "என்னிடம் நிறைய பணம் உண்டு. அது எனக்கு எந்தநிம்மதியும் தருவதாக தெரியவில்லை, நிலையான காதல் உட்பட. அது என் பிரச்னை. உன்னிடம் பணம் நிறைய இல்லை, ஆனால் அது எல்லாமும் தந்துவிடும் என்று நம்பி வெட்டி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாய், அது உன் பிரச்னை." என்று. இதுதான் ஒன்லைன். இது தான் மர்செல்லோவின் கதாபாத்திரம். பணத்திற்காக பிரபலங்களின் அந்தரங்கங்களை எழுதும் காசிப்ரைட்டர். அது அவனுக்கு பணம் தருகிறது. ஆனால் அவன்காணும் கனவு ஒரு நல்ல எழுத்தாளர் ஆவது. சமூகத்தின் மதிப்புமிக்க படிப்பாளி ப்ளஸ் படைப்பாளியாக ஆவது. ஆனால், உண்மையில் அவனது யதார்த்தத்துக்கும், கனவுக்கும் இடையில் அவனது பயணம் சந்தோசமும், துக்கமும், விரக்தியும், நம்பிக்கையும் மாறி மாறி ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் கிராப்(graph) ஆகியிருக்கிறது. அவன் காதலையும், நிலையான சந்தோசத்தையும் தேடுகிறான், இன்னமும் அது அவனுக்குக் கிடைத்தபாடில்லை. இதில் நிஜமான வேடிக்கை என்னவென்றால் அறுபதுகளில் மர்செல்லோவின் இந்த நிலைமை இன்றும் நம்மில் நிறைய பேருக்குப் பொருந்துகிறது என்பது தான். காலத்தால் அழியாத நிஜமான கதாபாத்திரம் பத்திரிகையாளன், பப்பராசி, மர்செல்லோ. ஆனால், இந்த விவரணைகள் எல்லாம் ஒரு புரிதலுக்கு மட்டுமே. இதன் காண் அனுபவம் பெட்ரிக்கோ பெலினியால் மயிர்க்கூச்செறியும் அளவுக்கு அற்புதமாக நிகழ்த்தப்பட்டிருக்கும்.

ஏனெனில், fellini is a man of images.

நிழலின் புகைப்படக்காரர் பெலினி. அவர் ஒரு படத்தை ஆரம்பிப்பது என்பது அனேகமாக அவரின் வரைதலுடன் தான். அவரின் கதாபாத்திரங்கள், சூழல் எல்லாம் கேமராவுக்குள் விழுமுன் அவரின் கேன்வாஸ்ஸில் கார்ட்டூன்களாக உயிர் பெற்றிருக்கும். கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் ஓடும் லாடால்ஸ்வீட்டாவின் ஒவ்வொரு நொடியிலும் கனவு காண்பவர்கள் கற்றுக்கொள்ள, பிரதி எடுக்க ஏதாவது ஒரு காண்வைரம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஏனெனில், இது இலக்கணங்களை உடைத்த புதியசினிமா. அதன் எழு இரவுகளில் நம்பிக்கையும், அவநம்பிக்கையும், சந்தோஷமும் துக்கமும் மாறிமாறி மர்செல்லோவுக்கு நிகழும்போது, தன்னை அறியாமல் நம் சொந்த வாழ்க்கைத் தருணங்கள் நமக்குள் அல்லாடத்து வங்கிவிடும் உணர்வுகளை மீட்பு அனுபவம் இன்னமும் உலகின் மிகச்சிறந்த எந்த கனவு காண்பவனுக்கும் மிகப்பெரிய சவால் தான். கதையை நேராக ஏன் சொல்ல வேண்டும் என்கிற பெலினியின் ஒரு கேள்விக்கே, இன்னமும் துணைக்கு நிறையபேர் சேரவில்லை. நிறைய சினிமா நேரவில்லை என்கிறபோது, லாடால்ஸ்வீட்டாவின் நிகரற்ற இனிமை நமக்குப் புரியும்.

பிற்காலத்தில்,8ண (Otto e Mezzo, 1963),Juliet of the Spirits(1965),Satyricon (1969),Amarcord (1974),Fellini's Casanova (1976),Intervista (1987),The Voice of the Moon(1990) என்று வரிசையாக நியோரியலிச பாணியில் இருந்து விலகிய அற்புதமான கலைப் படைப்புகளை பெலினி கொடுத்திருக்கிறார். விருதுகள் என்பது அவர் வாங்கி முடியாதது, ஆஸ்கர் மட்டுமே ஐந்து. ஆஸ்கர் பரிந்துரைப்பு பனிரெண்டு!

ஆஸ்கர் வாங்காத அவருடைய சினிமா லாடால்ஸ்வீட்டா.

ஆனால், மொழிகள் கடந்த, சினிமாவை நேசிக்கும், எந்த கனவு காண்பவனின் மனதிலும் நீங்காமல் தங்கியிருக்கும் அற்புதக் கனவும் லாடால்ஸ்வீட்டாதான். மரியம் வெப்ஸ்டர் முதல் எந்த ஆங்கில அகராதியிலும், பப்பராசி(Paparazzi) என்று தேடினீர்கள் என்றால், அர்த்தம் கொடுக்கப்பட்டு, முதன் முதலில் இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டது "லாடால்ஸ்வீட்டா" என்கிற சினிமாவில் தான் என்று சொல்லப்பட்டிருக்கும். அதை, பெலினி தாமே உருவாக்கிய வார்த்தை, கிரேக்க நண்பர் ஒருவரிடம் இருந்து இரவல் பெற்று உபயோகப்படுத்திய வார்த்தை என்று இருவேறு கதைகள் உண்டு. ஆனால் இரண்டுமே பெலினி சம்பந்தப்பட்டது தான். இத்தாலிய நாட்டுப்புற வழக்கில் சிட்டுக் குருவிகளைக் (sparrow) குறிக்கும் சொல்பப்பரசோ. எப்போதும் பிரபலங்களின் பின்னால் பறந்து திரிவதால் அதை வைத்ததாக பெலினி சொல்கிறார். பப்பரசோவின் இன்னொரு அர்த்தம் வண்டு. எப்போதும் பிரபலங்களைச் சுற்றிக்கொண்டு, குடைச்சலைக் கொடுப்பதால் அவர்கள் பப்பராசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்கிற கருத்தும் உண்டு. தவிர்க்க முடியாத பயணிகள் பப்பராசிகள் இன்றைக்கு. அவர்களை நாம் அதிகம் அறிந்தது 31 August 1997-ல், இளவரசி டயானாவின் மரணத்தில். பப்பராசிக்களின் கடைசியாக கேள்விப்பட்ட பயணம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தின் ஹனிமூன் தலத்தில்!(july-2012). முடிவே இல்லாத பயணம் பப்பராசிகள் உடையது.

முடிவே இல்லாத நினைவுகளின் பயணம்பெட்ரிகோ பெலினி உடையது.

சினிமா ஒரு பாடம் என்றால் அதன் முனைவர் பட்டக்கல்வி பெலினியின் படைப்புகள்.

சினிமா ஒரு கனவு என்றால் அதன் உச்சகட்டம் பெட்ரிகோபெலினி.

- -
இன்னொருவனின்கனவு - தொடரும்

- குமரகுருபரன்
திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com